கம்யூனிஸ்ட் கட்சியினரின் பட்டியலை சேகரிக்க உத்தரவு; குஜிலியம்பாறை வட்டாட்சியர் மாற்றப்பட்ட பின்னணி

தனக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதாக அறிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள நபர்களின் பெயர்களைச் சேகரித்துக் கொடுக்குமாறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியராக இருந்த அய்யாசாமி. உத்தரவிட்டிருந்தார். அதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்ததால் அவர் மாற்றப்பட்டுள்ளதாக, பிபிசி தமிழிடம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்தார். குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட காரணத்தால் அவருக்கு எதிராக நடத்தவிருந்த போராட்டத்தை ரத்து செய்திருப்பதாகத் தெரிவித்தார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி எம்.பி சச்சிதானந்தம்.
வருவாய் ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் அய்யாசாமி. இவர் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று, தனது தாலுகாவுக்கு உட்பட்ட கோட்டாநத்தம், பாளையம், கோவிலூர் ஆகிய பகுதிகளின் வருவாய் வட்டாட்சியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
அதில் ''குஜிலியம்பாறை வட்டம் அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி ஆகியவற்றைச் சேகரித்து இன்று மாலைக்குள் நேரடியாக சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உதவிட அறிவுறுத்தப்படுகிறது. அறிக்கை அளிக்கத் தவறும் கிராம உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேறகொள்ளப்படும்.'' என்று கூறப்பட்டிருந்தது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், பழனி வருவாய் கோட்டாட்சியர் ஆகியோருக்கும் 'தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது' என்று குறிப்பிட்டு அவர்களுக்கும் இதன் நகல் அனுப்பப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட கட்சியினருக்கு சிறிது நேரத்தில் தெரியவந்து, சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவியது. அரசியல் கட்சியினர் பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திண்டுக்கல் தொகுதி எம்.பி. சச்சிதானந்தம் இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் உடனடியாக புகார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட சமூக ஊடகப்பதிவில், ''கைரேகைச்சட்டம் அமலில் இருந்த காலத்திலும் அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்ட காலத்திலும் கூட இதுபோன்ற சுற்றறிக்கையை வட்டாட்சியர்கள் பிறப்பித்ததில்லை. ஒரு தேசிய அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் பற்றி விபரம் சேகரிக்க பகிரங்கமாக சுற்றறிக்கை அனுப்பும் அளவுக்கு குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா? மணல் கடத்துவோர் பட்டியலையோ, ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலையோ இதுபோன்று சுற்றறிக்கை போட்டு அவர் சேகரித்து வைத்துள்ளாரா?'' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
பொதுமக்களைச் சந்திக்க நாட்களும் நேரமும் குறித்து, செல்போன் கொண்டு வரக்கூடாது என்று பொதுமக்களை அச்சுறுத்தும் வட்டாட்சியரை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அவர் அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதையடுத்து வெவ்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
''குஜிலியம்பாறை வட்டாட்சியரின் ஆணை அதிர்ச்சியளிக்கிறது. எந்த காரணமும் இல்லாமல் பொதுவுடைமை கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை குற்றவாளிகளைப் போல நினைத்து அவர்களின் விவரங்களை சேகரிக்க வட்டாட்சியர் ஆணையிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. சுதந்திரத்துக்கு முன்பே இப்படி விபரம் சேகரிப்பது வழக்கமாக இருந்தது. ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய சட்டவிரோத வித்தையை ஒரு வட்டாட்சியர் பயன்படுத்தியிருப்பது அதிகார அத்துமீறல்.'' என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
குஜிலியம்பாறை வட்டாட்சியர் நண்பகலில் வெளியிட்ட சுற்றறிக்கையின் நகல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், பழனி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டிருந்தும், அதைப் பார்த்த பிறகும் குஜிலியம்பாறை வட்டாட்சியரின் அத்துமீறிய செயலை கண்டிக்கவோ, அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ அந்த உயரதிகாரிகள் முன்வரவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார் அன்புமணி ராமதாஸ்.
''மக்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடும் அதிகாரம் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைப் பறிக்கும் அதிகாரமோ, அதற்காக அச்சுறுத்தும் அதிகாரமோ வட்டாட்சியருக்கும் கிடையாது; மாநில அரசுக்கும் கிடையாது. இதையெல்லாம் மறந்து விட்டு, பொதுவுடமைக் கட்சியினரை மிரட்டும் செயலில் ஈடுபட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது தமிழக அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று அவர் அதில் வலியுறுத்தியிருந்தார்.
அதேபோன்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளரான இடும்பாவனம் கார்த்திக், குஜிலியம்பாறை வட்டாட்சியர் அனுப்பியிருந்த அந்த சுற்றறிக்கையை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றம் செய்து, ''ஜனாதிபதி ஆட்சி அமைந்துவிடும் எனக் காரணம் கூறி, தவெகவுக்கு ஆதரவளித்த இடதுசாரிகளுக்கு முதல்வர் விஜய்யின் அரசு தரும் அன்புப்பரிசு!'' என்று கூறியிருந்தார்.
ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் இது பேசுபொருளான நிலையில், அன்று மதியமே குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமியை அந்தப் பணியிலிருந்து விடுவிக்க மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவு பிறப்பித்தார்.
அதில் அய்யாசாமியை மாவட்ட பயிற்சியில் சேர்க்க வழங்கப்பட்ட ஆணைகளை இணைத்து, ''பழநி வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கையினை கருத்தில் கொண்டு, குஜிலியம்பாறை வருவாய் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வரும் அய்யாசாமி என்பவரை, சென்னை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில், தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமையில் பணியேற்பு செய்திட உத்தரவிடப்படுகிறது. குஜிலியம்பாறை வட்டாட்சியர் பணியிலிருந்து அவரை விடுவித்து ஆணையிடப்படுகிறது." என்று கூறியிருந்தார்.
வாரத்துக்கு 4 நாட்கள்: நாளுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே மக்களுக்கு அனுமதி!

பிபிசியிடம் பேசிய சச்சிதானந்தம், ''சின்னராவுத்தன்பட்டி என்ற கிராமத்திலுள்ள பட்டியலின மக்களுக்கு 2004 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பட்டா விபரங்கள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அதற்காக அந்த மக்களின் சார்பில் கோரிக்கை விடுப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்டாட்சியர் அய்யாசாமியை நேரில் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது அவர் 'நீ ஏன் வந்தாய்' என்று ஒருமையில் பேசியிருக்கிறார்.'' என்றார்.
''வெளியிலிருக்கும் அறிவிப்பை பார்த்து விட்டு வரச்சொல்லியிருக்கிறார். வெளியில் வாரத்தில் 4 நாட்கள் மதியம் 12 மணி முதல் ஒரு மணி வரை மட்டுமே பார்க்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. அவருடைய நடவடிக்கை மற்றும் அறிவிப்பைக் கண்டித்து, ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று அவருக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்த அறிவிப்பு வெளியிட்டோம். அதனால்தான் ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று இப்படி ஒரு சுற்றறிக்கையை அவர் அனுப்பியிருக்கிறார்.'' என்றும் சச்சிதானந்தம் விளக்கினார்.
பழனி வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், வருவாய்த்துறை செயலாளர் பழனிசாமியிடம் தான் பேசியதாகவும் எம்.பி. சச்சிதானந்தம் தெரிவித்தார். அதன் பின்பே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, ''அவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர் இல்லை. சென்னை நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர். இங்கு மாவட்ட பயிற்சிக்காக வந்தவர். அவருக்கு இங்கு துணை வட்டாட்சியர் பயிற்சி மற்றும் வட்டாட்சியருக்கான நீதித்துறை பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குப் பின்பு வழக்கமான வட்டாட்சியர் பணியை அவர்கள் மேற்கொள்ள வேண்டுமென்பதால் அவருக்கு அதற்கான ஆணை வழங்கப்பட்டது.'' என்றார்.
''அவர் பணிக்குச் சேர்ந்த 10 நாட்களில் பலவித குளறுபடிகள் நடந்துவிட்டன. மக்கள் சார்பில் அவரைச் சந்திக்கச் சென்ற கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட நேரத்தில்தான் வரவேண்டுமென்று நோட்டீஸ் ஒட்டியுள்ளார். அதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சியினரும் போராடியுள்ளனர். அதனால் எங்களிடம் எதையும் ஆலோசிக்காமல், யோசிக்காமல் இப்படிச் செய்துள்ளார். கிராம உதவியாளர்களிடம் இதை அவர் வாய்மொழியாகச் சொன்னபோது, அவர்கள் எழுத்துப்பூர்வமாக கேட்டதால் இப்படிக் கொடுத்திருக்கிறார். இது முற்றிலும் தவறு. இந்த புகாருக்குப் பின், அவரை மாற்றி பொறுப்பு வட்டாட்சியரை அங்கே நியமித்துள்ளோம். விரைவில் அங்கு நிரந்தர வட்டாட்சியர் நியமிக்கப்படுவார்.'' என்றார் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































