'அனைத்திற்கும் ஒரு நேரம் இருக்கிறது' மத்திய கிழக்கின் இந்தியாவின் பங்கு பற்றி ராஜ்நாத் பதில்
மத்திய கிழக்கில் அமைதி கொண்டு வர இந்தியா முயற்சிகள் எடுத்தது என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தற்போது ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங்கிடம் "மத்திய கிழக்கு நெருக்கடியில் அமைதி கொண்டு வர இந்தியா எந்தப் பங்கும் வகிக்க முடியுமா?" எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ராஜ்நாத், இந்தியா முயற்சித்தது என்றும் அனைத்திற்கும் ஒரு நேரம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எதிர்காலத்தில் இந்தியா இதில் ஒரு பங்கு வகிக்கலாம், அது வெற்றிகரமாகவும் முடியும். அந்தச் சாத்தியத்தை மறுக்க முடியாது. இரண்டு தரப்பும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் கோரினார். ராஜ்ஜிய விவகாரங்களில் நமது பிரதமருக்கு சமநிலையான அணுகுமுறை இருக்கிறது," எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், "இந்தியா முன்னோக்கிச் செல்வதை நீங்கள் பார்த்தால், எந்த நாட்டின் கப்பல்களும் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து வர முடியவில்லை என்பதை நீங்கள் பார்க்க முடியும். யாராவது தங்களின் 7, 8 கப்பல்களை வெளியே கொண்டு வந்தார்கள் என்றால் அது இந்தியா தான். அமெரிக்கா இந்தியாவை எதிரியாக கருதுகிறது அல்லது இரான் இந்தியாவை எதிரியாக கருதுகிறது என அர்த்தம் அல்ல. இந்தியாவுக்கு மிகவும் சமநிலையான பார்வை உள்ளது." என்றும் கூறினார்.