அமெரிக்காவின் புதிய கிரீன் கார்டு கொள்கையால் இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், Dilara Irem Sancar/Anadolu via Getty Images
அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரீன் கார்டு பெற விரும்பும் குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
"அசாதாரணமான சூழ்நிலைகளைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் தங்களுடைய குடிவரவு நிலையை மாற்ற நினைப்பவர்கள், நாட்டிற்கு வெளியே உள்ள தூதரக வழிமுறைகள் மூலமாகவே செய்ய வேண்டும்," என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (யூஎஸ்சிஐஎஸ்) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளில் ஓர் அங்கமாக உள்ள இந்த நகர்வு, விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அமெரிக்காவுக்கு வருகை தருபவர்கள் நாட்டில் இருக்கும்போதே கிரீன் கார்டு பெறுவதற்காக விண்ணப்பிக்க இருந்த வழியை மூடுகிறது.
தற்போதைய நடைமுறை இந்த விண்ணப்பக் காலத்தில் குடும்பங்கள் ஒன்றாக இருக்க அனுமதித்தது என இந்தக் கொள்கையை விமர்சிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
கிரீன் கார்டு அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதை அனுமதிக்கிறது.
அமெரிக்காவின் இந்த புதிய கொள்கை அங்கு வசிக்கும் இந்தியர்களையும் பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிரீன் கார்டுக்காக 10 லட்சம் இந்தியர்கள் காத்திருப்பு

பட மூலாதாரம், Getty Images
கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்பவர்களில் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை, இதர நாடுகளில் இருந்து வரும் தொழில்முறை பணியாளர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகம்.
அமெரிக்கா அரசாங்கத் தரவுகளின்படி, 2023-ஆம் ஆண்டு வாக்கில் கிரீன் கார்டு பெற 10 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் காத்திருப்பில் உள்ளனர்.
குவாட் வெளியுறவு அமைச்சகர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மே 23 முதல் மே 26 வரை இந்தியா வந்திருக்கும் சூழலில் இந்த முடிவு வந்திருக்கிறது.
இந்த முடிவு தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள்?
இந்த புதிய கிரீன் கார்டு கொள்கை இந்தியர்களுக்கு பின்னடைவு என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த குடிவரவு வழக்கறிஞரான அஜய் புடோரியா.
"சட்டப்படி நடந்து கொள்ளும் 12 லட்சத்துக்கும் அதிகமான இந்திய-அமெரிக்கர்கள் தற்போது நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர். கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி குடிவரவு விசாவில் மீண்டும் நுழைய வேண்டும் என்பதை இந்த புதிய விதி கட்டாயமாக்குகிறது," என பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவுக்குப் படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்கெனவே 35 முதல் 40 சதவிகிதம் சரிந்துள்ளதை நாம் பார்க்கிறோம். கடந்த டிசம்பர் மாதம் விசா தேவைகளுக்காக இந்தியா சென்றவர்கள் தற்போதும் அங்கே சிக்கித் தவிப்பதைப் பார்த்தோம். ஆகஸ்ட், அக்டோபரில் தான் அவர்களுக்கான நாள் ஒதுக்கப்பட்டுள்ளது." என்றார்.
அவரது கூற்றுப்படி, "கிரீன் கார்டு பெறுவதற்கான வழி முன்பு இருந்ததைப் போல எளிதாக இருக்காது. இந்த அறிவிப்பு அமெரிக்கா தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்ட நகர்வு."
"கிரீன் கார்டு பெற காத்திருக்கும் சுமார் 12 லட்சம் இந்திய-அமெரிக்கர்கள் தான் அதிகம் சம்பாதித்து, அதிகம் வரி செலுத்தி, சட்டத்தைப் பின்பற்றும் தனிநபர்களாக இருந்து அமெரிக்க கருவூலத்திற்கு பில்லியன்கணக்கான டாலர் பங்களிப்பு செய்கின்றனர்." என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தச் சூழலில் காங்கிரஸ் எம்பி ராஜிவ் சுக்லா, டிரம்ப் நிர்வாகத்தின் முடிவு மீது கேள்வி எழுப்பியுள்ளார்.
"அமெரிக்க குடிவரவு கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் தொழில்முறை பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் கிரீன் கார்டு பயணத்தை எண்ணி நிச்சயமற்ற நிலையில் இருக்கும் சூழலுக்குத் தள்ளியுள்ளது," என்று தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய விதிகள் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறும் அவர் மக்கள் மீதான இதன் தாக்கமும் கணிசமாக இருக்கும் என்றும் அதனை புறந்தள்ளிவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
டிரம்ப் நிர்வாகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக மேலும் குறிப்பிட்ட அவர், "அமெரிக்க அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஏனெனில் இந்தியர்கள் உள்பட உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்க பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்குப் பங்களிப்பு செய்துள்ளனர்." என்றார்.
இந்திய அரசும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் வெளிநாட்டில் வாழும் தனது குடிமக்களின் நலன்களுக்காக அவர்களுடன் நிற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்தில் செய்திகளில் அதிகம் பேசப்பட்ட முதலீட்டு ஆலோசகரான முத்துகிருஷ்ணன் தண்டபானி, இந்த புதிய விதிகளால் அமெரிக்காவில் உள்ள என்.ஆர்.ஐ.க்களின் வாழ்க்கை கடினமாகப் போகிறது என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"அமெரிக்காவில் வசிக்கும் என்.ஆர்.ஐ.க்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்களிடம் அமெரிக்க குடியுரிமை அல்லது கிரீன் கார்டு இல்லையென்றால் உங்களுடைய வாழ்க்கை மேலும் கடினமாகப் போகிறது," என்றும் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
என்.ஆர்.ஐ-க்களுக்கு என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images
இந்தப் புதிய கொள்கை அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களைப் பாதிக்கும் என சர்வதேச விவகார நிபுணரான ஹர்ஷ் பந்த் நம்புகிறார்.
இது தொடர்பாக பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், "இந்த புதிய நடைமுறை நிச்சயம் வித்தியாசங்களை உருவாக்கும். முன்னர் பலனளித்த நடைமுறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு நாட்டிற்குச் சென்று அங்கு வாழ்கின்ற போது கிரீன் கார்டு பெற விண்ணப்பித்தால் அது நிலைத்தன்மையை பராமரிக்கும். இந்த நடைமுறை வெளிநாட்டிற்குச் சென்றவர்களுக்கு உதவியது." எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், "ஆனால் நீங்கள் சொந்த நாட்டிற்குச் சென்று கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்க வேண்டும் என்பது சூழலை கடினமாகிவிடும். அது நேரடி தாக்கத்தைச் செலுத்தும்." என்றும் கூறினார்.
டிரம்ப் நிர்வாகம் ஏன் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்பதை விவரித்து பேசிய ஹர்ஷ் பந்த், குடிவரவு தான் அவர்களின் மிகப்பெரிய பிரச்னை என்கிறார்.
"குடிவரவைக் குறைக்க டிரம்ப் நிர்வாகம் அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் மேற்கொள்கிறது. அவர்களால் குடியேறிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியவில்லை என்றாலும், அதற்கான முயற்சிகளை எடுக்கிறோம் என தங்களின் வாக்காளர்களிடம் காண்பிக்க விரும்புவார்கள்," என்றும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும் அவர், "இது அந்த திசையை நோக்கிய டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு தான். அவர் தற்போது முக்கியமான தேர்தலைச் சந்திக்க இருக்கிறார். அவரது கட்சியின் நிலை அவ்வளவு சிறப்பானதாக இல்லை. குடிவரவு விவகாரத்தில் தான் கடினமான நிலைப்பாடுகளை எடுப்பதாகவும், குடியேறிகளை அனுமதிப்பதில்லை என்றும் அவர் காண்பிக்கலாம். குடியேற விரும்புவர்களுக்கு கடினமான நடைமுறையை உருவாக்கி வருவதாக அவர் கூற விரும்பலாம்." என்றார்.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும், எதிர்காலத்தில் கிரீன் கார்டு பெறும் கனவில் இருந்த இந்தியர்களின் நம்பிக்கை மீது இந்த முடிவு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆகிய கேள்விகளுக்கு ஹர்ஷ் பந்த் பதிலளித்தார்.
"இந்த முடிவு இரு தரப்புக்கும் அதிருப்தியை ஏற்படுத்தும். அமெரிக்காவை நோக்கிய சாய்வு குறையும். அமெரிக்கா நடைமுறைகளை மாற்றி குடியேறிகள் மத்தியில் ஏமாற்றத்தை உருவாக்குவது நிச்சயம் வித்தியாசங்களை ஏற்படுத்தும். அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என விரும்புபவர்கள் தொடர்ந்து முயற்சிப்பார்கள். ஆனால் அங்கு படிக்கச் சென்றவர்கள் அல்லது வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு இது நிச்சயம் பிரச்னைகளை உருவாக்கியுள்ளது. கிரீன் கார்டு பெற விண்ணப்பிப்பதற்கு நீங்கள் இந்தியா திரும்பிச் செல்ல வேண்டுமென்றால் அவர்கள் ஏமாற்றமடைவார்கள்." என்றார்.

பட மூலாதாரம், Getty Images
கிரீன் கார்டு என்றால் என்ன?
அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதியை வழங்கும் ஆவணமே கிரீன் கார்டு ஆகும்.
அமெரிக்க குடிமக்களுக்கு உள்ள அதே உரிமைகள் மற்றும் பலன்களை எந்த நபருக்கு இந்த ஆவணம் வழங்குகிறது.
கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வாக்கு அளிப்பதற்கான உரிமை வழங்கப்படாது. ஆனால் அவர்கள் நாட்டில் எங்கும் பயணித்து வேலை செய்வதற்கான சம வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த கார்டைப் பெற்ற பிறகு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான பாதை திறக்கும்.
இந்த அட்டை 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் பின்னர் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு காரணங்களுக்காகவும் இந்த அட்டை வழங்கப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























