காணொளி: 'நான்கு மார்பகங்கள் என கேலி செய்தனர்...'
தனது மார்பகங்களின் வடிவத்தால் வாழ்க்கையே நரகமாகும் அளவுக்குக் கேலிகளைச் சந்தித்ததாகக் கூறுகிறார் சார்லி.
பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது, சக மாணவர்கள் தனக்கு 'நான்கு மார்பகங்கள்' இருப்பதாகக் கேலி செய்வார்கள் என்ற அச்சத்தில் கழிப்பறையில் ஒளிந்துகொண்ட நாட்களே தனது பதின்ம வயதின் மிகவும் கசப்பான நினைவுகள் என்று அவர் கூறுகிறார்.
மார்புப் பகுதியில் பள்ளம் ஏற்பட்டிருப்பது போன்ற தோற்றமே அவர் எதிர்கொண்ட பிரச்னைக்குக் காரணம்.
இந்தக் குறைபாடு 'பெக்டஸ் எக்ஸ்கவாட்டம்' என்று அழைக்கப்படுகிறது. இது ஓர் உடல்நலக் குறைபாடாகும்.
இது 'ஃபனல் செஸ்ட்' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தக் குறைபாட்டால் மார்புப் பகுதி உள்நோக்கி வளைந்து, பள்ளமாகக் காட்சியளிக்கும்.
இந்தக் குறைபாடு உள்ளவர்களின் மார்பெலும்பு உள்நோக்கி வளைவதால், விலா எலும்புகளுக்கு இடையே பள்ளம் ஏற்படுகிறது. இதனால் மார்புப் பகுதி உள்நோக்கி அழுந்தியிருப்பதுபோல் காட்சியளிக்கும்.
இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பலருக்கும் பிறவியிலேயே இந்தக் குறைபாடு காணப்படுகிறது.
ஆனால், குழந்தைப் பருவத்திலோ அல்லது பதின்ம வயதிலோ இந்தக் குறைபாடு வெளிப்படையாகத் தெரியத் தொடங்கும்.
200 பேரில் ஒருவரைப் பாதிக்கும் இந்தப் பிரச்னையால் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 23 வயதான சார்லியும் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குறைபாடு இதயம் மற்றும் நுரையீரல்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மூச்சுத்திணறல், இதயத் துடிப்பு அதிகரித்தல், சில நேரங்களில் சுயநினைவை இழத்தல் போன்ற அறிகுறிகளும் ஏற்படுகின்றன.
இந்தக் குறைபாட்டால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு வேக்குவம் பெல் தெரபி , கம்ப்ரஷன் பிரஸ்ஸிங் என இரண்டு வகையான சிகிச்சை முறைகள் உள்ளன.
சிறுவயதிலேயே இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்தால், அறுவை சிகிச்சையின்றி சிகிச்சை அளிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல், மார்புக்கூட்டின் வடிவக் குறைபாட்டின் வகை, அதன் தீவிரம் மற்றும் நோயாளியின் வயது ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சை முறைகளும் மாறுபடும்.
ஒருமுறை ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டபோது, இதயம் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், ஸ்கேனில் தெளிவாகத் தெரியவில்லை என்றும் மருத்துவத் தொழில்நுட்ப நிபுணர் கூறியதால், சார்லி மார்பு அறுவை சிகிச்சை நிபுணரிடம் அனுப்பப்பட்டார்.
அப்போதுதான் நைல் மெக்கோனிகலை அவர் சந்தித்துள்ளார். இவரும் சிறுவயதில் இதே பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்.
சார்லியின் மார்புக்கூட்டில் இரண்டு உலோகக் கம்பிகளும், மார்பெலும்பில் ஓர் உலோகத் தகடும் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் அவரது இதயம் மற்றும் நுரையீரல்கள் இயல்பான நிலைக்குக் கொண்டுவரப்படும்.
தற்போது வடக்கு அயர்லாந்தில் மார்புக்கூட்டின் வடிவக் குறைபாடு தொடர்பான அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் 85 பேரில் சார்லியும் ஒருவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



