ஒரு டாலர் சுமார் ரூ.97: இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவது ஏன்? 3 முக்கிய விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images
ஒரு நாட்டின் நாணயத்தின் பலம் அல்லது பலவீனம் அந்த நாட்டின் பொருளாதார வலிமையைக் குறிக்கிறது.
பொதுவாக, எந்தவொரு நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறதோ அந்த நாட்டின் நாணயம் வலிமையானதாக இருக்கும்.
தற்போதும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நன்றாகவே உள்ளது.
இருப்பினும், 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் மதிப்பு பலவீனமடைந்து வருகிறது.
2013 ஆம் ஆண்டில், நரேந்திர மோதி பாரதிய ஜனதா கட்சியால் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, அப்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதை குறிப்பிட்டு, ஒரு அரசியல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
அந்த நேரத்தில், பெரிய பாலிவுட் நட்சத்திரங்கள், பிரபலமான மதத் தலைவர்கள் மற்றும் பல பிரபலங்கள் இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு நிகராக 60 என்ற அளவை எட்டியுள்ளது என்று கூறுவதைக் காண முடிந்தது.
பாஜக ஆட்சியில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து சுமார் 97 என்ற அளவை எட்டியுள்ள நிலையில், அவர்களில் யாரும் இது குறித்து ஏன் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று இப்போது மக்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்புவதைக் காண முடிகிறது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 100 என்ற உளவியல் ரீதியான அளவைத் தாண்டினால், அரசாங்கத்தின் சுமை மேலும் அதிகரிக்கக்கூடும்.
இந்தியாவில் ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால், இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது.
இது எண்ணெய், சமையல் எரிவாயு, உரங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்துகிறது, இவற்றில் பெரும்பாலானவற்றை இந்தியா வெளிநாடுகளில் இருந்தே வாங்குகிறது.
ரூபாயின் மதிப்பு குறைவாக இருப்பது, வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் அனுப்பும் பணத்தை நம்பி வாழும் குடும்பங்களுக்கும் நன்மை அளிக்கிறது, ஏனெனில் அவர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலருக்கும் அதிக ரூபாய் கிடைக்கிறது.
உலகிலேயே வெளிநாடுகளில் இருந்து அதிகளவு பணத்தைப் பெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில், வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாட்டிற்கு 135 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அனுப்பியிருந்தனர் .

பட மூலாதாரம், Getty Images
கவலைக்குரிய நிலைமை
இந்திய ரூபாயின் நிலை, இந்தியப் பொருளாதாரத்திற்கு கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு சுமார் 97 ஆகக் குறைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குள், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஏற்கனவே 7.5% வீழ்ச்சியடைந்துள்ளது.
ரூபாய் மதிப்பை நிலைப்படுத்துவதற்காக இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.
ரூபாயின் பலவீனத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, ஆனால் அதன் முடிவுகள் இன்னும் தெரியவில்லை. தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரிகளை அரசாங்கம் இரு மடங்கிற்கும் மேலாக உயர்த்தியுள்ளது.
அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளதுடன், சமையல் எண்ணெய் இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறது.
இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி உள்நாட்டு நாணயச் சந்தையில் அவ்வபோது டாலர்களை விற்பனை செய்வதன் மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்று வருகிறது.
இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரித்து வருகிறது.
பலவீனமடைந்து வரும் ரூபாய் மதிப்பு இந்தியாவின் பங்குச் சந்தையிலும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து மிகப்பெரிய அளவாக 23 பில்லியன் டாலர்களைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
ரூபாயின் மதிப்பு சரிந்ததன் விளைவாக, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு டாலரில் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ளது. இதனால் அவர்கள், டாலருக்கு எதிராக அதிக நிலைத்தன்மை கொண்ட நாணயங்களைக் கொண்ட நாடுகளை நோக்கித் திரும்புகின்றனர்.
ரூபாயின் மதிப்பு மேலும் பலவீனமடையக்கூடும் என்று உலகளாவிய முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு காலத்தில் கற்பனை செய்ய முடியாத நிலையாகக் கருதப்பட்ட, டாலருக்கு எதிராக 100 என்கிற அளவை எட்டக்கூடும் என்றும் மதிப்பீடுகள் உள்ளன.
இந்திய நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடுகள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கும், ஏற்றுமதியாளர்கள் தாங்கள் ஈட்டிய அந்நியச் செலாவணி வருவாயை விரைவாக இந்தியாவிற்குக் கொண்டுவர உதவும் வகையில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்று சிட்டி குரூப் நம்புகிறது.

பட மூலாதாரம், Getty Images
கச்சா எண்ணெய் விலை உயர்வு
இந்தியா தனது எண்ணெய் தேவையில் தோராயமாக 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. எனவே, கச்சா எண்ணெய் விலை உயர்வது என்பது, அதே அளவிலான எண்ணெயை வாங்குவதற்கு இந்தியா அதிக டாலர்களைச் செலவிட வேண்டும் என்பதாகும்.
மூலதன வெளியேற்றமும் அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.
2026 ஆம் ஆண்டில், உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து மிகப்பெரிய அளவில் 23 பில்லியன் டாலர்களைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக வரிகளை அறிவித்தபோது, ரூபாய் மதிப்பு மேலும் சரியத் தொடங்கியது.
பின்னர் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல் நடத்தியதால், எண்ணெய் விலைகள் விண்ணை முட்டின. இதனால், ரூபாய் மதிப்பு மீண்டும் அழுத்தத்திற்கு உள்ளாகி, தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ரூபாயின் பலவீனத்திற்கு உண்மையான காரணம் வெளிப்புறக் காரணிகள் மட்டுமல்ல, உள்நாட்டு கட்டமைப்பு பலவீனங்களும் தான் என்றும், அதிவேக பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும் அவற்றை அகற்ற முடியவில்லை என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
2025ஆம் ஆண்டில் ஆசியாவிலேயே மிக மோசமாகச் செயல்பட்ட நாணயமாக ரூபாய் இருந்தது.
2026-ஆம் ஆண்டிலும் அதே நிலை தொடர்ந்தது.
2025 இல் ரூபாயின் பலவீனத்திற்கு டிரம்பின் இரட்டை இலக்க வரிகள், இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வெளியேற்றம் மற்றும் மந்தமான பொருளாதார வளர்ச்சி ஆகியவை காரணங்களாகக் கூறப்பட்டன.
இரான் போரின் காரணமாக எரிசக்தி விலைகள் உயர்வது பணவீக்கத்தைத் தூண்டி, பொருளாதார வளர்ச்சியைப் பலவீனப்படுத்தி, இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்ற அச்சத்தையே தற்போதைய பலவீனம் பிரதிபலிக்கிறது.
புளூம்பெர்க் எகனாமிக்ஸ் கணிப்புகளின்படி, கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 100 டாலராகவும், எரிவாயு விலை போருக்கு முந்தைய நிலையை விட 50 சதவீதம் அதிகமாகவும் நீடித்தால், இந்தியாவின் இறக்குமதிச் செலவு ஒவ்வொரு மாதமும் 5 பில்லியன் டாலர் அதிகரிக்கக்கூடும்.
ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் டி. சுப்பாராவ் என்ன கூறுகிறார்?

பட மூலாதாரம், Getty Images
மே 20 அன்று, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டி. சுப்பாராவ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற ஆங்கில நாளிதழில், "ரூபாயின் பலவீனம் என்பது சமீபத்திய நெருக்கடி அல்ல. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு காரணங்களுக்காக மூலதனம் இந்தியாவிலிருந்து வெளியேறியதால், பல ஆண்டுகளாக ரூபாய் தொடர்ச்சியான அழுத்தத்தில் இருந்து வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், உலகம் முழுவதும் சிறந்த வாய்ப்புகளைத் தேடி இந்தியாவிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு மற்ற சந்தைகளுக்குச் சென்றுள்ளனர்" என்று எழுதினார்.
உலகளாவிய மூலதனம் இப்போது தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரங்களை நோக்கி, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, உயிரித் தொழில்நுட்பம் மற்றும் தரவு மையங்களை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகிறது.
இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகத் திகழ்கிறது, ஆனால் இந்த அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் அதன் பங்கு குறைவாகவே காணப்படுகிறது.
புதுமையால் இயங்கும் பொருளாதாரத்திற்குள் பணம் செல்வதால், இந்திய ரூபாயின் மதிப்பு அதிக அழுத்தத்திற்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது.
"இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு சுமார் 700 பில்லியன் டாலராக உள்ளது, இது உலகிலேயே மிகப்பெரிய இருப்புகளில் ஒன்றாகும். ஆனால் இது அளவுக்கு அதிகமான நம்பிக்கைக்கு வழிவகுத்துவிடக் கூடாது. சாதாரண காலங்களில் இந்தத் தொகை பெரியதாகத் தோன்றலாம், ஆனால் நெருக்கடி காலங்களில் அதன் உண்மையான மதிப்பு, அதன் நம்பகத்தன்மையில் தான் உள்ளது"என்று கூறியுள்ளார்.
அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தம் அதிகரிப்பு
இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு, பிப்ரவரி 2026-ல் 728 பில்லியன் டாலராக இருந்த உச்சத்திலிருந்து, 690 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய அந்நியச் செலாவணி இருப்புகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இருப்பினும், அதிகரித்து வரும் இறக்குமதிச் செலவுகள் இந்த இருப்புகளின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
மார்ச் 31 அன்று முடிவடைந்த நிதியாண்டில், எரிசக்தி இறக்குமதிக்காக இந்தியா 174 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது.
அதே காலகட்டத்தில், தங்கத்தின் இறக்குமதி 72 பில்லியன் டாலர்களை எட்டியது.
வெள்ளி இறக்குமதி கிட்டத்தட்ட 150 சதவீதம் அதிகரித்து 12 பில்லியன் டாலராக உயர்ந்தது. கடந்த நிதியாண்டில் உரங்களின் இறக்குமதியும் 77 சதவீதம் அதிகரித்து 14.6 பில்லியன் டாலராக ஆகியுள்ளது.
எண்ணெய், தங்கம், வெள்ளி மற்றும் உரம் ஆகிய இந்த நான்கு பொருட்களுக்கான இந்தியாவின் இறக்குமதிச் செலவு வெறும் நான்கே ஆண்டுகளில் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இறக்குமதிச் செலவு அதிகரிக்கும்போது, அதிக டாலர்கள் செலவிடப்படுகின்றன.
இதனால் தான் அதிகரித்து வரும் இந்த இறக்குமதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தற்போது முயற்சித்து வருகிறது.
ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம்
இந்தியா இன்னமும் ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்கிறது.
டொனால்ட் டிரம்பின் வரிகள், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன.
இருப்பினும், இந்தியா பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள முயன்று வருகிறது.
மூலதனம் வெளியேறி, அந்நியச் செலாவணி வரத்து மந்தமாக இருக்கும் போது, அரசாங்கம் இப்போது ஏன் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல.
அந்நியச் செலாவணிக் கையிருப்பைச் சேமிப்பதற்கு, தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது ஒப்பீட்டளவில் குறைவான சிக்கல்களை ஏற்படுத்தும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் மொத்த விலை பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தில் 8.3 சதவீதமாக உயர்ந்தது. கிட்டத்தட்ட கடந்த நான்கு ஆண்டுகளில் மிக வேகமான அளவு உயர்ந்துள்ளது.
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான இடைவெளி 34.68 பில்லியன் டாலராக விரிவடைந்துள்ளது, இது அதற்கு முந்தைய மாதத்தில் 25.05 பில்லியன் டாலராக இருந்தது.
ஜனவரி மாதத்தில் இறக்குமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19.2 சதவீதம் அதிகரித்து 71.24 பில்லியன் டாலராக உயர்ந்தது, அதே நேரத்தில் ஏற்றுமதி 0.6 சதவீதம் மட்டுமே வளர்ந்து 36.56 பில்லியன் டாலராக இருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























