கார்த்திக் ஷர்மா அதிரடி - எல்எஸ்ஜி அணிக்கெதிராக 187 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே

இந்தப் போட்டியில் 42 பந்துகள் சந்தித்த கார்த்திக் ஷர்மா 71 ரன்கள் எடுத்தார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தப் போட்டியில் 42 பந்துகள் சந்தித்த கார்த்திக் ஷர்மா 71 ரன்கள் எடுத்தார்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 59வது போட்டியில் இன்று (மே 15) நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அனி லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி லக்னௌவில் நடைபெறுகிறது.

சிஎஸ்கே இதுவரை 11 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகள் பெற்றிருக்கிறது. 12 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்றிருக்கிறது. 6 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணி கடைசி இடத்தில் இருக்கிறது.

இவ்விரு அணிகளும் இதற்கு முன் விளையாடிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு 180+ இலக்கை அந்தப் போட்டியில் வெற்றிகராமாக சேஸ் செய்தது சிஎஸ்கே. உர்வில் பட்டேல் 13 பந்துகளை அரைசதம் அடித்து அதிவேக ஐபிஎல் அரைசத சாதனையை சமன் செய்தார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணியால் டால் 4 இடங்களுக்குள் முன்னேற முடியும்.

டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

முதல் போட்டியிலேயே மிரட்டிய ஆகாஷ் சிங்

இந்தப் போட்டியில் முதல் முறையாகக் களமிறக்கப்பட்ட ஆகாஷ் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். உயரமான அவர், தனது லென்த் மூலம் பெரும் சவால் ஏற்படுத்தினார். அதனால், சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் 3 விக்கெட்டுகளையுமே அவர் கைப்பற்றினார்.

ஆட்டத்தின் நான்காவது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் முதல் விக்கெட்டாக வெளியேறினார். 'ஹார்ட்' லென்த்தில் வீசப்பட்ட பந்தை அவர் 'புல்' செய்ய முற்பட்டார். ஆனால், பந்து பேட்டில் நன்கு படாததால் மிட் ஆன் திசையில் ருதுராஜ் கேட்ச் ஆனார். அவர் 9 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார்.

ஆகாஷ் வீசிய அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சனும் வெளியேறினார். 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த சாம்சன், டீம் ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த முகுல் சவுத்ரியிடம் கேட்ச் ஆனார். தன் முதல் 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆகாஷ், தான் வீசிய கடைசி ஓவரிலும் விக்கெட் வீழ்த்தத் தவறவில்லை. கடந்த போட்டியில் 13 பந்துகளில் அரைசதம் அடித்த உர்வில் பட்டேலை 6 ரன்களுக்கே (7 பந்துகள்) பெவிலியனுக்கு அனுப்பினார் ஆகாஷ் சிங்.

4 ஓவர்கள் பந்துவீசிய ஆகாஷ், 26 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். எட்டாவது ஓவரில் அவருடைய ஸ்பெல் முடிந்தபோது 61/3 என்ற நிலையில் இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்த சீசனில் தான் ஆடிய முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார் ஆகாஷ் சிங்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த சீசனில் தான் ஆடிய முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார் ஆகாஷ் சிங்

அதிரடி காட்டிய கார்த்திக் ஷர்மா

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சிஎஸ்கே விரைவில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், அணியை சரிவிலிருந்து மீட்டார் இளம் வீரர் கார்த்திக் ஷர்மா.

நான்காவது விக்கெட்டுக்கு கார்த்திக் ஷர்மா - டெவால் பிரெவிஸ் ஜோடி 44 பந்துகளுக்கு 70 ரன்கள் எடுத்தது. ஆரம்பத்தில் மெதுவாக ஆடி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தவர்கள், சரியான ஓவர்களைத் தேர்ந்தெடுத்து பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்தார்கள். ஷபாஸ் அஹமது வீசிய 11வது ஓவரில் 15 ரன்களும், பிரின்ஸ் யாதவ் வீசிய 13வது ஓவரில் 16 ரன்களும் எடுத்தார்கள்.

சிறப்பாக விளையாடிய கார்த்திக் ஷர்மா 35 பந்துகளில் தன்னுடைய அரைசதத்தை நிறைவு செய்தார். இது அவருடைய 2வது ஐபிஎல் அரைசதம்.

சரியாகத் தன் வேகத்தை அதிகரித்திருந்த நேரத்தில் மொஹம்மது ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் டெவால் பிரெவிஸ். அவர் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.

ஷபாஸ் அஹமது வீசிய 16வது ஓவரில் 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசிய கார்த்திக் ஷர்மா, அதே ஓவரின் கடைசிப் போட்டியில் ஆட்டமிழந்தார். அவர் 42 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும்.

கடைசி கட்டத்தில் ஷிவம் துபே அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். பிரின்ஸ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் மட்டும் அவர் தலா 2 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் விளாசினார். அந்த அதிரடியின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே.

பிளேயிங் லெவனில் யார்?

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்

இந்தப் போட்டிக்கான எல்எஸ்ஜி அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டன. முகுல் சவுத்ரி, அப்துல் சமத், மயாங்க் யாதவ் மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆவேஷ் கான், திக்வேஷ் ராதி, அக்‌ஷத் ரகுவன்ஷி மற்றும் ஹிம்மத் சிங் ஆகியோர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகாஷ் சிங் இந்த சீசனில் முதல் முறையாகக் களமிறங்குகிறார்.

பிளேயிங் லெவன்: மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பன்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), எய்டன் மார்க்ரம், முகுல் சவுத்ரி, அப்துல் சமத், ஷபாஸ் அஹமது, மொஹம்மது ஷமி, மயாங்க் யாதவ், ஆகாஷ் சிங், பிரின்ஸ் யாதவ்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஜாஷ் இங்லிஸ், எம்.சித்தார்த், திக்வேஷ் ராதி, ஹிம்மத் சிங், ஆயுஷ் படோனி.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தப் போட்டிக்கான சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. காயமடைந்த ஜேமி ஓவர்டன் மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோருக்குப் பதிலாக ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் குர்ஜப்னீத் சிங் ஆகியோர் சேர்க்கப்படுவதாக டாஸின்போது ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார். குர்ஜப்னீத் சிங் சப்ஸ்டிட்யூட் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். அவர் சிஎஸ்கே பந்துவீசும்போது இம்பேக்ட் வீரராகக் களமிறக்கப்படலாம்.

பிளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்ட்ன), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), உர்வில் பட்டேல், கார்த்திக் ஷர்மா, டெவால் பிரெவிஸ், ஷிவம் துபே, பிரஷாந்த் வீர், அன்ஷுல் கம்போஜ், நூர் அஹமது, முகேஷ் சவுத்ரி, ஸ்பென்சர் ஜான்சன்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: சர்ஃபராஸ் கான், அகீல் ஹொசைன், குர்ஜப்னீத் சிங், மேத்யூ ஷார்ட், மேட் ஹென்றி.