'தோல்வி நிலையென நினைத்தால்' - தமிழீழ இயக்கங்களின் 'குரலாக' இந்த திரைப்பட பாடல் மாறியது எப்படி?

ஊமை விழிகள், திரைப்படம், கோலிவுட், இலங்கை

பட மூலாதாரம், Thirai Chirpi

படக்குறிப்பு, 'ஊமை விழிகள்' திரைப்படம் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அது 1980களின் பிற்பகுதி, ஒரு பாடல் இலங்கை வடக்கு, கிழக்கின் பெரும்பாலான கிராமங்களில் தொடர்ந்து ஒலிக்கிறது.

வடக்கு - கிழக்கு மாகாணங்கள் என்பது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. அங்கிருக்கும் கோவில்களின் ஒலிப்பெருக்கிகளை கொண்டுவந்து, கார்களில் கட்டி, அந்தப் பாடல் கிராமங்களின் வீதிகளை அடைகிறது.

"இலங்கையில் அப்போது இருந்த பல்வேறு ஈழ போராட்ட இயக்கங்கள், இந்த பாடலை தமது பாடல் போல பயன்படுத்தின" என்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கணேசலிங்கம் சந்திரலிங்கம்.

'ஊமை விழிகள்' (1986) திரைப்படத்தின் 'தோல்வி நிலையென நினைத்தால்…' என்ற அந்த பாடல் இன்றுவரை கூட சமூக ஊடகங்களில் ஈழப் போராட்டங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

சமீபத்தில், ராஜ் பிரியன் என்ற இன்ஃப்ளூயன்சர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான ஒரு நகைச்சுவை காணொளியை பதிவேற்றி, பின்னணியில் இந்தப் பாடலை சேர்த்திருந்தார்.

அந்தப் பதிவில் பலரும், 'தோல்வி நிலையென நினைத்தால்…' பாடலை நகைச்சுவையாகப் பயன்படுத்த வேண்டாம், அது 'ஈழத் தமிழர்களுடன்' தொடர்புடையது என பதிவிட்டிருந்தனர்.

ஊமை விழிகள், திரைப்படம், கோலிவுட், இலங்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கையில் உள்ள தமிழர்கள் (கோப்புப் படம்)

'ஈழ விடுதலை இயக்கங்கள் பயன்படுத்திய பாடல்'

"திரைப்படப் பாடல்களை போராட்டங்களுடன் இணைத்துக்கொள்வது புதிதல்ல. உதாரணத்திற்கு 1939இல் வெளியான 'மாத்ரு பூமி' திரைப்படத்தின் பாடல்கள் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டது. அப்படி சில பாடல்கள் மக்கள் மனதில் உணர்வுபூர்வமாக பதிந்துவிடும்" என்கிறார் திரைப்பட வரலாற்றாசிரியர் தியடோர் பாஸ்கரன்.

பாடல்கள் சமூகத்தில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா எனக் கேட்டால், 'இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பிறகு தங்கள் அரசுக்கு எதிரான பாடல் என 'மாத்ரு பூமி' பாடலை பிரிட்டிஷ் இந்தியா தடை செய்தது, அந்த அளவுக்கு மக்களிடையே அது சென்று சேர்ந்தது' எனவும் தியடோர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

'தோல்வி நிலையென நினைத்தால்…' பாடலை எழுதியவர் ஆபாவாணன். 'ஊமை விழிகள்' திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியவர், தயாரிப்பாளர் என்பதோடு, பி.பி.ஸ்ரீநிவாஸ் உடன் இணைந்து அந்தப் பாடலையும் அவர் பாடியிருப்பார்.

"ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் மக்களிடம் தங்களை நிலைநிறுத்துவதற்காக அல்லது போரில் மரணித்தவர்களின் இறுதி நிகழ்வுகள் செய்கின்ற போது, இலங்கை வடக்கு - கிழக்கின் எல்லா கிராமங்களிலும் இந்த பாடல் ஒலிபரப்பப்பட்டது. ஒவ்வொரு வரியும் இங்கு பலருக்கும் மனப்பாடம்" என்கிறார் கணேசலிங்கம் சந்திரலிங்கம்.

'ஊமை விழிகள்' திரைப்படம் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், இலங்கை வடக்கு - கிழக்கில் அந்தத் திரைப்படத்தைப் பற்றி பலருக்கும் தெரியாவிட்டாலும், 'தோல்வி நிலையென நினைத்தால்' பாடல் மிகவும் பிரபலமடைந்தது என்கிறார் அவர்.

"அதற்கு முன்னர் எம்.ஜி.ஆரின் பாடல்களை ஈழ இயக்கங்கள் பயன்படுத்தின. ஆனால், அதை விட இந்த ஒற்றைப் பாடல் 80களின் பிற்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உதாரணத்திற்கு, இயக்கங்கள் ஏதேனும் தோல்விகளைச் சந்திக்கும்போது இந்தப் பாடல் ஒலிக்கப்படும். அதனால் பல இளைஞர்களிடம் இந்தப் பாடல் சென்று சேர்ந்தது" என்கிறார் கணேசலிங்கம் சந்திரலிங்கம்.

ஊமை விழிகள், திரைப்படம், கோலிவுட், இலங்கை

பட மூலாதாரம், Thirai Chirpi

படக்குறிப்பு, 'ஊமை விழிகள்' திரைப்படம்

பாடல் இடம்பெறும் சூழல்

'ஊமை விழிகள்' திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெறும் சூழல் குறித்தும் நாம் பார்க்க வேண்டும்.

'தினமுரசு' என்ற பத்திரிக்கையை நடத்தி வரும் ஆசிரியர் சந்திரன் (ஜெய்சங்கர்), தனது ஊடகம் மூலம் அரசுக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வெளியிடுபவர், அதனால் அவருக்கு அரசியல் சார்ந்த நெருக்கடிகள் மட்டுமல்லாது பல்வேறு பொருளாதார நெருக்கடிகளும் இருக்கும்.

தனது பத்திரிக்கை ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலையில் அவர் இருப்பார், இருந்தும் ஊழியர்கள் அங்கு தொடர்ந்து பணியாற்றுவார்கள்.

ஒருகட்டத்தில், பத்திரிக்கையில் வெளியாகும் ஒரு செய்தி ஆளும் தரப்பை அதிகமாகவே கோபப்படுத்திவிட, 'தினமுரசு' அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு, பல ஊழியர்கள் கடுமையாக தாக்கப்படுவார்கள். அதன் பிறகு, இனியும் இங்கு பணிபுரிய வேண்டாம் என சில ஊழியர்கள் முடிவெடுத்து, வெளியேற எத்தனிக்கும்போது, ஆசிரியர் சந்திரன் பாடுவது போல திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும்.

"பாடல் முதலில் மிகவும் மெதுவாகத் தொடங்கும். இனி எதுவுமே செய்ய முடியாது, தோல்வியை ஒப்புக்கொண்டு இந்தப் பத்திரிக்கை துறையிலிருந்து வெளியேறலாம் என ஊழியர்கள் நினைக்கும்போது, பாடலின் மூலம் 'இந்தப் போராட்டத்தின் அவசியத்தை' ஆசிரியர் எடுத்துரைப்பார். அதை ஊழியர்களும் புரிந்ததுகொள்ளத் தொடங்கும்போது பாடல் வேகமெடுக்கும்" என ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் 'ஊமை விழிகள்' திரைப்படத்தின் இயக்குநர் அரவிந்தராஜ்.

ஊமை விழிகள், திரைப்படம், கோலிவுட், இலங்கை

பட மூலாதாரம், Thirai Chirpi

"உரிமை இழந்தோம், உடமையை இழந்தோம்…உணர்வை இழக்கலாமா..இந்த வரிகள் ஈழ மக்களுக்கு, 'எதை இழந்தாலும் தமிழ் உணர்வை, போராட்டங்களை கைவிடக் கூடாது' என்பதை உணர்த்த இயக்கங்களுக்கு உதவியது" என்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கணேசலிங்கம் சந்திரலிங்கம்.

ஆனால், திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட இந்தப் பாடலை ஈழத் தமிழர்களும், ஈழப் போராட்ட இயக்கங்களும் ஏற்றுக்கொண்டது தற்செயலான ஒன்று அல்ல, காரணம் இந்தப் பாடல் 'தினமுரசு' என்ற கற்பனை பத்திரிக்கையின் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது அல்ல.

"'ஊமை விழிகள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்தில், ஈழத்தமிழர் விடுதலை பிரச்னை அதிகமாக பேசப்பட்டது. இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்டோம்; அதுதான் 'தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா' பாடல்" என ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் 'ஊமை விழிகள்' திரைப்படத்தின் இயக்குநர் அரவிந்தராஜ்.

"பாடலின் சரணத்தில் 'யுத்தங்கள் தோன்றட்டும், ரத்தங்கள் சிந்தட்டும்…பாதை மாறலாமா? ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா' என்ற வரிகள் ஈழத்தமிழர்கள் மீது கொண்ட ஈடுபாட்டில் எழுத்தப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

'அரசு வானொலிகளில் அதிகாரபூர்வமற்ற தடை'

திரைப்படக்குழு நினைத்தது போலவே 'ஊமை விழிகள்' திரைப்படம் வெளியாகி ஏறத்தாழ 40 ஆண்டுகள் கடந்தும் இந்தப் பாடல் இலங்கை தமிழர்களிடையே பிரபலமாக உள்ளது.

"ஈழம் எங்கும் கேட்கப்பட்ட பாடலாக 'தோல்வி நிலையென நினைத்தால்' இருந்தது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களால் விரும்பி கேட்கப்பட்டது. அவர்களில் பலரும் அந்த பாடல், பாடல் வரிகள், பாடல் காட்சிகள் எல்லாமே தங்களுக்காக எழுதப்பட்ட ஒரு பாடல் என்ற விதத்தில் தான் கருதினார்கள்" என்கிறார் ஈழ எழுத்தாளர் தீபச் செல்வன்.

இந்த பாடலை 90களில் இறுதிப் பகுதியில் தான் கேட்டதாகவும், முதலில் இது ஒரு இயக்கத்தின் அதிகாரபூர்வ பாடல் என்று நினைத்ததாகவும் கூறுகிறார் தீபச் செல்வன்.

"இலங்கையிலுள்ள தனியார் வானொலிகளின் வாயிலாக தான் கேட்டேன். அப்போது நாங்கள் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து அக்கராயன் பகுதியில் வசித்த காலக் கட்டம். அந்த பாடலைப் பற்றி தேடும் போது தான், அதுவொரு திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் என்று தெரியவந்தது. 2009 காலகட்டத்திலும் இந்தப் பாடல் மீண்டும் பிரபலமானது" என்கிறார் அவர்.

"'தோல்வி நிலையென நினைத்தால்' பாடலை அரசு வானொலிகளில் ஒளிபரப்ப 'அதிகாரபூர்வமற்ற ஒரு தடை' நிலவியது" என்கிறார் இலங்கை வானொலித் துறையில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி ஒருவர்.

"இருப்பினும், விடுதலை புலிகள் இயக்கத்தின் வானொலி உள்பட சில தனியார் வானொலிகளில் அந்தப் பாடல் தொடர்ந்து ஒலிப்பரப்பட்டது" என்கிறார் அவர்.

கூடுதல் தகவல்கள்- ரஞ்சன் அருண் பிரசாத், பிபிசி தமிழுக்காக

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு