காணொளி: வங்கதேசம் செல்ல இந்திய எல்லையில் காத்திருக்கும் மக்கள் - மேற்கு வங்கத்தில் என்ன நடக்கிறது?
மேற்கு வங்கத்தில் உள்ள ஹக்கிம்பூர் எனும் சிறிய நகரத்தில், ஏராளமான மக்கள் தங்கள் உடைமைகளுடன் திரண்டு வருகின்றனர். தாங்கள் வங்கதேசக் குடிமக்கள் என்றும், சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைந்ததாகவும் அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீதான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவர்களை போலவே, மேலும் பலரும் வங்கதேசத்துக்கே திரும்பிச் செல்ல முடிவெடுத்துள்ளனர்.
பல இடங்களிலிருந்து இந்த ஆண்களும் பெண்களும் விடியற்காலையே இந்தியா-வங்கதேச எல்லையில் உள்ள ஹக்கிம்பூருக்கு வந்துள்ளனர். வங்கதேசத்தின் பல மாவட்டங்களில் தங்கள் வீடுகள் இருப்பதாக இவர்கள் கூறுகின்றனர். இவர்களில் சிலர் ஜெசூர், குல்னா அல்லது சத்கிரா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் வந்துள்ளனர். சிலர், ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்கு முன்பு தங்கள் பெற்றோரின் கையை பிடித்து இங்கு வந்துள்ளனர்.
எல்லை சோதனைச் சாவடியை கடந்து சற்றுத் தொலைவு சென்றால் தாராலி கிராமம் வருகிறது; அதைத் தொடர்ந்து சோனாய் நதி ஓடுகிறது. அந்த நதியின் மறுகரையில் வங்கதேசத்தின் சத்கிரா மாவட்டம் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த கிராமத்துக்கு சென்றபோது, நதியின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் ஒருவருக்கொருவர் மிக எளிதாக தொடர்பை பேணி வருவதை பிபிசி பங்களா குழுவினர் நேரில் கண்டனர். இந்த கரையிலிருந்து ஒருவர் சத்தமிட்டாலே மறுகரையில் வசிக்கும் மக்கள் அதற்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் அவர்கள் தொடர்பு அமைந்திருந்தது.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே, ஊடுருவியவர்கள் முதலில் அடையாளம் காணப்படுவார்கள் என்றும், பின்னர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, இறுதியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்தார். புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, தாங்கள் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளதாகவும், அதனால் நாட்டைவிட்டு வெளியேறி வருவதாகவும் எல்லையில் திரண்டுள்ள வங்கதேச நாட்டினர் கூறுகின்றனர்.
ஹக்கிம்பூர் எல்லையில் திரண்டுள்ள மக்களில் பெரும்பாலானோர், இரண்டு, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக கூறுகின்றனர். அவர்களில் பலரிடம், இந்தியாவில் தாங்கள் வசிப்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் ஏதுமில்லை. இருப்பினும், சிலர் பல்வேறு இந்திய அடையாள அட்டைகளை தாங்கள் பெற்றுள்ளதாக கூறுகின்றனர். அதில் ஒருவரை நான் சந்தித்தேன். அவர் கடந்த 38 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வருகிறார். 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்கும் அளித்துள்ளார்.
எல்லையில் திரண்டுள்ள, வங்கதேசத்திலிருந்து ஊடுருவியதாகக் கருதப்படும் நபர்களின் ஆவணங்களைச் சரிபார்த்த பின்னர் என்ன நடக்கிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்க அதிகாரிகளோ அல்லது எல்லைப் பாதுகாப்புப் படையினரோ எவரும் முன்வரவில்லை. இருப்பினும், அவர்கள் வங்கதேசத்துக்கு எப்படி திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்பதை உள்ளூர் மக்கள் பார்த்து வருகின்றனர்.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



