'காலம் என்னை ஓரிடத்தில் அமர வைக்கும்' - 16 ஆண்டுக்கு முன்பு பேசியதை விஜய் படிப்படியாக சாதித்தது எப்படி?

பட மூலாதாரம், TVK
"காலம் என்னைக் கொண்டு சென்று ஓரிடத்தில் அமர வைக்கும். அதற்கான நேரம், சூழல், இடம் அனைத்தும் அமைந்து வர வேண்டும். அது வரும்போது நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அந்த சமயத்தில் நான் வருவேன்."
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்படுவதற்கும், விஜய் அரசியல் களத்திற்குள் பேசுபொருளாக மாறுவதற்கும் வெகு காலத்திற்கு முன்பு, 2011ஆம் ஆண்டில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறிய வார்த்தைகள் இவை.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் அக்கட்சியின் தலைவர் விஜய், முழுநேர அரசியலுக்குள் நுழைந்து, கட்சி தொடங்கி, களத்தில் செயல்படத் தொடங்கியது 2024ஆம் ஆண்டில் இருந்துதான்.
இதன் மூலம், கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே பெருவெற்றியை அடைந்து வரலாறு படைத்துள்ளார். இதற்கு முன்பும், பல திரை நட்சத்திரங்கள் அரசியலில் முத்திரை பதித்திருந்தாலும், விஜயின் அதிவேக வளர்ச்சி தனித்துவமானதாகப் பார்க்கப்படுகிறது.
அவர் கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆகியிருந்தாலும், அரசியல் மீதான அவரது ஆர்வமும், திட்டங்களும் பல ஆண்டுகளாகச் சீராகச் செதுக்கி, வடிவமைக்கப்பட்டு வந்ததன் பின்னணியிலேயே இது சாத்தியமாகியுள்ளது என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'நேரம் வரும்போது நான் வருவேன்'
சுமார் 16 ஆண்டுகளுக்கும் முன்பு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த காலத்திலேயே விஜய் இதற்கான அடித்தளத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டார்.
கடந்த 2011ஆம் ஆண்டில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறிய வார்த்தைகள் இதை உறுதி செய்கின்றன.
அந்தப் பேட்டியில், "இப்போதைக்கு எனது கவனம் முழுக்க சினிமாவின் மீதுதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு நடிகனாக வேண்டுமென ஆசைப்பட்டேன் என்றாலும், மக்கள் இவ்வளவு பெரிய மேடையில் அமர வைப்பார்கள் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை.
காலம் என்னைக் கொண்டு வந்து இந்த இடத்தில் அமர வைத்துள்ளது. அதே காலம் என்னைக் கொண்டு சென்று ஓரிடத்தில் உட்கார வைக்கும். அதற்கான நேரம், சூழல், இடம் அனைத்தும் அமைந்து வர வேண்டும். அது வரும்போது நான் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்," என்று விஜய் தெரிவித்தார்.
இது தொடர்பாக அப்போதே விரிவாகப் பேசிய அவர், "அப்படி வந்தால் என்ன செய்யப் போகிறேன் என்று இப்போது கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆர்வம் இருக்கிறது, ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. அந்த நேரம் வரும்போது நான் வருவேன், அந்த வாய்ப்பு வருவதற்கே இன்னும் காலம் இருக்கிறது. இதுவொன்றும் விளையாட்டல்ல, அதற்கான எண்ணம் இருப்பதாலேயே, நான் அரசியலுக்கு வருவேன் எனப் பலரும் பேசுவதாலேயே, உடனடியாக வந்துவிட முடியாது," என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டார்.
அதேவேளையில், "இருந்தாலும், அதற்குரிய அடித்தளத்தை நான் வலுப்படுத்திக் கொண்டே இருப்பேன். ரசிகர் மன்றமாக இருந்ததை மக்கள் இயக்கமாக மாற்றி, அடித்தளத்தை வலுவாக்கிக் கொண்டே இருக்கிறோம். அதுதான் இப்போது முக்கியம்" என்றும் கூறியுள்ளார்.
இதன் மூலம், தனக்கு தமிழக அரசியலில் பங்கு வகிக்க வேண்டுமென்ற ஈடுபாடும் நோக்கமும் இருப்பதைத் தெளிவுபடுத்திய விஜய், அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளாகவே, திரை வாழ்வின் மூலம் தனக்கென உருவாகியிருக்கும் ரசிகர் கூட்டத்தை ஒருங்கிணைத்து, ஒழுங்குபடுத்தி, ஓர் இயக்கமாக உருமாற்றி, அதன் ஊடாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அவர் சுமார் 15 ஆண்டுகளுக்கும் முன்பே உறுதி செய்துள்ளார்.

பட மூலாதாரம், @Dir_SAC/X
திரைப்படங்கள் பேசிய அரசியல்
கடந்த 2009ஆம் ஆண்டு, தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றியமைத்தார்.
விஜய் மக்கள் இயக்கம் அறிவிக்கப்பட்ட அதே மாதத்தில், ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்தார். 2011 ஆகஸ்ட் மாதம், டெல்லி சென்று அண்ணா ஹஸாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்திற்கு ஆதரவளித்தார்.
இவை மட்டுமின்றி, 2014ஆம் ஆண்டு வெளியான கத்தி படத்தில் விவசாயிகள் பிரச்னை தொடர்பாகப் பேசியும் 2ஜி ஊழல் வழக்கு குறித்து உணர்ச்சிமயமான வசனங்களைப் பேசியும் இருந்தார்.
2017ஆம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி குறித்த வசனங்கள், 2018இல் வெளியான சர்க்கார் படத்தில் திராவிட கட்சிகளின் இலவசத் திட்டங்களை விமர்சிக்கும் வகையிலான காட்சிகள் போன்றவற்றால் அவரது படங்கள் அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றன.
இருப்பினும், திரைப்படங்களைத் தனக்கான பிரசார மேடையாக எம்.ஜி.ஆர் பயன்படுத்திக் கொண்ட அளவுக்கு விஜய் அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே அரசியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
விஜய் தனது திரைப்படங்களின் வாயிலாகத் தனது கொள்கைகள் அல்லது அரசியல் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக எவ்வித கருத்துகளையும் வெளிப்படுத்தவில்லை. ஆனாலும், நிஜ உலகில் அவர் தனக்கென ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் இயக்கத்தை வளர்த்தெடுத்துக் கொண்டிருந்ததாக விஷுவல் அண்ட் பர்ஃபாமிங் ஆர்ட்ஸ் என்ற ஆய்விதழில் 2024ஆம் ஆண்டு வெளியான விஜயின் அரசியல் பிரவேசம் குறித்தான ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

பட மூலாதாரம், @ACTORVIJAY
'விஜய் மனதில் பல ஆண்டுகளாக இருந்த ஒரு விஷயம்'
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், "உயிர் கொடுப்பான் தோழன்" என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு விஜய் என்கிறார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருடைய நெருங்கிய நண்பராக இருப்பவரும் நடிகருமான ஸ்ரீமன்.
"சமூகம் என்பதையெல்லாம் தாண்டி, விஜய் அடிப்படையில் மனிதர்களின் மீது தீரா அன்பு கொண்டவர். அவர் பத்து வயதிலேயே தனது தங்கையை இழந்ததால், அனைத்து பெண்களையும் தனது உறவுகளாகவே ஆரம்பம் முதல் கருதி வருகிறார். அனைவரிடமும் கனிவான குரலில், பணிவுடன் பேசக்கூடிய தன்மை கொண்ட அவர், எப்போது, எங்கு யார் கஷ்டப்படுவதை பார்த்தாலும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துச் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்," என்று தான் இத்தனை ஆண்டுகளாகப் பார்த்து வரும் விஜய் பற்றி பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.
மேலும், "அனைவருக்கும் உதவ வேண்டும் என்பதுதான் அவரது அடிப்படைக் குணம். அதுவே அவரது இயற்கையான குணம். ஆனால் தான் செய்யும் உதவிகள் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வார். அதுகுறித்துக் கேட்டால்கூட, தான் உதவி செய்துள்ளது அனைவருக்கும் தெரிவதைவிட, தன்னிடம் உதவிநாடி வந்தவர்களின் துன்பங்களும் இயலாமையும் தெரிந்துவிடாமல் இருப்பதுதான் முக்கியம் என்று கூறுவார். அந்த அளவுக்குச் சுற்றியுள்ள மக்கள் மீது அக்கறையுடன் செயல்படக் கூடியவர்" என்று கூறினார் ஸ்ரீமன்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்திற்குள் விஜய் வருவதற்குப் பல ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே அவரது மனதில் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் பதிந்து இருந்ததாகக் குறிப்பிடுகிறார் அவர்.
"தன்னை முன்பின் பார்த்திராத, தனக்குத் தெரியாத இவ்வளவு கோடி பேர், திரையில் தனது முகத்தைப் பார்த்து, ரசித்துக் கொண்டாடுகின்றனர். அவர்களுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துச் செயல்பட வேண்டும், அதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்பது அவரது உள்ளத்தில் வேரூன்றியிருந்தது. அதன் நீட்சியாக, அவர் கூறியதைப் போலவே பல சோதனைகளைக் கடந்து காலம் அவரைத் தமிழ்நாட்டின் ஆட்சியாளராக அமர வைத்திருக்கிறது. மக்கள் அளித்துள்ள இந்த ஆதரவுக்கு அவர் முழுக்க முழுக்கத் தகுதியானவர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்கவே முடியாது" என்றார் ஸ்ரீமன்.

பட மூலாதாரம், TVK
மெல்லமெல்ல கட்டியெழுப்பப்பட்ட அரசியல் பிம்பம்
இதற்கு முன்பும், திரை நட்சத்திரங்களின் அரசியல் பிரவேசத்தை தமிழ்ச் சமூகம் பல முறை பார்த்துள்ளது.
எம்.ஜி.ஆர் தனக்கிருந்த பிரமாண்டமான ரசிகர் பட்டாளத்தை பயன்படுத்தித் தனது அரசியல் வளர்ச்சியை சீர்படுத்திக் கொண்டார். அவர் நடித்த திரைப்படங்களின் வாயிலாகத் தனது அரசியலைப் பேசினார்.
விஜயகாந்த் தனது படங்களில் அரசியல் பேசியிருந்தார். அவர் 2006ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் நுழைந்து, 234 தொகுதிகளில் போட்டியிட்டார். விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். இருப்பினும், பின்னர் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து முக்கியக் கட்சியாக வளர்ந்து, எதிர்க்கட்சியாகவும் சட்டப்பேரவையில் அமர்ந்தார்.
ரஜினிகாந்தும் தமது அரசியல் ஆர்வத்தைப் பல்வேறு காலகட்டங்களில் வெளிப்படுத்தினார் என்றாலும் 2020இல் தான் அரசியலுக்குள் நுழையப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
இவர்கள் அனைவரிடம் இருந்தும் முற்றிலுமாக வேறுபட்ட பாணியை விஜய் கடைபிடித்தார். அவர் வெளிப்படையாக அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கத் தொடங்கினார்.
ஒரு நடிகராகவே அவர் பல்வேறு அரசியல், சமூகப் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கத் தொடங்கினார். குறிப்பாக, இலங்கை உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், 2008ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். இதில் அவருடன் அவரது ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் பங்கெடுத்தனர்.
இதையே அவரது முதல் அரசியல் ரீதியான நகர்வாகக் கருதலாம் என்று ஆரம்பக்காலம் முதலான விஜயின் அரசியல் பயணம் குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் ரேகாசௌதர் மற்றும் முனைவர் ஜே.பாலசுப்பிரமணியம் இணைந்து 2024ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கடுத்து 2009ஆம் ஆண்டு ஜூலையில், தனது ரசிகர் மன்றத்தை மறுகட்டமைப்பு செய்து விஜய் மக்கள் இயக்கம் என்ற நற்பணி மன்றமாக மாற்றினார். நிஜ வாழ்க்கையில் சாத்தியமான ஒவ்வொரு தருணத்திலும் அவர் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
2016ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு காணொளியில், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்தார்.

பட மூலாதாரம், Getty Images
2023ஆம் ஆண்டு முதல் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10, 12ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கத் தொடங்கினார். 2023இல் நடந்த அத்தகைய முதல் விழாவில், நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். அதோடு, தனது உரையின்போது, அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரைக் குறிப்பிட்டுப் பேசியது முற்போக்கு அரசியலை அவர் கடைபிடிப்பார் என்பது போன்ற எதிர்பார்ப்புகளுக்கு வித்திட்டது.
2017ஆம் ஆண்டு நீட் தேர்வு காரணமாகத் தனது உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் குடும்பத்தினரை அவர் நேரில் சந்தித்து, நிதியுதவியும் அளித்தார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வீடியோ வாயிலாகத் தனது ஆதரவைப் பதிவு செய்தார். 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியான 13 பேரின் குடும்பத்தினரை நேரடியாகச் சந்தித்ததோடு, அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கினார்.
இப்படியாக, முக்கியப் பிரச்னைகளில் ஈடுபாடு காட்டியதன் மூலம், மக்கள் மத்தியில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அவர் தொடர்ந்து எடுத்து வந்தார்.

பட மூலாதாரம், VIJAY MAKKAL IYAKKAM
தமிழக வெற்றிக் கழகத்தின் தொடக்கம்
இலங்கைத் தமிழர்களுக்கான உண்ணாவிரதப் போராட்டம், அனிதாவின் மரணம் மற்றும் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு அவர் ஆற்றிய எதிர்வினை, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான ஆதரவு, பணமதிப்பிழப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தது, கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து, விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்ற பேச்சுகள் மெல்லமெல்லத் தீவிரமடைய ஆரம்பித்தன.
2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கினார்.
அப்போது பேசிய அவர், "விஜய் மக்கள் இயக்கம் தன்னால் இயன்ற வரை பல்வேறு நலத் திட்டங்களைச் செய்து வந்தாலும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு ஒரு தன்னார்வ அமைப்பால் மட்டுமே முடியாது. அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழல் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த கலாசாரம் ஒருபுறம் என்றால், நமது மக்களை சாதி, மத பேதங்கள் வாயிலாகப் பிளவுபடுத்தத் துடிக்கும் பிளவுவாத அரசியல் மறுபுறம் இருக்கிறது. இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன," என்றார்.
அதோடு, "அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் அபிமானமும் அன்பும் பெற்ற மக்கள் சக்தியால்தான் சாத்தியப்படுத்த முடியும். அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி தொடங்கப்படுகிறது," என்று அறிவித்தார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே தனது இலக்கு என்பதையும் குறிப்பிட்டார்.
பின்னர், அதே ஆண்டு அக்டோபரில், விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டைக் கூட்டினார். இந்த மாநாட்டிற்கு வந்த கூட்டம், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்தது.
அதற்குப் பிறகு, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த அவரது பரப்புரைக் கூட்டத்தில் 41 பேர் பலியாயினர். அரசியலுக்குப் புதிய வரவான தவெக-வை இந்த நிகழ்வு சற்று அசைத்துப் பார்த்தது என்றே சொல்ல வேண்டும். இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகே விஜய் வீடியோ வெளியிட்டார். இது தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட, விஜய் உள்ளிட்ட தவெக முன்னணி நிர்வாகிகள் டெல்லி அலுவலகத்திற்கு அழைத்து விசாரிக்கப்பட்டனர்.
இதே நேரத்தில், பொங்கலுக்கு திட்டமிடப்பட்டிருந்த, விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைப் பிரச்னை எழுந்தது. நீதிமன்றப் படியேறியும் கூட ஜனநாயகன் படம் இதுவரை வெளியாகவில்லை. விஜய் ரசிகர்களிடையே மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் கூட இந்த படத்தின் வெளியீட்டில் எழுந்த பிரச்னை விவாதப் பொருளாக மாறியது.

பட மூலாதாரம், TVK
குறைவான பிரசாரம், பெருவாரியான ஆதரவு
தேர்தல் பிரசாரத்தில் விஜய்க்கு எதிராக கரூர் பிரச்னையை திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் முன்னிறுத்தின. அதேநேரத்தில், விஜயால் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க முடியவில்லை.
மண்டல வாரியாக சில இடங்களுக்கு மட்டுமே அவர் நேரடியாகச் சென்று வாக்கு சேகரித்தார். சில இடங்களில் திட்டமிடப்பட்டிருந்த அவரது பிரசாரம் பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டன. சுமார் 14 இடங்களில் மட்டுமே விஜய் நேரடியாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் பிரசாரத்தில், மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவே விஜயின் பிரதான குறியாக இருந்தது. திமுக மீதான விமர்சனங்களைத் தனது ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் முன்வைத்தார். இந்த தேர்தல் திமுக, தவெக இடையிலான தேர்தல், ஸ்டாலின் மற்றும் விஜய் இடையிலான தேர்தல் என்றே அவர் தனது பேச்சுகளில் குறிப்பிட்டு வந்தார்.
இதனால் எரிச்சலடைந்த பிரதான எதிர்க்கட்சியான அதிமுக விஜயை கடுமையாகச் சாடிய போதிலும், விஜய் தனது பிரசார பாணியை மாற்றிக் கொள்ளவே இல்லை. ஜனநாயகன் பிரச்னையில்கூட மத்தியில் ஆளும் பாஜகவை நேரடியாகச் சீண்டாத அவர், மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட சில தருணங்களில் மட்டுமே விமர்சனங்களை முன்வைத்தார்.
வாக்குப்பதிவு முடிந்ததும் வெளியான கருத்துக் கணிப்புகளில் பலவும் திமுக அல்லது அதிமுகவே ஆட்சியமைக்கும் என்று கூறின. ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு மட்டுமே திமுக, அதிமுகவை விஞ்சி விஜயின் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கணித்திருந்தது.
தற்போது அந்தக் கணிப்பு உண்மையாகி, 108 இடங்களில் வெற்றி பெற்று பிரதான கட்சியாக தவெக நிற்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக, கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே விஜய் பதவியேற்கப் போகிறார்.
அவர் கட்சி தொடங்கி மிகக் குறுகிய காலமே ஆகியிருந்தாலும், மக்கள் மத்தியில் தன் மீதான பிம்பத்தைக் கட்டமைத்து, இதற்கான அடித்தளத்தை அமைப்பதில் பல ஆண்டுகளாகத் திட்டமிட்டுச் செயல்பட்டு வந்ததன் விளைவாகவே, திராவிட கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி இந்த வெற்றியைப் பெற முடிந்தது என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































