You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: எம்எல்ஏக்கள் கட்சி மாறும்போது ஏன் பதவி விலக வேண்டும்?
இதுவரை அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
இவர்கள் கட்சி தாவுகின்றனர். ஆனால், அதற்காக ஏன் தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்?
ஒருவேளை ராஜினாமா செய்யாமல் மாறினால் இந்திய அரசியலமைப்பின் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவருடைய எம்எல்ஏ பதவியே ரத்து செய்யப்படலாம்.
சரி இந்த சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய அரசியல் சட்டத்தின் 10வது அட்டவணையில் உள்ள கட்சித் தாவல் தடை சட்டம் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது, 1985ல் 52வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.
* கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர், தானாக முன்வந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து விலகினால், அவருடைய எம்எல்ஏ பதவி பறிபோகும்.
* அவரது கட்சி பிறப்பிக்கும் உத்தரவுக்கு மாறாக நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற வாக்கெடுப்பில் வாக்களித்தாலோ அல்லது வாக்கெடுப்பைப் புறக்கணித்தாலோ கூட பதவி இழப்பார்.
* 1985ம் ஆண்டு சட்டத்தின்படி, சட்டப்பேரவை/நாடாளுமன்றக் கட்சியின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்தால், அது கட்சி பிளவுண்டதாகக் கருதப்பட்டு, அவர்கள் பதவி பறிபோகாது.
* ஆனால், இப்பிரிவு 91வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் மாற்றப்பட்டது. அதன்படி, சட்டப்பேரவைக் கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பிரிந்தால்தான் அது பிளவு என்று கருதப்பட்டு அவர்கள் பதவி பறிபோகாமல் தடுக்கப்படும்.
* இந்த சட்டத்தின் மூலம் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவிகளைப் பறிக்க முடியாது.
சுயேச்சை உறுப்பினர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் வேறொரு அரசியல் கட்சியில் சேர்ந்தால், அவர்கள் பதவி பறிபோகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு