ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் ராஜினாமா - அயோத்தி கோவில் காணிக்கை வழக்கில் என்ன நடக்கிறது?

அயோத்தி ராமர் கோவில் , ஶ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் திருடப்பட்டதாகவும், அவை கையாடல் செய்யப்பட்டதாகவும் கூறப்படும் விவகாரத்தில் சம்பத் ராய் மீதும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளைக் கையாண்டதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் ஶ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் ராஜினாமா செய்துள்ளார்.

சம்பத் ராயின் ராஜினாமா தொடர்பான செய்தி வெள்ளிக்கிழமை முதல் பரவி வரும் நிலையில் சனிக்கிழமை அன்று அதனை உறுதி செய்து அறக்கட்டளை சார்பில் கடிதம் வெளியிடப்பட்டது.

அந்தக் கடிதத்தில், "அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் ஶ்ரீ சம்பத் ராய் ஜி மற்றும் அறங்காவலர் அணில் ஶ்ரீ ஜி ஆகியோரிடமிருந்து ராஜினாமா கடிதங்கள் பெறப்பட்டுள்ளன. அடுத்த கூட்டத்தில் அறக்கட்டளை இதனைப் பரிசீலிக்கும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னௌவில் உள்ள பிபிசி செய்தியாளர் பிரேரனா வழங்கும் தகவல்களின்படி, "அறக்கட்டையின் பொருளாளர் கோவிந்த் கிரி இந்த அறிக்கையை உறுதி செய்துள்ளார். இருவருமே ராஜினாமா செய்ததாக அவர் தெரிவிக்கிறார். ஆனால் சம்ப்த் ராய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தத் தகவலில் உண்மை இல்லை என்கின்றனர்." என்றார்.

இந்த ஒட்டுமொத்த சம்பவம் தொடர்பாக சம்பத் ராய் தரப்பில் இருந்து எந்த அறிக்கையையும் கொடுக்கப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க உத்தரப் பிரதேச அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ள நிலையில் சமீபத்திய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

இது போக, கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடியதற்காகவும் கையாடல் செய்வதற்காகவும் எட்டு பேர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஃப்.ஐ.ஆரில் உள்ளவர்களில் ஒருவரான டின்னு யாதவ், சம்பத் ராயின் ஓட்டுநராக இருந்துள்ளார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதற்கிடையே இந்த விவகாரத்தில் பாரபட்சமில்லாத விசாரணை நடத்தப்படும் என உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் ப்ரிஜேஷ் பட்நாயக் தெரிவித்துள்ளார். "எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட்டுள்ளது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அவர் கூறினார்.

ஆனாலும் சனிக்கிழமை கூட ராஜினாமாக்கள் தொடர்பாக குழப்பம் நிலவியது. ராம் ஜென்ம பூமி அறக்கட்டளையின் உறுப்பினரான மஹந்த் தினேந்திர தாஸ் பிடிஐ செய்தி முகமையிடம் பேசுகையில், "அறக்கட்டளையில் இருந்து யாரும் ராஜினாமா செய்யவில்லை. நாங்கள் முன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி நிதி விவகாரங்கள் ஆராய்வோம். ராஜினாமா தொடர்பாக வரும் செய்திகள் தவறானது." என்றார்.

இதற்குப் பிறகு தான், ராஜினாமா தொடர்பாக அறக்கட்டையின் பொருளாளர் கோவிந்த் கிரி வெளியிட்ட அறிக்கை உறுதி செய்யப்பட்டது.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முடிவைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஶ்ரீ ராம் ஜெம்பபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பிப்ரவரி 2020-இல் மத்திய அரசால் அமைக்கப்பட்டது.

அறக்கட்டளையின் அன்றாட பணிகளில் அதன் பொதுச் செயலாளர் சம்பத் ராய் முக்கியமான நபராக கருதப்படுகிறார்.

கோவில் கட்டுமானப் பணியைக் கண்காணிப்பது, நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளை நிர்வகிப்பது, அறக்கட்டளையின் சார்பில் அதிகாரப்பூர்வ தொடர்புகளை மேற்கொள்வது, கூட்டங்களை ஒருங்கிணைப்பது மற்றும் வெவ்வேறு முகமைகளுடன் ஒருங்கிணைப்பது ஆகியவற்றுக்கு அவர் பொறுப்பாவார்.

இதனால் ராமர் கோவில் தொடர்பான எந்த முக்கியமான அறிவிப்பு, சர்ச்சை அல்லது நிர்வாக முடிவுகள் வருகிறபோதும் அறக்கட்டளையின் மிகவும் முதன்மையாக முகமாக சம்பத் ராய் இருந்து வருகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுவது என்ன?

அயோத்தி ராமர் கோவில் , ஶ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை

பட மூலாதாரம், Pawan Kherra

படக்குறிப்பு, காங்கிரஸ் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான பவன் கேரா

இந்த மிகப்பெரிய ஊழல் தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட அளவிலான விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என தனது கட்சி கோரிக்கை வைத்துள்ளதாக ஃபைசாபாத் தொகுதி சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அவாதேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "எங்கள் தலைவர் அகிலேஷ் யாதவ் நீதி விசாரணை கோரியுள்ளார். உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்து விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்." என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான பவன் கேரா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், "இந்தக் கோயிலும் ஒட்டுமொத்த அயோத்தி திட்டமும் ஆர்எஸ்எஸின் மேற்பார்வையில் தான் தொடங்கியது என ஏற்கெனவே நாங்கள் தெளிவாக தெரிவித்துவிட்டோம். கோவில் கட்டுவது தொடர்பான நீதிமன்றத்தின் முடிவுக்குப் பிறகு கோவிலும் அறக்கட்டளையும் பிரதமர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட்டன. பிரதமரின் விருப்பமான அலுவலரும் முன்னாள் முதன்மை செயலாளருமான நிருபேந்திர மிஸ்ரா அதன் உறுப்பினர் ஆக்கப்பட்டார். ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சம்பத் ராய் அறக்கட்டளையின் தலைமை பொறுப்புக்கு வந்தார். தற்போது என்ன மீதமுள்ளது?"

"இந்தத் திருட்டு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அது கோயிலுக்கு உள்ளிருந்தே தொடங்கியுள்ளது. இந்தத் திருட்டு தொடர்பாக மஹிபால் சிங் தான் முதலில் சம்பத் ராயிடம் கூறியுள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மஹிபால் சிங் வெளியே அனுப்பப்பட்டார். இந்தப் பணத்தின் வலைப்பின்னல் எவ்வளவு தூரம் செல்கிறது, எந்தெந்த நகரங்களை எல்லாம் அடைகிறது என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்." என்றார்.

சம்பத் ராயின் ராஜினாமா தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜிவ் சுக்லா, "இந்த ராஜினாமா பிரச்னைகளைத் தீர்க்காது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருந்தால், நம்பிக்கை மீது இவ்வளவு பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருந்தால், இவ்வளவு பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதால், சம்பத் ராயை ராஜினாமா செய்ய வைப்பதன் மூலம் மட்டும் இந்த விவகாரத்தை மூடி மறைக்கப் பார்ப்பது உதவாது. இவை அனைத்தும் சம்பத் ராயால் மட்டும் தான் நடந்ததா?"

"அவர் அங்கே நிர்வாகி என்பதால் பொறுப்பானவர் ஆகிறார். ஆனால் இந்தக் கையாடல், ஊழல், காணிக்கைத் திருட்டு மற்றும் நன்கொடை முறைகேடு இவ்வளவு பெரிய அளவில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தால் அதில் சம்பத் ராய் மட்டும் ஈடுபட்டிருக்க முடியாது. அவர் தனி ஆளாக இவ்வளவு பணத்தை எடுத்திருக்க முடியாது." என்றார்.

யார் இந்த சம்பத் ராய்?

அயோத்தி ராமர் கோவில் , ஶ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சம்பத் ராயின் தந்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடையவராக இருந்தார். அவரும் அந்த அமைப்பின் மீது ஈடுபாடு கொண்டார்.

மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பத் ராய், ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினரின் மகன் ஆவார்.

தனது தந்தையால் உந்துதல் பெற்ற சம்பத் ராய் சிறு வயதிலேயே சங் கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.

பிஜ்னோரில் உள்ள ஆர்எஸ்எம் கல்லூரியில் சம்பத் ராய் வேதியியல் கற்பித்து வந்தார். பிறகு 1980களில் ஆசிரியர் பணியை விட்டுவிட்டு முழு நேர ஆர்எஸ்எஸ் பிரமுகராக வேலை செய்யத் தொடங்கினார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் உறுப்பினரான ஷரத் சர்மா கூறுகையில், "ஒரு போதகரின் வாழ்க்கையில் அந்த நபர் அமைப்பின் பணிகளில் நேரடியாக சம்மந்தப்படுகிறார். ஆக்ரா, தெஹராதூன் மற்றும் ஹரித்வார் போன்ற இடங்களில் அமைப்பை விரிவுபடுத்த சம்பத் ராய் ஜி வேலை செய்துள்ளார். அவர் ஒரு துறை போதகர், பின்னர் அவர் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் இணை பிராந்திய அமைப்பு அமைச்சராக வேலை செய்தார்." என்றார்.

இங்கிருந்து தான் ராம் ஜென்மபூமி இயக்கத்துடனான அவருடைய பணி தொடங்குகிறது.

இது வரை நடந்தது என்ன?

அயோத்தி ராமர் கோவில் , ஶ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை

பட மூலாதாரம், Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images

படக்குறிப்பு, கோவில் நிதியை முறைகேடாக வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், அவரது பங்கு குறித்து விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன (கோப்புப் படம்).

அயோத்தி ராமர் கோவில் காணிக்கைகளைக் கையாள்வதில் முறைகேடு ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 7-ஆம் தேதி அன்று சமாஜ்வாதி கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராமர் கோயிலுக்காக கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க மூன்று நபர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை உத்தரப் பிரதேச அரசு அமைத்திருந்தது.

இந்தப் புலனாய்வு குழுவினர் விஜய் விஷ்வாஸ் பந்த் ஐஏஎஸ் மற்றும் கிரண் ஐபிஎஸ் மற்றும் நிதித்துறை சிறப்பு செயலாளர் நீல் ரதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் முதல்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வியாழன் அன்று எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார் யார்?

அயோத்தி ராமர் கோவில் , ஶ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

1. ராமாசங்கர் யாதவ் (டின்னு)

பொறுப்பு: காணிக்கைப் பெட்டிகளைக் கண்காணிப்பது மற்றும் அவற்றை அடித்தளத்துக்கு கொண்டு சேர்ப்பது.

குற்றச்சாட்டு: காணிக்கைப் பெட்டிகளில் இருந்து பல கோடி ரூபாய் கையாடல் செய்தது மற்றும் அயோத்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சொத்துக்களை வாங்கியது.

2. லவ்குஷ் மிஸ்ரா

பொறுப்பு: காணிக்கை மற்றும் ரொக்கப் பணத்தை எண்ணுவது.

குற்றச்சாட்டு: காணிக்கையைத் திருடி பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்தது. இவரது வீட்டிலிருந்து ரூ. 12 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

3. அனுகல்ப் மிஸ்ரா

பொறுப்பு: பணத்தை எண்ணும் அறையில் ரொக்கப் பணத்தை எண்ணுவது.

குற்றச்சாட்டு: பணத்தை எண்ணும் அறையிலிருந்து பணத்தைத் திருடி கழிவறையில் மறைத்து வைத்தது மற்றும் லட்சக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களைச் சேர்த்தது.

4. சுபாஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா

பொறுப்பு: பணத்தை எண்ணும் பணியாளர்களின் பொறுப்பாளர்.

குற்றச்சாட்டு: கண்காணிப்பில் அலட்சியமாக இருந்தது மற்றும் திருட்டுச் சம்பவத்தில் கூட்டுச் சதி செய்தது.

5. கருணேஷ் பாண்டே

பொறுப்பு: காணிக்கைத் தொகையை எண்ணும் அறைக்குக் கொண்டு வருவது மற்றும் அதை எண்ணுவது.

குற்றச்சாட்டு: காணிக்கைப் பணத்தைத் திருடி அயோத்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சொத்துக்களை வாங்கியது.

6. மனிஷ் யாதவ்

பொறுப்பு: காணிக்கைப் பெட்டிகளில் இருந்து பெறப்பட்ட ரொக்கப் பணத்தை எண்ணுவது.

குற்றச்சாட்டு: காணிக்கையைத் திருடியது. இவரது வீட்டிலிருந்து ரூ. 36 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

7. அவினாஷ் சுக்லா

பொறுப்பு: காணிக்கைத் தொகையை எண்ணும் அறைக்குக் கொண்டு வருவது மற்றும் அதை எண்ணுவது.

குற்றச்சாட்டு: காணிக்கைப் பணத்தைத் திருடி சொத்துக்களை வாங்கியது.

8. ராமாசங்கர் மிஸ்ரா

பொறுப்பு: காணிக்கைப் பெட்டிகளை எண்ணும் அறைக்குக் கொண்டு சேர்ப்பது மற்றும் அவற்றைக் கண்காணிப்பது.

குற்றச்சாட்டு: குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களுடன் கூட்டு சேர்ந்து காணிக்கைப் பணத்தைக் கையாடல் செய்தல்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு