'இடுப்பில் கட்டிங் பிளேயர், தோளில் பொறுப்பு' - 'வயர்-வுமன்' ஜோதியின் ஒருநாள் எப்படி?

காணொளிக் குறிப்பு, "சீருடை அணிய ஆசை"- மின்வாரியத்தில் பணிபுரியும் இந்தப் பெண்ணின் கதை என்ன?
'இடுப்பில் கட்டிங் பிளேயர், தோளில் பொறுப்பு' - 'வயர்-வுமன்' ஜோதியின் ஒருநாள் எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் உள்ள தமாங்கோனைச் சேர்ந்த ஜோதி என்கிற பெண் மின்வாரிய ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

மகாராஷ்டிரா மின் வாரியத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரியும் இவர் கிராமத்தினரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

தற்போது ஜோதி இந்தப் பணியை எளிதாகச் செய்கிறார். ஆனால் அவர் தொடங்கியபோது மின் கம்பம் ஏறுவது கூட மிகப்பெரிய சவாலாக இருந்தது.

மின் கம்பம் ஏறுவதோடு மட்டும் ஜோதியின் பணி நின்றுவிடுவதில்லை. பெரும்பாலான நேரங்களில் அவர் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறார்.

பல ஆண்டுகளாக மின் விநியோகத் துறையில் களப்பணி என்பது ஆண்களுக்கான பணியாகவே கருதப்பட்டு வந்தது.

மின் கம்பங்களில் ஏறுவது, ஃபியூஸ் மாற்றுவது, அறுந்த மின் கம்பிகளைச் சரிசெய்வது, மழை மற்றும் புயலிலும் சென்று மின் விநியோகத்தைச் சீரமைப்பது போன்ற பணிகளைச் செய்யும் பெண்களை அதிகம் பார்க்க முடியாது.

"மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன் அழைப்புகள் வரத் தொடங்கிவிடும். எங்களுடைய பணி நேரம் நிர்ணயிக்கப்பட்டது கிடையாது. 24 மணி நேரமும் நள்ளிரவாக இருந்தாலும் சரி, அழைப்பு வந்தவுடன் நாங்கள் செல்ல வேண்டும்"என்கிறார் அவர்.

தாமங்காவ் பிரிவில் பணியாற்றும் ஜோதியுடன் ஒரு நாள் பயணித்தபோது, இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை எங்களால் நேரடியாக அனுபவிக்க முடிந்தது.

முதல் புகார் கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரு வயல்வெளியில் இருந்து வந்தது. இருசக்கர வாகனத்தில் அங்கு சென்றோம். பின்னர் சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று, இரும்பு மின் கம்பம் ஒன்றை அடைந்தோம்.

மின் கம்பத்தில் ஏறுவதற்கு முன்பு, ஜோதி முதலில் அலுவலகத்தைத் தொடர்புகொண்டார்.

சம்பந்தப்பட்ட மின் இணைப்பில் மின் விநியோகத்தைத் துண்டிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட பின்னரே, அவர் பாதுகாப்பு பெல்ட்டை அணிந்து, கையுறைகளைப் போட்டுக்கொண்டு மின் கம்பத்தில் ஏறத் தொடங்கினார்.

மின் கம்பத்தில் ஏறுவது என்பது இந்தப் பணியின் ஒரு பகுதி மட்டுமே.

சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்வது முதல், பணியை முடித்த பிறகு மின் விநியோகத்தை மீண்டும் தொடங்குவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

பணியை முடித்த பிறகு அவர் கீழே இறங்கினார். பாதுகாப்பான தூரத்திற்குச் சென்ற பின்னர் மீண்டும் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, மின் விநியோகத்தைத் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

சில நிமிடங்களில் அந்தப் பகுதிக்கான மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.

ஜோதியைப் பொறுத்தவரை, இது வெறும் பணி மட்டுமல்ல.

சிறுவயதில் மற்ற குழந்தைகளைப் போலவே அவருக்கும் சீருடை மீது ஈர்ப்பு இருந்தது.

"நான் போலீஸாக வேண்டும் என்று விரும்பினேன். இல்லையென்றால், ராணுவத்தில் சேர வேண்டும் என்று நினைத்தேன்."

அவர் உயரம் குறைவாக இருந்ததால் அந்தக் கனவு நிறைவேறவில்லை. ஆனால், சீருடை அணிய வேண்டும் என்ற ஆசை மட்டும் அவருக்குள் இருந்தது.

மகாவிதரன் பணியாளர் தேர்வு பட்டியலில் தனது பெயர் இடம்பெற்ற நாள் அவருக்கு இன்னும் தெளிவாக நினைவில் இருக்கிறது. "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்"என்கிறார் ஜோதி.

"உங்களை வயர்மேன் என்று அழைக்கட்டுமா அல்லது வயர்வுமன் என்று அழைக்கட்டுமா?" என்று நான் ஜோதியிடம் கேட்டேன்.

அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

"மக்கள் என்னை என் பெயரில்தான் அழைக்கிறார்கள்... ஜோதி" என்றார்.

பின்னர் , "வயர்வுமன் என்று சொன்னாலும்... வயர்மேன் என்று சொன்னாலும்... நீங்கள் அதே வேலையைத்தானே செய்வீர்கள்?"என ஜோதி சாதாரணமாகக் கேட்டார்.

அவருடன் ஒரு நாள் முழுவதும் நடந்த பிறகு, ஜோதி வயல்வெளிகளில் நடந்து செல்லும் காட்சி என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

ஒரு கையில் எர்த்திங் ராட், இடுப்பில் கட்டிங் பிளையர், தோள்களில் பொறுப்பு.

மெலிந்த உடல்வாகு கொண்ட அந்த இளம் பெண், அனுபவம் வாய்ந்த ஒரு பணியாளரின் நம்பிக்கையுடன் நடந்து செல்கிறார்.

அவரின் கதை என்ன? இந்தக் காணொளியில் முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு