You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தூக்க மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் என்ன ஆபத்து?
- எழுதியவர், டிங்கிள் பாப்பி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
சமய் ரெய்னா என்ற நகைச்சுவைக் கலைஞர் தனது 'ஸ்டில் அலைவ்' நிகழ்ச்சியில் தனது தனிப்பட்ட கதையைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், "நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் தூங்க முடியாமல் தவித்தேன். என் மருத்துவர் 3 மில்லிகிராம் மெலடோனின் எடுத்துக்கொள்ளுமாறு கூறினார்.
ஆனால், அது பலனளிக்கவில்லை. அதனால் நான் 30 மில்லிகிராமுக்கும் அதிகமாக எடுத்துக்கொண்டேன். அதன் பிறகு, நான் தொடர்ந்து 16 மணிநேரம் தூங்கினேன்," என்று கூறினார். இந்த வீடியோ யூட்யூபில் 22 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
இதுவொரு நகைச்சுவை நிகழ்ச்சியில் கூறப்பட்டு இருந்தாலும், இன்றைய மக்களிடையே வளர்ந்து வரும் ஓர் உண்மையான பழக்கத்தை இது எடுத்துக் காட்டுகிறது. பலர் இப்போது மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல், மெலடோனின் மாத்திரைகள், மெக்னீசியம் ஸ்லீப் ஸ்ட்ரிப்ஸ் போன்ற தூக்கம் தொடர்பான மருந்துகளைத் தாங்களாகவே பயன்படுத்துகின்றனர்.
இவற்றைக் கடைகளிலும் ஆன்லைனிலும் எளிதாக வாங்கலாம், மேலும் அவை பொதுவாக மலிவானவை. அவை "நல்வாழ்வு சப்ளிமென்டுகள்" அல்லது "ஊட்டச்சத்து மருந்துகள்" என்று விற்கப்படுவதால், அவற்றின் விற்பனையைக் கட்டுப்படுத்தும் கடுமையான விதிகளும் அதிகமாக இல்லை.
அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தின்படி, ஊட்டச்சத்து மருந்துகள் என்பவை உணவு மூலங்களில் இருந்து தயாரிக்கப்படும் தயாரிப்புகளாகும். அவை நோய்களைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க உதவுவது உள்பட, உடல்நலப் பலன்களைத் தருகின்றன.
மெலடோனின் என்றால் என்ன?
தேசிய மருத்துவ நூலகத்தின்படி, மெலடோனின் என்பது பினியல் சுரப்பி எனப்படும் மூளையிலுள்ள ஒரு சிறிய பகுதியால் உற்பத்தி செய்யப்படும் ஓர் இயற்கையான ஹார்மோன். இந்த ஹார்மோன் நமது தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது.
இருள் சூழ்வது போல் உணரும்போது, பினியல் சுரப்பி அதிக மெலடோனினை உற்பத்தி செய்கிறது. வெளிச்சம் வரும்போது, அது உற்பத்தியைக் குறைக்கிறது. இந்த மாற்றம், எப்போது ஓய்வெடுக்க வேண்டும், எப்போது தூங்குவதற்குத் தயாராக வேண்டும் என்பதை உடல் புரிந்துகொள்ள உதவுகிறது.
எளிதாகக் கூறுவதெனில், இரவு நேரம் மற்றும் தூங்கும் நேரம் எப்போது என்பதை உங்கள் உடல் அறிந்துகொள்வதற்கு மெலடோனின் உதவுகிறது.
மெலடோனின் உங்களைத் தூங்கும்படி கட்டாயப்படுத்துவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மாறாக, தூங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை உடலுக்கு சமிக்ஞைகள் மூலமாகத் தெரியப்படுத்துகிறது.
மெலடோனின் பயன்பாடு பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன?
மெலடோனின் பல உடல்நலப் பலன்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஜெட் லேக் எனப்படும், உடலின் உயிரியல் கடிகாரத்தில் நடக்கும் குழப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உதவுவதோடு, மூளைக் காயங்கள், நரம்புச் சிதைவுகள் (மூளை தொடர்பான நோய்கள்), ஒற்றைத் தலைவலி போன்ற நிலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
மெலடோனினுக்கு பொதுவாக மிகக் குறைவான பக்க விளைவுகளே இருப்பதால், இதை எளிதில் வாங்க முடிகிறது. மேலும், இது பெரும்பாலும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலேயே கிடைக்கிறது. இருப்பினும், இது தூக்கப் பிரச்னைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு இல்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
"இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 10 மில்லிகிராம் வரையிலான அளவுகளே அனுமதிக்கப்படுகின்றன" என்று கூறுகிறார் மூத்த மனநல மருத்துவரான மருத்துவர் சன்யம் குப்தா.
"ஆனால் இதுவொரு ஊட்டச்சத்து சப்ளிமென்ட் என்பதால், பலர் மருத்துவரை அணுகாமலோ அல்லது சரியான அளவைத் தெரிந்துகொள்ளாமலோ இதை வாங்குகிறார்கள்," என்றும் அவர் எச்சரிக்கிறார்.
சுருக்கமாகக் கூறினால், மெலடோனின் எளிதில் கிடைத்தாலும், பாதுகாப்பானதாகத் தோன்றினாலும், மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். முறையான வழிகாட்டுதலின்றி அல்லது தவறான அளவில் இதை உட்கொள்வது ஆபத்தானதாகவும் அமையக்கூடும் என்கிறார் அவர்.
அதீத பயன்பாட்டால் ஏற்படும் அபாயங்கள்
பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டால், அது பகல் நேரத்தில் மிகுந்த தூக்கத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர் சன்யம் குப்தா எச்சரிக்கிறார். குறிப்பாக, வாகனங்களை ஓட்டுவோர் அல்லது கனரக இயந்திரங்களை இயக்குபவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், அவர்கள் முழு விழிப்புடன் இருக்க மாட்டார்கள்.
மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்களின் விற்பனையில் முறையான கட்டுப்பாடு இருக்க வேண்டுமென்றும் அவர் கூறுகிறார்.
இல்லையெனில், மக்கள் ஆபத்துகளை அறியாமல் அவற்றை உட்கொண்டு, தற்செயலாகத் தங்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் அல்லது நச்சுத்தன்மையுள்ள அளவுகளை அதிகரிக்கக்கூடும்.
தயானந்த் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பியல் துறைத் தலைவரான மருத்துவர் நவீன் மிட்டலும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்.
மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் யாரும் எந்த மருந்தையும் உட்கொள்ளக் கூடாது என்றும், இது "பொன்னான விதியாக" கருதப்பட வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.
மெலடோனின் பொதுவாகப் பாதுகாப்பானது என்று கருதப்பட்டாலும், அதை அதிகமாக உட்கொள்வது அதிகப்படியான தூக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், மனநலப் பிரச்னைகள் உள்ளவர்களை இது எதிர்மறையாக பாதிக்கவும் கூடும்.
தூக்கத்தை மேம்படுத்த எளிய வழிகள்
"மக்கள் மருத்துவரின் பரிந்துரையின்றி கடைகளில் விற்கப்படும் மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, கடுமையான விதிகள் இருக்க வேண்டும். மேலும், இந்த மருந்துகள் பேக் செய்யப்படும் விதத்திலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்," என்று மருத்துவர் சன்யம் குப்தா கூறுகிறார்.
தூக்கத்தை மேம்படுத்த வழிகள்
பிபிசியிடம் பேசிய நிபுணர்கள், தூக்கத்தை மேம்படுத்துவதற்கான சில எளிய மற்றும் இயற்கையான வழிகளையும் பகிர்ந்துகொண்டனர். அவை,
தூங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்: தினமும் ஒரே நேரத்தில் உறங்கச் செல்லுங்கள், ஒரே நேரத்தில் கண் விழியுங்கள். இது உங்கள் உடல் ஒரு வழக்கத்தைப் பின்பற்ற உதவுகிறது.
படுக்கையை தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்துங்கள்: படுக்கையில் அமர்ந்தபடி வேலை செய்யவோ அல்லது உங்கள் மடிக்கணினியை பயன்படுத்தவோ வேண்டாம். இது உங்கள் மூளை, படுக்கையை மன அழுத்தத்துடன் அல்லாமல், ஓய்வு மற்றும் வசதியுடன் தொடர்புபடுத்திக்கொள்ள உதவுகிறது.
இருபது நிமிட விதி: உங்களுக்குத் தூக்கம் வரவில்லையெனில், படுக்கையில் விழித்துக் கிடப்பதற்குப் பதிலாக, எழுந்து சிறிது நேரம் அங்குமிங்குமாக நடக்க முயலுங்கள்.
சலிப்பூட்டக்கூடிய எதையாவது படியுங்கள்: அதிக சுவாரஸ்யம் இல்லாத ஒன்றைப் படிப்பது உங்கள் மனதை அமைதிப்படுத்தி, உங்களுக்குத் தூக்கத்தை வரவழைக்க உதவக்கூடும்.
கேஃபினை தவிர்க்கவும்: மாலையில் தேநீர், காபி அல்லது குளிர்பானங்களைக் குடிக்க வேண்டாம். ஏனெனில், அவை உங்களை அதிகமாக விழித்திருக்கவே செய்யும்.
டிஜிட்டல் சாதனங்களைத் தவிர்த்தல்: உறங்கச் செல்வதற்கு முன்பு கைபேசிகளை பயன்படுத்துவதையோ அல்லது தொலைக்காட்சி பார்ப்பதையோ தவிர்க்கவும். திரைகளில் இருந்து வரும் ஒளி, மெலடோனின் உற்பத்தியைப் பாதித்து, தூங்குவதைக் கடினமாக்கும்.
உடற்பயிற்சிகள்: பகல் நேரத்தில் நடைபயிற்சி அல்லது புஷ்-அப்ஸ் போன்ற சில உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். உங்கள் உடல் சோர்வாக உணரும்போது, தூங்குவது எளிதாகிறது.
சுருக்கமாகக் கூறுவதானால், மருந்துகளை மட்டுமே சார்ந்திருப்பதை விடுத்து, மேற்கூறிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது, இயற்கையாகவும் சிறப்பாகவும் தூங்குவதற்கு உதவும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு