காணொளி: மதுரையில் தனியார் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளை

காணொளிக் குறிப்பு,
காணொளி: மதுரையில் தனியார் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளை
பிரசுரிக்கப்பட்டது

மதுரையில் உள்ள தனியார் நகைக்கடையில் இருந்து 15 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மதுரையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனியார் நகைக்கடைக்குள் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் புகுந்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

திருடப்பட்ட நகைகளின் துல்லியமான மதிப்பு, கடை நிர்வாகம் புகார் அளித்த பிறகே தெரியவரும் என்று தெற்கு துணை ஆணையர் ஏ.ஜி. இனிகோ திவ்யன் முன்னர் கூறியிருந்த நிலையில்,

தற்போது கடை நிர்வாகம் 15 கிலோ தங்க நகை திருடப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள இந்த நகைக்கடையை ஊழியர்கள் இன்று காலை திறந்தபோதுதான் கொள்ளைச் சம்பவம் தெரியவந்தது. இந்தக் கடை திறக்கப்பட்டு வெறும் 15 நாட்களே ஆகியிருந்தன.

முதற்கட்ட விசாரணையில், கடையின் பின்பக்கச் சுவரையும் கதவுகளையும் உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், இந்தக் கொள்ளையில் மூன்று பேர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மூன்று பேர் சுவரையும் கதவையும் உடைத்து கடைக்குள் நுழைந்து கடையில் இருந்த மொத்த நகைகளில் சுமார் 30 சதவீதத்தை திருடியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு