காணொளி: டிண்டர் ஆப் மூலம் அரிய நோய் பாதிப்பை அறிந்த பெண்
மரியா பவுலா வியேராவுக்கு சிறு வயதிலிருந்தே நாள்பட்ட வலி இருந்து வந்தது. ஆனால், அந்த வலிக்கு என்ன காரணம் என்பதை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை.
"உங்களுக்கு சோர்வு ஏற்படும். இறுதியில், அதற்கான பதில் தேடுவதையே நீங்கள் கைவிட்டு விடுவீர்கள். அதனால், பல ஆண்டுகளாக அதைப் பற்றி தெரிந்துகொள்ளக்கூட நான் விரும்பவில்லை." என்கிறார் அவர்.
ஆனால், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அவர் ஒரு டேட்டிங் செயலியில் சேர்ந்தபோது, இவை அனைத்தும் மாறின.
"நான் டிண்டர் செயலியில் ஓர் ஆணைச் சந்தித்தேன். அவர் என்னிடம், 'மரியா, எனக்கு ஒரு பேராசிரியரைத் தெரியும். அவர் பல நோய்களைக் கண்டறிவதில் மிகவும் திறமையானவர். சாவோ பாலோவின் டாக்டர் ஹவுஸ் மாதிரி'" என கூறுகிறார் மரியா.
"'இதற்கு என்னால் இப்போது நிச்சயமாகத் தீர்வு காண முடியாது. ஆனால், ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு உதவ முயற்சி செய்ய மாட்டேன் என்பது இதன் அர்த்தமல்ல' என்று நான் அவரிடம் சொன்னேன்." என்கிறார் லூகாஸ் டவன்சோ.
லூகாஸ், மரியாவை தோல் மருத்துவரான பாவ்லோ கிரியாடோவுக்கு அறிமுகப்படுத்தினார். ஒரு மாதம் ஆய்வு செய்த பிறகு, மரியாவின் பாதிப்பை ஒத்த ஒரு மருத்துவ நிலையை அவர் கண்டறிந்தார்.
"எனக்குத் தெரிந்த எரித்ரோமெலால்ஜியாவும், ஓல்ம்ஸ்டெட் (Olmsted) வகை கெரட்டோடெர்மாவும் ஒரே நபரிடம் இணைந்து இருப்பதை நான் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை." என கூறுகிறார் தோல் மருத்துவர் பாவ்லோ கிரியாடோ.
ஓல்ம்ஸ்டெட் சிண்ட்ரோம் காரணமாக உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் தோல் தடிமனாகலாம். சில நோயாளிகளுக்கு, இது எரித்ரோமெலால்ஜியாவுடன் சேர்ந்து ஏற்படலாம். எரித்ரோமெலால்ஜியா, குறிப்பாக கை, கால் போன்ற உடலின் வெளிப்புறப் பகுதிகளில் சிவத்தல், அதிக வெப்பம், வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.
"இறுதியாக இதைக் கண்டறிந்தபோது, 'இப்போது எனக்கு ஒரு திசை தெரிந்துவிட்டது. எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும், எது சாத்தியம், இந்த உலகில் நான் யார் என்பது எனக்குத் தெரியும்' என்று நினைப்பீர்கள். என்னால் இப்போது அதிகமான தொடர்புகளை உருவாக்க முடிகிறது. ஏனென்றால், நான் வெளியே செல்ல முடிகிறது. 'என்னால் இன்னும் நிறைய கனவுகளைக் காண முடியும்' என்று நான் எப்போதும் சொல்வேன். அதுதான் மிகவும் முக்கியமான விஷயம் என்று நினைக்கிறேன்." என்கிறார் மரியா.
மரியாவும் லூகாஸும் காதல் உறவில் இணையவில்லை. ஆனால், இருவரும் இன்றும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.
"டிண்டரும், என் நண்பரும், என் வாழ்க்கையில் வந்த தேவதைகள் என்று நான் நகைச்சுவையாகச் சொல்வேன்." என்றார் மரியா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



