'ஒரு கையில் ஹெலிகாப்டர், மறுகையில் ஹீரோயின்': விஜயகாந்தின் சண்டைக் காட்சி பற்றி அவரது மகன் கூறியது என்ன?

பட மூலாதாரம், X/Vijayakanth
- எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான விஜயகாந்த் பிறந்த நாள் இன்று. விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் அவரது உச்சரித்த வசனங்களைப் போல அவர் நடித்த சண்டைக் காட்சிகளும் பெரிதும் பேசப்பட்டன.
கடும் உழைப்பு, ரிஸ்க் எடுத்து உருவாக்கப்பட்ட சண்டைக்காட்சிகளுக்காகவே விஜயகாந்த் படங்களை ரசிகர்கள் பலரும் மீண்டும், மீண்டும் பார்த்தனர். அவரின் சினிமா வியாபாரத்திலும் சண்டைக்காட்சிகள் முக்கிய பங்கு வகித்தன.
இன்று விஜயகாந்த் பிறந்தநாள்.
விஜயகாந்த் படங்களின் சண்டைக்காட்சிகள் மற்றும் அவை உருவான விதம் குறித்து அவருடன் பணியாற்றியவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்ட கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
விஜயபிரபாகரன்
விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனிடம் பிபிசி சார்பில் அப்பா படங்களில் உங்களுக்கு பிடித்த சண்டைக்காட்சிகளை பகிர முடியுமா என்று கேட்டோம்.
"கேப்டன் நடித்த 155 படங்களில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான பைட் சீன் இருக்கும். கதைக்கும், சூழலுக்கும் நாம் அதை வித்தியாசமாக வைக்க வேண்டுமென்று அவர் அடிக்கடி கூறுவார். அந்த வகையில் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது கேப்டன் பிரபாகரன் படத்துல வரும் கிளைமாக்ஸ் பைட்.
உண்மையிலேயே கேப்டன் மிகவும் அருமையாக நடித்திருப்பார். அந்த பைட்டுக்கும் எனக்கும் தனி சம்பந்தம் உண்டு. ஆம், அப்பா அந்த கிளைமாக்ஸ் பைட்டில் பணியாற்றியபோது தான் நான் பிறந்தேன்.
அதை அப்பா என்னிடம் அடிக்கடி குறிப்பிடுவார். பல சினிமா நண்பர்களும் அதைக் கூறியிருக்கிறார்கள். எங்கள் வீட்டுக்கு பின்புறம் ஒரு செட் போட்டும் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். கிளைமாக்ஸ்ல வீரபத்ரன் அந்த பிரிட்ஜ் மேல் நடந்து வருவதும், கேப்டன் பதிலடி கொடுத்து சண்டைபோடுவதும் ஒரு கூஸ்பம்ப்ஸ் மொமண்ட்டாக இருக்கும்.
அடுத்து மாநகர காவல் படத்தில் எல்லா பைட்டும் மிரட்டலாக இருக்கும். ஓப்பனிங் போலீஸ் பைட்டுல இருந்து அந்த பஸ்ல இறங்கி வந்து அடிக்கும் ஃபைட் பண்றதா இருக்கட்டும், கிளைமாக்ஸ் ஃபைட்டா இருக்கட்டும் பிரமாதமாக இருக்கும். மசூதில நடக்கும் பைட்டும் விறுவிறுப்பாக இருக்கும். பிரதமர் இந்திரா காந்தி மேடமை அடிப்படையாக வைத்து அந்த ஃபைட் இருக்கும். உண்மையிலேயே அது ரொம்ப சூப்பரான கான்செப்ட். ஐ லவ் தட் மூவி'' என்றார் விஜயபிரபாகரன்.

பட மூலாதாரம், I.V Cine Productions
மேலும் அவர் கூறுகையில் ''அடுத்து ஆனஸ்ட் ராஜ் படத்துல அப்பா சொடக்கு போட்டு ஒரு பைட் காட்சி நடித்திருப்பார். அதுவும் நன்றாக இருக்கும். கிளைமாக்ஸ் பைட்ல ரொம்ப ரஃப் அண்ட் டஃப்பா இருப்பார். பொதுவாக வயதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல், அடி, வலிகளை பற்றி கவலைப்படாமல் ரசிகர்களை நன்றாக எண்டர்டெயின் செய்யவேண்டும் என்று நினைத்து அப்பா பைட் சீன்களில் நடிப்பார். அப்படி நடித்த படங்களில் வல்லரசு முக்கியமானது.
அந்த பட ஓபனிங் ஃபைட்டில் தேமுதிக கொடி அறிமுகம் செய்யும்போது அந்த ஃபைட் காட்சி வந்திருக்கும். அதில் ஒரு லாரியில் தலைகீழாகவே தொங்கிக்கொண்டு செல்வார். அதை அதிக நேரம் படமாக்கினார்கள். அப்பா அப்படி தொங்கிக்கொண்டே செல்வார் எனக் கூறுவார்கள். செங்கல்பட்டு ரோட்டில் அதிக நேரம் தொங்கிக் கொண்டே சென்றேன் என அவரும் கூறியிருக்கிறார். அடுத்து உளவுத்துறை படத்தின் பைட் ஸ்டைலாக இருக்கும்.
அந்த படத்தில் நேவி ஆபீசரா கேப்டன் வருவார். ஆழமான கடலில் ஷூட் பண்றதுக்கு லண்டன் சென்றிருந்தோம்.அந்த சமயத்தில் 100 அடி ஆழத்தில் சென்று அந்த வாட்டர் டேங்கில் சென்று ஒரு ஷாட் எடுத்தார்கள்.
1998ஆம் ஆண்டில் நானும் அப்பாவுடன் அந்த படத்துக்காக முதல் தடவை லண்டன் சென்றது மறக்க முடியாத நினைவு. அந்த பைட்டுக்காக அவர் நிறைய ரிஸ்க் எடுத்தார். அந்த படத்திலும் ஒரு பைக் ஃபைட் வரும். அதில் பைக்கில் ஒரே காலில் வண்டி ஓட்டுவார். அந்த காட்சிகளில் அவர் டூப் போடாமல் நடித்தார். அதில் எவ்வளவு ரிஸ்க் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியதில்லை.
கருப்பு நிலா என்று ஒரு படம். ஹெலிகாப்டரில் ஒரு சிங்கிள் ரோப் கூட இல்லாமல் பறப்பார். குஷ்பு மேடமும் ரஞ்சிதா மேடமும் காரில் இருப்பார்கள். ஒரே ஒரு ரோப் கூட இல்லாமல் நிஜமாக கேப்டன் ஒரே கையில் ஹெலிகாப்டரைப் பிடித்து கொண்டு மறுகையில் வந்து ஹீரோயினை புடித்து அந்த காரில் இருந்து காப்பாத்துவார்' என்று விஜயபிரபாகரன் கூறினார்.
விஜயகாந்த் எடுக்கும் ரிஸ்க் பற்றி பேசிய அவர் ,''எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. அந்த சீன் அதிக ரிஸ்க், நான் பயப்படுவேன் என்பதால், என்னையும், அம்மாவையும் அறைக்குப் போக சொல்லிவிட்டார். அப்போது, சிலர் ஏன் டூப் போடவில்லை என்று கேட்டபோது, 'டூப் போடுவதும் ஒரு மனுஷன்தானே, அவருக்கு உயிர் இல்லையா? அவருக்கு குடும்பம் இல்லையா?' என்று கேட்டார்.
"நானே நடிக்கிறேன், நான் தானே ஹீரோ. என்னைப் பார்க்கத்தானே மக்கள் வருகிறார்கள். நானே நடிக்கிறேன்' என்று சொல்லிவிட்டு அந்த படத்தின் சண்டைக்காட்சியில் நடித்தார். அதனை இப்போது நினைத்தாலும் கண்கள் கலங்குகின்றன. கேப்டன் இல்லாத இந்த தருணத்தில் அவர் படங்களை பார்க்கும்போது பல நினைவுகள் வருகின்றன . ஐ மிஸ் யூ டாடி, அவரை நினைத்து, உங்களால் முடிந்த உதவியை நீங்கள் மக்களுக்குச் செய்யுங்கள்'' என்றார்.
சண்டைப் பயிற்சியாளர் ராக்கி ராஜேஷ்

பட மூலாதாரம், I.V Cine Productions
விஜயகாந்த் படங்களில் அதிகமாக பணியாற்றியவர் சண்டைப் பயிற்சியாளர் ராக்கி ராஜேஷ். அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கேப்டனுடன் நான் இணைந்து பணியாற்றிய படங்கள் 54 படங்கள் இருக்கும் . அவர் மிகச்சிறந்த ஒரு நடிகர் மட்டுமல்ல, மிகச்சிறந்த ஒரு ஸ்டண்ட் நடிகரும் கூட. காரணம், ஸ்டண்ட் நடிகர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து சண்டைக் காட்சிகளில் நடிக்கின்றனர்.
அதேபோல் ஒரு ஸ்டண்ட் நடிகராகவும், ஒரு ஹீரோவாகவும் தன்னுடைய மனவலிமையை அந்த சண்டைக் காட்சிக்குள் புகுந்து சிறப்பாக செய்யக்கூடிய ஒரு மாமனிதர் என்றால், அது விஜயகாந்த் தான். அவருடன் எனக்கு ஏற்பட்ட பழக்கங்கள், நெருக்கங்கள் என்றென்றும் என்னால் மறக்க இயலாது. அவருடன் வாழ்ந்த நாட்களை எண்ணி எண்ணி நான் இன்னும் பெருமைப்படுகிறேன்.
நான் சண்டைக் காட்சி அமைத்த முதல் திரைப்படம் 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'. முதல் படம் என்பதால், சிரமமெடுத்து சண்டைக் காட்சியை நான் இயக்கினேன். அதை புரிந்துகொண்டு அவரும் நடித்து அசத்தினார். எனக்கு சினிமாவில் முத்திரையைப் பெற்றுத் தந்த படம் என்று சொன்னால் அது 'சின்ன கவுண்டர்'.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உதவியுடன், கதைக்கு ஏற்றவாறு நான் சண்டைக் காட்சியை அமைத்தேன். அதில் அந்த மாட்டுவண்டி சண்டை ரொம்ப பிடிக்கும். விஜயகாந்த் மட்டுமல்ல, அவரோடு சேர்ந்து ஸ்டண்ட் நடிகர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றி அந்த சண்டைக் காட்சிக்கு உயிரூட்டினர். அந்த சண்டைக் காட்சியில் அந்த தோளில் துண்டை எடுத்து வைத்து அடிக்கும் அந்த சண்டைக் காட்சியில் அவர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்." என்றார்.

"அடுத்து கருப்பு நிலா படத்தில் தனது தங்கையை விஜயகாந்த் தோளில் சுமந்துகொண்டு சண்டையிடும் அந்த ஸ்டண்ட் காட்சி பல ரசிகர்களாலும் பாராட்டப்பெற்ற ஒரு சண்டைக் காட்சி.
அது மெய்சிலிர்க்கும் சண்டைக் காட்சி.
உண்மையைச் சொன்னால் உயிரைப் பணயம் வைத்து அந்த சண்டைக் காட்சியைச் செய்திருப்பார். அந்த சண்டைக்காட்சி அவருக்கு மிகவும் நெருக்கமான ஒன்று.
வல்லரசு பட ஓபனிங் ஃபைட்டை யாரால் மறக்க முடியும். வில்லனை அரெஸ்ட் செய்வதுபோல் அந்த சண்டைக் காட்சி அமைந்திருக்கும். அது வித்தியாசமாக வர வேண்டும் என்று நினைத்து அந்த சண்டைக் காட்சியை மிகவும் கஷ்டப்பட்டு அமைத்திருந்தேன்.
ஓடிக் கொண்டிருக்கும் லாரியில் சண்டையிடும் காட்சி மிகவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி வெகு பிரபலம். வில்லனுடன் ஜெயிலில் மோதிக்கொள்ளும் அந்த சண்டைக் காட்சியும் எனக்கு மிகவும் பிடித்தமான சண்டைக் காட்சி; எனக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான சண்டைக் காட்சி என்று நான் சொல்வேன்.
'ஆனஸ்ட் ராஜ்' என்ற படத்துக்காக நானும் கேப்டனும் உழைத்தோம். அதில் குறிப்பாக பொன்னம்பலத்துக்கும் அவருக்கும் இடையே ஒரு சண்டைக் காட்சி இருக்கும். அக்காட்சி அவ்வளவு அருமையாக வந்தது. " என்றார் ராக்கி ராஜேஷ்.

பட மூலாதாரம், I.V Cine Productions
"பரதன் படத்தில் டைரக்டர் சபா பாக்சிங் சண்டை கேட்டார். புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக கிக் பாக்சிங் என்ற ஒரு அமைப்பை நாங்கள் அந்த நேரத்தில் உருவாக்கினோம். அவர் ரசிகர்களால் அது கொண்டாடப்பட்டது.
அந்த சண்டைக் காட்சியில் நடித்த தெலுங்கு ஹீரோ பிற்காலத்தில் மிகப்பெரிய ஹீரோவாக ஆனார். 'பெரிய மருது'படத்தில் பொன்னம்பலம், கேப்டன் சண்டைக்காட்சியில் நிறைய வால்ட் அடித்து பொன்னம்பலத்தை அடிப்பார். அது ஏகப்பட்ட ரிஸ்க். அதை சலிக்காமல் செய்தார். பொதுவாக சண்டைக்காட்சிகளில் ஹீரோ கைகளால் அடிப்பார்கள். ஆனால், கேப்டன் கால்களால் அடிப்பார். பறப்பார், உதைப்பார், அந்த ஸ்டைல் அவரின் தனித்துவம் ஆனது" என்று ராக்கி ராஜேஷ் கூறினார்.
ஸ்டண்ட் சில்வா

இன்றைக்கு இந்தியளவில் முன்னணி சண்டைப் பயிற்சியாளராக இருக்கும் ஸ்டண்ட் சில்வாவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
"ரஜினிகாந்த், கமல்ஹாசன் முன்னணி நடிகர்களாக உருவாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தனக்கென தனித்துவமான ஒரு சண்டை முறையை கொண்டு வந்தவர் விஜயகாந்த். 25, 30 வருஷத்துக்கு சண்டைக்காட்சி எடுப்பது மாறிவிட்டது. பாதுகாப்பானதாக ஆகிவிட்டது.
இப்போது பாதுகாப்புக்காக நிறைய ரோப்ஸ், மேட்ரஸ் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால், அவர் அப்பொழுதே ரிஸ்க் எடுத்தார். உயிரை பயணம் வைத்து நடித்தார்.
குறிப்பாக, 'விஜயகாந்த் சண்டை என்றாலே கிக்' உண்டு. அந்த ஸ்டைல் எனக்கு பிடிக்கும். புலன் விசாரணை படத்தில் ஒரு அற்புதமான சண்டை காட்சிகள் இருக்கும். அந்த கிளைமாக்ஸ் ஃபைட் எல்லாம் மறக்க முடியாது.
மாநகர காவலில் பொன்னம்பலம், தளபதி தினேஷ், பாபு, ராஜசேகர் அண்ணன் போன்ற பிரபல சண்டைக் கலைஞர்களிடம் அற்புதமாக சண்டை காட்சிகள் இருக்கும். கேப்டன் பிரபாகரன் ரயில் சண்டை யாராலும் மறக்க முடியாது.
செந்தூரப் பூவே சண்டைக்காட்சிகளை பார்க்கும்போது ஆங்கில படம் பார்ப்பது மாதிரி இருக்கும். ரயில் சண்டை என்றால் விஜயகாந்த் தான் நினைவில் வருவார்.
உழவன் மகன் படத்துல ஒரு ரேக்ளோ ரேஸ் சண்டை இருக்கும். அந்த மேக்கிங் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அது ஒரு வரலாற்று பதிவு" என்கிறார் அவர்.
நடிகர் பொன்னம்பலம்

பட மூலாதாரம், VIJAYAKANTH/FACEBOOK
வில்லன் நடிகர் பொன்னம்பலம் விஜயகாந்தின் இன்னொரு மனிதாபிமான பக்கத்தை சொல்கிறார்.
அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில் ''விஜயகாந்த் சண்டைக்கலைஞர்களை மதிப்பார். அவர்களுடன் பாகுபாடு பார்க்காமல் படப்பிடிப்பில் பழகுவார். அவர் என்ன சாப்பிடுகிறாரோ, அதை சண்டைக்கலைஞர்களும் சாப்பிட வேண்டும் என்று விரும்புவார். அசைவ உணவுகள் உட்பட அனைத்தையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பார். அவர் படப்பிடிப்பில் தான் சண்டைகலைஞர்களுக்கு ஹார்லிக்ஸ் கிடைக்கும். அதனால் அவர் படம் என்றால் எல்லாரும் மகிழ்ச்சி ஆகிவிடுவார்கள். அவரிடம் எல்லா சண்டைக் கலைஞர்களும் சகஜமாக பேசலாம்.
பகட்டு இல்லாமல் பழகுவார். சில சமயம் ஏதாவது தவறு நடந்து அடிபட்டால் உடனே அவர்களுக்கு, குடும்பத்துக்கு உதவுவார். ஆனஸ்ட் ராஜ் படத்தில் நான் அடிக்கும்போது அவர் காலில் அடிபட்டுவிட்டது. சென்னை வாஹினி ஸ்டியோவில் செட்போட்டு எடுத்தோம். நான் மிதித்தபோது அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார், படப்பிடிப்பு ரத்தானது.
அந்த படத் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் விசாரித்தபோது, 'நான்தான் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்க சொன்னேன். அது தவறாகிவிட்டது' என்றார். அந்த குணம் யாருக்கும் வராது. என்னை அவரின் பேட்டிகளில் பாராட்டியிருக்கிறார். செந்துாரபாண்டியில் விஜயுடன் அவர் நடித்தார். அந்த பட சண்டைக்காட்சிகளும் பேசப்பட்டன. இன்றைய முதல்வர் விஜயின் திரையுலக வளர்ச்சிக்கும் அந்த படம், கிளைமாக்ஸ் பைட் சப்போர்ட் ஆக அமைந்தன" என்றார்.
வசனகர்த்தா லியாகத் அலிகான்

விஜயகாந்த் படங்களில் அனல் பறக்கும் வசனங்களை எழுதிய லியாகத் அலிகானிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். உங்களுக்கு பிடித்த விஜயகாந்த் சண்டைக் காட்சிகளை குறிப்பிட முடியுமா என கேட்டோம்.
"நான் அவருடன் இணைந்து பணியாற்றிய படங்களில் புலன் விசாரணை கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி பிடிக்கும். அதில் சரத்குமார் வில்லன். இருவரும் கடுமையாக மோதும் அந்த காட்சி பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல், மாநகர காவல் படத்தில் அன்றைய பிரபலமான பைட்டர்களுடன் விஜயகாந்த் மோதும் அந்த சண்டைக்காட்சி சிறப்பாக வந்தது. அந்த பைட்டர்களுக்கும் பெயர் கிடைத்தது. கேப்டன் பிரபாகரன் பட போலீஸ் ஸ்டேஷன் சண்டைக்காட்சியை மறக்க முடியாது. அதை அண்ணாநகரில் செட் போட்டு எடுத்தோம். அதேபோல் ரயில் சண்டைக்காட்சியை இந்திய சினிமாவே பாராட்டியது.
ஏழை ஜாதி படத்தில் டிரம் பைட் அந்த காலத்தில் பலரால் பேசப்பட்டது. அந்த டிரம்மில் விஜயகாந்த் பைக்கில் வந்து சண்டைபோடுவார். அவருக்கு ஆக்ஷன் ஹீரோ என பெயர் கொடுத்தது எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை தான். அந்த படத்தில் வரும் பைட்டும் எனக்கு பிடிக்கும்" என்றார்.
தயாரிப்பாளர் டி சிவா

"விஜயகாந்த் சண்டைக்காட்சிகள் எப்போதுமே மிகவும் தனித்துவமானவை" என பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார் கேப்டனின் நண்பரும், தயாரிப்பாளருமான டி சிவா.
"உழவன் மகன் சேற்றுச் சண்டைக்காட்சி மறக்கவே முடியாது. கோபிச்செட்டிப்பாளையத்தில் கொளுத்தும் கோடை வெயிலில், ஒரு ஏக்கர் வயல் முழுவதையும் உழுது சேறாக்கி அந்தச் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
காலை முதல் காட்சி முடியும் வரை உடலெங்கும் சேறாகவே இருந்ததால் அவரால் சாப்பிடக்கூட முடியவில்லை. சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் அந்தப் படப்பிடிப்பு நடைபெற்றது. பொதுவாகவே அவர் டூப் போட மாட்டார்; அனைத்துக் காட்சிகளிலும் அவரே நடிப்பார். நாள் முழுவதும் சேற்றிலேயே இருந்து, தண்ணீர் அல்லது பழச்சாறு குடிப்பதற்காக மட்டும் முகத்தைக் கழுவிவிட்டு உடனே அடுத்த காட்சிக்குத் தயாராகிவிடுவார். இதை நான் அருகில் இருந்து பார்த்த மறக்க முடியாத அனுபவம்.
'கேப்டன் பிரபாகரன்' படத்தில் அவர் எடுத்த ரிஸ்க்குகளும் சண்டைக்காட்சிகளும் ஈடு இணையற்றவை. கயிறுகளில் தொங்கி வரும் காட்சிகளில் கைகள் கிழிந்து ரத்தம் சிந்தினாலும், படப்பிடிப்பை ஒரு நிமிடம் கூட நிறுத்த மாட்டார். ரத்தத்தைத் துடைத்து உதறிவிட்டு உடனே அடுத்த காட்சிக்கு வந்து நிற்பார்.
ஒரு படத்தில் ரவி என்ற ஸ்டண்ட் கலைஞர், "அண்ணா, இனி நீங்கள் கண்ணாடி உடைக்கும் சண்டைக் காட்சிகளைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுங்கள்" எனக் கேட்டுக்கொண்டார்.
கேப்டனும் அவருக்கு வாக்குறுதி அளித்தார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அடுத்த நாளே ஒரு படப்பிடிப்பு விபத்தில் ரவி உயிரிழந்தார். அவரது நினைவாகவும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றவும் கேப்டன் அதன்பிறகு கண்ணாடி உடைக்கும் காட்சிகளில் மட்டும் நடிப்பதில்லை. என்னுடைய சினிமா அனுபவத்தில் சண்டைக் காட்சிகளை இவ்வளவு நேர்த்தியாகவும், ஈடுபாட்டுடனும், ஆசையுடனும் செய்கிற ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை. கேப்டன்... எப்போதுமே கிரேட் தான்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































