தமிழ்நாடு ஆளுநர் மீது கேள்விகள் எழுவது ஏன்? அதிகாரங்கள் மற்றும் வாய்ப்புகள் என்ன?

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த இரண்டு நாட்களில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இருமுறை தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை சந்தித்தார்.

அதன் பிறகு நேற்று (மே 7) ஆளுநர் மாளிகை சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், 'ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை ஆதரவை தமிழக வெற்றி கழகம் இன்னும் பெறவில்லை என்பதை ஆளுநர் விளக்கினார்' என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், 'பதவி ஏற்புக்கு முன்பு தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல' என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த விவகாரத்தில் ஆளுநர் முன் உள்ள வாய்ப்புகள் மற்றும் அதிகாரங்கள் என்ன?

ஆளுநரின் அதிகாரங்கள்

நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு தேவையான இடம் என்பது 118.

பொதுவாக இது போன்ற சூழல்கள் 'தொங்கு சட்டப்பேரவை' என அழைக்கப்படும். ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எந்தக் கட்சியும் அல்லது தேர்தலுக்கு முந்தைய கூட்டணியும் பெறாத போது இந்தச் சூழல் ஏற்படுகிறது.

இத்தகைய சூழலில் ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்ன வேண்டும் என்பதை சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை விவரிக்கிறது.

சட்டப்பேரவையில் ஒரு கட்சிக்கு முழுமையான பெரும்பான்மை இருந்தால், முதலமைச்சராகப் பொறுப்பேற்கும்படி அக்கட்சியின் தலைவருக்கு மாநிலத்தின் ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும்.

இருப்பினும், அத்தகைய பெரும்பான்மை கொண்ட ஒரு கட்சி எதுவும் இல்லாத பட்சத்தில், ஆளுநர் பின்வரும் கட்சிகள் அல்லது கூட்டணிகளிலிருந்து ஒரு முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • தேர்தலுக்கு முன்னர் அமைக்கப்பட்ட கட்சிகளின் கூட்டணி.
  • 'சுயேச்சைகள்' உட்பட மற்றவர்களின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்க உரிமை கோரும் தனிப்பெரும் கட்சி.
  • தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி, இதில் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அரசாங்கத்தில் இணைகின்றன.
  • தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி, இதில் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ஆட்சி அமைக்கும், மீதமுள்ள கட்சிகள் அல்லது சுயேச்சைகள், வெளியிலிருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும்.

2010ஆம் ஆண்டின் புஞ்சி ஆணைய அறிக்கையும் இதேபோன்ற பரிந்துரைகளையே வழங்குகிறது.

எந்தக் கட்சிக்கும் அல்லது தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாத பட்சத்தில், பிற கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்க உரிமை கோரும் தனிப்பெரும் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று புஞ்சி ஆணைய அறிக்கை குறிப்பிடுகிறது.

ஆட்சி அமைக்கும் உரிமையைக் கோரும் கட்சிக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பிறகு, பதவியேற்பு விழா நடைபெறும். ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

அதன் பிறகு, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் அந்தக் கட்சி அல்லது கூட்டணி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

அப்படி நிரூபிக்க முடியாதபோது, வேறு கட்சிகள் ஆட்சியமைக்க உரிமை கோரும்பட்சத்தில் அதற்கு ஆளுநர் முடிவெடுத்து அழைப்பு விடுக்கலாம். எதற்குமே வாய்ப்பில்லாதபட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, மீண்டும் ஒரு முறை தேர்தல் நடத்தப்படலாம்.

'பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது சட்டப்பேரவையில்தான்'

கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக 96 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதேசமயம், அதன் கூட்டணி கட்சிகள் 67 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தன.

மே 11, 2006 தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், "அனைத்து கூட்டணிக் கட்சிகளும் திமுக-விற்கு ஆதரவான கடிதங்களை அப்போதைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் சமர்ப்பித்துள்ளன" என்று தி இந்து ஆங்கில நாளிதழ், 2006, மே 12 அன்று தனது செய்தியில் குறிப்பிட்டது.

இங்கு திமுக 96 இடங்கள் என்ற பெரும்பான்மைக்கு குறைவான இடங்கள் பெற்றபோதும், அப்போதைய ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். தனது (தேர்தலுக்கு முந்தைய) கூட்டணியின் உதவியோடு திமுக ஆட்சி அமைத்தது.

ஆனால், "ஆளுநர் ஆதரவு கடிதங்களைக் கோருவதில் தவறொன்றுமில்லை, அதேசமயம் எத்தனை பேர் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பதை அவர் கணக்கெடுக்க வேண்டியதில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது சட்டப்பேரவையில் தான்" என தமிழக அரசின் முன்னாள் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி 'தி இந்து' ஆங்கில நாளிதழ் கூறுகிறது.

மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், "பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது" என்று தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.ஆர்.பொம்மை வழக்கு

கர்நாடக மாநிலத்தில் 1988 ஆகஸ்ட் 13 முதல் எஸ்.ஆர்.பொம்மை தலைமையில் ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது இந்திய அரசியலமைப்பின் 356வது பிரிவைப் பயன்படுத்தி 1989 ஏப்ரல் 21 அன்று, அவருடைய அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அவருடைய கட்சியிலிருந்து பலரும் வேறு கட்சிகளுக்குச் சென்று விட்டதால் எஸ்.ஆர்.பொம்மை அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகக் கூறி இந்தக் கலைப்பு நடவடிக்கையை அன்றைய மத்திய அரசு மேற்கொண்டது.

ஜனதா தளம் சட்டப்பேரவைக் குழுவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை எஸ்.ஆர். பொம்மை அப்போதைய ஆளுநர் பி. வெங்கடசுப்பையாவிடம் சமர்ப்பித்த போதும், பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்க ஆளுநர் மறுத்துவிட்டார்.

இந்த ஆட்சிக் கலைப்பை எதிர்த்து எஸ்.ஆர். பொம்மை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அந்த மனு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தை அணுகினார் எஸ்.ஆர். பொம்மை.

உச்சநீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தபோது, நீதிபதிகள் ரத்னவேல் பாண்டியன், பி.பி.சாவந்த், பி.பி ஜீவன் ரெட்டி, எஸ்.சி அகர்வால் உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்தது.

அதில் ''ஒரு மாநில அரசுக்குப் பெரும்பான்மை உள்ளதா இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டப்பேரவைதான், ஆளுநர் மாளிகை அல்ல'' என்று கூறியிருந்தது.

இதையே தற்போதைய சூழலில் சட்ட நிபுணர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் குறிப்பிடுகிறார்கள்.

'ஆளுநர் அப்படி கூற முடியாது'

இது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "முழுமையான பலம் காட்டப்பட்டால் மட்டுமே பதவியேற்புக்கு அனுமதிப்பேன் என்று ஆளுநரால் கூற முடியாது" என்கிறார்.

"ஒருவரை ஆட்சி அமைக்க அழைக்கும் உரிமை ஆளுநருக்கு உண்டு. எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாதபோது, ​​ஆட்சி அமைக்க விரும்பும் கட்சியைத் தனது பலத்தை நிரூபிக்கக் கோருவது தவறல்ல. ஆனால் அதே சமயத்தில், முழுமையான பலத்தைக் காட்டிய பின்னரே பதவியேற்பு அனுமதிக்கப்படும் என்று கூற முடியாது. பெரும்பான்மையை நிரூபிக்க சரியான இடம் சட்டப்பேரவை தான்" என்றும் அவர் கூறுகிறார்.

'தவெக தலைவர் விஜயை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்' என சில அரசியல் தலைவர்கள் கூறிவரும் நிலையில், இது தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் அர்லேகர், "பெரும்பான்மை இல்லாத ஒருவரை அழைத்து 'நீங்கள் சென்று ஆட்சி அமையுங்கள்' என்று என்னால் சொல்ல முடியாது." எனக் கூறியுள்ளார்.

"இதனால் நடக்கவிருக்கும் குதிரை பேரத்தைப் பற்றியும் நான் மிகவும் கவலைப்படுகிறேன். விஜய் ஆட்சி அமைக்கட்டும். அதன் பிறகு அவரால் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், அது அவருடைய பிரச்னை என நீங்கள் சொல்லலாம். ஆனால் இது அவருடைய (விஜய்) பிரச்னை மட்டுமல்ல. நம் அனைவரது பிரச்னை. தமிழ்நாடு மாநில மக்கள் அனைவருக்கும் உள்ள பிரச்னை" என்றும் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு