ஐநாவில் நேபாள பிரதமரின் உரை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது ஏன்?
நேபாள பிரதமர் பலேந்திர ஷா சமீபத்தில் ஐநா பொதுச் சபையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இந்தியா உட்பட உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தியா, சீனா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் தலைமையில் 'இமயமலை பகுதியில் பருவநிலை நெருக்கடியை சமாளிப்பதற்கான கூட்டு வழிமுறைகளை உருவாக்கும் யோசனையை அவர் முன்மொழிந்தார்.
"இதன் மூலம், செயற்கைக்கோள் தகவல்கள் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்தல், ஆபத்தான பனிப்பாறை ஏரிகளை கண்காணித்தல் மற்றும் பேரிடர் ஏற்படும் முன் எச்சரிக்கை அமைப்பை ஒன்றிணைந்து வலுப்படுத்த முடியும்" என அவர் கூறினார்.
இமயமலையின் சில பகுதிகள் தொடர்பாக இந்தியா, சீனா இடையே சுமுகமான உறவு இல்லாத சூழலில், நேபாள பிரதமர் முன்மொழிந்த இந்த யோசனை நடைமுறையில் சாத்தியமா?
இந்த யோசனை ஆரம்ப நிலையில் இருப்பதாக நேபாள வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் பெயர் குறிப்பிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் கூறினார். இந்த முன்மொழிவு குறித்து இந்தியாவிடமிருந்தோ அல்லது சீனாவிடமிருந்தோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தும் வரவில்லை.
இந்தியாவும் சீனாவும் இமயமலை பகுதியில் சுமார் 3,500 கிலோமீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இது லைன் ஆஃப் ஆக்ச்சுவல் கண்ட்ரோல் என அழைக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை சர்ச்சை, படைகளுக்கு இடையே உயிரிழப்புகளை ஏற்படுத்தும் மோதல்களுக்கும் வழிவகுத்தது.
ஆனால், இமயமலை பகுதியில் மற்றொரு முக்கிய பிரச்சனையும் உள்ளது. அப்பகுதி உலகளாவிய சராசரியை விட இரண்டு மடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருகிறது. இதனால், எப்போதும் உறைந்திருக்கும் நிலப்பகுதிகளும் பனிப்பாறைகளும் வேகமாக உருகுகின்றன; இதன் விளைவாக பனிப்பாறை உடைப்பு, மலைச்சரிவு, பனிச்சரிவு மற்றும் பனிப்பாறை ஏரி உடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பேரிடர்கள் ஏற்படுகின்றன.
பனிப்பாறைகளின் அளவு குறையும்போது, அவை வேகமாக உருகுவதன் காரணமாக பனிப்பாறை ஏரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சில ஏரிகள் ஆபத்தான நிலைக்கு விரிவடையக்கூடும். அவை உடைவது வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தலாம். இந்த வெள்ளம் சில சமயங்களில் நேபாளம், இந்தியா அல்லது பூட்டான் போன்ற நாடுகளின் எல்லைகளையும் கடந்து செல்லக்கூடும்.
இந்த அச்சுறுத்தல்களை எல்லாம் கருத்தில் கொண்டு, இந்தியா மற்றும் சீனாவை ஒன்றிணையுமாறு நேபாளத்தால் வலியுறுத்த முடியுமா?
இந்தியா மற்றும் சீனா ஐநா சபையின் காலநிலை மாற்ற விவாதங்களில், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகள் தங்கள் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க வேண்டிய அதே அளவிற்கு நாங்களும் குறைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது என இரு நாடுகளும் கூறுகின்றன.
ஆனால், இந்தியாவும் சீனாவும் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் இமயமலைப் பகுதியில், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிப்பதில் இரு நாடுகளுக்கும் இடையே கிட்டத்தட்ட எந்தவித ஒத்துழைப்பும் இல்லை.
2009-ல், இமயமலை பகுதி மற்றும் திபெத் ஆகியவற்றில் உள்ள பனிப்பாறைகள் மீது புவி வெப்பமடைதல் ஏற்படுத்தும் தாக்கத்தை கூட்டாக ஆய்வு செய்ய இரு நாடுகளும் முடிவு செய்தன. ஆனால் அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்த திட்டம் விரைவில் முடங்கிப்போனது.
2000-களின் தொடக்கத்திலிருந்தே இந்தியா மற்றும் சீனா இடையே குறைந்தது இரண்டு ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்து வந்துள்ளன. இந்த ஒப்பந்தங்களின் கீழ், எல்லை வழியாக பாயும் பிரம்மபுத்திரா மற்றும் சட்லஜ் நதிகளின் நீர் ஓட்டம் மற்றும் நீர்மட்டம் தொடர்பான தகவல்கள் வெள்ள சமயத்தில் பரிமாறப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அந்த இரண்டு ஒப்பந்தங்களின் காலக்கெடுவும் முடிந்துவிட்டது.
வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கின் கூற்றுப்படி, இவ்விரு ஆறுகளின் நீர் தொடர்பான தரவுகளை வழங்குவதை சீனா நிறுத்திவிட்டது.
அதே நேரம், இரு நாடுகளின் உயர்மட்ட அரசியல் தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் உட்பட இந்தியா, சீனா இடையே சமீபத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் நம்பிக்கை அளிப்பதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
International Crisis Group-ன் வடகிழக்கு ஆசிய பிரிவின் மூத்த ஆய்வாளர் வில்லியம் யாங் கூறும் போது, "இந்த மாற்றங்கள், மூன்று நாடுகளும் காலநிலை ஒத்துழைப்பை ஆராய்வதற்கு மேலும் வாய்ப்புள்ளது என்பதை காட்டுகின்றன" என்றார்.
அதே நேரம், உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் இமயமலை பிராந்தியத்தில் இந்தியா மற்றும் நேபாளத்துடன் எந்தவொரு பெரிய ஒப்பந்தம் குறித்தும் சீனா எச்சரிக்கையாகவே இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். எல்லை பிரச்சனையால் உருவான பதற்றம் இன்னும் முடிவுக்கு வராததே இதற்கு காரணம் என்றும் அவர் கூறுகிறார்.
எனவே, மூன்று நாடுகளுக்கும் இடையே ஏதேனும் ஒரு கூட்டு ஏற்பாட்டை செயல்படுத்த வேண்டுமானால், இந்த பதற்றத்தை மிக கவனமாக கையாள வேண்டியிருக்கும்.
பாதுகாப்பு சிந்தனை குழுவான ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த வால்டர் லாட்விக் கூறும் போது, காலநிலை அச்சுறுத்தல்களை சமாளிக்க தரவுகளை பகிர்வது என்பது வெறுமனே அறிவியல் தகவல்களை பரிமாறிக்கொள்வதாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. காலநிலை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு இன்றியமையாததாக கருதும் அதே தகவல்கள், தேசிய பாதுகாப்பு படையினருக்கு வியூக ரீதியான உளவுத் தகவல்களாக இருக்கக் கூடும்" என்கிறார்.
இத்தகைய சிக்கல்கள் இமயமலைப் பகுதியில் எல்லை தாண்டிய பேரிடர்களை எதிர்கொள்வதற்கான பிராந்திய ஒத்துழைப்பு முயற்சிகளுக்கு முன்னர் தடையாக இருந்துள்ளன.
இந்த சிக்கலை கையாளுவதற்கான வழிகள் குறித்து கூறும் வால்டர் லாட்விக், முதலாவது எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்த வாய்ப்பில்லாத பொதுவான தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டும். நேபாளத்தை இதில் இணைத்துக்கொள்வது உதவக்கூடும். இது இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட வழிவகுக்கும். அதே போல, தாங்கள் மற்றொரு தரப்புக்கு வியூக ரீதியான விட்டுக்கொடுப்பைசெய்துவிட்டதாக எந்தவொரு அரசும் கருத வேண்டியிருக்காது'' என்றார்.
ஆனால், இங்கு எழும் கேள்விகள் என்னவென்றால், இந்தியா மற்றும் சீனாவும் இதே விதமாகச் சிந்திக்குமா? இரு நாடுகளும் இதற்கு ஒப்புக்கொண்டாலும், இரு நாடுகளுக்கும் இடையே நேபாளத்தால் தனது பங்கை திறம்பட ஆற்ற முடியுமா? என்பதே.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



