மதுரையில் விசாரணைக்காக காவல்நிலையம் சென்ற லாரி ஓட்டுநர் மரணத்தில் சர்ச்சை
(எச்சரிக்கை: காணொளி சங்கடம் தரலாம்)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக சென்றவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காவல் நிலைய கழிவறையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் கூறுகிறது. ஆனால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். என்ன நடந்தது?
போலீஸ் தெரிவித்த தகவலின்படி, உயிரிழந்த பாலகிருஷ்ணன் தனியார் டெலிவரி நிறுவனத்திற்குச் சொந்தமான ஈச்சர் சரக்கு வாகனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த 3ஆம் தேதி காலை தேவாரத்திலிருந்து மதுரைக்கு பார்சல்கள் மற்றும் ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது, வாலாந்தூர் கண்மாய் கரை அருகே வாகனத்தில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் வாகனத்தில் இருந்த சரக்குகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், வாலாந்தூர் காவல் நிலையத்தில் தற்செயலான தீ விபத்து என வழக்கு பதியப்பட்டுள்ளது. பின்னர், சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் பாதுகாப்பு மேலாளர் இந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்திருக்கிறார்.
பாலகிருஷ்ணன் மரணத்துக்கு பிறகு போலீஸ் அளித்த விளக்கத்தில், விசாரணை தொடர்பாக, பாலகிருஷ்ணன் வழக்குடன் தொடர்புடைய சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ய விசாரணை அதிகாரிக்கு உதவ செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அவர் வந்ததாகவும், காலை சுமார் 6.00 மணியளவில் கழிவறைக்குச் சென்றவர் அங்கு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், குடும்பத்தினர் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் தொடர்புடைய காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும், இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட உள்ளதாகவும் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி கூறி உள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



