உத்தர பிரதேசம்: 10 ஆண்டுகளாக பல குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த தம்பதிக்கு மரண தண்டனை - பிபிசி கள ஆய்வு

    • எழுதியவர், கௌரவ் குல்முஹர்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • வாசிக்கும் நேரம்: 11 நிமிடங்கள்

(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உள்ள சில விவரங்கள் சங்கடம் தரக்கூடும்.)

பிப்ரவரி 20, 2026 அன்று, உத்தர பிரதேச மாநிலத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு போக்சோ நீதிமன்றம், ஒரு தீவிரமான குழந்தைப் பாலியல் வன்கொடுமை வழக்கில் மிகக் கடுமையான தண்டனையை வழங்கியது.

நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ராம் பவன், அவரது மனைவி துர்காவதி ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கும் மேலாக 33 சிறார்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் அவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.

இந்த வழக்கு "அரிதிலும் அரிதான" வகையைச் சேர்ந்தது எனவும், இது மிகவும் தீவிரமான குற்ற வகைகளில் ஒன்று எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ விசாரித்தது. சிபிஐ 2020ஆம் ஆண்டில் இந்த வழக்கைப் பதிவு செய்தது. ஆனால் இதில் எழுப்பப்படும் முக்கியக் கேள்வி என்னவெனில், இந்தக் குற்றம் குறித்து சிபிஐ-க்கு முதன்முதலில் தெரிய வந்தது எப்படி?

அக்டோபர் 31, 2020 அன்று, சித்திரகூட் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் சில குழந்தைகள் திட்டமிட்ட முறையில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகி வருவதாக சிபிஐ-க்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலை வழங்கிய நபர், 'பென் டிரைவ்' ஒன்றையும் சிபிஐ-யிடம் ஒப்படைத்துள்ளார். அதில் 34 காணொளிகளும் 679 புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

சிபிஐ அதிகாரிகள் அந்தக் கோப்புகளை ஆராய்ந்தபோது, அதிர்ச்சியூட்டும் ஆதாரங்களைக் கண்டனர். அந்தக் காணொளிகளிலும் புகைப்படங்களிலும், ராம் பவனும் அடையாளம் தெரியாத வேறு சில நபர்களும் குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதைத் தொடர்ந்து அக்டோபர் 31, 2020 அன்று, ராம் பவனுக்கு எதிராக டெல்லியில் சிபிஐ தரப்பில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377, போக்சோ சட்டத்தின் பிரிவு 14 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67பி ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டது. சரியாக இரண்டு நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 2, 2020இல், சிபிஐ அதிகாரிகள் சித்திரகூட்டுக்கு சென்று விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையின்போது, சித்திரகூட் மாவட்டத்தின் கார்வி பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பாசன கட்டுமானப் பிரிவில் ராம் பவன் ஓர் 'இளநிலை பொறியாளராக' பணியாற்றி வந்தது சிபிஐ-க்கு தெரிய வந்தது. சித்திரகூட், பண்டா, ஹமீர்பூர், மஹோபா உள்ளிட்ட பல மாவட்டங்கள் அவரது பணி வரம்புக்குள் அமைந்திருந்தன.

விசாரணைத் தகவல்களின்படி, ராம் பவன் சிறார்களைத் தனது வீட்டுக்கு வரவழைத்து ஆசை காட்டி ஏமாற்றி வந்துள்ளார். கல்வி வாய்ப்புகள், கணினிப் பயிற்சி, அலைபேசிகள் அல்லது பிற சலுகைகளை வழங்குவதாகக் கூறி அவர் குழந்தைகளைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார். குழந்தைகள் அவரது வீட்டுக்கு வந்தவுடன், அவர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

இத்தகைய வன்கொடுமைச் செயல்கள் காணொளிகளாகப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. இந்தக் காணொளிகள் இந்தியாவுக்குள் பகிரப்பட்டது மட்டுமின்றி, 'டார்க் வெப்', ஸ்கைப், மின்னஞ்சல் ஆகியவற்றைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டன.

"அக்டோபர் 31, 2020 அன்று, ரகசிய ஆதாரங்கள் வாயிலாக எங்களுக்கு முதலில் தகவல் கிடைத்தது. நவம்பர் 2, 2020 அன்று, ராம் பவனின் வீட்டில் நாங்கள் சோதனை நடத்தினோம். விசாரணை மேற்கொண்ட பின்னர் அவரைக் கைது செய்தோம். இந்த வழக்கில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நாங்கள் எவ்வித தாமதமும் செய்யவில்லை," என்று சிபிஐ-யின் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

காணொளிகள் பதிவு செய்யப்பட்டது ஏன்?

ராம் பவன் சிறுவர், சிறுமியரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகவும், அந்தக் குழந்தைகளின் புகைப்படங்களையும் காணொளிகளையும் பதிவு செய்த பிறகு, அவற்றை மின்னஞ்சல் அல்லது பிற இணையதளங்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வந்ததாகவும் சிபிஐ கூறியுள்ளது.

ஆனால், சிபிஐ முன்னாள் அதிகாரியும், இந்த வழக்கின் பொறுப்பாளராக இருந்தவருமான அமித் குமார், சிறார்களின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் விற்கப்பட்டதை மறுத்துள்ளார்.

பிபிசி ஹிந்தியிடம் பேசிய அமித் குமார், "இந்த வழக்கில், ராம் பவன் ஒரு டார்க் வெப்சைட் மூலம் சிறார்களின் காணொளிகளை விற்று வந்ததாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. ஆனால், அந்தக் காணொளிகள் விற்கப்படவில்லை. விசாரணையின்போது இப்படியான தகவல் எதுவும் எங்கும் வெளிவரவில்லை. அவர் பொழுதுபோக்குக்காக வீடியோக்களை எடுத்து, பகிர்ந்து வந்தார்," என்று கூறினார்.

மேலும் பேசிய அமித் குமார், "சிறார்களின் ஆபாச காணொளிகளை ராம் பவன் மட்டுமே அனுப்பவில்லை. வெளியில் இருந்து அவருக்கும் வீடியோக்கள் அனுப்பப்பட்டன. இதுவொரு இருவழிச் செயல்முறையாக இருந்தது. அவர் ஐரோப்பாவின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும், வங்கதேசம், இலங்கை மற்றும் நாட்டுக்குள் உள்ள பிற மாநிலங்களிலும் சிறார்களின் காணொளிகளைப் பகிர்ந்து வந்தார்," என்று குறிப்பிட்டார்.

சோதனையின்போது, சிபிஐ அந்த வீட்டில் இருந்து பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் (sex toys) மற்றும் ஆபாசப் பொருட்களையும் கண்டெடுத்தது.

குற்றம் சாட்டப்பட்ட தம்பதியின் பின்னணி

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட 45 வயதான ராம் பவன், ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.

அரசுப் பணி கிடைப்பதற்கு முன்பு, ராம் பவன் சிறு குழந்தைகளுக்குப் பாடம் கற்பிப்பதன் மூலம் வருமானம் ஈட்டி வந்தார். கடந்த 2009ஆம் ஆண்டில், அவருக்கு நீர்ப்பாசன கட்டுமானப் பிரிவில் வேலை கிடைத்தது. மே 2009 முதல் நவம்பர் 2020இல் கைது செய்யப்படும் வரை அவர் இந்தப் பொறுப்பில் நீடித்தார்.

ராம் பவனின் மனைவி துர்காவதி, ஓர் இல்லத்தரசி. ராம் பவனின் அண்டை வீட்டார்களின் கூற்றுப்படி, அந்தத் தம்பதி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் அரிதாகவே பழகி வந்தனர்.

ராம் பவனின் அண்டை வீட்டில் வசிக்கும் சிவம் திரிபாதி பிபிசி ஹிந்தியிடம் பேசியபோது, "ராம் பவன் இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவர் மிகுந்த நன்னடத்தையுடன் இருந்தார். அவர் காரில் அலுவலகத்துக்கு வருவார், அங்கிருந்து நேராகத் தனது அறைக்குச் செல்வார், பிறகு அங்கிருந்து நேராக அலுவலகத்துக்குச் செல்வார்."

"அவர் காரில் இருந்து இறங்கும்போது, தனது பையை ஒரு பக்கத்தில் சுமந்தவாறு இறங்குவார். வழியில் எங்கும் நிற்கமாட்டார். அவர் ஓர் அரசு இளநிலை பொறியாளர் என்பது மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது. ராம் பவன் தனது மனைவியுடனும் ஒரு குழந்தையுடனும் வீட்டில் வசித்து வந்தார். காரில் குழந்தைகள் வந்து செல்வதை நான் ஓரிரு முறை பார்த்துள்ளேன். ஆனால் அவர்கள் வெளியாட்களாகவே இருந்தனர்," என்று தெரிவித்தார்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை

ராம் பவன் ஓர் அரசு ஊழியராகப் பணியாற்றினார். அவர் வசித்த பகுதியில், ஒரு கண்ணியமான, மரியாதைக்குரிய நபராகவே அவர் பார்க்கப்பட்டார். இந்த நல்ல பிம்பத்தின் காரணமாக, சில பெற்றோர்கள் அவரை நம்பி, தங்கள் குழந்தைகளைப் படிப்பதற்காகவும் கணினிப் பயிற்சி பெறுவதற்காகவும் அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 2009 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், ராம் பவன், ராம் அஷாரே கௌதம் என்பவருக்குச் சொந்தமான ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அந்தக் காலகட்டத்தில், ராம் அஷாரே சத்தீஸ்கர் மாநிலத்தில் வசித்து வந்ததால், அந்த வீட்டில் அவர் இருக்கவில்லை.

பிபிசியிடம் பேசிய ராம் அஷாரே, "நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றிய ஓர் உதவியாளர் மூலமாகவே நான் அவருக்கு அந்த அறையை வாடகைக்கு விட்டிருந்தேன். அவர் இங்கு வசித்தபோது, நாங்கள் சத்தீஸ்கரில் இருந்தோம். அவருடன் எங்களுக்குப் பெரிய அளவில் நேரடித் தொடர்பு ஏதும் இருக்கவில்லை. நாங்கள் எப்போதாவது இங்கு வரும்போதுகூட, அவரது அறை பெரும்பாலான நேரங்களில் பூட்டியே இருக்கும்" என்றார்.

அதன் பிறகு, ராம் பவன் வேறொரு வீட்டுக்கு மாறினார். அங்கு அவர், மருத்துவரான சுதாமா பிரசாத் வர்மா, ஆரம்பப் பள்ளி ஆசிரியையான அவரது மனைவி கீதா வர்மா ஆகியோரின் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தார்.

இந்த இரண்டாவது வீட்டிலும்கூட, வீட்டு உரிமையாளர்கள் பகல் நேரங்களில் பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை. சுதாமா பிரசாத் காலையிலேயே மருத்துவமனைக்குச் சென்றுவிடுவார், கீதா வர்மா கற்பிப்பதற்காகப் பள்ளிக்குச் சென்றுவிடுவார்.

பிபிசியிடம் பேசிய கீதா வர்மா, "நாங்கள் வீட்டில் நீண்ட நேரம் தங்கியிருப்பதில்லை. அவர் தெரு வழியாகத் தனது வேலைகளுக்காக வந்து சென்றுகொண்டிருந்தார். அவரது மனைவியுடன் எங்களுக்கு ஓர் இயல்பான உறவு மட்டுமே இருந்தது. எங்கள் பகுதியிலுள்ள குழந்தைகள் அவரது வீட்டுக்கு வருவது வழக்கம். எங்களுடன் அவருக்கு எவ்விதமான தகராறும் ஏற்பட்டதில்லை. இந்த விவகாரம் குறித்து நாங்கள் அதிகம் பேச விரும்பவில்லை," என்று தெரிவித்தார்.

விசாரணையின் அடிப்படையில் தெரிய வந்த தகவல்களின்படி, ராம் பவன் தான் ஏற்கெனவே அறிமுகமான குழந்தைகளையே (உறவினர்களின் குழந்தைகள் உள்பட) முக்கியமாகக் குறிவைத்துள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பலர் ஏழை மற்றும் தலித் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சிபிஐ-யின் சிறப்பு அரசு வழக்கறிஞரான தாரா சிங் மீனா பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "ராம் பவன் தனது இழிசெயல்களுக்குப் பலியாக்கிய குழந்தைகளில் பெரும்பாலானோர் தலித் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே" என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், "தொழிலாளர் குடும்பங்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலேயே ராம் பவன் பெரும்பாலும் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளார். அவர் அந்தக் குழந்தைகளைத் தனது இருசக்கர வாகனம் மற்றும் காரில் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்," என்றும் கூறினார்.

ராம் பவனை அறிந்தவர்கள் கூறுவது என்ன?

ராம் பவனின் கிராமத்து வீடு இப்போது மிகுந்த அமைதியுடன் காணப்படுகிறது. அண்டை வீட்டார், அங்கு வருவோரை சந்தேகத்தோடு நோக்குவதுடன், ஒருவித அமைதியின்மையுடனும் காணப்படுகின்றனர்.

நாங்கள் அவரது குடும்பத்தினரிடம் பேச முயன்றபோது, வீட்டில் இருந்த பெண்கள் பேச மறுத்துவிட்டனர்.

தங்கள் பெயர்களை வெளியிட விரும்பாமல் பேசிய சில அண்டை வீட்டார், "ராம் பவன் இங்கு வசிப்பதில்லை. அவர் எப்போதாவதுதான் இங்கு வருவார். அவர் சிறுவர் சிறுமியரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளார் என்ற விஷயம் இதற்கு முன்பு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை," என்று பிபிசியிடம் தெரிவித்தனர்.

அந்தக் கிராமத்தில், ஒரு சிறிய மளிகைக் கடையை நடத்தி வரும் கமல் என்பவரையும் நாங்கள் சந்தித்தோம். அவர் இது தொடர்பாகப் பேசியபோது, "எனக்கு 55 வயதுக்கு மேல் ஆகிறது. இன்று வரை, ராம் பவனோ அவரது குடும்பத்தினரோ இங்கு வந்ததே இல்லை. நாங்கள் அவரை ஒருபோதும் பார்த்தது இல்லை. மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று நாளிதழ்களில் படித்து தெரிந்துகொண்டபோது நாங்கள் திகைத்துப் போனோம்," என்றார்.

ராம் பவனுக்கு ஏதேனும் குற்றப் பின்னணி இருக்கிறதா என்பதையும் பிபிசி ஆராய்ந்தது. ஆனால், உள்ளூர் காவல் நிலையத்தில் அவர் மீது இதற்கு முன்பு எந்தவொரு வழக்கு பதியப்பட்டதாகவோ அல்லது குற்றப் பதிவோ காணப்படவில்லை.

ராம் பவனின் மூத்த சகோதரரான ராஜா பையா பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், "எங்கள் சகோதரர்களிலேயே ராம் பவன்தான் இளையவன். அவன் பண்டாவில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தான். திருமணத்துக்கு முன்பே அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது. அதற்கு முன்பு, அவன் சிறுவர் சிறுமியருக்கு டியூஷன் எடுத்து வந்தான். அண்டை வீட்டார் யாருடனும் அவனுக்கு எந்தவிதமான மனக்கசப்போ அல்லது கெட்ட உறவோ இருந்ததில்லை," என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், "ராம் பவன் மிகக் குறைவாகவே பேசுவான். யாருடனும் அவனுக்கு எவ்விதமான சச்சரவுகளும் இருந்தது இல்லை. அவனுக்கு மிகக் குறைவான நண்பர்களே இருந்தனர். அவனது நண்பர்களைப் பற்றிய எந்தத் தகவலும் என்னிடம் இல்லை. அவனது நண்பர்கள் யாரும் இதுவரை இங்கு வந்ததே இல்லை," என்றார்.

ராம் பவனுடன் சுமார் பத்து ஆண்டுகள் பணிபுரிந்த தீபக் மௌரியா என்பவரும் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். "அவனது (ராம் பவனின்) நடத்தை மிகவும் இயல்பாகவே இருந்தது. அவன் தனது வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பான். அவன் மற்றவர்களுடன் அதிகம் பழகமாட்டான். அவன் முற்போக்குச் சிந்தனை கொண்ட நபராகவோ அல்லது சுறுசுறுப்பான நபராகவோ இருந்ததில்லை. அவன் யாருடனும் கலகலப்பாகப் பழகும் இயல்புடையவன் அல்ல.

அவன் சிரிப்பதையோ அல்லது கோபப்படுவதையோ நான் ஒருபோதும் பார்த்ததே இல்லை. இவ்வளவு கொடூரமான செயலைச் செய்வான் என்று அவனது நடத்தையை வைத்து எவராலும் ஊகிக்கவே முடியாது. அது அவனது வாழ்க்கையின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பக்கமாக இருந்திருக்கிறது," என்று கூறினார்.

நீர்ப்பாசன கட்டுமானப் பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு நபர், தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன், பேசியபோது, "அவர் சிரித்ததே இல்லை. அவர் யாருடனும் கேலிப் பேச்சு பேசியதில்லை, யாருடனும் எந்தவிதமான சச்சரவுகளையும் வைத்துக் கொண்டதில்லை. வருவார், வேலை செய்வார், சென்றுவிடுவார். அவர் மிகக் குறைவாகவே பேசுவார். அவர் ஒரு பற்றற்ற மனிதராக இருந்தார். அவர் யாருடைய நிகழ்ச்சிகளுக்கும் சென்றதில்லை, அதேபோல, யாரையும் தனது வீட்டுக்கும் அவர் அழைத்தது இல்லை," என்று கூறினார்.

ராம் பவனின் மனைவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏன்?

ராம் பவனின் மனைவி துர்காவதி இல்லத்தரசியாக இருந்தபோதிலும், ராம் பவன் சிறார் பாலியல் வன்கொடுமை காணொளிகளைப் பதிவு செய்தபோது, பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டபோது அவர் அங்கு உடனிருந்தார் என்று பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலங்கள் தெரிவிக்கின்றன.

துர்காவதி வெறும் பார்வையாளராக மட்டுமின்றி, அந்தக் குற்றங்களில் நேரடியாகவே ஈடுபட்டிருந்தார் எனவும் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சிபிஐ அதிகாரிகளிடமும் நீதிமன்றத்திலும் தெரிவித்தனர். அவர்களுடன் துர்காவதி முறையற்ற உறவு கொண்டிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது வாக்குமூலத்தில் பின்வருமாறு விவரித்துள்ளார்: "நான் ராம் பவனின் வீட்டுக்குப் பால் கொண்டு சென்று கொடுப்பது வழக்கம். அதோடு, மடிக்கணினியில் கற்றுக் கொள்வதற்காக என் தந்தையும் என்னை ராம் பவனின் வீட்டுக்கு அனுப்பி வைப்பார். ராம் பவன் குழந்தைகளிடம் முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவர் தனது மற்ற நான்கு சகோதரர்களிடமும் இதுபோன்ற முறையற்ற செயல்களைச் செய்ததுடன், அவர்களைப் புகைப்படங்களும் காணொளிகளும் எடுத்தார்."

அதே பாதிக்கப்பட்டவர் மேலும் தனது வாக்குமூலத்தில், "ராம் பவன் என்னிடம் முறையற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தபோது, துர்காவதி அங்கேயே உடனிருந்தார். ராம் பவன் செய்த அனைத்து தவறுகள் குறித்தும் அவருக்கு முழுமையாகத் தெரிந்திருந்தது. இந்த முறையற்ற செயல்களுக்குப் பரிசாக, ராம் பவன் மாமா எனக்குப் பணமும், துர்காவதி அத்தை எனக்குச் சுவையான தின்பண்டங்களையும் அளித்து வந்தனர்," என்று தெரிவித்துள்ளார்.

"தங்களை மகிழ்விப்பதற்காக துர்காவதி சில நேரங்களில் அவர்களுக்குப் பொருட்களை அளித்து வந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், "அவரிடம் ஒரு வீடியோ கேம் கருவியும், அதற்கான மூன்று அல்லது நான்கு சிடி-க்களும் இருந்தன. அவற்றை எங்களுக்கு விளையாடக் கொடுப்பார். அவமானம் மற்றும் பயம் காரணமாக, நான் இந்த விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை," என்றும் அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ அதிகாரிகளிடம் கூறியது என்ன?

இந்த வழக்கு, உத்தர பிரதேசத்தின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பண்டேல்கண்ட் பிராந்தியத்தைச் சேர்ந்த பண்டா, சித்திரகூட், ஹமீர்பூர் ஆகிய மாவட்டங்களில் நடந்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களில் இருந்து, ராம் பவன் என்பவர் குழந்தைகளை ஆசை காட்டி ஈர்த்து, பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெளிவாகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், "எனக்கு ராம் பவன் மாமாவை தெரியும். ஒரு விழாவின்போது இரவில் ராம் பவன் என்னுடன் முதன்முறையாகப் பாலியல் உறவு கொண்டார். துர்காவதி அத்தை என்னை பாலியல் ரீதியாகச் சுரண்டியபோது, அது ராம் பவன் மாமாவின் தூண்டுதலின் பேரிலேயே நடந்தது. அந்தப் பாலியல் செயலின்போது, மாமா, அத்தை, நான் என மூவரும் அங்கு இருந்தோம்," என்று கூறினார்.

பாதிக்கப்பட்ட மற்றொருவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தபோது, "என் தந்தை எந்த வேலையும் செய்வதில்லை. என் தாய் ஒரு விவசாயி. நான் ராம் பவன் மாமாவை சந்தித்தபோது, அவர் ஏழு கிலோமீட்டர் தொலைவில் வசித்து வந்தார். ராம் பவன் மாமா முதன்முறையாக அந்தத் தவறான செயலைச் செய்தபோது, எனக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது," என்று குறிப்பிட்டுள்ளார்.

தி லான்செட் மருத்துவ ஆய்விதழில் வெளியிடப்பட்ட புதிய உலகளாவிய ஆய்வு ஒன்றின்படி, இந்திய பெண்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினரும், இந்திய ஆண்களில் பத்தில் ஒருவருக்கு மேலானோரும், 18 வயதுக்கு முன்பாகவே பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவரின் தாயார் கூறுவது என்ன?

இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு குழந்தையின் தாய் ஒருவரை நாங்கள் சந்தித்தோம்.

அவர், ராம் பவனின் வீட்டில் தூய்மை மற்றும் சமையல் பணியாளராகப் பணிபுரிந்து வந்தார். தான் சமையல் வேலை செய்துகொண்டிருக்கும் வேளையில், ராம் பவன் தனது குழந்தையைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாக அந்தத் தாயார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய், பிபிசி ஹிந்தியிடம் பேசியபோது, "நான் அவருடைய (ராம் பவனின்) வீட்டில் சமையல் வேலை செய்து வந்தேன். அதற்காக எனக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. நாங்கள் மூன்று அறைகள் கொண்ட ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். அந்த வீட்டின் முன்பகுதியில் வீட்டு உரிமையாளர் வசித்து வந்தார்.

பின்பகுதியில் 'அக்கா' (துர்காவதி), ராம் பவன், அவர்களுடன் ஒரு சிறுவன் ஆகியோர் வசித்து வந்தனர். அந்தச் சிறுவன் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு கல்வி கற்பிப்பதற்காக ராம் பவன் அவனைத் தன்னுடன் தங்க வைத்திருந்தார். அந்த வீட்டுக்கு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக குழந்தைகள் வருவது வழக்கம். அவர் தனது தரப்பிலிருந்து குழந்தைகளை அழைத்து வருவார். ஒரு நாளில் நான்கு குழந்தைகள் வரை தங்கியிருப்பார்கள். அவர் அந்தக் குழந்தைகளுக்கு விலையுயர்ந்த மொபைல் போன்களை வாங்கிக் கொடுப்பார்," என்று கூறினார்.

இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மற்ற சில குழந்தைகளின் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள நாங்கள் பலமுறை முயன்றோம். இருப்பினும், எங்களால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

ராம் பவன் தரப்பில் கூறப்படுவது என்ன?

குற்றம் சாட்டப்பட்ட ராம் பவன், தனது தரப்பு குறித்த வாதத்தில், தனக்கு எதிரான வழக்கு குடும்பப் பூசலுடன் தொடர்புடையது என்று கூறியுள்ளார்.

தனது மைத்துனர் ராம் நிரஞ்சனுக்கும் தனது சகோதரிக்கும் இடையே ஒரு மோதல் நிலவி வந்ததாக அவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். ராம் பவனின் கூற்றுப்படி, இந்தப் பூசலைத் தீர்த்து வைக்க அவர் உதவ முயன்றார். ஆனால், இதனால் அவரது மைத்துனர் கோபமடைந்தார் என்றும், சிபிஐ-யும் ராம் நிரஞ்சனும் இணைந்து தனக்கு எதிராகச் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் ராம் பவன், "நான் எந்தக் குழந்தையிடமும் ஒருபோதும் தவறாக நடந்துகொண்டதில்லை. அவர்களது ஆபாசமான புகைப்படங்களையோ காணொளிகளையோ எடுத்ததில்லை. உறவினரான ராம் நிரஞ்சன், வேறு சிலருடன் இணைந்து, என்னை இந்த வழக்கில் பொய்யாகச் சிக்க வைத்துள்ளார். குழந்தைகளை மிரட்டி, எனக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்," என்று தெரிவித்துள்ளார்.

துர்காவதியும் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் இந்தக் குடும்பப் பூசல் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.

"எனது நாத்தனார் ராம் குமாரிக்கும் ராம் நிரஞ்சனுக்கும் திருமணம் நடைபெற்றது. எனது நாத்தனாரும் மைத்துனரும் ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு இடையே அடிக்கடி சச்சரவுகள் ஏற்படும். அவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் இடையிலான பூசலைத் தீர்ப்பதற்காக ராம் பவனும் நானும் அடிக்கடி அவர்களது வீட்டுக்குச் செல்வோம். ஆனால் அந்தப் பிரச்னை தீராமலே இருந்ததுடன், அவர்கள் எங்கள் மீது மனக்கசப்பு கொள்ளத் தொடங்கினர்," என்று துர்காவதி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மேலும், "இதன் காரணமாக, 'நான் கற்பித்த இரண்டு மாணவர்கள் டெல்லி சிபிஐ-இல் பணிபுரிகின்றனர். நான் அவர்களைச் சந்தித்து, உங்கள் இருவரையும் சிறைக்கு அனுப்புவேன்' என்று ராம் நிரஞ்சன் எங்களை மிரட்டினார்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போக்சோ நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

இந்தியாவில், குழந்தைகள் மீதான எத்தகைய பாலியல் நடவடிக்கையும் கடும் குற்றமாகும். இது 'பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012' என்பதன் கீழ் தண்டனைக்குரியது. இந்தச் சட்டம் 'போக்சோ சட்டம்' என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தச் சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது. மிகக் கொடிய குற்றங்களில், தண்டனைகள் நீண்ட கால சிறைவாசம் முதல் மரண தண்டனை வரை நீளக்கூடும்.

இந்த வழக்கில், சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் மிஸ்ரா, ராம் பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி இருவரையும் சம அளவில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளார்.

நீதிபதி தனது உத்தரவில், "ராம் பவன், துர்காவதி ஆகியோர், தாங்கள் வசித்த வாடகை வீடுகளில் சுமார் 10 ஆண்டுகளாக இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்து வந்துள்ளனர். பாலியல் குற்றத்தைச் செய்து கொண்டிருந்த அதேவேளையில், அந்தக் குற்றம் குறித்து சமூகத்தில் உள்ள எவருக்கும் தெரியாத வகையில் ராம் பவனும் துர்காவதியும் தகுந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "குற்றவாளிகளான ராம் பவன், துர்காவதி ஆகியோர் இழைத்த இந்தக் குற்றம் 'அரிதிலும் அரிதான குற்றங்கள்' என்னும் வகையைச் சேர்ந்ததாகும். இத்தகைய குற்றத்துக்கு மரண தண்டனை வழங்குவதன் மூலம் மட்டுமே இந்திய நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க முடியும்," என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞருடைய வாதம் என்ன?

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் பூரா பிரசாத் நிஷாத், ராம் பவன் மீதான வழக்கு பொய்யானது என்று கூறினார். இந்த வழக்கு, மத்திய புலனாய்வுத் துறையின் உதவியுடன் புனையப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சிபிஐ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த காணொளிகளும் புகைப்படங்களும் உண்மையானவை அல்ல என்று அவர் தெரிவித்தார். அவரைப் பொறுத்தவரை, அவை "டீப்ஃபேக்குகள்" (தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி காணொளிகள்). மேலும், குழந்தைகள் மிரட்டப்பட்டும் கட்டாயப்படுத்தப்பட்டும் வாக்குமூலங்களை அளித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

பிபிசியிடம் பேசிய பூரா பிரசாத், "சிபிஐ-க்கு அதற்கான அதிகாரம் இல்லாதபோதிலும், அது நேரடியாக டெல்லியில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. முதலில், மத்திய அரசிடம் ஒரு விண்ணப்பம் அளிக்கப்பட்டு, பின்னர் மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். சிபிஐ அக்டோபர் 31, 2020 அன்று வழக்குப் பதிவு செய்தது. ஆனால், நவம்பர் 2, 2020 அன்றுதான் ராம் பவனை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் இவ்வளவு அவசரம் ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

நீதி பெறுவதற்காகத் தான் உயர் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

காணொளிகள் போலியானவை என்ற தனது வாதத்தை விளக்கும்போது, பூரா பிரசாத் ஓர் உதாரணத்தைக் குறிப்பிட்டார். அவர், "1990களில் ராமானந்த் சாகர் உருவாக்கிய 'ராமாயணம்' தொடரில், அனுமன் ஒரு மலையைச் சுமந்துகொண்டு பறப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இது உண்மையில் சாத்தியமா? இல்லையென்றால், எடிட்டிங் மூலம் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்றுதானே அர்த்தம்? எனவே, உயர் நீதிமன்றத்தின் மூலம் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்," என்று கூறினார்.

மறுபுறம், சிபிஐ-யின் சிறப்பு வழக்கறிஞர் தாரா சிங் மீனா இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

பிபிசியிடம் பேசிய அவர், "எங்களுக்குக் கிடைத்த காணொளிகளை நாங்கள் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அவை அனைத்தும் உண்மையானவை என்றே தெரிய வந்தது. அவற்றில் எவ்விதமான முறைகேடுகளோ மாற்றங்களோ செய்யப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினரான ராம் நிரஞ்சன் என்பவரிடம் பயின்றவர்கள் தற்போது சிபிஐ-யில் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து எங்களிடம் எந்தத் தகவலும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களே இத்தகைய கதையைக் கற்பனையாகப் புனைந்துள்ளனர்," என்று தெரிவித்தார்.

நிர்வாகம் தரப்பில் கூறப்படுவது என்ன?

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை இவ்வளவு நீண்ட காலமாகத் தொடர்ந்தது எப்படி எனக் கேட்கப்பட்டபோது, சித்திரகூட்டின் காவல் கண்காணிப்பாளர் அருண் குமார் சிங் பிபிசியிடம், "இந்தச் சம்பவம் 2020ஆம் ஆண்டுக்கு முன்பே நிகழ்ந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் இங்கு ஓர் அரசு ஊழியராகப் பணியமர்த்தப்பட்டு இருந்தார். எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, அவர் 'டார்க் வெப்' எனப்படும் இணையத்தின் மறைமுகப் பகுதியில் காணொளிகளைப் பதிவேற்றம் செய்து வந்தார்," என்று கூறினார்.

மேலும் விளக்கிய அவர், "இன்டர்போல் அமைப்புக்கு இதுகுறித்து தெரிய வந்தது, அவர்கள் இந்தத் தகவலை மத்திய புலனாய்வுத் துறையுடன் பகிர்ந்துகொண்டனர். சிபிஐ இந்தத் தகவலை ஆய்வு செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

அதன் பின்னர், நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பல சாட்சிகள் மற்றும் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில், நீதிமன்றம் இந்த வழக்கை 'அரிதிலும் அரிதான' வழக்காகக் கருதி, மரண தண்டனை விதித்தது," என்றார்.

அதோடு, "ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்டங்களில் இணைய குற்றத் தடுப்பு காவல் நிலையங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் இப்போது இணைய குற்றங்களுக்கு எதிரான சிறந்த பயிற்சி, கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன," எனக் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், பண்டா மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் பலாஷ் பன்சால் பிபிசியிடம் பேசியபோது, "இந்த வழக்கை சிபிஐ விசாரித்துள்ளது. ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியின்போது, மேலும் பல பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடையாளம் காணப்பட்டனர். காவல்துறையின் நடவடிக்கை என்று வரும்போது, ஏதேனும் ஒரு புகார் அளிக்கப்பட்டு இருந்தால் நாங்கள் விசாரணையைத் தொடங்கியிருப்போம். புகார் ஏதுமின்றி நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை," என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு