அமெரிக்காவுக்கு எதிராக பெரிய 'விலை' கொடுத்தாலும் இரான் தலைவர்கள் பணியாதது ஏன்?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், கோன்சே ஹபீபியாசாத்
- பதவி, பிபிசி பாரசீக சேவை
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
இரான் ஆட்சியின் தற்போதைய வடிவம் என்ன? நாட்டின் அதிகாரம் எங்குள்ளது?
இரானின் அதி உயர் தலைவர் மோஜ்தபா காமனெயி, அனைத்து முக்கிய விவகாரங்களிலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர் என அறியப்படுகிறார். ஆனால், மார்ச் மாத முற்பகுதியில் அவர் நியமிக்கப்பட்டதிலிருந்து, அவர் பொதுவெளியிலோ அல்லது சமீபத்திய வீடியோக்களிலோ அல்லது புகைப்படங்களிலோ காணப்படவில்லை.
இரானிய அரசு உயர் அதிகாரி ஒருவர், பேச்சுவார்த்தையாளர்கள் காமனெயியின் "வழிகாட்டுதலின்" கீழ் செயல்படுவதாகத் தெரிவித்தார்.
அவர் பேச்சுவார்த்தைகள் குறித்து வெளிப்படையாக எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சமீபத்திய கருத்துகள் அமெரிக்காவை விமர்சித்துள்ளன.
நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அடங்கிய பேச்சுவார்த்தைக் குழு, சமீபத்திய வாரங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றிருப்பதாக தெரிகிறது.
காலிபாப், இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையுடன் ஆழமான தொடர்புகளைக் கொண்டவர்.
புரட்சிகர காவல் படையின் செல்வாக்கு குறிப்பாக இந்த போர் காலத்தில் ஒரு வழக்கமான ராணுவத்தையும் தாண்டி நீண்டுள்ளது.
பல மூத்த அதிகாரிகளை இழந்திருந்தாலும், அது இன்னும் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தலைமையிலான அரசுக்கு இணையாக ஒரு அரசாங்கமாகவே செயல்படுகிறது.
பெசெஷ்கியான் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார், ஆனால் அவரிடம் உண்மையில் எவ்வளவு அதிகாரம் உள்ளது என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இரு தரப்பும் பின்வாங்குவதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை
லைஸ் டூசெட், பிபிசி
முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இரண்டு போட்டி முற்றுகைகள் இப்போது பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தைத் தடுத்து வருகின்றன.
அமெரிக்காவோ அல்லது இரானோ பின்வாங்குவதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை.
இந்த முற்றுகையினால் ஏற்படும் கடுமையான பொருளாதாரச் சுமை, இரானை பேச்சுவார்த்தை மேசைக்குத் தள்ளி, தனது ஒப்பந்தத்தை ஏற்க வைக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது. இரான் நிச்சயமாக ஒரு பெரும் விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தெஹ்ரானில் அதைப் பார்க்க முடிகிறது. வேலை இழப்புகள் மற்றும் விலை உயர்வு பற்றி மக்கள் எங்களிடம் கூறுகிறார்கள். வரவிருக்கும் விஷயங்கள் குறித்த தங்கள் கவலைகளை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
ஆனால் இரானின் தலைவர்கள் பணிந்துபோக மாட்டார்கள். அது இந்த ஆட்சி அமைப்பின் மரபணுவிலேயே இல்லை.
அவர்களால் இந்த வலியைத் தாங்கிக் கொள்ள முடியும் என்றும், அமெரிக்காதான் முதலில் பின்வாங்கும் என்றும் நம்புகிறார்கள்.
இந்த முட்டுக்கட்டையை உடைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்று, இரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாப் சமூக ஊடகத்தில் பதிவிட்டபோது, இரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை மற்றும் இரான் மீது குண்டு வீசுவோம் என்ற அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் போர்நிறுத்தத்தை மீறுவதாகக் கூறினார்.
அவற்றை "உண்மையான பேச்சுவார்த்தைகளுக்கு" தடையாக இருக்கும் முக்கிய காரணிகள் என்று அவர் அழைத்தார்.
ஹோர்மூஸ் நீரிணையை "முழுமையாகத் திறக்க" போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இரானும் தனது கடமைகளைக் கொண்டுள்ளது. ஆனால், அது தனது சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே அதைச் செய்யத் தயாராக இருக்கும் என்பது தெளிவாகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































