750 ஆண்டுகள் பழமையான ஆக்ஸ்ஃபோர்ட் நூலகத்தில் அப்படி என்ன இருக்கிறது?

    • எழுதியவர், கிறிஸ்டியன் கிறிடிகோஸ்
    • பதவி,
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மெர்டன் கல்லூரி நூலகம், உலகின் மிகவும் பழமையான நூலகங்களில் ஒன்றாகும். இது ஆஸ்டெக் பேரரசை விடவும் பழமையானது.

பல நூற்றாண்டுகளாக, 14ஆம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர் ஜே.ஆர்.ஆர்.டோல்கீன் உள்படப் பல புகழ்பெற்ற ஆளுமைகள் இந்த நூலகத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த நூலகத்தின் 750ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பிபிசிக்கு அளித்த ஒரு சிறப்புப் பேட்டியில், இதன் நூலகர் இந்த இடம் ஏன் இவ்வளவு தனித்துவமானது என்பதை விளக்கினார்.

மெர்டன் கல்லூரி வளாகத்திற்குள், ஒரு பழமையான மரப்பெட்டி உள்ளது. இடைக்காலத்தில், தனித்தனியே சாவிகளை வைத்திருக்கும் மூன்று வெவ்வேறு நபர்கள் ஒன்றாகக் கூடினால்தான் அந்தப் பெட்டியைத் திறக்க முடியும் என்ற நிலை இருந்தது. அப்படிப்பட்ட பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெட்டியில் இருந்தது தங்கமோ நகைகளோ இல்லை, அவை புத்தகங்கள்.

இன்று கேட்பதற்கு இது வியப்பாகத் தோன்றலாம். ஆனால் அக்காலத்தில் புத்தகங்கள் விலைமதிப்பு மிக்கவையாகக் கருதப்பட்டன. அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு புத்தகமும் கையாலேயே எழுதப்பட வேண்டியிருந்தது.

அதற்குப் பெருமளவு நேரமும் உழைப்பும் தேவைப்பட்டது. சில நேரங்களில் பல மாதங்கள் கூட ஆனது. இதனால், புத்தகங்கள் மிகவும் அரிதானவையாகவும் அதிக விலை கொண்டவையாகவும் இருந்தன. அதனால்தான், இன்றைய பல்கலைக்கழகங்கள் முன்னாள் மாணவர்களிடம் நிதியுதவி கோருவதைப் போலவே, 13ஆம் நூற்றாண்டில் மெர்டன் கல்லூரி தனது உறுப்பினர்களிடம் புத்தகங்களை நன்கொடையாக அளிக்குமாறு கோரியது.

இந்த விதிமுறை 1276ஆம் ஆண்டில் பேராயர் கேன்டர்பரியால் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இதுவே மெர்டன் கல்லூரி நூலகத்தின் தொடக்கமாக அமைந்தது. அன்று முதல் இன்று வரை இந்த நூலகம் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நூலகம் எவ்வளவு பழமையான என்பதைப் புரிந்துகொள்ள பின்வரும் உண்மையைச் சிந்தித்துப் பாருங்கள்: பிளேக் நோயால் ஏற்பட்ட பெருமளவிலான இறப்புகளைக் குறிக்கும் 'பிளாக் டெத்' போன்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நிகழ்வதற்கு முன்பே இது தொடங்கப்பட்டது. பின்னர் கோவிட்-19 பெருந்தொற்றுப் பேரிடர்க் காலம் உள்பட நவீன காலம் வரையிலும் இது தொடர்ந்து இயங்கி வருகிறது. கடந்த பல்லாண்டுக் காலத்தில், தொடக்க கால அறிஞர்கள் முதல் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரை பல்வேறு தரப்பட்ட மனிதர்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த மாதத்துடன், இந்த நூலகம் தனது 750ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இதுவொரு மிக முக்கியமான மைல்கல். விக்டோரியன் காலத்தில்கூட, மக்கள் இந்த நூலகத்தின் பழமையையும் முக்கியத்துவத்தையும் நன்கு உணர்ந்திருந்தனர். அந்தக் காலகட்டத்தில், இது பெரும்பாலும், 'இங்கிலாந்தின் மிகப் பழமையான நூலகம்' என்றே அழைக்கப்பட்டு வந்தது.

இருபதாம் நூற்றாண்டில், ருட்யார்ட் கிப்ளிங், ஜான் புகான் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் வரலாற்றுப் புனைகதைகளில் இந்த நூலகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். இது இந்த நூலகத்திற்கு மேலும் அதிக புகழையும் மரியாதையையும் ஈட்டித் தந்தது.

இந்த நூலகத்தின் நற்பெயர் பெருகியபோது, சிலர் இதன் பழமையைப் பற்றி மிகைப்படுத்திக் கூறத் தொடங்கினர். ஆக்ஸ்ஃபோர்டை சேர்ந்த சில ஆர்வமிக்க மாணவர்கள் மற்றும் அறிஞர்கள், இது 'உலகிலேயே மிகப் பழமையான நூலகம்' என்றுகூட உரிமை கோரத் தொடங்கினர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நூலகத்தின் தொடக்கப்புள்ளி

இன்றைய காலகட்டத்தில், எந்த நூலகம் மிகவும் பழமையானது என்பது குறித்துப் பெரிய கூற்றுகளை முன்வைப்பதில் வரலாற்றாசிரியர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் தெரசா வெப்பர், அதற்கான காரணத்தை விளக்குகிறார்.

"இதுவொரு சிக்கலான கேள்வி. நூலகத்திற்கு என ஒரு குறிப்பிட்ட வரையறை இல்லை. மேலும், இன்று நாம் நூலகம் என்று கருதும் ஒன்றின் வளர்ச்சியில் பலவிதமான கட்டங்கள் இருந்தன," என்கிறார் அவர்.

ஆரம்பக் காலத்தில், மெர்டன் கல்லூரி நூலகம் நவீன நூலகங்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது. அங்கு நூலகர் இல்லை, மக்கள் சுற்றி வந்து புத்தகங்களைத் தேர்வு செய்வதற்கான அலமாரிகளும் இருக்கவில்லை.

மெர்டனின் தற்போதைய நூலகரான ஜூலியா வால்வொர்த், அது எவ்வாறு செயல்பட்டது என்பதை விளக்கினார். "பெட்டியில் இருந்து புத்தகங்களைக் கடன் வாங்குவதற்கும் திருப்பிக் கொடுப்பதற்கும் ஒரு முறை இருந்தது. 'போய் உங்களுக்குத் தேவையான புத்தகங்களைத் தேடுங்கள்' எனச் சொல்வதற்குப் பதிலாக, முழு சமூகமும் ஒன்றுகூடி அந்தப் பெட்டியைத் திறக்கும்."

விரைவில், நூலகம் மாறத் தொடங்கி, இன்று நாம் அறிந்த நூலகங்களைப் போல் ஆனது. புத்தகங்களைச் சேகரிக்கும் விதி அறிமுகப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு, சில புத்தகங்கள் முதன்முறையாகப் பெட்டிக்கு வெளியே வைக்கப்பட்டன. மக்கள் விரும்பும் போதெல்லாம் படிப்பதற்காக, இந்தப் புத்தகங்கள் ஒரு மேசையுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்தன.

வால்வொர்த்தின் கூற்றுப்படி, இதுவொரு முக்கியமான முன்னேற்றம். இது "கடன் மற்றும் குறிப்பு நூலகத் தொகுப்புகளுக்கு இடையிலான நவீன வேறுபாட்டை முன்னறிவிக்கிறது" என்று அவர் கூறுகிறார். எளிதாகக் கூறுவதெனில், சில புத்தகங்களைக் கடன் வாங்கவும், மற்றவற்றை நூலகத்தில் மட்டுமே படிக்கவும் முடியும் என்ற கொள்கையின் ஆரம்பக்கால உதாரணமாக இது இருந்தது.

கடந்த 1370களில் நூலகம் மற்றொரு பெரிய படியை எடுத்து வைத்தது. பெருகிவரும் புத்தகங்களைச் சேமிப்பதற்காக ஒரு சிறப்பு அறை கட்டப்பட்டது. இது அதை ஒரு முறையான நூலகம் போல மாற்றியது.

வால்வொர்த் மற்றுமொரு முக்கியமான மாற்றத்தை விளக்கினார். "புத்தகங்களை நேராக வைப்பதற்காக கிடைமட்ட அலமாரிகள் நிறுவப்பட்டன. பிரிட்டனில் புத்தகங்களைச் சேமிக்கும் இந்த முறையின் முதல் பதிவு செய்யப்பட்ட பயன்பாடு மெர்டன் கல்லூரி நூலகமாகும்."

சுவாரஸ்யமாக, புத்தகங்கள் இன்று நாம் பார்க்கும் விதத்தில் அடுக்கப்படவில்லை. அவை அவற்றின் முதுகுப் பகுதிகள் உள்நோக்கி இருக்கும்படி வைக்கப்பட்டிருந்தன. மேலும் தலைப்புகள் பக்கங்களின் வெளி விளிம்பில் எழுதப்பட்டிருந்தன. இதற்குக் காரணம், புத்தகங்கள் அப்போதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்ததே ஆகும். அந்தச் சங்கிலிகள் புத்தகத்தின் முன்பக்கத்தில் இணைக்கப்பட்டிருந்தன.

"கடன் கொடுக்கப்பட்ட புத்தகங்களைவிட, சங்கிலியால் பிணைக்கப்பட்ட புத்தகங்கள் தப்பிப் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்," என்று விளக்குகிறார் வால்வொர்த். அதாவது, புத்தகங்களை சங்கிலியால் பிணைப்பது அவை தொலைந்து போவதையோ அல்லது திருடப்படுவதையோ தடுக்க உதவியதாகக் கூறுகிறார் அவர்.

இன்று, நூலகத்தில் உள்ள ஒரு சில புத்தகங்கள் மட்டுமே இன்னும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன. அதுவும் காட்சிக்கு வைப்பதற்கு மட்டுமே. பெரும்பாலான புத்தகங்கள் இப்போது அவற்றின் முதுகுப் பகுதிகள் வெளிப்புறமாக இருக்கும்படி நவீன முறையில் அடுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், அந்தப் பழைய இடைக்கால நூலக அறையின் பெரும்பகுதி இன்றும் அப்படியே காட்சியளிக்கிறது. இது காலத்தால் உறைந்துபோன ஓர் இடம் என்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. நுழைவாயிலுக்கு அருகில், பார்வையாளர்கள் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசல் பெட்டியை இன்றும் காணலாம். அதுவே நீண்ட காலத்திற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பெட்டி என்று வால்வொர்த் நம்புகிறார்.

இன்றும்கூட, மாணவர்கள் கல்விப் பருவத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூலகத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்தத் தொடர்ச்சியான பயன்பாடுதான், மெர்டன் மிகவும் பழமையான, இன்னும் பயன்பாட்டில் உள்ள நூலகங்களில் ஒன்றைக் கொண்டுள்ளதாக மக்கள் கூறுவதற்குக் காரணம்.

தெரசா வெப்பர் கூறுவது போல, "தொடர்ச்சியான பயன்பாட்டில் இருந்த இதைவிடப் பழமையான ஒரு நூலக அறையை நினைத்துப் பார்ப்பது கடினம்."

தொன்மமாகப் போற்றப்படும் நூலகம்

காலப்போக்கில் மெர்டன் கல்லூரி நூலகம் எவ்வளவு பழமையானது மற்றும் சிறப்பானது என்பதைப் பற்றி அதிக மக்கள் பேசத் தொடங்கினர். விக்டோரியன் காலத்தில், நூலகம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத் தொடங்கியபோது, இந்தக் கூற்றுகள் பிரபலமடைந்தன.

பார்வையாளர்கள் அதன் அழகான வண்ணக் கண்ணாடி ஜன்னல்களையும் அரிய புத்தகங்களையும் கண்டு வியந்தனர். அங்குள்ள மிகவும் பிரபலமான புத்தகங்களில் ஒன்று, 'தி கேன்டர்பரி டேல்ஸ்' நூலின் 15ஆம் நூற்றாண்டு பதிப்பாகும். நூலகர் ஜூலியா வால்வொர்த், "இது இங்கிலாந்தில் அச்சிடப்பட்ட ஆரம்பக்கால புத்தகங்களில் ஒன்று. மெர்டனின் பிரதியில் உள்ள தனித்துவம், கையால் அலங்கரிக்கப்பட்ட அதன் முனைகள்தான்," என்று விளக்கினார்.

புகழ்பெற்ற பார்வையாளர்களும் நூலகத்தைப் பார்க்க வந்தனர். அமெரிக்க எழுத்தாளர் ரால்ஃப் வால்டோ எமர்சன் அங்கு வருகை தந்து, தனது 1856ஆம் ஆண்டு பயண நூலான 'இங்கிலீஷ் ட்ரெய்ட்ஸ்'இல் அதைப் பற்றி எழுதினார். பின்னர், 1884இல் இளம் பீட்ரிக்ஸ் பாட்டரும் நூலகத்திற்கு வருகை தந்தார். அவர் தனது நாட்குறிப்பில் நூலகத்தின் "அழகமான ஓக் மரக் கூரை" மற்றும் அதன் "பழமையான, தூசி படிந்த வாசனை" பற்றி எழுதினார்.

இந்தக் காலகட்டத்தில், புத்தகங்களும் பத்திரிகைகளும் நூலகத்தை மிகவும் உயர்வான வார்த்தைகளில் விவரிக்கத் தொடங்கின. 1878ஆம் ஆண்டின் ஆக்ஸ்ட்ஃபோர்ட் வழிகாட்டி ஒன்று, அதை "தற்போது இங்கிலாந்தில் உள்ள மிகவும் பழமையான நூலகம்" என்று குறிப்பிட்டது. 1885ஆம் ஆண்டின் என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பதிப்பு, அதை "இங்கிலாந்தில் தற்போதுள்ள மிகப் பழமையான நூலகம்" என்று விவரித்தது.

காலப்போக்கில் இந்தக் கூற்றுகள் இன்னும் பெரிதாகின. 1928ஆம் ஆண்டில், ஆக்ஸ்ஃபோர்ட் பாதுகாப்பு அறக்கட்டளை நடத்திய ஒரு நிகழ்வைப் பற்றிய கட்டுரை ஒன்று 'தி டைம்ஸ்' பத்திரிகையில் வெளியானது. அதில் அந்த நூலகம் "உலகின் மிகப் பழமையான நூலகம்" என்று அழைக்கப்பட்டது.

இந்த வலுவான புகழ் இலக்கியத்திலும் வெளிப்பட்டது. எஃப் ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்டின் புகழ்பெற்ற 'தி கிரேட் கேட்ஸ்பி' நாவலில், அதன் முக்கிய கதாபாத்திரம், புகழ்பெற்ற இடங்களில் இருந்து அறைகளைப் பிரதிசெய்து ஒரு மாளிகையைக் கட்டுகிறார். அவரது நூலகம் மெர்டன் கல்லூரி நூலகத்தைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. "அந்தக் காலத்தில், 'சிறந்த' பழங்கால நூலகம் என்பதற்கு அடையாளமாக மெர்டனின் நூலகம் திகழ்ந்தது" என்று வால்வொர்த் விளக்கினார்.

இந்தக் கருத்து ஓரளவு உண்மையானது என்றும் அவர் கூறுகிறார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில், சில உணவு விடுதிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் போல வடிவமைக்கப்பட்ட அறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று மெர்டன் கல்லூரி நூலகத்தை அடிப்படையாகக் கொண்டது.

இருப்பினும், இன்று வால்வொர்த் இதுபோன்ற பெரிய கூற்றுகளை முன்வைப்பதில் கவனமாக இருக்கிறார். அது உலகின் மிகப் பழமையான நூலகம் என்று அவர் கூறவில்லை. மாறாக, அதை இன்னும் துல்லியமாக, "ஐரோப்பாவில் இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கும் மிகப் பழமையான கல்விசார் நூலகங்களில் ஒன்று" என்று விவரிக்கிறார்.

இந்தக் கவனமான வார்த்தைப் பிரயோகம் முக்கியமானது. ஏனெனில் எல்லா பழைய நூலகங்களும் ஒரே மாதிரியானவை அல்ல. எடுத்துக்காட்டாக, உறுப்பினர் ஆவதற்குப் பணம் செலுத்த வேண்டியிருந்த தனியார் நூலகங்களில் இருந்து, மடாலய நூலகங்கள் முற்றிலும் மாறுபட்ட முறையில் செயல்பட்டு வந்தன.

கடந்த காலத்தில் மக்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த நாடு அல்லது பிராந்தியத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர் என்பதையும் வால்வொர்த் சுட்டிக்காட்டுகிறார். "இதன் பொருள், கடந்த காலத்தில் உலகின் பிற பகுதிகளைப் பற்றி மக்களுக்குத் தெரியாமல் இருந்தது என்பதல்ல. மாறாக, தங்கள் சொந்த உலகத்திற்கே முதன்மைத்துவம் உண்டு எனக் கருதும் ஒரு மனப்போக்கு மக்களிடையே நிலவி வந்தது. ஆனால் தற்போது நமது கண்ணோட்டம் மிகவும் பரந்த உலகளாவிய தன்மையைக் கொண்டுள்ளது. இது முற்றிலும் சரியானதே" என்கிறார்.

எளிதாகக் கூறுவதெனில், இன்றைய சமூகத்தில் மக்கள் தங்கள் சொந்த நாட்டின் மீது மட்டுமே கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, வரலாற்றை ஒரு பரந்த, உலகளாவிய கண்ணோட்டத்தில் அணுக முயல்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.

உலகின் பழமையான நூலகம் குறித்தான விவாதம்

உலகம் முழுவதும், "உலகின் மிகப் பழமையான நூலகம்" என்று கூறப்படும் பல புகழ்பெற்ற நூலகங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் எது உண்மையிலேயே மிகவும் பழமையானது என்பதைத் தீர்மானிப்பது எளிதல்ல.

உதாரணமாக, 2016இல் மொராக்கோவில் உள்ள அல்-கராவிய்யின் நூலகம் புதுப்பிக்கப்பட்டபோது, பல ஊடக செய்திகள் அதை "உலகின் மிகப் பழமையான நூலகம்" என்று குறிப்பிட்டன. இருப்பினும், கின்னஸ் உலக சாதனைகள், எகிப்தில் உள்ள புனித கேத்தரின் மடாலயத்தில் இருக்கும் நூலகத்திற்கே அந்தப் பட்டத்தை வழங்குகிறது. அதுவே தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருக்கும் மிகப் பழமையான நூலகம் என்று அது கூறுகிறது.

ஆனால் இந்த விஷயங்களில்கூட, இந்த நூலகங்கள் உண்மையில் எப்போது தொடங்கின என்பதைத் துல்லியமாகக் கூறுவது கடினம். அல்-கராவிய்யின் நூலகத்தைப் பொறுத்தவரை, அது 9ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என்ற அதன் கூற்றை சில வல்லுநர்கள் முழுமையாக நம்பவில்லை.

"இதில் பல கட்டுக்கதைகள் உள்ளன" என்றும், அதன் சில பகுதிகள் முழுமையாக நிரூபிக்கப்படாமல் இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

புனித கேத்தரின் மடாலயத்தைப் பொறுத்தவரை, அந்தக் கட்டடம் 6ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆனால், அங்குள்ள புத்தகங்களின் தொகுப்பு இன்னும் பழமையானதாக, ஒருவேளை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தையனவாக இருக்கலாம் என்று சில மிகப் பழமையான எழுத்துகள் குறிப்பிடுகின்றன.

இந்தக் குழப்பத்தை ஜூலியா வால்வொர்த் தெளிவாக விளக்குகிறார். "அது நீங்கள் எப்படிக் கணக்கிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் எப்போது காலவரிசையைத் தொடங்கப் போகிறீர்கள்? ஒரு நூலகத்தின் தொடக்கம் என்பது என்ன?" என்று அவர் கூறுகிறார். எளிமையாகச் சொன்னால், ஒரு நூலகம் எப்போது தொடங்கப்பட்டது என்பதை நாம் சரியாக எப்போது தீர்மானிக்கிறோம் என்று அவர் கேட்கிறார்.

டர்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் கேம்சன் தனது கருத்தைத் தெரிவித்தார். புனித கேத்தரின் மடாலயத்தில் உள்ள நூலகம் "ஒருவேளை மிக நீண்ட தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டதாக இருக்கலாம்" என்று அவர் கூறுகிறார். ஆனால் அவர் ஒரு முக்கியமான விஷயத்தையும் சேர்க்கிறார். "நூலகத்தின் தன்மை, அது பயன்படுத்தப்பட்ட விதம் மற்றும் அது புரிந்துகொள்ளப்பட்ட விதம் ஆகியவை காலப்போக்கில் மாறிவிட்டன," என்கிறார் அவர்.

அதாவது, ஓரிடம் மிக நீண்ட காலமாக இருந்து வந்தாலும், மக்கள் அதை ஒரு நூலகமாகப் பயன்படுத்திய விதம் மாறியிருக்கலாம். எனவே, ஒன்றை "மிகப் பழமையான நூலகம்" என்று அழைப்பது எளிமையானதல்ல என்று அவர் குறிப்பிடுகிறார்.

"நூலகம்" என்பதன் மூலம் நாம் எதைக் குறிப்பிடுகிறோம் என்பதற்கு அத்தகைய எந்தவொரு கூற்றுக்கும் ஒரு தெளிவான விளக்கம் தேவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவன்றி, ஒரு தெளிவான வெற்றியாளரைத் தீர்மானிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

தெரசா வெப்பர் இதுகுறித்துச் சிந்திப்பதற்கான வெவ்வேறு வழிகளை விளக்குகிறார். "மிகப் பழமையான நூலகம் என்பதை, ஒன்றாகவே நிலைத்திருந்த புத்தகங்களின் மிகப் பழமையான, ஒருங்கிணைந்த தொகுப்பாக நீங்கள் கருதலாம். அல்லது, அந்த நூலகம் அமைந்திருந்த பௌதிக இடத்தின் (கட்டடத்தின்) தொடர் இருப்பைக் கொண்டும் நீங்கள் அதைக் கருதலாம். அல்லது, 'தொடர்ச்சியாக அதே இடத்தில் இயங்கி வரும் மிகப் பழமையான இடமும், புத்தகத் தொகுப்பும் எது?' என்றும்கூட நீங்கள் வினவலாம்," என்கிறார் அவர்.

அதாவது, ஒரு நூலகத்தை, அதன் புத்தகங்களைக் கொண்டோ, கட்டடத்தைக் கொண்டோ, அதன் தொடர் பயன்பாட்டைக் கொண்டோ எனப் பல வழிகளில் வரையறுக்கலாம். அதனால்தான், "உலகின் மிகப் பழமையான நூலகம் எது?" என்ற கேள்விக்கு, எளிமையான, தெளிவான ஒரேயொரு விடை இருப்பதில்லை என்று கூறுகிறார் தெரசா வெப்பர்.

ஒரு நூலகத்தை வரையறுப்பது எவ்வளவு கடினம் என்பதை விளக்க, தெரசா வெப்பர் சீனாவில் இருந்து ஒரு சுவாரஸ்யமான உதாரணத்தைக் குறிப்பிடுகிறார்.

அவர் துன்ஹுவாங் நூலகக் குகையைப் பற்றிப் பேசினார். அது பழைய கையெழுத்துப் பிரதிகளால் நிரம்பிய ஒரு மறைக்கப்பட்ட அறை. அது சுமார் 11ஆம் நூற்றாண்டில் மூடப்பட்டு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மூடப்பட்டே இருந்தது. இந்த நூலகக் குகை 1900ஆம் ஆண்டில்தான் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

"ஆனால், அந்தப் புத்தகங்கள் அங்கே தொடர்ந்து சேமிப்பில் இருந்தன," என்கிறார் வெப்பர்.

இன்று ஒரு நூலகம் என்றால் என்ன என்பதை வரையறுப்பது இன்னும் கடினமாகிவிட்டது. ஏனெனில், நவீன டிஜிட்டல் நூலகங்களில் பௌதீக புத்தகங்களோ அல்லது இடங்களோ இல்லாமல்கூட இருக்கலாம். "ஒரு நூலகம் என்றால் என்ன என்பதற்கான வரையறை எப்போதுமே விரிவானதாக இருக்க வேண்டியிருந்தது. புதிய தொழில்நுட்பத்தின் அறிமுகம் அதன் தொடர்ச்சி மட்டுமே. ஆனால், ஒரு பௌதீக இடமாக மட்டுமே நூலகம் மறைந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை," என்கிறார் வெப்பர்.

ஜூலியா வால்வொர்த்தும் இதேபோன்ற கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் தற்போது மெர்டன் கல்லூரி நூலகத்தில் உள்ள கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கும் ஒரு திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

"மக்கள் அவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் அணுக முடியும். ஆனாலும், அவர்கள் நூலகத்திற்கு வந்து, கடந்த காலத்தில் மக்கள் புத்தகங்களை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதைப் புரிந்துகொள்ள விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் அவர்.

மெர்டன் நூலகத்தின் 750 ஆண்டுக்கால வரலாற்றை நாம் பார்க்கையில், டிஜிட்டல் வடிவங்களுக்கு மாறும் இந்த நகர்வு, அதன் நீண்ட பயணத்தில் மற்றுமொரு படியாகவே தெரிகிறது. முன்னதாக, புத்தகங்கள் பூட்டப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டன. பின்னர் மேசைகளில் சங்கிலியால் பிணைக்கப்பட்டன. அதன் பிறகு அலமாரிகளில் வைக்கப்பட்டன. இப்போது அவை டிஜிட்டல் உலகிற்குள் நகர்கின்றன.

இந்த நீண்ட பரிணாம வளர்ச்சியின் காரணமாக ஒரு நூலகத்தை "மிகப் பழமையானது" என்று அழைப்பது இனி அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது என வால்வொர்த் கருதுகிறார். "என்னைப் பொறுத்தவரை, ஒரு நூலகம் எவ்வளவு காலமாக இயங்கி வருகிறது என்பது முக்கியமல்ல. அது சமூக உணர்வு குறித்தானது," என்கிறார் வால்வொர்த்.

கடந்த 1276இல் பேராயர் கேன்டர்பரியால் தொடங்கப்பட்ட பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அந்தக் காலத்தில் ஒரு பொதுத் தொகுப்பை உருவாக்குவதற்காக மக்கள் புத்தகங்களை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

"அவர் அந்த விதிமுறைகளை வகுத்தபோது உருவானதே மக்களால் கட்டமைக்கப்பட்ட பொதுத் தொகுப்பு என்னும் கருத்தாக்கம். எனவே, கடந்த 750 ஆண்டுகளாக மக்கள் ஒரு நிறுவனத்துடனும் அதன் புத்தகங்களுடனும் இத்தகைய பிணைப்பைப் பேணிப் பாதுகாத்து வருவது உண்மையிலேயே வியக்கத்தக்க விஷயம்," என்று வால்வொர்த் கூறுகிறார்.

இறுதியில், புத்தகங்கள் என்பவை மிக நீண்ட காலம் நிலைத்து இருக்கக்கூடிய, ஆற்றல்மிக்க ஒரு கருவூலம் என்பதை இது உணர்த்துகிறது. அவை பழைய காகிதங்களில் கையால் எழுதப்பட்டு ஒரு மரப்பெட்டியில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தாலும் சரி, அல்லது இணையத்தில் டிஜிட்டல் கோப்புகளாக பகிரப்பட்டாலும் சரி, காலங்களைக் கடந்தும் அவற்றின் மதிப்பு தொடர்ந்து நிலைத்திருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு