'பிரெஞ்சுக்கு பதில் இந்தி?' – சிபிஎஸ்இ சுற்றறிக்கைக்கு புதுச்சேரியில் எதிர்ப்பு ஏன்?

சிபிஎஸ்இ, கல்வி, மும்மொழிக் கொள்கை, பிரெஞ்சு மொழி, இந்தி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சிபிஎஸ்இ பள்ளிகளில், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி சிபிஎஸ்இ ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அந்த அறிவிப்புக்கு புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

சிபிஎஸ்இ சுற்றறிக்கையில் குறிப்பிட்டபடி, மூன்று மொழிகளுள் குறைந்தது இரண்டு, இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பதே முக்கிய நிபந்தனையாகும்.

'ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட சிபிஎஸ்இ பள்ளிகளைப் பொறுத்தவரை, இந்திய மொழிகள் அல்லாமல் அவர்கள் கற்பிக்கக்கூடிய ஒரே மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்கும். இதனால், பிரெஞ்சு அல்லது ஜெர்மன் போன்ற மற்றொரு வெளிநாட்டு மொழிக்கு இதில் இடமில்லாத சூழல் உருவாகியுள்ளதாக' கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றாலும், புதுச்சேரியில் மட்டும் அதிக எதிர்ப்பு எழ காரணம், புதுச்சேரிக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் உள்ள வரலாற்று மற்றும் கலாசார ரீதியிலான தொடர்பு.

சிபிஎஸ்இ, கல்வி, மும்மொழிக் கொள்கை, பிரெஞ்சு மொழி, இந்தி

பட மூலாதாரம், CBSE

படக்குறிப்பு, சிபிஎஸ்இ வெளியிட்ட சுற்றறிக்கை

சிபிஎஸ்இ சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?

கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி, சிபிஎஸ்இ வெளியிட்ட சுற்றறிக்கையில், 2026-27 கல்வியாண்டு முதல், 6-ஆம் வகுப்பிலிருந்து அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் கட்டாய மூன்றாவது மொழியை (R3) அறிமுகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் புதிய கல்விக் கொள்கை (NEP) 2020 ஆகியவற்றால் பரிந்துரைக்கப்பட்ட மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மூன்று மொழிகளுள் குறைந்தது இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பதே முக்கிய நிபந்தனையாகும்.

"ஆங்கிலம் ஒரு வெளிநாட்டு மொழியாகக் கருதப்படுகிறது. அப்படிப் பார்த்தல், மீதம் இரு இந்திய மொழிகள் கற்பிக்கப்படவேண்டும். இதன் காரணமாக, பிரஞ்சு அல்லது ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகள் மூன்றாவது மொழியாகத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது." என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"புதுச்சேரியின் பல சிபிஎஸ்இ பள்ளிகளில், ஆங்கிலம் முதல் மொழியாக (R1) உள்ளது, தமிழ் (அல்லது மலையாளம், தெலுங்கு) இரண்டாவது மொழியாக (R2) அமைகிறது. இதனால் மூன்றாவது மொழி (R3) இந்தி, சமஸ்கிருதம் அல்லது மற்றொரு பிராந்திய மொழியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது" என்று கூறுகிறார் புதுச்சேரி திலாசுப்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி ஆசிரியை பச்சையம்மாள்.

அதிகாரப்பூர்வ பாடப்புத்தகங்கள் தயாராக இல்லாவிட்டாலும், உள்ளூரில் கிடைக்கும் பாடப் புத்தகங்களைப் பயன்படுத்தி உடனடியாக மூன்றாவது மொழியை கற்பிக்கத் தொடங்குமாறு சிபிஎஸ்இ பள்ளிகளை இந்தச் சமீபத்திய சுற்றறிக்கை வலியுறுத்துகிறது.

ஒரு பள்ளியால் ஆறாம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும் R3 மொழிகள் மட்டுமே, அப்பள்ளியின் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில் விருப்பப் பாடங்களாக இருக்கும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சுற்றறிக்கை வெளியான ஏழு நாட்களுக்குள் அனைத்துப் பள்ளிகளும் இந்த முறையைக் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றும், அது குறித்த விவரங்களை உடனடியாக சிபிஎஸ்இ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் அனைத்து சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ, கல்வி, மும்மொழிக் கொள்கை, பிரெஞ்சு மொழி, இந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதுச்சேரி பல நூற்றாண்டுகளாக பிரான்ஸ் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

புதுச்சேரியின் வரலாறு

புதுச்சேரி யூனியன் பிரதேசம், முன்னாள் பிரெஞ்சு காலனிகளான புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகியவற்றை உள்ளடக்கியது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் தமிழ்நாடு மாநிலத்தாலும், மாஹே கேரள மாநிலத்தாலும், ஏனாம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.

இதில் மாஹே புதுச்சேரியிலிருந்து 630 கிமீ தொலைவிலும், ஏனாம் புதுச்சேரியிலிருந்து 870 கிமீ தொலைவிலும் உள்ளது.

புதுச்சேரி பல நூற்றாண்டுகளாக பிரான்ஸ் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பிரெஞ்சுக்காரர்கள் முதன்முதலில் 1673-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்தனர். பின்னர் காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி வசம் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவுக்கு 1947-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் சுதந்திரம் அளித்தபோது பிரான்ஸ் வசம் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை.

1948-ஆம் ஆண்டில் பிரான்ஸ் - இந்தியா இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. புதுச்சேரி பகுதிகளில் உள்ள மக்களே தாங்கள் அரசியல் ரீதியாக எந்த நாட்டில் சேர வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம் என்று அந்த ஒப்பந்தம் கூறியது.

ஆனால், பல ஆண்டுகள் கடந்த பிறகும் இது குறித்து பிரான்ஸ் அரசு ஒரு நிலையான முடிவை எடுக்கவில்லை.

இறுதியாக இந்தியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற 1954-இல் பிரான்ஸ் ஒப்புக்கொண்டது.

புதுச்சேரியை இந்தியாவுடன் இணைப்பது குறித்தான வாக்கெடுப்பு 1954 அக்டோபர் 18-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 178 பேரில் 170 பேர் புதுச்சேரி இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

சிபிஎஸ்இ, கல்வி, மும்மொழிக் கொள்கை, பிரெஞ்சு மொழி, இந்தி

பட மூலாதாரம், Getty Images

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளை நவம்பர் 1, 1954 முதல் இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியா - பிரான்ஸ் இடையே கையெழுத்தானது. புதுச்சேரி இந்திய ஆட்சியின் கீழ் வந்தது.

இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக 1962-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

இந்தியா - பிரான்ஸ் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தில், 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வேறுவிதமாக முடிவு செய்யாத வரையில், பிரெஞ்சு மொழி புதுச்சேரி நிறுவனங்களின் அலுவல் மொழியாகத் தொடரும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றும் புதுச்சேரியில், கட்டடக்கலை, தெருப் பெயர்கள், உணவு வகைகள் மற்றும் கலாசார நடைமுறைகள் ஆகியவற்றில் பிரான்ஸின் தொடர்புகள் இன்னும் உள்ளன.

இந்தப் பின்னணியில் இருந்துதான், சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்புக்கு அங்கு பெரும் எதிர்ப்பு எழுகிறது. இதற்கு மற்றொரு முக்கிய காரணம், புதுச்சேரியின் அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டமே பின்பற்றப்படுகிறது.

சிபிஎஸ்இ, கல்வி, மும்மொழிக் கொள்கை, பிரெஞ்சு மொழி, இந்தி

பட மூலாதாரம், Getty Images

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்

புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாமில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் 2015-16 கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாறின.

பின்னர், 2023-24 கல்வியாண்டு முதல் அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த புதுச்சேரி அரசு முடிவு செய்தது.

புதுச்சேரியின் அரசுப் பள்ளிகள் பலவும் சிபிஎஸ்இ அங்கீகாரத்திற்காகப் பதிவுசெய்து, தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையும் பாடப்புத்தகங்களையும் பின்பற்றி வருகின்றன என புதுச்சேரியின் பள்ளி கல்வி இயக்ககத்தின் இணையதளம் தெரிவிக்கிறது.

அதேசமயம், புதுச்சேரி அரசால் நடத்தப்படும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியான 'பென்சியோனாட் டி ஜூன்ஸ் ஃபில்ஸ்' என்ற பள்ளியில் பிரெஞ்சு வழி கல்வி வழங்கப்படுகிறது.

"புதுசேரியில் உள்ள அரசு சிபிஎஸ்இ பள்ளிகளில் இதுவரை பிரெஞ்சு பயின்று வந்த மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் இப்போது பெரும் குழப்பத்தில் உள்ளனர்" என்று கூறுகிறார் திலாசுப்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி ஆசிரியை பச்சையம்மாள்.

"புதுச்சேரியின் மாணவர்கள் 5-ஆம் வகுப்பு வரை பிரெஞ்சு மொழியை மூன்றாவது மொழியாக ஆர்வமுடன் கற்கிறார்கள். திடீரென 6-ஆம் வகுப்பு முதல் அதைக் கற்க முடியாது என்ற நிலை வருவது உளவியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்கிறார் அவர்.

"இந்த திடீர் அறிவிப்பைச் செயல்படுத்த பள்ளிகளுக்கு மிகக் குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. போதுமான தயாரிப்புகள் இன்றி, பாடம் எடுக்க புத்தகங்கள் கூட இன்றி, இவ்வளவு அவசரமாக ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவது கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றும் அவர் கூறுகிறார்.

சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு புதுச்சேரியின் திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

"புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி கற்பது என்பது இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல ஆடம்பரமான ஒரு வழக்கம் அல்ல, அது இங்கே அரசுப் பள்ளிகளில் இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. எங்கள் அன்றாட வாழ்வில் பிரெஞ்சு மொழி கலந்துள்ளது. அப்படியிருக்க புதுச்சேரி மக்களின் விருப்பங்களை கருத்தில் கொள்ளாமல் இத்தகைய முடிவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது" என்கிறார் திமுகவைச் சேர்ந்தவரும், தனியார் பள்ளி ஆசிரியையுமான காயத்ரி.

"இந்த அறிவிப்பை அமல்படுத்துவதில், புதுச்சேரியின் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் துளியும் விருப்பமில்லை. விரைவில், நாங்கள் இது தொடர்பான போராட்டங்களை முன்னெடுப்போம்," என்கிறார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த சஞ்சய் சேகர்.

சிபிஎஸ்இ, கல்வி, மும்மொழிக் கொள்கை, பிரெஞ்சு மொழி, இந்தி

பட மூலாதாரம், Getty Images

'தவறான அணுகுமுறை'

"புதுச்சேரியின் பண்பாட்டு மற்றும் கலாசார விழுமியங்களைக் கருத்தில் கொள்ளாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் எதிர்ப்பும் எழுகிறது. ஆனால், இதனால் பாதிக்கப்படப்போவது மாணவர்கள் தான்," என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

"இத்தனை வருடங்களாக கற்றுவந்த ஒரு மொழியை இனி கற்க முடியாது என்பது அவர்களுக்கு ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இது அறிவியல்பூர்வமான அணுகுமுறை அல்ல, ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்படும் தவறான அணுகுமுறை. காரணம், ஆங்கில வழிக் கல்வி, கூடுதலாக தாய் மொழி, ஒரு விருப்ப மொழி, அது அவர்களது கலாசாரத்தோடு தொடர்புடைய பிரெஞ்சு மொழி. இதை உடைத்து வேறொரு மொழியைத் திணிப்பது தவறு," என்று அவர் கூறுகிறார்.

சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பு குறித்து புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநரகத்திடம் விளக்கம் கேட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

ஆனால் பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அதிகாரி, "அந்த அறிவிப்பு இன்னும் அதிகாரபூர்வமாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படவில்லை. தற்போது தேர்தல் விதிகள் அமலில் உள்ளதாலும், புதிய அரசு இன்னும் அமைக்கப்படாததாலும் இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதேசமயம், புதுச்சேரி பிரெஞ்சு கல்வியின் தனித்துவம் குறித்தும் சிபிஎஸ்இ-க்கு எடுத்துரைக்கப்படும்," என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு