ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம், ANI
ஐபிஎல் 2026 தொடரின் 52வது லீக் சுற்றுப் போட்டியில் இன்று (மே 9) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த இரு அணிகளும் இதற்கு முன்பு விளையாடிய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அஹமதாபாத்தில் நடந்த அந்தப் போட்டியில், ஒரு 26 பந்துகள் இடைவெளியில் ஆட்டத்தில் தங்கள் பிடியை இழந்திருந்தது குஜராத் டைட்டன்ஸ். ஆனால், இந்த முறை கடைசி வரை ஆட்டத்தை தங்கள் கையில் வைத்திருந்து வென்றது ஷுப்மன் கில்லின் அணி.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் டைட்டன்ஸ் அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் ஆடவில்லை. அதற்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அந்த அணியின் கேப்டனாக முதல் முறையாக செயல்பட்டார். ஷிம்ரன் ஹிட்மெயர் மற்றும் யஷ் ராஜ் புஞ்சா அந்த அணியின் பிளேயிங் லெவனுக்குத் திரும்பியதாக ஜெய்ஸ்வால் கூறினார். டைட்டன்ஸ் அணியில் மானவ் சூதர் நீக்கப்பட்டு சாய் கிஷோர் சேர்க்கப்பட்டார்.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்ஷன் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் அரைசதம் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.3 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ரஷீத் கான் 4 விக்கெட்டுகளும், ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஓப்பனர்கள் அதிரடியால் அசத்திய டைட்டன்ஸ்

பட மூலாதாரம், ANI
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இந்தப் போட்டியில் நல்ல தொடக்கம் கிடைத்தது. வழக்கமாக முதல் ஓவரிலேயே எதிரணி பேட்டர்களை மிரட்டும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்தப் போட்டியின் முதல் ஓவரில் தாக்கம் ஏற்படுத்தத் தவறினார். முதல் பந்திலேயே பவுண்டரி கொடுத்த ஆர்ச்சர், அதன்பிறகு 4 வைட்களும் ஒரு நோ பாலும் வீசினார். அதில் ஒரு வைட் பவுண்டரிக்கும் சென்றது. இதன் காரணமாக முதல் ஓவரிலேயே 18 ரன்கள் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ். அதில் 9 ரன்கள் மட்டுமே பேட்டிலிருந்து வந்தவை.
18 ரன்கள் போனதோடு அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஓவர்த்ரோ மூலம் ராயல்ஸ் இன்னொரு ரன் கூடுதலாகக் கொடுக்க, ஆர்ச்சர் அதனால் கோவமடைந்தார். பவுண்டரி எல்லையில் பயிற்சியாளர் சங்கக்காராவிடம் தன் அதிருப்தியை வெளிப்படுத்திக்கொண்டிருந்த அவர், மூன்றாவது ஓவரைத் தான் வீசப்போவதில்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக ராயல்ஸுக்கு ஆட்டத்தின் தொடக்கத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. அதேசமயம், முதல் ஓவரில் கிடைத்த உத்வேகத்தை சாய் சுதர்ஷன் - ஷுப்மன் கில் கூட்டணி தொடர்ந்தது. அதனால் பவர்பிளேவில் விக்கெட்டே இழக்காமல் 82 ரன்கள் எடுத்தது டைட்டன்ஸ் அணி.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சாய் சுதர்ஷன் 30 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இந்த சீசனில் அவர் அடிக்கும் நான்காவது 50+ ஸ்கோர் (3 அரைசதங்கள், 1 சதம்) இது. அவரைத் தொடர்ந்து கேப்டன் கில்லும் 30 பந்துகளில் தன் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்த சீசனில் கில் அடிக்கும் நான்காவது அரைசதம் இது.
55 ரன்கள் எடுத்திருந்த சாய் சுதர்ஷன் யஷ் ராஜ் புஞ்சாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்ஷன் - கில் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 10.5 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய ஜாஸ் பட்லர் 13 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் பந்துவீச்சில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய கில், 44 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 9 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடித்தார். ஜேசன் ஹோல்டர் 7 ரன்களில் வெளியேறினார்.
14வது ஓவரில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் (20 பந்துகள்) எடுத்தார். கடைசி கட்டத்தில் திவேதியாவும் 4 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். அவர்களின் அதிரடியின் காரணமாக 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்.
பந்துவீச்சிலும் அசத்திய டைட்டன்ஸ்

பட மூலாதாரம், ANI
230 என்ற பெரிய இலக்கை சேஸ் செய்த ராயல்ஸ் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி வழக்கம்போல் நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், மூன்றாவது ஓவரில் சிராஜ் வீசிய ஷார்ட் பாலில் கேட்சாகி வெளியேறினார் சூர்யவன்ஷி. 16 பந்துகள் சந்தித்த அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களோடு 36 ரன்கள் எடுத்தார்.
அதன்பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தது. ஜெய்ஸ்வால் 3 ரன்களிலும், ஹிட்மெயர் 6 ரன்களிலும் வெளியேறினர்.
அதிரடியாக ஆடிய துருவ் ஜுரெல் சிராஜ் வீசிய ஐந்தாவது ஓவரில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 22 ரன்கள் விளாசினார். ஆனால், அவரும் நிலைத்து நிற்கவில்லை. 10 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த அவர், ரஷீத் கான் வீசிய பந்தில் போல்டானார்.
அதன்பிறகு ரஷீத் கான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார். டானவன் ஃபெரீரா (4 ரன்கள்), ஷுபம் துபே (15 ரன்கள்), ரவீந்திர ஜடேஜா (38 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் ரஷீத்.
கடைசி கட்டத்தில் ஜோஃப்ரா ஆர்ச்சர், தசுன் ஷனகா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோரின் விக்கெட்டுகளை ஜேசன் ஹோல்டர் வெளியேற்ற 16.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ராஜஸ்தான் ராயல்ஸ். இதன்மூலம் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ். ரன்கள் அடிப்படையில் அந்த அணி பெற்றிருக்கும் மிகப் பெரிய வெற்றி இது.
ரஷீத் கான் 4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 2.3 ஓவர்கள் வீசிய ஹோல்டர் 12 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. அந்த அணி 11 போட்டிகளில் 14 புள்ளிகள் பெற்றிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் ஐந்தாவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டது.
கேப்டன்கள் டாஸில் சொன்னது என்ன?
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ராயல்ஸ் அணியின் கேப்டன் ஜெய்ஸ்வால், "ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அதனால் நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம். ராயல்ஸ் அணியை வழிநடத்த நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். கடந்த போட்டியின்போது பராக்-கிற்கு பின்தொடை தசை நாரில் பிரச்னை ஏற்பட்டது. அவர் விரைவில் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்.
டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில், "உண்மையைச் சொல்லப்போனால், நாங்களும் முதலில் பந்துவீச்சைத்தான் தேர்ந்தெடுத்திருப்போம். ஒரு பேட்டிங் குழுவாகவோ அல்லது பந்துவீச்சு குழுவாகவோ நம்முடைய பலம் என்ன என்பதைத் திரும்பிப் பார்ப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ஒரு அணியாக நமக்கு இவ்வளவு வெற்றிகளைத் தேடித்தந்த விஷயங்கள் எவை என்பதை தோடிக்கவேண்டும். எனவே, நாங்கள் சில விஷயங்களை மீண்டும் ஒருமுறை ஆலோசித்துப் பார்த்தோம். நாங்கள் விளையாடிய பெரும்பாலான போட்டிகள் மிகவும் நெருக்கமாகவே இருந்தன. எனவே, அதற்காகக் கூடுதல் முயற்சி எடுப்பதும், ஒரு விஷயம் நமக்குச் சாதகமாக நடக்கும்போது, அதைச் சரியாகச் செய்து முடிப்பதற்கான நம்பிக்கையை வைத்திருப்பதுமே முக்கியம்." என்று கூறினார்.

பட மூலாதாரம், ANI
பிளேயிங் லெவனில் யார்?
ராஜஸ்தான் ராயல்ஸ்
இந்தப் போட்டிக்கான ராயல்ஸ் பிளேயிங் லெவனுக்கு யஷ் ராஜ் புஞ்சா, தசுன் ஷனகா மற்றும் ஷிம்ரன் ஹிட்மெயர் ஆகியோர் திரும்பினர். கேப்டன் பராக் காயம் காரணமாக விளையாடவில்லை. நாந்த்ரே பர்கர் பிளேயிங் லெவனில் தன் இடத்தை இழந்தார்.
பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் (கேப்டன்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரன் ஹிட்மெயர், ஷுபம் துபே, டானவன் ஃபெரீரா, தசுன் ஷனகா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரிஜேஷ் ஷர்மா, துஷார் தேஷ்பாண்டே, யஷ் ராஜ் புஞ்சா.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஆடம் மில்ன், ரவி பிஷ்னாய், ரவி சிங், சுஷாந்த் மிஷ்ரா, வைபவ் சூர்யவன்ஷி.
குஜராத் டைட்டன்ஸ்
இந்தப் போட்டிக்கான டைட்டன்ஸ் அணியில் 1 மாற்றம் செய்யப்பட்டது. மானவ் சூதர் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக சாய் கிஷோர் இந்த சீசனில் தன்னுடைய முதல் போட்டியை விளையாடினார்.
பிளேயிங் லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், ககிஸோ ரபாடா, அர்ஷத் கான், மொஹம்மது சிராஜ்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, கிளென் ஃபிலிப்ஸ், ஆர்.சாய் கிஷோர், அனுஜ் ராவத், குமார் குஷாக்ரா.
































