தலைமை தேர்தல் ஆணையர் மீது 20 ஆண்டு பழைய வழக்கில் விசாரணை - கேரள அரசு உத்தரவின் பின்னணி

பட மூலாதாரம், Getty Images
கேரளத்தில் 20 ஆண்டுகள் பழமையான விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு கேரள மாநிலப் போக்குவரத்துத் திட்டத்தின் (KSTP) கீழ் மேற்கொள்ளப்பட்ட சாலை கட்டுமானப் பணிகளில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும், அதனுடன் தொடர்புடைய மலேசிய ஒப்பந்ததாரர் ஒருவரின் மரணமும் இந்த வழக்கின் பின்னணியில் உள்ளன.
அப்போது ஞானேஷ் குமார் கேரள அரசின் பொதுப்பணித் துறைச் செயலராகப் பணியாற்றி வந்தார்.
வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பாக எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளை முன்வைத்து ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த விவகாரம் குறித்து ஞானேஷ் குமார் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அவரது பதில் கிடைத்தவுடன் அதையும் இந்தச் செய்தியில் சேர்ப்போம்.
(தற்கொலை என்பது தீவிரமான உளவியல் மற்றும் சமூகப் பிரச்னையாகும். நீங்களும் மன அழுத்தத்தில் இருந்தால், இந்திய அரசின் 'ஜீவன் ஆஸ்தா' உதவி எண்ணான 18002333330-ஐ தொடர்புகொண்டு உதவி பெறலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசுவதும் உதவியாக இருக்கும்.)
20 ஆண்டுகள் பழைய வழக்கு

பட மூலாதாரம், ANI
செய்தி நிறுவனமான ஏஎன்ஐ -யிடம் பேசிய கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, "கேரள பொதுப்பணித் துறைச் செயலராக ஞானேஷ் குமார் இருந்தபோது அவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பாக காங்கிரஸ் தொண்டர் மலயின்கீழு வேணுகோபால் நேற்று என்னிடம் ஒரு மனுவை அளித்தார்" என்றார்.
"அந்த மனுவில் பல முக்கியமான அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதே வேளையில், மலேசியத் திட்டப் பொறியாளர் லீ தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பில் அப்போதைய பொதுப்பணித் துறை செயலாளரான ஞானேஷ் குமார் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார்," என்றார்.
"அந்த மனுவில் சில தீவிரமான பிரச்னைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே, மலேசியாவைச் சேர்ந்த திட்டப் பொறியாளர் லீ தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய தற்கொலைக் குறிப்பில் பொதுப்பணித் துறைச் செயலராக இருந்த ஞானேஷ் குமாரின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது" என்றும் அவர் கூறினார்.
ரமேஷ் சென்னிதாலா மேலும் கூறுகையில், "அதனால் அரசு அமைதியாக இருக்க முடியாது. என்னாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அந்த மனுவில் இடம்பெற்றுள்ள விவரங்களை ஆய்வு செய்து, சட்ட நடவடிக்கைகள் மூலம் நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அதை விஜிலென்ஸ் இயக்குநரிடம் அனுப்பியுள்ளேன்" என்றார்.
"இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. எங்கள் தலைவர் ராகுல் காந்தி பாஜகவின் தவறான ஆட்சிக்கு எதிராகப் போராடி வருகிறார் என்பது உண்மைதான். ஞானேஷ் குமார் பிரதமர் மோதி மற்றும் அமித் ஷாவின் ஒரு கருவி மட்டுமே. ஆனால் இந்த விவகாரம் அதிலிருந்து வேறுபட்டது. ஒரு அமைச்சராக, இந்த வழக்கின் விவரங்களை ஆய்வு செய்வது எனது கடமை" என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், ANI
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குறித்து பேசிய கேரள அமைச்சர் கே. முரளீதரன், "அவர் கேரள மாநிலத்தில் செயலராகப் பணியாற்றியபோது அவருக்கு எதிராக ஏராளமான புகார்கள் இருந்தன. இந்த முறை சில முக்கியமான நபர்கள் மேலும் பல புகார்களை அளித்துள்ளனர். அதனால்தான் அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியுள்ளது. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் அவருக்கு எதிராகப் பல புகார்களை அளித்திருந்தன" என்றார்.
ஒருபுறம், தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடைமுறை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. மறுபுறம், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழான 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியுள்ளன. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியின்படி, கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகிய இருவரும் தேர்தல் ஆணையத்தின் பல்வேறு முடிவுகளில் 14 முறை தங்கள் கருத்து வேறுபாட்டைப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், ஞானேஷ் குமார் தலைமையிலான இந்தியத் தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் நடைமுறையைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்தது.
தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரின் பதவிக்காலம் 26 ஜனவரி 2029 வரை உள்ளது. அவரது பதவிக்காலத்தில் சுமார் 20 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
2027ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்களும் அவரது பதவிக்காலத்திலேயே நடைபெறும். அதன்பிறகு, 2029 மக்களவைத் தேர்தலுக்கான தயாரிப்புப் பணிகளும் அவரது பதவிக் காலத்திலேயே மேற்கொள்ளப்படும்.
கேரளத்தில் பல்வேறு பதவிகளை வகித்த ஞானேஷ் குமார்

பட மூலாதாரம், ANI
தேர்தல் ஆணையத்தின் இணையதளத் தகவலின்படி, ஞானேஷ் குமார் 1988ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி பிரிவைச் சேர்ந்த கேரள கேடர் அதிகாரி ஆவார்.
கான்பூர் ஐஐடியில் சிவில் பொறியியலில் பி.டெக் படிப்பை முடித்த அவர், ஐசிஎஃப்ஏஐ நிறுவனத்தில் வணிக நிதியியலையும், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஹெச்ஐஐடி-யில் சுற்றுச்சூழல் பொருளாதாரத்தையும் பயின்றுள்ளார்.
கேரள அரசில் அடூர் துணை ஆட்சியர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான கேரள மாநில வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர், கொச்சி மாநகராட்சியின் ஆணையர், கேரள மாநில கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநர், எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர், கோஷ்ரீ தீவுகள் மேம்பாட்டு ஆணையத்தின் செயலர், திருவனந்தபுரம் விமான நிலைய மேம்பாட்டுச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர், புது டெல்லியில் உள்ள கேரள இல்லத்தின் குடியிருப்பு ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் அவர் பணியாற்றியுள்ளார்.
கேரள அரசின் செயலராகப் பணியாற்றியபோது நிதி வளங்கள், விரைவுத் திட்டங்கள், பொதுப்பணித் துறை, உணவு, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் உள்ளிட்ட பல துறைகளையும் அவர் கவனித்ததாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசிலும் பாதுகாப்பு அமைச்சகத்தில் இணைச் செயலர், உள்துறை அமைச்சகத்தில் இணைச் செயலர் மற்றும் கூடுதல் செயலர், நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தில் செயலர், கூட்டுறவு அமைச்சகத்தில் செயலர் உள்ளிட்ட பதவிகளில் ஞானேஷ் குமார் பணியாற்றியுள்ளார்.
31 ஜனவரி 2024 அன்று பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, 15 மார்ச் 2024 அன்று அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
19 பிப்ரவரி 2025 அன்று இந்தியாவின் 26ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























