பழம்பெரும் நடிகர் நானா படேகர் 75 வயதில் காலமானார் - பிரபலங்கள், தலைவர்கள் இரங்கல்

பிரபல நடிகர் நானா படேகர் 75 வயதில் காலமானார். ஊடக செய்திகளின்படி, கோவாவில் அவர் உயிரிழந்தார். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, இன்று அதிகாலை 5.20 மணியளவில் தனது இல்லத்தில் ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் நானா படேகர் உயிரிழந்தார்.
பிபிசி மராத்தி, அவரது மகன் மல்ஹார் படேகரை தொடர்புகொண்டு பேசியது. நானா படேகர் கோவாவில் உயிரிழந்ததாக மல்ஹார் படேகர் பிபிசியிடம் தெரிவித்தார். "இந்தத் துயரமான செய்தி உண்மைதான்" என்று அவர் கூறினார்.
ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்ட தகவலின்படி, "45 நிமிடங்கள் தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இது தொடர்பாக 'மெடிகோ-லீகல் கேஸ்' பதிவு செய்யப்பட்டுள்ளது. உடற்கூராய்வு செய்யப்படும்" என்று மணிப்பால் மருத்துவமனையின் புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் சேகர் சால்கர் தெரிவித்தார்.
நானா படேகரின் இயற்பெயர் விஸ்வநாத் தினகர்ராவ் படேகர். தமிழ், ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் வெளியான பல திரைப்படங்களிலும், நாடகங்களிலும் அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கதாநாயகன், இணைக் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் எனப் பல்வேறு வகை கதாபாத்திரங்களில் படேகர் நடித்துள்ளார். 1978ஆம் ஆண்டு வெளியான 'கமன்' திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமானார்.
பொம்மலாட்டம், காலா ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் தடம் பதித்துள்ள நானா படேகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், "சிறந்த நடிகர், அனைத்துக்கும் மேலாக அன்பான நண்பர். நானா படேகர் இனி இல்லை. சற்று முன்புதான் கோவாவில் அவர் காலமானார். நேற்றுதான் அவரிடம் பேசினேன். அவரது கடைசி வார்த்தைகள் 'கால்ஜி கே ராஜா' (உன்னைப் பார்த்துக்கொள், ராஜா) என்பதாக இருந்தது."
"திரையிலும் திரைக்கு வெளியிலும் உங்களை நான் மிகவும் மிஸ் செய்வேன், நானா சாஹேப். நல்ல காலமாக இருந்தாலும், மோசமான காலமாக இருந்தாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தீர்கள். ஓம் சாந்தி" என்று பதிவிட்டுள்ளார்.
நானா படேகர் கடைசியாக விஷால் பரத்வாஜின் காதல் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'ஓ'ரோமியோ'வில் நடித்திருந்தார். இதில் ஷாகித் கபூர், திரிப்தி டிம்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 2026 பிப்ரவரியில் வெளியான இந்தப் படத்தில் படேகர், மும்பை உளவுத் துறைப் பிரிவின் தலைவரான இஸ்மாயில் கான் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அனில் கபூரின் 'சுபேதார்' படத்திலும் அவர் நடித்திருந்தார். இந்தப் படம் 2026 மார்ச் மாதம் பிரைம் வீடியோவில் திரையிடப்பட்டது. அதற்கு முன்பு 'ஹவுஸ்ஃபுல்-5' (2025), 'வன்வாஸ்' (2024) ஆகிய படங்களில் நடித்திருந்தார். 2026ஆம் ஆண்டில் பிரகாஷ் ஜாவின் அரசியல் நாடகத் தொடரான 'சங்கல்ப்' மூலம் ஓடிடி தளத்திலும் படேகர் அறிமுகமானார். இதில் மாட் சாஹேப்/கன்ஹையா லால் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ரஜினிகாந்த் இரங்கல்
நானா படேகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், "என் அன்பு நண்பர் நானாஜி இனி நம்முடன் இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் "பழம்பெரும் நடிகர் நானா படேகரின் மறைவால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். அவரது ஆற்றல் மிகுந்த நடிப்பு, குறிப்பிடத்தக்க திறமை மற்றும் இந்திய திரையுலகிற்கு அவரின் மகத்தான பங்களிப்பு ஆகியவை எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் "என் அன்புக்குரிய நானா ஜி... உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன். உங்களுடன் கழித்த தருணங்கள், உங்களுடனான உரையாடல்கள், வாக்குவாதங்கள், நீங்கள் சமைத்த உணவு, நீங்கள் பகிர்ந்துகொண்ட அறிவு என அனைத்தையும் என்றும் நினைவில் போற்றிப் பாதுகாப்பேன். என் வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் வந்ததற்கு நன்றி. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்," எனக் கூறியுள்ளார்.
நானா படேகரின் திரைப்பயணம்
நானா படேகர் ஹிந்தி மற்றும் மராத்தி திரைப்படத் துறைகளின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தார். பல தசாப்தங்களுக்கு அவரது திரைப் பயணம் நீண்டது. 'பரிந்தா', 'பிரஹார்: தி ஃபைனல் அட்டாக்', 'கிராந்திவீர்', 'அக்னி சாக்ஷி', 'காமோஷி: தி மியூசிக்கல்', 'அப் தக் சப்பன்', 'வெல்கம்' உள்ளிட்ட திரைப்படங்களில் அவரது நடிப்பு மிகவும் பிரபலமானது.
நடிப்பைத் தவிர, 'பிரஹார்: தி ஃபைனல் அட்டாக்' திரைப்படத்தையும் படேகர் இயக்கியிருந்தார். சினிமா மற்றும் கலைத் துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2013ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Facebook/Nana Patekar
நானா படேகர் 1978ஆம் ஆண்டு வெளியான 'கமன்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 2000களின் தொடக்கத்தில் அவரது நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றது. குறிப்பாக 'சக்தி: தி பவர் ஆஃப் தாட்' (2002), 'அப் தக் சப்பன்' (2004), 'அபஹரண்' (2005), 'டாக்ஸி நம்பர் 9211' (2006) ஆகிய திரைப்படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படமான 'வெல்கம்' படத்தில் கேங்ஸ்டர் உதய் ஷெட்டி கதாபாத்திரத்தில் நடித்து அவர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். இதன் தொடர்ச்சியாக வெளியான 'வெல்கம் பேக்' (2015) படத்திலும் அதே கதாபாத்திரத்தில் அவர் நடித்தார்.
நகைச்சுவை த்ரில்லர் திரைப்படமான 'ஹவுஸ்ஃபுல் 5' படத்திலும் படேகர் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2010ஆம் ஆண்டு அவர் அரசியல் த்ரில்லர் திரைப்படமான 'ராஜ்நீதி'யில் நடித்தார். இந்தப் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுக்கு ஐந்தாவது முறையாக அவர் பரிந்துரைக்கப்பட்டார்.
நடிப்பு தவிர, பின்னணிப் பாடகராகவும் படேகர் தனது குரலை வழங்கியுள்ளார். 'யஷ்வந்த்' (1997), 'வஜூத்' (1998), 'ஆஞ்ச்' (2003) உள்ளிட்ட திரைப்படங்களில் பாடகராகவும் அவர் பங்களித்துள்ளார். நானா நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான திரைப் பயணத்திற்குப் பிறகு காலமானார். இந்தக் காலகட்டத்தில் நடிப்பு, இயக்கம், நாடகம் ஆகிய மூன்று துறைகளிலும் அவர் பணியாற்றினார்.
அரசியல் தலைவர்கள் இரங்கல்
தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) கட்சியின் தலைவர் ரோஹித் பவார் எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து, "திரையில் தனது நடிப்பால் மட்டுமின்றி, 'நாம் ஃபவுண்டேஷன்' மூலம் விவசாயிகள், வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்காக அவர் ஆற்றிய சமூகப் பணியும் அவரது உணர்வுபூர்வமான மனதுக்குச் சான்றாகத் திகழ்கிறது. கலை மூலம் லட்சக்கணக்கான மக்களின் மனங்களில் இடம்பிடித்ததுடன், சமூகப் பொறுப்பையும் பேணிய இந்த மாபெரும் கலைஞருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநில தலைவர் ஹர்ஷவர்தன் சப்காலும் இரங்கல் தெரிவித்து, "மூத்த நடிகர் நானா படேகரின் மறைவுச் செய்தி மிகவும் துயரமானது. சிறந்த நடிப்பு, சமூக அக்கறை மற்றும் மனிதநேயம் கொண்ட உணர்வுபூர்வமான ஆளுமையாக நானா படேகர் எப்போதும் நமது நினைவில் இருப்பார். அவரது மறைவால் கலை மற்றும் சமூகத் துறைகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநில கலாசாரத் துறை அமைச்சர் ஆஷிஷ் ஷெலார், "ஒரு கம்பீரமான நடிகரை நாம் இழந்துவிட்டோம்!" என்று தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"தனது வலிமையான நடிப்பால் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய நானா, நாடகம், திரைப்படம் மற்றும் சமூகப் பணியின் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கினார். அவரது மறைவால் இந்திய திரையுலகம் உணர்வுபூர்வமான, கம்பீரமான, திறமையான மற்றும் உண்மையான கலைஞரை இழந்துள்ளது. மகாராஷ்டிர அரசு சார்பில் வழங்கப்படும் மறைந்த ராஜ் கபூர் சிறப்புப் பங்களிப்பு விருதை 2013ஆம் ஆண்டு பெற்றது உள்ளிட்ட, திரைப்படத் துறையின் பல விருதுகளுக்கு அவர் சொந்தக்காரராக இருந்தார். நடுத்தர வர்க்கத் தொழிலாளர் மராத்தி குடும்பத்தில் இருந்து வந்த நானா படேகர், அளவற்ற உழைப்பாலும் தனித்துவமான பாணியாலும் நடிப்பில் தனது முத்திரையைப் பதித்தார். எங்கள் கிரண்காவை சேர்ந்த ஓர் உண்மையான, தனித்துவமான, கொண்டாட்டங்களை விரும்பும் மராத்திய மனிதரை இன்று நாம் இழந்துவிட்டோம்," என அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் "இந்திய திரையுலகின் பன்முகத் திறமை கொண்ட, மூத்த நடிகர் நானா படேகர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கம்பீரமான குரல், கூர்மையான கண்கள் மற்றும் அழுத்தமான வசன உச்சரிப்பின் மூலம் நானா படேகர் பல தசாப்தங்களாகத் திரையுலகிலும் ரசிகர்களிடமும் ஆதிக்கம் செலுத்தினார். 'நாம்' ஃபவுண்டேஷன் மூலம் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்காக அவர் பெரும் பணிகளை முன்னெடுத்துள்ளார். சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்ட உணர்வுபூர்வமான நடிகரை இன்று நாம் இழந்துவிட்டோம். நானாவின் குடும்பத்தினரின் மற்றும் எண்ணற்ற ரசிகர்களின் துயரில் நானும் பங்கேற்கிறேன்" என கூறியுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































