நடுவானில் திடீரென 300 அடி கீழே இறங்கிய டெல்லி விமானம்: ஏர் இந்தியா விமானி கஞ்சா போதையில் இருந்தாரா? புதிய தகவல்கள்

பட மூலாதாரம், Bloomberg via Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
ஒரு விமான பயணத்திற்குப் பிறகு ஏர் இந்தியா விமானி ஒருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகள், விமானப் போக்குவரத்து விசாரணை அதிகாரிகள் உன்னிப்பாக கவனிக்கக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது.
ஆனால் இந்த முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அப்படியே உறுதிப்படுத்தப்பட்டாலும், அது நாம் நினைப்பது போல உடனடியாக குற்றத்தை நிரூபிக்கும் ஒரு முக்கிய ஆதாரமாக மாறிவிடாது.
ஆகஸ்ட் 4-ஆம் தேதி, தாய்லாந்தின் ஃபுகெட்டில் இருந்து டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானம் திடீரென வானில் சுமார் 91 மீட்டர் (300 அடி) கீழே இறங்கியதால், 13 பயணிகள் மற்றும் நான்கு விமானக் குழுவினர் காயமடைந்தனர். 137 பயணிகள் மற்றும் எட்டு பணியாளர்களுடன் பயணித்த அந்த விமானம், பின்னர் டெல்லியில் பத்திரமாக தரையிறங்கியது. இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளுக்கும் பயணத்திற்குப் பின்னரான வழக்கமான போதைப்பொருள் பரிசோதனை செய்யப்பட்டது என்று இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், கேப்டனின் ஆரம்பக்கட்ட பரிசோதனை முடிவுகளில் 'கூடுதல் உறுதிப்படுத்தல்' தேவைப்பட்டதாகவும், விசாரணை முடியும் வரை இரண்டு விமானிகளும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில், ஆய்வகத்தில் நடத்தப்பட்ட உறுதிப்படுத்தும் பரிசோதனையில் கேப்டன் மரிஜுவானா (கஞ்சா) பயன்படுத்தியது உறுதியானதாக சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், ஏர் இந்தியா இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த செய்திகள், இந்தியாவில் விமானிகளுக்கான போதைப்பொருள் சோதனை மற்றும் விமானப் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
விமானியின் போதைப்பொருள் பரிசோதனை முடிவுக்கும், விமானம் திடீரென கீழே இறங்கியதற்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. தொழில்நுட்பம், இயக்கம், மருத்துவம் மற்றும் மனிதத் தவறுகள் என பல கோணங்களில் விசாரணை அதிகாரிகள் இந்த சம்பவத்தை ஆராய்ந்து வருகின்றனர். விமானம் கீழே இறங்கியதற்கான உண்மையான காரணம் என்னவென்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கும் கஞ்சாவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்பதுதான் தற்போது எழும் முதல் கேள்வி.
அதைவிட சிக்கலான மற்றொரு கேள்வி: கஞ்சா சோதனை 'பாசிட்டிவ்' என வருவது, பல மணிநேரங்களுக்கு முன்பு அந்த விமானியின் மனநிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றி நமக்கு என்ன சொல்கிறது?
கஞ்சா எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

பட மூலாதாரம், Getty Images
சிக்கலான வேலைகளைச் செய்யும்போது கஞ்சா எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி ஓரளவிற்கு நமக்குத் தெரியும். ஆனால், பரிசோதனை முடிவை வைத்து அவர்கள் எந்த குறிப்பிட்ட நேரத்தில் போதையில் இருந்தார்கள் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியுமா என்பது பற்றி நமக்குக் குறைவாகவே தெரியும்.
இதற்கான நேரடி ஆதாரங்கள் விமானிகளிடம் இருந்தே கிடைக்கின்றன.
1976-இல் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், 10 விமானிகளுக்கு அளவான கஞ்சா கொடுக்கப்பட்டு, பின்னர் 'சிமுலேட்டரில்' (விமானத்தைப் போன்ற மாதிரி அமைப்பு) விமானத்தை இயக்கச் செய்தனர். அவர்களின் செயல்பாட்டுத்திறன் குறைந்ததோடு, விமானத்தின் உயரம், திசை மற்றும் ரேடியோ நேவிகேஷன் போன்றவற்றில் தவறுகள் செய்தனர். இதன் தாக்கம் குறைந்தது இரண்டு மணிநேரங்களுக்குத் தெளிவாகக் காணப்பட்டது. நான்கிலிருந்து ஆறு மணிநேரத்திற்குள் இந்தத் தாக்கம் மறைந்துவிட்டதாக அந்த ஆய்வு கண்டறிந்தது.
ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, போதை தெளிந்த பிறகு என்ன நடக்கும் என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் விடை தேடினர். கஞ்சா புகைத்து 24 மணிநேரத்திற்குப் பிறகு 10 அனுபவமிக்க தனியார் விமானிகளை சிமுலேட்டரில் பரிசோதித்தனர். எலிவேட்டர் மற்றும் ஏலரான் (விமானத்தை இயக்கும் பாகங்கள்) கட்டுப்பாடு, துல்லியமாக தரையிறக்குதல் போன்றவற்றில் அவர்களின் செயல்பாடுகள் கணிசமாகக் குறைந்திருந்தன. இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தங்கள் செயல்பாடு குறைந்திருப்பதை அந்த விமானிகளே உணரவில்லை என்று ஆய்வு கூறியது.
1991-இல் நடந்த மற்றொரு ஆய்வும் இதேபோன்ற ஒரு எச்சரிக்கையைத் தந்தது.
20 மி.கி டி.ஹெச்.சி (டெட்ராஹைட்ரோகன்னாபினோல் - கஞ்சாவில் உள்ள முக்கிய வேதிப்பொருள் மற்றும் போதை உணர்விற்கும், மூளை மற்றும் இயக்கத் திறன்கள் மீதான போதைப்பொருளின் பல விளைவுகளுக்கும் காரணமான வேதிப்பொருள்) அடங்கிய சிகரெட்டைப் புகைத்த பிறகு, ஒன்பது விமானிகள் சிமுலேட்டரில் விமானத்தை இயக்கினர்.
15 நிமிடங்கள், நான்கு மணிநேரம், எட்டு மணிநேரம் மற்றும் 24 மணிநேரம் கழித்து பரிசோதிக்கப்பட்டபோது அவர்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டிருந்தது. ஒன்பது பேரில் ஏழு பேருக்கு 24 மணி நேரத்திற்குப் பிறகும் அதன் பாதிப்பு இருந்தது. ஆனால், அவர்களில் ஒருவருக்கு மட்டுமே போதையின் தாக்கம் தன்னிடம் இருப்பது தெரிந்திருந்தது.
இந்த ஆய்வுகள் சிறியவை, பழமையானவை மற்றும் நவீன விமானங்களுக்குப் பதிலாக சிமுலேட்டர்களைக் கொண்டு நடத்தப்பட்டவை. ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட்டிற்குள் என்ன நடந்தது என்பதை இவை துல்லியமாகச் சொல்ல முடியாது.
ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி இவை ஒரு பயனுள்ள உண்மையைக் காட்டுகின்றன: விமானத்தை இயக்கும்போது தேவைப்படும் நுட்பமான உடல் கட்டுப்பாடுகள், கவனம் மற்றும் மனித-இயந்திர தொடர்புகளில் கஞ்சா தலையிடக்கூடும்.

பட மூலாதாரம், /LightRocket via Getty Images
பரிசோதனை 'பாசிட்டிவ்' என வந்தால் என்ன அர்த்தம்?
ஆஸ்திரேலியப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகத்தைச் சேர்ந்த விமான மருத்துவ நிபுணர் டேவிட் நியூமன் மேற்கொண்ட ஆய்வும் இதே முடிவையே தெரிவிக்கிறது.
எடுத்துக்கொள்ளப்படும் அளவைப் பொறுத்து கஞ்சா ஒருவரின் நடத்தை, சிந்தனை மற்றும் உடலியக்கச் செயல்பாடுகளைப் பாதிக்கிறது. குறிப்பாக விமானத்தை இயக்குவது போன்ற கடினமான வேலைகளில் இதன் பாதிப்பு அதிகம். இதன் எஞ்சிய தாக்கம் 24 மணிநேரம் வரை நீடிக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்களும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டன.
2022-இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தாமஸ் மார்கோட் தலைமையில் நடந்த ஆய்வில், தொடர்ந்து கஞ்சா பயன்படுத்தும் 191 பேர் பரிசோதிக்கப்பட்டனர். டி.ஹெச்.சி-ஐ பயன்படுத்தியவர்கள் சிமுலேட்டரில் வாகனத்தை ஓட்டும்போது மோசமாகச் செயல்பட்டனர். ஆனால், கஞ்சாவில் உள்ள டி.ஹெச்.சி அளவு, அந்த நபரின் முன் அனுபவம் அல்லது ரத்தத்தில் உள்ள டி.ஹெச்.சி அளவு ஆகியவற்றை வைத்து மட்டும் அவர்களின் செயல்பாடு எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மதிப்பிட முடியாது என ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த மருந்து ஆரம்பத்தில் அவர்களின் செயல்பாட்டைப் பாதித்தது, ஆனால் சுமார் நான்கரை மணிநேரத்திற்குப் பிறகு, போதைப்பொருள் பயன்படுத்தாதவர்களைப் போலவே இவர்களும் சிறப்பாகச் செயல்பட்டனர். இந்த முடிவு விமானப் போக்குவரத்துப் பரிசோதனைகளுக்கு மிகவும் முக்கியமானது.
ஒரு நபருக்கு பரிசோதனை 'பாசிட்டிவ்' என வந்தால், அவரது உடலில் டி.ஹெச்.சி இருக்கிறது என்று மட்டுமே அர்த்தம். அவர்கள் எப்போது கஞ்சாவைப் பயன்படுத்தினார்கள் என்றோ, அல்லது குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் போதையில் இருந்தார்களா என்றோ உறுதியாகச் சொல்ல முடியாது. எடுத்துக்கொள்ளப்பட்ட அளவு, முறை, பயன்படுத்தும் முறை மற்றும் தனிநபரின் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து இது மாறுபடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மது அருந்துவதைக் கண்டறிவதை விட கஞ்சா பயன்பாட்டைக் கண்டறிவது அதிகாரிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்க இதுவும் ஒரு காரணம்.
"மதுவிற்கும் உடலில் அதன் தாக்கத்திற்கும் உள்ள நேரடித் தொடர்பைப் போல டி.ஹெச்.சி விஷயத்தில் இல்லை. புகைத்த பிறகு டி.ஹெச்.சி மிக வேகமாக ரத்தத்திலிருந்து வெளியேறிவிடும். எனவே, ரத்தத்தில் உள்ள டி.ஹெச்.சி அளவிற்கும் ஒருவரின் போதை நிலைக்கும் அதிகத் தொடர்பில்லை" என்று மார்கோட் பிபிசியிடம் தெரிவித்தார்.
"அவ்வப்போது பயன்படுத்துபவர்களுக்கு, கடைசியாகப் பயன்படுத்தியதில் இருந்து பல நாட்களுக்கு, சிலசமயம் வாரங்களுக்குப் பிறகும் கூட ரத்தத்தில் டி.ஹெச்.சி-ஐ கண்டறிய முடியும். அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு இதன் தாக்கம் இன்னும் நீடிக்கும். ஆனால், அப்போது அவர்களுக்குப் போதையின் எந்த பாதிப்பும் இருக்காது."
கஞ்சா புகைத்த பிறகு அதன் தாக்கம் பொதுவாக மூன்று முதல் ஐந்து மணி நேரம் வரை இருக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. உணவாக உட்கொள்ளும்போது, அதன் பாதிப்பு ஆறு முதல் எட்டு மணிநேரம் வரையோ அல்லது அதற்கும் மேலாகவோ நீடிக்கும்.
கஞ்சாவை உணவாக உட்கொண்ட பிறகு, அதில் உள்ள டி.ஹெச்.சி-ஐ விட '11-OH-THC' என்ற வளர்ச்சிதை மாற்றப் பொருளே ஒருவரின் அறிவாற்றலை அதிகம் பாதிக்கக்கூடியது என்கிறார் மார்கோட். இதனால்தான், "இந்த நபர் தற்போது விமானத்தை இயக்க முடியாத அளவு போதையில் இருக்கிறார்" என்று உறுதியாகக் கூறக்கூடிய உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கஞ்சா பரிசோதனைகள் எதுவும் இதுவரை இல்லை.
இதற்கு கனடா மிகவும் கடுமையான ஒரு அணுகுமுறையைக் கையாண்டுள்ளது. 2018-இல் கஞ்சா பயன்பாட்டைச் சட்டப்பூர்வமாக்கிய பிறகு, விமானக் குழுவினர் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் பணிக்கு முன் குறைந்தது 28 நாட்களுக்கு கஞ்சா உட்கொள்ளக்கூடாது என்ற விதியை 'டிரான்ஸ்போர்ட் கனடா' அறிமுகப்படுத்தியது.
கஞ்சா பயன்பாட்டைக் கண்டறிவதில் உள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டே இந்த விதி கொண்டுவரப்பட்டதாகவும், விமான நிறுவனங்கள் இதைவிடக் கடுமையான விதிகளை விதிக்கலாம் என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.
ஒரு பரிசோதனை முடிவு 'பாசிட்டிவ்' என வருவதை வைத்து மட்டுமே முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்கு அமெரிக்க விமானப் போக்குவரத்தின் அனுபவம் ஒரு சிறந்த உதாரணம்.
2018 முதல் 2022 வரை அமெரிக்க சிவில் விமான விபத்துகளில் உயிரிழந்த விமானிகளைப் பற்றி 2026-இல் நடத்தப்பட்ட என்டிஎஸ்பி (NTSB) ஆய்வில், 52.8% பேரிடம் குறைந்தது ஒரு போதைப்பொருள் பயன்பாடாவது கண்டறியப்பட்டுள்ளது, அதே சமயம் 27.7% பேருக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவை இருந்தன.
இதில் சட்டவிரோதப் போதைப்பொருள் பயன்பாட்டில் டி.ஹெச்.சி தான் முக்கியப் பங்காற்றியது. ஆனால், இது போதைப்பொருள் உடலில் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுதானே தவிர, அவர்கள் போதையில் இருந்தார்களா என்பதற்கானது அல்ல என்று என்டிஎஸ்பி வலியுறுத்தியது.

பட மூலாதாரம், Getty Images
பதில் கிடைக்காத மூன்று கேள்விகள்
ஒருவரின் உடலில் கஞ்சா இருப்பதை வைத்து மட்டுமே அந்த விபத்துக்கு அதுதான் காரணம் என்று சொல்ல முடியாது என்பது தெளிவாகிறது.
ஆனால் விசாரணை அதிகாரிகள் இன்னும் ஆழமாக ஆராய்ந்த நிகழ்வுகளும் உள்ளன. 2011-இல் நடந்த கனடிய விமான விபத்தில், பைலட்டின் ரத்தத்தில் 50.1 ng/ml அளவுக்கு டி.ஹெச்.சி இருந்தது. அந்த அளவு ஒருவரின் சிந்தனைத் திறனைப் பாதிக்கும் என்றும், அதுவே அந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் முடிவுக்கு வந்தது.
இதற்கு நேர்மாறான சம்பவங்களும் நடந்துள்ளன.
2017-இல் நடந்த நியூசிலாந்து ஹெலிகாப்டர் விபத்தில், பைலட் இரண்டு நாட்களுக்கு முன்பு பயன்படுத்திய கஞ்சாவின் தாக்கம் அவரது ரத்தத்தில் கண்டறியப்பட்டது. ஆனால் விபத்து நடந்த நேரத்தில் அவர் போதையில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும், கஞ்சா அந்த விபத்துக்குக் காரணமாக இருக்காது என்றும் தடயவியல் நச்சுயியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வுகளில் இருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், கஞ்சா பரிசோதனை 'பாசிட்டிவ்' என வருவது பயனற்றது என்று அர்த்தமல்ல. மாறாக, அதன் உண்மையான தாக்கம், எடுத்துக்கொள்ளப்பட்ட அளவு, நேரம், சூழ்நிலை மற்றும் கிடைக்கும் மற்ற ஆதாரங்களைப் பொறுத்தது என்பதேயாகும்.
ஏர் இந்தியா சம்பவத்தைப் பொறுத்தவரை, கேப்டனின் உறுதிப்படுத்தும் பரிசோதனை முடிவு 'பாசிட்டிவ்' என்பதைத் தாண்டி விசாரணை அதிகாரிகள் இன்னும் பல விஷயங்களை நிரூபிக்க வேண்டி இருக்கும்.
எந்த மாதிரி (சாம்பிள்) சோதிக்கப்பட்டது, அதில் டி.ஹெச்.சி நேரடியாக இருந்ததா அல்லது அதன் வளர்ச்சிதை மாற்றப் பொருள் (உடல் டி.ஹெச்.சி-ஐ சிதைக்கும் போது உருவாகும் பொருள்) இருந்ததா, அது எந்த அளவில் இருந்தது மற்றும் அதை வைத்து அவர்கள் எப்போது கஞ்சா பயன்படுத்தினார்கள் என்பதை எப்படிச் சொல்வது போன்ற விவரங்களை அவர்கள் அறிய வேண்டும்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஏர் இந்தியா நிறுவனம் தனது அனைத்து விமானிகளுக்கும் உடனடியாக போதைப்பொருள் பரிசோதனை செய்யவுள்ளது. இதற்கு முன் குறைந்தபட்சம் 10% விமானிகளிடம் மட்டுமே பரிசோதனை செய்யும் விதிமுறைகள் இருந்தன. அதை தற்போது விரிவுபடுத்தியுள்ளது.
சிறுநீர், ரத்தம் மற்றும் உமிழ்நீர் போன்றவை ஒரு நபர் டி.ஹெச்.சி-ஐ பயன்படுத்தியதைக் காட்டலாம். ஆனால், அவர்கள் எப்போது அதைப் பயன்படுத்தினார்கள் அல்லது பல மணிநேரங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் போதையில் இருந்தார்களா என்பதை அவற்றால் உறுதியாகக் கூற முடியாது என்று மார்கோட் கூறுகிறார்.
உமிழ்நீர் பரிசோதனை சமீபத்திய பயன்பாட்டை எளிதாகக் காட்டும், அதிலும் கஞ்சா உட்கொண்ட பல மணிநேரங்களுக்குப் பிறகும், சில நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகும் கூட டி.ஹெச்.சி-ஐ கண்டறிய முடியும் என்று அவர் கூறுகிறார்.
விமானி கஞ்சா பயன்படுத்தினாரா என்பது மட்டும் இங்கு கேள்வியல்ல என நிபுணர்கள் நம்புகின்றனர்.
இதில் மூன்று கேள்விகள் உள்ளன:
- கஞ்சா உட்கொள்ளப்பட்டதா?
- விமானத்தை இயக்கும்போது விமானி போதையில் இருந்தாரா?
- அந்தப் போதை நிலைதான் விமானம் திடீரென கீழே இறங்கியதற்குக் காரணமா?
இதில் முதல் கேள்விக்கு விரைவில் விடை கிடைக்கலாம். ஆனால் மற்ற இரண்டு கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிவது மிகவும் கடினம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































