காணொளி: டிரம்ப் எச்சரிக்கை - இரான் போர் தீவிரமடையுமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரித்துள்ள நிலையில், அந்நாட்டின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, ‘மதர் ஆஃப் ஆல் பாம்ப்ஸ்’ எனப்படும் சக்திவாய்ந்த வெடிகுண்டைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க ராணுவம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 15ஆம் தேதி நியூஸ்மேக்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இரானின் நடானஸ் அணுசக்தி வளாகத்துக்கு அருகிலுள்ள பிக்ஆக்ஸ் மலைப் பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டியிருக்கலாம் என்று டிரம்ப் குறிப்பிட்டார். எனினும், இந்த வெடிகுண்டைப் பயன்படுத்த அவர் அனுமதி அளித்துள்ளாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னரோ பின்னரோ தாக்குதல் நடத்துவது குறித்து ராணுவ அதிகாரிகள் பரிசீலித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தேர்தலுக்கு முன்பு புதிய தாக்குதலுக்கு அனுமதி அளிக்கப் போவதில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.
மீண்டும் மோதல் ஏற்பட்டால் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக இரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதல், இரானின் பதிலடியைத் தூண்டுவதுடன், பிராந்தியப் பதற்றத்தையும் கப்பல் போக்குவரத்துக்கான அச்சுறுத்தலையும் அதிகரிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



