சுவிஸ் வங்கிகளில் ஓராண்டில் இந்தியர்களின் பணம் 3 மடங்கு அதிகரிப்பு - இன்றைய முக்கிய செய்தி

 சுவிஸ் வங்கிகள், கறுப்புப் பணம், இந்திய செய்திகள், முக்கியச் செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்
படக்குறிப்பு, கோப்புப் படம்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இன்று (ஜூன் 21) தமிழ்நாட்டில் பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் வெளியான செய்திகளின் முக்கியத் தொகுப்பை இங்கே காணலாம்.

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கும் பணத்தின் அளவு கடந்த ஆண்டு 3 மடங்கு அதிகரித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது என்று இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்து நாடு சுற்றுலாவுக்கு புகழ் பெற்றுள்ளது. அத்துடன் பெரும் பணக்காரர்கள் விரும்புவது சுவிஸ் வங்கிகள்தான். சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்பவர்களின் விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. அதுவே பணக்காரர்களுக்கு பாதுகாப்பான இடமாக கருதப்படுகிறது. அத்துடன், கரன்சியின் மதிப்பு குறைந்தாலும், பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டாலும், முதலீட்டாளர்களின் பணத்துக்கு சுவிஸ் வங்கிகள் பாதுகாப்பு வழங்குகின்றன.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், கோடீஸ்வர்கள் என பலதரப்பினரும் சுவிஸ் வங்கிகளில் பெரும் பணத்தை போட்டு வைக்கின்றனர். அதுபோல் இந்திய பிரபலங்கள் பலரும் சுவிஸ் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ளதாகவும், இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து கறுப்பு பணத்தை எல்லாம் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைப்பதாகவும் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், கடந்த ஆண்டு இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்த பணம் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த 2024-ம் ஆண்டு 35 பில்லியன் பிராங்க் (சுவிஸ் கரன்சி) அளவுக்கு இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர். இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.37,600 கோடியாகும். கடந்த 2021-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியர்கள் செய்துள்ள அதிகபட்ச முதலீடாகும்."

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

"அதேநேரத்தில் இந்திய வாடிக்கையாளர்கள் தனி நபர்களின் பெயர்களில் உள்ள பணம் இந்திய மதிப்பில் ரூ.3,675 கோடி மட்டுமே உள்ளது. இவ்வாறு சுவிஸ் தேசிய வங்கி ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியர்கள் பலர் வரி ஏய்ப்பு செய்தும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலமும் பெறும் கறுப்புப் பணத்தை சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்து வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

ஆனால், சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணம் அத்தனையும் கறுப்புப் பணம் இல்லை. அதேநேரத்தில் வரி ஏய்ப்புகளுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்போம் என்று சுவிஸ் வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.

இதுதொடர்பான விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டில்இந்தியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் யார் யார்கணக்கு வைத்துள்ளனர். எவ்வளவு பணம் டெபாசிட் செய்துவைத்துள்ளனர் என்ற விவரங்களை இந்திய அரசுக்கு சுவிஸ் அரசு வழங்கி வருகிறது," என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் பாஸ்போர்ட் வாங்க கணவர் அனுமதி தேவையில்லை

"பெண்கள் பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) பெறுவதற்கு கணவரின் கையொப்பமோ, அனுமதியோ பெறத் தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது," என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ரேவதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'பாஸ்போர்ட் கோரி மண்டல அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்தேன். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது குறித்து விசாரித்த போது கணவர் கையொப்பம் பெற்றால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விவாகரத்து வழக்கு நடப்பதால் கணவர் கையொப்பத்தை வலியுறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்."

பாஸ்போர்ட், இந்திய செய்திகள், முக்கியச் செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்
படக்குறிப்பு, திருமணமாகிவிட்டால், பெண் தன்னுடைய அடையாளத்தை இழந்துவிடுவது இல்லை என நீதிபதி கருத்து.

"இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாஸ்போர்ட் பெறுவதற்கு கணவர் அனுமதி, கையொப்பத்தை மனைவி பெற வேண் அவசியமில்லை. கையொப்பம் வாங்க வேண்டும் என வலியுறுத்துவதன் மூலம் பெண்களை கணவனின் உடைமையாகக் கருதும் சமூகத்தின் மனப்பான்மையை அதிகாரி பிரதிபலிக்கிறார்.

கணவருடன் பிரச்னை உள்ள நிலையில் கையொப்பம் பெறுவது இயலாது. திருமணமாகிவிட்டால், பெண் தன்னுடைய அடையாளத்தை இழந்துவிடுவது இல்லை. கணவனின் அனுமதி, கையொப்பம் பெறவேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்க முறையை காட்டுகிறது.

மனுதாரரின் கோரிக்கையை நான்கு வாரத்தில் பரிசீலனை செய்து பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்," என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு