குர்பத்வந்த் சிங் பன்னுவை கொல்ல சதி செய்த வழக்கில் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற நிகில் குப்தா: இந்திய அதிகாரிக்கும் தொடர்புண்டா?

பட மூலாதாரம், SOCIAL MEDIA
- எழுதியவர், கேலா எப்ஸ்டெய்ன், நாடென் யூசெஃப்
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
அமெரிக்காவில் சீக்கிய அரசியல் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவை கொலை செய்யச் சதி செய்த வழக்கில், இந்திய குடிமகனான நிகில் குப்தாவுக்கு 235 மாதங்கள், அதாவது 19 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத் தண்டனையை அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் விதித்துள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் கொலை செய்ய முயன்றது, கொலை செய்யச் சதி செய்தது, பண மோசடியில் ஈடுபடச் சதி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளை நிகில் குப்தா பிப்ரவரி மாதம் ஒப்புக்கொண்டார்.
வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி, சிறைத் தண்டனையை நிறைவு செய்த பிறகு அவர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படலாம் அல்லது இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று தெரிவித்தார்.
"அமெரிக்க மண்ணிலோ அல்லது அமெரிக்கக் குடிமக்களுக்கு எதிராகவோ வன்முறையில் ஈடுபட முயல்பவர்கள் மீது அமெரிக்க நீதித் துறையும் அதன் சட்ட அமலாக்க அமைப்புகளும் வழக்கு தொடர்ந்து, அவர்களைப் பொறுப்பேற்கச் செய்வார்கள்" என்று தெற்கு நியூயார்க் மாவட்டத்துக்கான அமெரிக்க அரசு வழக்கறிஞர் ஜேமி மெக்டொனால்ட் தெரிவித்ததாக, அந்த அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
காலிஸ்தான் இயக்கத்தின் முக்கியத் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுவை கொலை செய்யுமாறு இந்திய அரசு அதிகாரி ஒருவர் நிகில் குப்தாவுக்கு உத்தரவிட்டதாக, அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். சீக்கியர்களுக்கெனத் தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்பதே காலிஸ்தான் இயக்கத்தின் கோரிக்கை. இந்த வழக்கில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா மறுத்துள்ளது. பன்னுவை ஒரு "பயங்கரவாதி" என்று இந்திய அரசு குறிப்பிடுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பன்னு மறுக்கிறார்.
அமெரிக்க குடியுரிமை பெற்ற பன்னு, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட சீக்கிய பிரிவினைவாத அமைப்பான 'சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' (SFJ) அமைப்பின் செய்தித் தொடர்பாளராக உள்ளார். இந்த அமைப்புக்கு இந்தியாவில் 2019ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிபிசியிடம் பேசிய பன்னு, "நிகில் குப்தா குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பது, அமெரிக்க மண்ணில் ஒப்பந்த அடிப்படையில் ஒருவரைக் கொலை செய்வதற்கு இந்தியாவின் மோதி அரசு நன்கு திட்டமிடப்பட்ட சதித் திட்டத்தைத் தீட்டியிருந்தது என்பதை நீதித்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது" என்று கூறியிருந்தார்.
காலிஸ்தான் இயக்கத்தை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்தக் கோரிக்கைக்கு இந்தியாவின் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தியாவில் சீக்கியர்கள் மதச் சிறுபான்மையினராக உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் இரண்டு சதவிகிதம் பேர் சீக்கியர்கள். சீக்கியர்களுக்கெனத் தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்று சில குழுக்கள் நீண்ட காலமாகக் கோரி வருகின்றன.

பட மூலாதாரம், REUTERS/Jane Rosenberg
அரசு வழக்கறிஞர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்
கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம், பன்னுவை கொலை செய்வதற்காக இந்திய உளவுத்துறை அதிகாரியான விகாஸ் யாதவ், நிகில் குப்தாவை அணுகியதாக அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பன்னுவின் நியூயார்க் முகவரி, அவரது அன்றாட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை விகாஸ் யாதவ், நிகில் குப்தாவுக்கு வழங்கியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
தனது பொறுப்பாளரின் உத்தரவின்பேரில் கொலைச் சதித்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஒருவரை நிகில் குப்தா தொடர்புகொண்டதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால், அந்த நபர் உண்மையில் அமெரிக்க அரசின் ரகசியத் தகவல் தருபவராக இருந்தார்.
கொலை செய்வதற்கான ஒப்பந்தத்தை ஏற்கும் நபர் என்று கூறி ஒருவருடன் நிகில் குப்தாவை சந்திக்க அந்நபர் ஏற்பாடு செய்தார். ஆனால், அவர் உண்மையில் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு அமலாக்க நிர்வாகத்தின் (DEA) ரகசியப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஆவார்.
செக் குடியரசின் தலைநகரான பிராகாவில் உள்ள விமான நிலையத்தில் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகில் குப்தா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். வெள்ளிக்கிழமை மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்படும் வரை அவர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நிகில் குப்தா குற்றத்தை ஒப்புக்கொண்டதை அறிவித்த அப்போதைய அமெரிக்க அரசு வழக்கறிஞர் ஜே கிளேட்டன் வெளியிட்ட அறிக்கையில், "இந்த நாட்டுக்கு வெளியே ஒருவரைக் கொலை செய்துவிட்டு எந்த விளைவுகளையும் சந்திக்காமல் தப்பித்துவிடலாம் என்று அவர் நம்பினார். அமெரிக்காவில் தனக்கு இருக்கும் கருத்து சுதந்திர உரிமையைப் பயன்படுத்துவதாகவே அவர் நினைத்தார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
நிகில் குப்தா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விகாஸ் யாதவ் இனி இந்திய அரசின் ஊழியராக இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும், அமெரிக்கா எழுப்பிய பாதுகாப்பு தொடர்பான கவலைகளை ஆராய இந்தியா விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்ட சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு பிறகு, கனடாவின் சர்ரே பகுதியில் உள்ள குருத்வாராவின் தலைவராகப் பொறுப்பேற்ற நரிந்தர் சிங் ரந்தாவா, இந்தத் தண்டனை குறித்து பிபிசியிடம் பேசினார்.
இந்திய அரசால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சீக்கியர்கள் வரலாற்று ரீதியாகவும் திட்டமிட்ட வகையிலும் துன்புறுத்தப்படுவதாகத் தான் கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, "முதல் முறையாக நீதி கிடைத்திருக்கிறது" என்று அவர் இந்தத் தீர்ப்பை வர்ணித்தார்.
ஒன்டாரியோவில் வசிக்கும் மற்றொரு சீக்கிய பிரிவினைவாத ஆதரவாளரான இந்தர்ஜித் கோசல், இந்தத் தண்டனை அறிவிப்பை "(சீக்கிய) சமூகத்துக்கு மிகப்பெரிய நிகழ்வு" என்று குறிப்பிட்டார்.
"இறுதியாக ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டிருப்பதை ஒட்டுமொத்த சமூகமும் காண்பதற்கான வாய்ப்பு இது" என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், AFP via Getty Images
நிஜ்ஜார் கொலை வழக்கு
காலிஸ்தான் கோரி 1980 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆயுதம் தாங்கிய சீக்கிய கிளர்ச்சியை இந்தியா ஒடுக்கியது. தற்போது இந்தியாவில் இந்த இயக்கத்திற்கு மிகக் குறைந்த ஆதரவே உள்ளது. எனினும், வெளிநாடுகளில் குடியேறியுள்ள சில சீக்கியக் குழுக்கள் தொடர்ந்து காலிஸ்தான் கோரி வருகின்றன.
பன்னு மீது இந்தியாவில் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளன. எனினும், அவற்றை அவர் மறுக்கிறார். தாம் ஓர் உரிமைப் போராளி என்றும், காலிஸ்தான் கோரிக்கையை மட்டுமே ஆதரிப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இந்தக் கொலை முயற்சியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், இந்தச் சம்பவம் தனது செயல்பாடுகளைப் பாதிக்கவில்லை என்று பன்னு தெரிவித்தார்.
"சுதந்திரத்தை அடைவதற்கான விலையாக இந்தியாவிடம் இருந்து துப்பாக்கிக் குண்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும், அதற்காக நான் முழுமையாகத் தயாராக இருக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
நிகில் குப்தா வழக்கைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட தனி வழக்கு தொடர்பான விசாரணைகளும் கேள்விகளும் தீவிரமடைந்தன. இந்தச் சம்பவம் இந்தியா - கனடா இடையிலான பதற்றத்தை அதிகரித்தது. 2023ஆம் ஆண்டு செப்டம்பரில், அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் சாத்தியமான தொடர்பு குறித்து "நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள்" இருப்பதாகத் தெரிவித்தார்.
நிஜ்ஜாரும் காலிஸ்தான் உருவாக்கத்தை ஆதரித்தவர். அவர் பன்னுவின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்தார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே இரண்டு நபர்களால் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா மறுத்துள்ளது.
நிஜ்ஜார் கொல்லப்பட்ட மறுநாள், நிஜ்ஜாரும் "ஓர் இலக்காக இருந்தார்", "எங்களிடம் பல இலக்குகள் உள்ளன" என்று ரகசிய பணியில் இருந்த அதிகாரியிடம் நிகில் குப்தா தெரிவித்ததாக அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பட மூலாதாரம், US Department of Justice
யார் இந்த நிகில் குப்தா?
தெற்கு நியூயார்க் மாவட்டத்துக்கான அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் தகவலின்படி, "நிகில் குப்தா இந்திய குடிமகன்; அவர் முன்பு இந்தியாவில் வசித்து வந்தார். விகாஸ் யாதவ் மற்றும் பிறருடனான உரையாடல்களில், தான் சர்வதேச அளவில் போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபடுபவர் என்று அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். இந்திய அரசின் அமைச்சரவைச் செயலகத்தில் விகாஸ் யாதவ் பணியாற்றினார். இந்தச் செயலகத்தின் கீழ்தான் இந்தியாவின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு (RAW) செயல்படுகிறது."
"ரகசியத் தகவல்களை வழங்கும் நபர் ஒருவர், நிகில் குப்தாவுக்கும் ஒப்பந்த அடிப்படையில் கொலை செய்யக்கூடியவர் என்று கூறப்பட்ட ஒருவருக்கும் இடையே சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், அவர் உண்மையில் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு அமலாக்க நிர்வாகத்தின் (DEA) ரகசியப் பணியில் இருந்த அதிகாரி. பன்னுவை கொலை செய்வதற்காக அந்த ரகசிய அதிகாரிக்கு நிகில் குப்தா மூலம் 1 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்க விகாஸ் யாதவ் ஒப்புக்கொண்டார்."
மேலும் அந்தக் குற்றப்பத்திரிகையில், "2023ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதியன்று, தங்களது கூட்டாளி ஒருவர் மூலம் நிகில் குப்தாவும் விகாஸ் யாதவும் கொலைக்கான முன்பணமாக 15,000 அமெரிக்க டாலர்களை ரகசிய அதிகாரியிடம் வழங்கினர். நிகில் குப்தாவின் அனைத்து நடவடிக்கைகளையும் உரையாடல்களையும் அந்த அதிகாரி பதிவு செய்தார். அதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அமைப்பின் விசாரணையை மேற்கோள் காட்டும் குற்றப் பத்திரிகையின்படி, நிகில் குப்தாவும் இந்திய அரசு அதிகாரியும் மறைகுறியாக்கப்பட்ட செயலி (Encrypted App) மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். இந்த உரையாடல்கள் நடைபெற்றபோது நிகில் குப்தா டெல்லியிலோ அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ இருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
குஜராத்தில் தனக்கு எதிராக நிலுவையில் இருந்த குற்றவியல் வழக்கில் உதவி செய்வதற்கு ஈடாக, நியூயார்க்கில் ஓர் இந்திய அதிகாரிக்காக ஒருவரைக் கொலை செய்ய ஏற்பாடு செய்ய நிகில் குப்தா ஒப்புக் கொண்டதாகவும் குற்றப் பத்திரிகை தெரிவிக்கிறது. 2023ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி, தனக்கு எதிரான குற்றவியல் வழக்கு குறித்து 'விசாரிக்கப்பட்டுவிட்டது' என்று ஓர் இந்திய அதிகாரி நிகில் குப்தாவிடம் தெரிவித்ததாகக் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 'இனி குஜராத் காவல்துறையில் இருந்து யாரும் உங்களைத் தொடர்புகொள்ள மாட்டார்கள்' என்றும் அவரிடம் கூறப்பட்டுள்ளது.
மே 23ஆம் தேதி, தனது மேலதிகாரியிடம் பேசியதாகவும், குஜராத்தில் உள்ள பிரச்னை தற்போது தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், இனி யாரும் அவரைத் தொடர்புகொள்ள மாட்டார்கள் என்றும் அந்த இந்திய அதிகாரி மீண்டும் நிகில் குப்தாவிடம் உறுதியளித்ததாக குற்றப் பத்திரிகை கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































