'இந்தியா' கூட்டணி பேரணி - தடுப்பில் ஏறிய ராகுல் காந்தி

காணொளிக் குறிப்பு, டெல்லியில் பேரணி சென்ற எதிர்க்கட்சி தலைவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை
'இந்தியா' கூட்டணி பேரணி - தடுப்பில் ஏறிய ராகுல் காந்தி
பிரசுரிக்கப்பட்டது

தலைநகர் டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், திருமாவளவன், துரை வைகோ உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான எஸ்.ஐ.ஆர் செயல்முறையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் தலைமையகமான நிர்வாசன் சதன் நோக்கி எம்.பி.க்கள் பேரணியாகச் சென்றனர்.

ஆனால், நிதி ஆயோக் அலுவலகம் அருகே போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து, சாலையிலேயே அமர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், நாடாளுமன்ற வீதியிலும் தர்ணா நடத்தினர்.

அப்போது அங்கிருந்த தடுப்பு மீது ஏறிய ராகுல்காந்தி மூவர்ண கொடியை அசைத்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், பிரதமர் மோதி ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.

'வாக்கு திருட்டு', 'ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்' உள்ளிட்ட முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.

பேரணியின்போது பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் சிறிது நேரம் தடுப்பு காவலில் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஆகாஷ்வானி பவனில் நுழைய முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பேரணியில் பங்கேற்ற தமிழ்நாட்டு எம்பிக்கள் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

எஸ்.ஐ.ஆர் தொடர்பாகவும், வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

இதற்கிடையே, வாக்காளர் பதிவு தொடர்பான படிவம்6-ல் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்தும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

படிவம்6-ன் மாற்றப்பட்ட எந்த வடிவத்தையும் உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்தப் பேரணியை முன்னிட்டு நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணைய அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்தித்து தங்கள் கவலைகளைத் தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால் அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்று காக்ரோச் ஜனதா பார்ட்டியின் நிறுவனர் அபிஜித் திப்கே, அறிவித்துள்ளார்.

திங்கள்கிழமை, இந்தியா கூட்டணி அறிவித்துள்ள போராட்டத்தை சி.ஜே.பி வரவேற்றது.

அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தை, குறிப்பிட்ட ஒரு அமைப்புக்கான போராட்டமாகப் பார்க்காமல், இளைஞர்களுக்கான ஒரு விரிவான அழைப்பாகக் கருத வேண்டும் என்றும் சிஜேபி தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு