ஐபிஎல் பிளேஆஃபில் நுழையும் 4-வது அணி எது? ஓரிடத்திற்கு 3 அணிகள் போட்டி

பட மூலாதாரம், ANI
ஐபிஎல் 2026 சீசனின் லீக் சுற்று இன்று (மே 24) முடிவுக்கு வருகிறது. பரபரப்பான இந்தத் தொடரின் கடைசி கட்டப் போட்டிகளும் பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இன்று நடக்கும் இரண்டு போட்டிகளுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போகும் அணி எது என்பதை முடிவு செய்யக்கூடும்.
இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. மும்பை இந்தியன்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டன. பிளே ஆஃபில் எஞ்சியுள்ள ஓரிடத்திற்கு 3 அணிகள் போட்டியில் உள்ளன.
நேற்று (மே 23) லக்னௌவில் நடந்த போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் போட்டியில் தொடர்ந்து நீடிக்கிறது பஞ்சாப் கிங்ஸ். தொடர்ந்து 6 போட்டிகளில் தோற்றிருந்த அந்த அணியை, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முன்னின்று வழிநடத்தி மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்தப் போட்டியில் தன் முதல் ஐபிஎல் சதத்தையும் அவர் பதிவு செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. அந்த இடத்தை அவர்கள் தக்கவைத்துக்கொள்ள என்ன நடக்கவேண்டும்? மற்ற இரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய என்ன நடக்கவேண்டும்? இதில் யாருக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது? அலசுவோம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

பட மூலாதாரம், ANI
ராயல்ஸைப் பொறுத்தவரை அவர்களின் பிளே ஆஃப் வாய்ப்பு முழுக்க முழுக்க அவர்கள் கையில் தான் இருக்கிறது. அந்த அணி இதுவரை 13 போட்டிகளில் 14 புள்ளிகள் பெற்றிருக்கிறது. இன்று வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி 16 புள்ளிகள் பெற்றுவிடும். கேகேஆர் அணியால் அதிகபட்சம் 15 புள்ளிகள் தான் பெற முடியும் என்பதால், ராயல்ஸ் தங்கள் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும்.
அதேசமயம் அவர்கள் இந்தப் போட்டியில் தோற்றாலோ, அல்லது ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் புள்ளிகள் பகிரப்பட்டாலோ ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிடும்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் மும்பையில் மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக இந்தப் போட்டியின் முன்னோட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறது இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ வலைதளம். ஒருவேளை அப்படி நடந்து போட்டி நடக்காவிட்டால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிரப்படும்.
புள்ளிகள் பகிரப்பட்டால் ராயல்ஸ் 15 புள்ளிகளோடு முடிக்கும். இந்த இடத்தில் நெட் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் முன்னிலை பெறும். ஏனெனில், பஞ்சாப் கிங்ஸ் தற்போது 0.309 என்ற நெட் ரன்ரேட் கொண்டிருக்கிறது. ராயல்ஸின் ரன்ரேட் 0.083 தான். அதனால், ராயல்ஸுக்கு வெற்றி அவசியம்.
இதற்கு அவர்களுக்கு முன் சில சவால்கள் இருக்கவே செய்கிறது. ஒன்று, மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறிவிட்டதால் அவர்கள் எந்த நெருக்கடியும் இல்லாமல் விளையாடுவார்கள். அதுமட்டுமல்லாமல் ராயல்ஸ் அணியிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. கடந்த சில போட்டிகளாக சில காயங்களால் அவதிப்பட்டுவருகிறது அந்த அணி.
கேப்டன் ரியான் பராக், முன்னணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இருவரும் முழு உடல் தகுதியுடன் இல்லை. கடந்த போட்டியில் ஆடாத அந்த இருவரும் இந்தப் போட்டியிலும் விளையாடவில்லை என்றால் அது அவர்களுக்குப் பின்னடைவாக அமையும். அது, தடுமாறும் அவர்களின் மிடில் ஆர்டருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
அந்த அணியின் பந்துவீச்சிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. கடந்த சில போட்டிகளாகவே வேகப் பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி களமிறக்கிக் கொண்டிருக்கிறது அந்த அணி. நாந்த்ரே பர்கர், சந்தீப் ஷர்மா, ஆடம் மில்ன், பிரிஜேஷ் ஷர்மா, துஷார் தேஷ்பாண்டே, சுஷாந்த் மிஷ்ரா என 3 இடங்களுக்கு இத்தனை வீரர்கள் மாறிமாறி பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு பெரும் பிரச்னையாக விளங்குகிறது.
இதையெல்லாம் சரிசெய்து ராஜஸ்தான் ராயல்ஸ் கட்டாயம் இந்தப் போட்டியில் வென்றால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ்

பட மூலாதாரம், ANI
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 போட்டிகளில் 13 வெற்றிகள் பெற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று 15 புள்ளிகளை அடைந்தால் மட்டுமே அவர்களால் பிளே ஆஃப் பற்றி கனவு காண முடியும்.
அப்படி அவர்கள் 15 புள்ளிகள் எடுத்தாலும், இரண்டு விஷயங்கள் அவர்களுக்கு சாதகமாக நடக்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்த வேண்டும். அதுமட்டுமல்லாமல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மிகப் பெரிய வெற்றி பெற்றால் தான் பஞ்சாப் கிங்ஸை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்துக்கு முன்னேற முடியும்.
தற்போது கேகேஆர் 0.011 என்ற நெட் ரன்ரேட் தான் கொண்டிருக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் 0.309 வைத்திருப்பதால், கொல்கத்தா அதை முந்துவது சற்று கடினமான விஷயம். ஒருவேளை அந்த அணி டெல்லிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால், குறைந்தது 77 ரன்கள் வித்தியாசத்திலாவது அவர்கள் வெற்றி பெறவேண்டும்.
ஒருவேளை டெல்லி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தால், அதை கேகேஆர் 12.3 ஓவர்களுக்குள் சேஸ் செய்யவேண்டும். இப்படி நடந்தால் தான் கேகேஆர் அணியின் நெட் ரன்ரேட் பஞ்சாபை முந்தி, அந்த அணியால் 4வது இடம் பிடிக்க முடியும்.
கொல்கத்தா அணிக்கும் இந்தப் போட்டிக்கு முன் சில பிரச்னைகள் எழுந்திருக்கின்றன. அந்த அணியின் டாப் ரன் ஸ்கோரர் அங்ரிஷ் ரகுவன்ஷி காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறிவிட்டார். அதனால், இப்போது அங்கு பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.
அந்த அணியில் தேஜஸ்வி தாஹியா தான் ஒரே இந்திய விக்கெட் கீப்பர். அவர் இதுவரை ஒரேயொரு ஐபிஎல் போட்டியில் தான் ஆடியிருக்கிறார். அதனால் அந்த விக்கெட் கீப்பர் இடத்தை நிரப்புவது அவர்களுக்கு சவாலாக இருக்கும்.
வருண் சக்கரவர்த்தியும் காயத்தால் அவதிப்பட்டுவருகிறார். அவர் கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த போட்டியில் பந்துவீசும்போதே அவர் ஓட முடியாமல் கஷ்டப்படுவதைப் பார்க்க முடிந்தது. ஒருவேளை அவர் இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு முழு உடல் தகுதியுடன் இல்லாவிட்டால், அது நைட் ரைடர்ஸுக்கு மிகப் பெரிய இழப்பாக இருக்கும்.
பஞ்சாப் கிங்ஸ் முன்னுள்ள வாய்ப்பு என்ன?

பட மூலாதாரம், ANI
லீக் சுற்றின் முடிவில் 15 புள்ளிகள் பெற்றிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். ஏப்ரல் 25-ஆம் தேதி 13 புள்ளிகளை எட்டிய அந்த அணி, அடுத்த வெற்றியை, அடுத்த புள்ளியை கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து மே 23 தான் பெற்றிருக்கிறது.
அந்த அணியின் போட்டிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், இன்றைய 2 போட்டிகளின் முடிவுகளையும் அவர்கள் வெளியே அமர்ந்துதான் பார்க்கவேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறக்கூடாது. ராயல்ஸ் தோற்றால் 14 புள்ளிகளோடு முடிப்பார்கள். ஒருவேளை போட்டியில் முடிவு கிடைக்கவில்லை என்றால் ராயல்ஸும் 15 புள்ளிகள் பெறும்.
அதேபோல், இரவு ஈடன் கார்டன்ஸில் நடக்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஜெயிக்கக்கூடாது. அப்படி நடந்தால் பஞ்சாப் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
ஒருவேளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றாலும், மேலே கூறப்பட்டதுபோல் பெரிய வெற்றியாக அல்லாமல், சுமார் 75 ரன்களுக்குக் குறைவாக வெற்றி பெற்றாலோ, அல்லது சுமார் 50 பந்துகளுக்கும் குறைவாக மீதம் வைத்து வெற்றி பெற்றாலோ, அவர்களால் பஞ்சாப்பின் ரன்ரேட்டை முந்த முடியாது. அது ஷ்ரேயாஸ் ஐயரின் அணிக்கு சாதகமான முடிவைக் கொடுக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























