'நாங்கள் செய்த தவறு என்ன?' - கடின உழைப்பு வீணானதாக கூறும் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
"ஒரு நாளைக்கு 2-3 மணிநேர தூக்கம்தான். கடின உழைப்புடன் படித்தேன், இன்று எதற்கும் பயனில்லாமல் போய்விட்டது."
"தேர்வுக்காக பயிற்சியெடுக்கும்போது கடும் மன அழுத்தம் ஏற்பட்டது. யாரிடமாவது சிறிது நேரம் பேசினாலும், அந்த நேரம் படித்திருக்கலாமே என்ற உணர்வுதான் ஏற்படும். அடுத்து என்ன செய்வதென தெரியவில்லை."
இந்தாண்டு மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வை எழுதிய சில மாணவர்கள் கூறியவை இவை. வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை மே 12 அன்று அறிவித்தது
இந்தியா முழுவதும் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் சுமார் 1.4 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதியதாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது பல லட்ச மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
குழப்பத்தில் மாணவர்கள்
"இந்தாண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதினேன். இம்முறை நன்றாக எழுதியிருந்தேன். நிச்சயம் மருத்துவ இடம் கிடைத்துவிடும் என நினைத்தேன். திடீரென ரத்து செய்துவிட்டதாக அறிவித்தது அதிர்ச்சியாக உள்ளது. இப்போது மீண்டும் படிக்க வேண்டும், ஆனால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. குழப்பமும் பயமுமே மேலோங்கியிருக்கிறது" என்கிறார், லோகேஷ்.
நீட் மறுதேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதால், அடுத்ததாக தேர்வுக்கு எப்படி தயாராவது என்ற குழப்பத்தில் இருப்பதாக லோகேஷ் போன்ற மாணவர்கள் கூறுகின்றனர்.
கடந்தாண்டு 12ம் வகுப்பு முடித்த லோகேஷ், ஓராண்டாக தனியார் பயிற்சி மையம் ஒன்றில் இணைந்து நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்துவந்தார்.
ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த லோகேஷ் படித்துவந்த நீட் பயிற்சி மையம் அவருடைய வீட்டிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. தினமும் பேருந்தில் சென்றுவர பயணத்துக்கே சுமார் 3 மணிநேரத்தைக் கழிக்க வேண்டும். பயிற்சி கட்டணமாக சுமார் ரூ. 90 ஆயிரம் வரை செலவழித்துள்ளார்.
"தூங்கும் நேரத்தை நானே குறைத்துவிட்டேன், கடந்த 4 மாதங்களாக தீவிரமாக படித்தேன். காலை 4 மணிக்கு எழுந்தால் இரவு 10.30 மணி வரை படிப்புக்கு மட்டுமே செலவிடுவேன். குடும்ப நிகழ்ச்சிகளில் கூட பங்கெடுக்க மாட்டேன். பேருந்தில் செல்லும் நேரத்தைக் கூட வீணாக்கக் கூடாது என, குறிப்புகளை எடுத்துக்கொண்டே செல்வேன். பயிற்சி வகுப்பை தாண்டி இணையம் வாயிலாகவும் தேர்வுக்காக தயார் செய்தேன். மார்ச் மாதத்தில் இருந்து வீட்டிலிருந்தே மாதிரி தேர்வுகளை எழுதினேன்" என்கிறார் லோகேஷ்.
2025ம் ஆண்டு 12ம் வகுப்பை முடித்ததும் நீட் தேர்வெழுதிய லோகேஷால் அதில் தேர்ச்சி பெற முடியவில்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பில் 380 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.
"நீட் தேர்வெழுத 11, 12ம் வகுப்பு பாடத்திட்டத்தை முழுமையாக படிக்க வேண்டும். அதை 30-40 நாட்களில் படிப்பது கடினம். அதனாலேயே ஓராண்டு இடைவெளி எடுத்து படித்தேன். இம்முறை நன்றாக எழுதியிருந்தேன். இடம் கிடைத்துவிடும் என நினைத்தேன். இப்போது படிப்பதில் கவனமே செல்லவில்லை. மிகவும் வெறுமையாக இருக்கிறது. மீண்டும் எப்படி படிக்க ஆரம்பிப்பது என தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது." என்றார்.

பட மூலாதாரம், ANI
"நாங்கள் செய்த தவறு என்ன?"
ஓராண்டாக உறக்கமின்றி தன் மகன் படித்த நிலையில் தற்போது யாரோ செய்த தவறுக்காக தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறுகிறார் லோகேஷின் தந்தை பொன்னடி.
"நீட் தேர்வு முடிந்துவிட்டது, கண்டிப்பாக இடம் கிடைத்துவிடும் என்ற மனநிலையில் இருந்தோம். திரும்பியும் அவனை இந்த மனநிலையிலிருந்து மீட்டு படிக்க உட்கார வைப்பதே கஷ்டமாக இருக்கிறது. திரும்பி படித்தாலும் அதே அளவு முயற்சியை செலுத்த முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. அவனுடைய படிப்புக்காக நாங்கள் உறுதுணையாக இருந்தோம். ஓராண்டாக உறக்கமே இல்லை. இதில் எங்கள் தவறு என்ன இருக்கிறது? தேர்வை முறையாக நடத்தாதது அவர்களின் தவறு." என கூறினார் பொன்னடி.
செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குனர் அபிஷேக் சிங், தேர்வு நடந்த நான்கு நாட்கள் கழித்து மே 7 அன்று 'மாதிரி தாள்' ஒன்றின் பிடிஎஃப் வாட்ஸ்ஆப்பில் பரவியதாகவும் அது உண்மையான வினாத்தாளை ஒத்திருந்ததாகவும் ஒருவரிடமிருந்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.
மேலும், "தேர்வில் எந்தவித விதிமீறலும் எங்களின் சகிப்பின்மை கொள்கைக்கு எதிரானது, மேலும் இந்த தேர்வுக்காக கடுமையாக உழைத்த 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தையும் அது மிக மோசமாக பாதிக்கும்." என்றார்.
மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் இந்தியாவில் நடத்தப்படும் கடினமான தேர்வுகளுள் ஒன்றாக உள்ளது.

பட மூலாதாரம், ANI
"கடும் மன அழுத்தம்"
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கே.வி.எஸ் கணபதி சுந்தரவேல் சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக படித்து வருகிறார்.
2024ம் ஆண்டு 12ம் வகுப்பை முடித்த அவர், 3 முறை நீட் தேர்வெழுதியுள்ளார். முதன்முறை சுமார் 250 மதிப்பெண்களும் இரண்டாம் முறை சுமார் 300 மதிப்பெண்களும் பெற்றார்.
கடந்தாண்டு கோயம்புத்தூரில் தனியார் பயிற்சி மையம் ஒன்றில் தங்கி பயிற்சி எடுத்துவந்த அவர், இந்தாண்டு சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தங்கி படித்து வந்துள்ளார்.
"இரண்டாண்டுகளாக பயிற்சி வகுப்புக்கு 3 லட்ச ரூபாய், தங்கும் வசதி என சுமார் 5 லட்ச ரூபாய் வரை செலவு செய்தோம்.
தினமும் 2-3 மணிநேரம் தான் தூங்குவேன். தேர்வு நெருங்க நெருங்க தானாகவே உறக்கத்தைக் குறைத்துவிடுவேன். இரவு முழுவதும் படித்து, அதிகாலை 5 மணிக்குதான் தூங்குவேன்." என்கிறார் கணபதி.
தன்னுடைய தூக்க சுழற்சியே பாதிக்கப்பட்டதாக கூறும் கணபதி, "எனக்கு இதனாலேயே மன அழுத்தம் ஏற்பட்டது. யாருடனும் பழக பிடிக்காது, தனியாகவே நேரம் செலவழிக்க நினைப்பேன். சிறிது நேரம் மற்றவர்களுடன் நேரம் செலவழித்தாலும் அந்த நேரத்தில் படித்திருக்கலாம் என்று தோன்றும். இம்முறை நிச்சயம் 550க்கு மேல் மதிப்பெண்கள் வரும் என நினைத்தேன். வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர். இப்போது எதற்கும் பயனில்லை என தோன்றுகிறது." என்றார்.
மனரீதியான அழுத்தங்கள் தாண்டி நீண்ட நேரம் அமர்ந்து படிப்பதால் கடும் முதுகு வலி, உடல்பருமன் என பலவித உடல்நல பிரச்னைகளுக்கும் ஆளானதாக அவர் தெரிவித்தார்.
நீட் தேர்வு ரத்து என்பது கடின உழைப்புடன் படித்தவர்களையே அதிகம் பாதிக்கும் என கூறுகிறார் கணபதி.
"அடுத்த தேர்வில் எப்படி வினாத்தாள் வரும் என தெரியாது. என்னை நானே சமாதானப்படுத்தி மீண்டும் படிப்பதே சவாலாக உள்ளது." என்றார்.
தேர்வுக்காக மாணவர்களை கடுமையாக சோதிக்கும் நிலையில் வினாத்தாள் எப்படி கசிந்தது என அவர் கேள்வியெழுப்புகிறார்.
"இம்முறை நான் தேர்வுக்கு செல்லும்போது என்னுடைய பேண்ட்டில் சில வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்தன. அதற்கே என்னை உள்ளே அனுமதிக்க மாட்டார்களோ என பயந்தேன். சிறிதாக ஏதேனும் உலோகம் இருந்தாலே எடுத்துவிடுவார்கள், அவ்வளவு கடுமையான சோதனைகள் எங்களுக்கு நடத்தப்படுகின்றன, ஆனால் கேள்வித்தாள் கசிந்துவிட்டது என்றால் எப்படி?" என்கிறார் கணபதி.
கணபதியின் தாயார் காசி விமலா கூறுகையில், "எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அடுத்து வரும் வினாத்தாள் எப்படி இருக்கும் என தெரியவில்லை. ஏனெனில், மறுதேர்வு வினாத்தாள் கடினமாக இருக்கும் என்கின்றனர். மதிப்பெண் குறையுமோ என்ற பயம் இருக்கிறது." என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
"மாநில அரசுகளே நடத்த வேண்டும்"
நுழைவுத்தேர்வை நடத்துவதை அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என வலியுறுத்துகிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.
பிபிசி தமிழிடம் பேசிய நெடுஞ்செழியன், "வினாத்தாள் கசிந்தது என்பது தேசிய தேர்வு முகமையின் நிர்வாகத்தின் தோல்வி. நீட் தேர்வு நடத்தப்படுவதில் ஆண்டுதோறும் ஏதாவது குறைகள் ஏற்படுகின்றன. இது அரசு நிர்வாகத்தின் பிரச்னை, மாணவர்களின் பிரச்னை அல்ல. மாணவர்கள் மீண்டும் தேர்வை எழுதும்போது முதலில் இருந்த ஆர்வம் இருக்காது. தேவையின்றி மாணவர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும்." என்றார்.
மேலும் பேசிய நெடுஞ்செழியன், "நீட் தேர்வை அந்தந்த மாநிலங்களே நடத்தும்படி செய்ய வேண்டும். 85% இடங்கள் மாநிலங்களுக்கும் 15% இடங்களை தேசிய ஒதுக்கீட்டுக்கும் தர வேண்டும். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் தேர்வில் குறைகள் ஏற்பட்டால், அதை அந்த மாநிலத்திலேயே சரிசெய்ய முடியும். ஆனால், தற்போது உள்ள நடைமுறையில் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்." என்றார்.
தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குனர் அபிஷேக் சிங், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிடம், "தேர்வு சுமுகமாக நடத்தப்பட்டது. மே 3 அன்று எந்தப் பிரச்னையும் இல்லை. தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்வுக்குப் பின்னரோ உடனடியாக எந்தப் புகாரும் வரவில்லை. நாங்கள் ஓ.எம்.ஆர் தாள்களை சரிபார்க்கத் தொடங்கினோம், அனைத்தும் சரியாக இருந்தன. போக்குவரத்திலோ அல்லது தேர்வு நடத்துவதிலோ எந்தப் பிரச்னையும் இல்லை," என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "எந்தவிதமான முறைகேடுகளும் இல்லாத, மோசடிகளற்ற ஒரு தேர்வை நடத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது, அதை நாம் உறுதி செய்ய வேண்டும்," என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























