ஒரே சீசனில் 9 சாதனைகள்: அநாயச ஆட்டத்தால் பிரமிக்க வைத்த 'வைபவ் சூர்யவன்ஷி'

எண்ணற்ற சாதனைகள், எக்கச்சக்க நினைவுகள்... முடிவுக்கு வந்தது வைபவ் சூர்யவன்ஷியின் 2026 ஐபிஎல் சீசன்

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். 215 என்ற பெரிய இலக்கை 18.4 ஓவர்களில் வெற்றிகரமாக சேஸ் செய்து மூன்றாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது டைட்டன்ஸ்.

குஜராத் டைட்டன்ஸின் இந்த வெற்றி ஐபிஎல் அரங்கு இதுவரை பார்த்திடாத ஒரு மகத்தான சீசனையும் முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது - அது 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் 2026 ஐபிஎல் சீசன்.

கடந்த ஐபிஎல் சீசனில் மிக இளம் வீரராக அறிமுகமாகி, இந்தியர் ஒருவரின் அதிவேக ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்தார் சூர்யவன்ஷி. தன் அச்சமற்ற அணுகுமுறையாலும், அதீத அதிரடியாலும் அனைவரின் கவனத்தையும் பெற்றார். ஆனால், இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக ஒருசில கேள்விகள் இருந்தன.

பொதுவாகவே இரண்டாவது சீசன் எந்த வீரருக்குமே கடினமான ஒன்று என்று சொல்வார்கள். அதனால், வைபவ் சூர்யவன்ஷியால் தன் இரண்டாவது சீசனில் சோபிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கெல்லாம் தன் பேட்டால் பதில் சொல்லியிருக்கிறார் அந்த 15 வயது பேட்டர்.

இந்த சீசனில் சூர்யவன்ஷி தன் மீதான கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லவில்லை. யாரும் எதிர்பாராத விஷயங்களை அரங்கேற்றியிருக்கிறார். பல காலம் நினைவுகூரப்படும் ஒரு சீசனை அவர் கொடுத்திருக்கிறார்.

சாதனைகள் நிறைந்த அந்த சீசன் அவருக்கு ஏன் மகத்தானது என்று சற்று அலசுவோம்

ரன் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி

இந்த சீசனில் 16 இன்னிங்ஸ்களில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி மொத்தம் 776 ரன்கள் குவித்தார். 48.50 என்ற சராசரியில் 237.30 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார் அவர். இந்த 16 இன்னிங்ஸ்களில் அவர் 1 சதமும் 5 அரைசதங்களும் அடித்தார். அந்த அரைசதங்களுள் மூன்று சதமாக மாறியிருக்கக்கூடியவை. 3 போட்டிகளில் தொன்னூறுகளில் ஆட்டமிழந்தார் சூர்யவன்ஷி.

கடினமான பந்துகளையும் எதிர்பார்க்காத இடங்களில் சிக்ஸராக்குகிறார் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கடினமான பந்துகளையும் எதிர்பார்க்காத இடங்களில் சிக்ஸராக்குகிறார் சூர்யவன்ஷி

குவாலிஃபயர் 2 முடிவில் இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அவர், ஐபிஎல் தொடரின் எம்விபி பட்டியலிலும் முதலிடத்தில் (436.5 புள்ளிகள்) இருக்கிறார். இந்த 15 வயது இளம் வீரர் இந்த சீசனுக்கான ஆரஞ்ச் கேப், எம்விபி (தொடர் நாயகன்) மற்றும் எமர்ஜிங் பிளேயர் என 3 விருதுகளை வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆம், வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வாங்குபவர், தொடரின் சிறந்த வீரருக்கான விருதையும் வெல்லக்கூடும். அப்படியொரு அசாத்தியமான ஆட்டம்தான் அவருடையது.

சூர்யவன்ஷியின் இந்த சீசன் கொண்டாடப்படுவதன் முக்கியக் காரணம், வெறும் ஒருசில போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்ததால் அவர் இவ்வளவு பெரிய ஸ்கோரை எடுத்துவிடவில்லை. அவர் சீரான முறையில் ரன் சேர்த்திருக்கிறார்.

இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷியின் ஸ்கோர்கள்:

  • மார்ச் 30 vs சென்னை சூப்பர் கிங்ஸ் - 17 பந்துகளில் 52 ரன்கள்
  • ஏப்ரல் 4 vs குஜராத் டைட்டன்ஸ் - 18 பந்துகளில் 31 ரன்கள்
  • ஏப்ரல் 7 vs மும்பை இந்தியன்ஸ் - 14 பந்துகளில் 39 ரன்கள்
  • ஏப்ரல் 10 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 26 பந்துகளில் 78 ரன்கள்
  • ஏப்ரல் 13 vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கோல்டன் டக்
  • ஏப்ரல் 19 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 28 பந்துகளில் 46 ரன்கள்
  • ஏப்ரல் 22 vs லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் - 11 பந்துகளில் 8 ரன்கள்
  • ஏப்ரல் 25 vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 37 பந்துகளில் 103 ரன்கள்
  • ஏப்ரல் 28 vs பஞ்சாப் கிங்ஸ் - 16 பந்துகளில் 43 ரன்கள்
  • மே 1 vs டெல்லி கேபிட்டல்ஸ் - 2 பந்துகளில் 4 ரன்கள்
  • மே 9 vs குஜராத் டைட்டன்ஸ் - 16 பந்துகளில் 36 ரன்கள்
  • மே 17 vs டெல்லி கேபிட்டல்ஸ் - 21 பந்துகளில் 46 ரன்கள்
  • மே 19 vs லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் - 38 பந்துகளில் 93 ரன்கள்
  • மே 24 vs மும்பை இந்தியன்ஸ் - 6 பந்துகளில் 4 ரன்கள்
  • மே 27 vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 29 பந்துகளில் 97 ரன்கள் (எலிமினேட்டர்)
  • மே 29 vs குஜராத் டைட்டன்ஸ் - 47 பந்துகளில் 96 ரன்கள் (குவாலிஃபயர் 2)
சூர்யவன்ஷியின் எலிமினேட்டர் ஆட்டத்துக்குப் பிறகு அவரைப் பாராட்டி, புரி கடற்கரையில் சுதர்ஷன் பட்னாயக் உருவாக்கிய மணல் சிற்பம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சூர்யவன்ஷியின் எலிமினேட்டர் ஆட்டத்துக்குப் பிறகு அவரைப் பாராட்டி, புரி கடற்கரையில் சுதர்ஷன் பட்நாயக் உருவாக்கிய மணல் சிற்பம்

மொத்தம் 16 இன்னிங்ஸ்களில் அவர் 4 போட்டிகளில் மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. இரட்டை இலக்கத்தை எட்டிய 12 போட்டிகளிலுமே அவர் 30 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார் என்பதுதான் அவரது சிறப்பு. அதில் 6 போட்டிகளில் அவர்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஸ்கோரர்.

ஒரு சீசனில் 75% போட்டிகளில் 30 ரன்களுக்கு மேல் எடுப்பது சாதாரண விஷயம் இல்லை. அதுவும் அந்த 12 போட்டிகளில் 10-ல் அவர் 200+ ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியிருக்கிறார்.

அற்புத அணுகுமுறையும் அசாத்திய முதிர்ச்சியும்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஒவ்வொரு போட்டியிலும் பௌலர்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடிய சூர்யவன்ஷி, தனி ஆளாக தாக்கம் ஏற்படுத்தத் தொடங்கினார். பல முன்னணி பௌலர்களுமே அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினார்கள். மிகவும் கடினமான பந்துகளையும் கூட அவரால் சிக்ஸராக மாற்ற முடிந்தது.

அதேசமயம் அவர் வெறுமனே பந்துகளைப் பார்த்து பேட்டை வீசுவதில்லை. அவர் அந்தப் பந்துகளை சரியாகத் தேர்ந்தெடுத்து, தான் நினைக்கும் திசைகளுக்கு செலுத்துகிறார்.

பொதுவாக பவுன்சர்கள் சிக்ஸராகின்றன என்றால், புல் ஷாட்கள் மூலம் லெக் சைட் செல்லும். இல்லையேல், தேர்ட் மேன் திசையில் அப்பர்ட் கட் மூலம் சிக்ஸராகும். ஆனால், வைபவ் சூர்யவன்ஷி, லாங் ஆஃப் திசையில் ஒரு பவுன்சரை சிக்ஸராக்குகிறார். குவாலிஃபயர் 2 போட்டியில், ரபாடா வீசிய அதிவேக பவுன்சர் ஒன்றை அப்படி லாங் ஆஃப் திசையில் சிக்ஸராக்கினார் அவர்.

அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ஏ.பி.டி வில்லியர்ஸ், வர்ணனையில் "அதுவொரு ஃபோர்ஹேண்ட் ஷாட். சூர்யவன்ஷி தன்னுடைய முந்தைய பிறவியில் டென்னிஸ் பிளேயராக இருந்திருக்கவேண்டும். ரஃபேல் நடால் ஃபோர்ஹேண்டில் விளாசியது போல் இருந்தது." என்று கூறினார்.

அந்த ஷாட்டை முன்பு நன்கு இறங்கி வந்து விளையாடினார் சூர்யவன்ஷி. பந்துகளின் லென்த்தை நன்றாகக் கணித்து அதற்கேற்ப அவர் முன்பும் பின்பும் நகர்ந்துவிடுகிறார். அதனால், அவரால் ஒவ்வொரு பந்தையும் சரியாக அடிக்க முடிகிறது. அதை பவுண்டரி எல்லைக்கு வெளியேவும் அனுப்ப முடிகிறது.

"அவர் விளையாடும்போது நேரம் மெதுவாக நகர்வதுபோல் இருக்கிறது. அவரால் லென்த்தை மிகச் சரியாகக் கணிக்க முடிகிறது. இதுதான் மிகச் சிறந்த வீரர்களை உருவாக்குகிறது," என்று இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ விவாதம் ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டார் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் டாம் மூடி.

தேவைப்படும் நேரத்தில் தன்னால் நிலைத்து நின்று விளையாட முடியும் என்றும் காட்டியிருக்கிறார் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தேவைப்படும் நேரத்தில் தன்னால் நிலைத்து நின்று விளையாட முடியும் என்றும் காட்டியிருக்கிறார் சூர்யவன்ஷி

எலிமினேட்டர் போட்டிக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் சூர்யவன்ஷியைப் பற்றி பதிவு செய்த சச்சின் டெண்டுல்கர், "வைபவ் சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் (பேட்டை சுழற்றும் விதம்) மிகச்சிறப்பாக உள்ளது. அதைவிடக் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவரது கால்களை நோக்கி வரும் பந்துகளுக்கு இடம் கொடுப்பதற்காக, அவர் தனது முன் காலை எவ்வளவு அழகாக நகர்த்துகிறார் என்பதுதான். இந்த சுதந்திரம் அவர் விளையாடும் விதத்தில் விளையாட அனுமதிக்கிறது. அந்த இன்னிங்ஸ் அற்புதம் என்றே சொல்ல வேண்டும்!" என்று கூறினார்.

அதேசமயம், பெரிய ஷாட்கள் அடிப்பது மட்டுமே தன்னுடைய ஆட்டம் இல்லை என்பதையும் பல போட்டிகளில் காட்டியிருக்கிறார் சூர்யவன்ஷி. உதாரணம், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான குவாலிஃபயர் 2. ஜெய்ஸ்வால் மற்றும் ஜுரெல் விரைவில் ஆட்டமிழந்ததும், தன் விக்கெட்டின் அவசியத்தை உணர்ந்து நீண்ட நேரம் களத்தில் இருப்பதை பிரதானப்படுத்தினார் வைபவ்.

நிறைய ஸ்டிரைக் ரொடேட் செய்தார். பந்துவீச்சாளர்களை கணிப்பதற்கு அவகாசம் எடுத்துக்கொண்டார். வாஷிங்டன் சுந்தர் பந்துவீச வந்தபோது, அவரது முதல் ஓவரில் சூர்யவன்ஷி பெரிய ஷாட்கள் ஆடவேயில்லை. ஆனால், வாஷிங்டனின் இரண்டாவது ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசினார். இப்படி இந்த குவாலிஃபயர் 2 போட்டியில் தன் முதிர்ச்சியையும் வெளிப்படுத்தினார் சூர்யவன்ஷி.

அதுமட்டுமல்ல, கடினமான யார்க்கர் பந்துகள் வரும்போது அதை அவர் சரியாக கணித்து டிஃபண்ட் செய்துவிடுகிறார். எலிமினேட்டரில் பேட் கம்மின்ஸ், குவாலிஃபயர் 2 போட்டியில் ஜேசன் ஹோல்டர் போன்றவர்கள் யார்க்கர் வீசிய போது, அவர் அதை பவுண்டரியோ சிக்ஸரோ அடிக்கப் பார்க்காமல் தடுத்தாடினார். ஆனால், அதே பந்துவீச்சாளர்கள், தங்கள் யார்க்கரை சற்று தவற விடும் போது, அது பறந்துவிடுகிறது.

எலிமினேட்டர் போட்டிக்குப் பிறகு பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், "வைபவ் சூர்யவன்ஷியிடம் நீங்கள் கொஞ்சம் கூட தவறு செய்துவிடக் கூடாது. துல்லியம் சற்று தவறினாலும் அவர் உங்களைத் தண்டித்துவிடுகிறார்." என்று கூறினார். கம்மின்ஸ் போன்ற உலகத்தர பௌலருக்கு எதிராகவே அதைத்தான் செய்கிறார் இந்த 15 வயது வீரர்.

எலிமினேட்டரில் கம்மின்ஸுக்கு எதிராக விளையாடிய 8 பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடித்தார் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, எலிமினேட்டரில் கம்மின்ஸுக்கு எதிராக விளையாடிய 8 பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடித்தார் சூர்யவன்ஷி

இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி படைத்திருக்கும் சாதனைகள்

இதுவரை மொத்தம் 23 ஐபிஎல் போட்டிகளில் ஆடியிருக்கும் இந்த வீரர் ஒவ்வொருவரின் பேசுபொருளாகவும் மாறியிருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு சாதனையை உடைக்கிறார், ஒரு மைல்கல்லை அடைகிறார். இந்த சீசனில் பல்வேறு சாதனைகளை உடைத்து அவற்றை தன் பெயருக்கு மாற்றியிருக்கிறார் சூர்யவன்ஷி.

இந்த சீசனில் சூர்யவன்ஷி படைத்த சாதனைகள்

  • ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்த அன்கேப்ட் வீரர் - 776 ரன்கள். முந்தைய சாதனை - யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 2023-இல் 626 ரன்கள்
  • ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் - 72 சிக்ஸர்கள். முந்தைய சாதனை - கிறிஸ் கெய்ல்: 2012-இல் 59 சிக்ஸர்கள்
  • ஒரு ஐபிஎல் சீசனில் 200+ ஸ்டிரைக் ரேட்டில் 600 ரன்களுக்கும் மேலாக எடுத்த முதல் வீரர். அவரது சீசன் ஸ்டிரைக் ரேட் - 237.30.
  • ஒரு பிளே ஆஃப் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் - 12 சிக்ஸர்கள் (சன்ரைசர்ஸுக்கு எதிரான எலிமினேட்டர்)
  • ஒரு இன்னிங்ஸில் மிகக் குறைந்த பந்துகளில் 10 சிக்ஸர்கள் விளாசியவர் - 24 பந்துகள் (சன்ரைசர்ஸுக்கு எதிரான எலிமினேட்டர்)
  • ஒரு போட்டியின் பவர்பிளேவிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்தவர் - 8 சிக்ஸர்கள் (சன்ரைசர்ஸுக்கு எதிரான எலிமினேட்டர்)
  • ஐபிஎல் அரங்கில் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் - 23 இன்னிங்ஸ்
  • ஐபிஎல் அரங்கில் குறைந்த பந்துகளில் 1000 ரன்களைக் கடந்த வீரர் - 440 பந்துகளில். (முந்தைய சாதனை - ஆந்த்ரே ரஸல் - 545 பந்துகள்)
  • ஒரு ஐபிஎல் சீசனில் பவர்பிளேவில் அதிக ரன்கள் அடித்த வீரர் - 521 ரன்கள். (முந்தைய சாதனை - டேவிட் வார்னர் - 2016-இல் 467 ரன்கள்)

இப்படியொரு சீசன் தான் அந்த 15 வயது பேட்டர் கொடுத்திருப்பது. ஒவ்வொரு போட்டிக்கு முன்னரும், போட்டியின்போதும், போட்டிக்குப் பின்னரும் அவரே பெரும் பேசுபொருளாக இருந்தார். அந்த எதிர்பார்ப்புக்கெல்லாம் ஏற்ற வகையில் சிறந்த செயல்பாடுகளும் கொடுத்தார். கம்மின்ஸ், ஸ்டார்க், பும்ரா, ஹேசில்வுட் என உலகத்தர பௌலர்களுக்கு எதிராக அநாயசமாக சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார். ஒவ்வொரு ஷாட்டிலும் ரசிகர்கள் முதல் வல்லுநர்கள் வரை ஒவ்வொருவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

2011 சீசனில் மாற்று வீரராக வந்த கிறிஸ் கெய்ல் ஆர்சிபி அணிக்காக மிரட்டலாக விளையாடியது, 2016 ஐபிஎல் சீசனில் விராட் கோலி 973 ரன்கள் குவித்தது போன்ற மறக்க முடியாத ஒரு சீசனைக் கொடுத்திருக்கிறார் சூர்யவன்ஷி.

ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும் மறக்க முடியாத நினைவுகளையும் கொடுத்திருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் தனி நபர் ஒருவரின் மிகச் சிறந்த சீசன்களைப் பட்டியலிடும் போது நிச்சயம் சூர்யவன்ஷியின் இந்த சீசன் அதில் முக்கிய இடம் பிடிக்கும். வைபவ் சூர்யவன்ஷியின் 2026 ஐபிஎல் சீசன் இன்னும் பல காலத்துக்குப் பேசப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு