காணொளி: பிரிட்டிஷ் அரசுக்கு கொடுத்த 35 ஆயிரம் ரூபாய் - 109 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பிக் கேட்கும் குடும்பம்
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ருதியா குடும்பத்தினர், தங்களது மூதாதையர் ஜும்மாலால் ருதியா, 1917-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு 35 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கியதாக கூறுகின்றனர். இதற்கான ஆதாரமாக, 1917 ஜூன் 4-ஆம் தேதி தேதியிடப்பட்ட சான்றிதழ் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
முதல் உலகப் போர் நடைபெற்றபோது, போரில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கான செலவுகளுக்காக இந்தப் பணத்தை பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கியதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். அந்தக் காலத்தில் வழங்கப்பட்ட இந்தக் கடனை, குடும்பத்தினர் "போர்க்கடன்" என்கிறார்கள்.
இந்தப் பணம் இதுவரை திருப்பிச் செலுத்தப்படவில்லை என குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்த ஆவணம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் குடும்பத்தினருக்குக் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, வழக்கறிஞர் மூலம் பிரிட்டிஷ் அரசைத் தொடர்புகொண்டுள்ளனர்.
இப்போது, அந்தக் குடும்பத்தினரிடம் பழைய ஆவணங்கள், குடும்ப மரபுவழிப் பட்டியல் உள்ளிட்ட தகவல்களை பிரிட்டிஷ் கடன் மேலாண்மை அலுவலகம் கேட்டுள்ளது. அதாவது, 1917-ல் பணம் கொடுத்த குடும்பமும், இப்போது பணத்தைக் கேட்கும் குடும்பமும் ஒன்றுதானா என்பதை பிரிட்டிஷ் அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.
1917-ல் இருந்த 35 ஆயிரம் ரூபாய், இன்றைக்கு எவ்வளவு? அசல் தொகையுடன் வட்டி, கூட்டு வட்டி, பணவீக்கம் உள்ளிட்டவற்றையும் கணக்கிட்டு தொகையை நிர்ணயிக்கப் போவதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். மேலும், முதல் உலகப் போருக்கான பழைய கடன்களில் பெரும் பகுதியை பிரிட்டிஷ் அரசு 2015-ஆம் ஆண்டு திருப்பிச் செலுத்தியதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2014-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அரசு அளித்த பதிலின்படி, முதல் உலகப் போரில் இருந்து சுமார் 220 கோடி பவுண்ட் அளவிலான நிலுவைக் கடன் இருந்தது.அதில் ஒரு பகுதி போர்க்கடன்களாகவும், மற்றொரு பகுதி ஒருங்கிணைந்த மற்றும் மாற்றுக் கடன்களாகவும் இருந்தன.
இவற்றில் பெரும்பாலானவை 2015-ஆம் ஆண்டு திருப்பிச் செலுத்தப்பட்டன. ஆனால், ஜும்மாலால் ருதியா வழங்கிய 35 ஆயிரம் ரூபாய் அந்தக் கடன்களில் இடம்பெற்றிருந்ததா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



