மெட்ராஸ் மாகாண மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பிரிட்டிஷ் அதிகாரி பெயரை சூட்டிய வரலாறு

சர் தாமஸ் மன்றோ, வரலாறு, பிரிட்டிஷ் ஆட்சி
படக்குறிப்பு, சென்னையில் அமைந்துள்ள சர் தாமஸ் மன்றோ சிலை
    • எழுதியவர், கா அ மணிக் குமார்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

"மெட்ராஸ் மாகாணத்தில் தாமஸ் மன்றோவின் பெயர் போல் பரிச்சயமான, மதிக்கப்படுகின்ற பெயர் இந்தியாவின் வேறு எந்த ஒரு பகுதியிலும் இல்லை. சென்னை நகரில் [பிரான்சிஸ்] சாண்ட்ரி வடிவமைத்த குதிரை மீது மன்றோ அமர்ந்திருக்கும் பிரசித்தி பெற்ற சிலை, மன்றோவின் பெயரை அனைவரையும் உச்சரிக்கச் செய்யும். அவர் வாழ்ந்த காலத்தில் மறக்கமுடியாத ஆண்டுகளை செலவழித்த மாவட்டங்களில் அவர் பெயரையோ அல்லது நினைவுகளையோ நிலைநிறுத்த எத்தகையதொரு நினைவுச்சின்னமும் தேவையில்லை" - என்கிறார் மன்றோவின் வாழ்க்கை வரலாற்றாசிரியரான ஜான் பிராட்ஷா.

மன்றோவின் சம காலத்தவரும் பம்பாய் மாகாண ஆளுநருமான மவுண்ட் ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டோன், "யதார்த்தமான, நடைமுறை அறிவு, உண்மையான கருணை உள்ளம், சிறிதும் மனித வெறுப்பற்ற நேர்மையான மனம் கொண்ட மனிதர்." என்று மன்றோவை மதிப்பிட்டார்.

தாமஸ் மன்றோவின் மாறுபட்ட அணுகுமுறை

கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ் இந்தியர்களை ஒதுக்கிவிட்டு ஆங்கிலேய மரபில் நிர்வாகத்தை மாற்றி அமைக்க எண்ணினார். இந்திய சிற்றசர்களுடனும் ஜமீன்தார்களுடனும் அவர் சமாதானம் செய்து கொண்டார். ஆனால் தாமஸ் மன்றோ எத்தகைய அணுகுமுறையை விரும்பிக் கையாண்டார் என்பதை அவர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் நாம் அறிந்து கொள்ளலாம்.

''நாம் நமது கொள்கையைத் தீர்மானிக்கும்போது … நடைமுறைப்படுத்த முடிந்த அளவிற்கு உள்ளூர் மக்களின் துணையுடன் நிர்வகிப்பது சிறந்தது. மதிக்கத்தக்க திறமை கொண்டவர்கள் உள்நாட்டு நிறுவனங்களை ஒழித்துவிட்டு ஐரோப்பிய நிறுவனங்களை அறிமுகப்படுத்த எப்படி பரிந்துரைத்தார்கள்? என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்த திசை நோக்கி நகரும் ஒவ்வொரு திட்டமும் மக்களை மேலும் மோசமாக்கி நம் அரசை மேலும் பலவீனமாக்கும். நமது ஆதிக்கம் இந்நாட்டில் பாதுகாக்கப்பட சிவில், இராணுவ உயர் பதவிகளை ஐரோப்பியர்களால் நிரப்ப வேண்டும்; நமது ஆதிக்கத்திற்கு ஆபத்தை உண்டாக்காத இதர பதவிகளை உள்நாட்டு மக்களின் கைகளில் விட்டுவிடவேண்டும். உள்நாட்டு மக்கள் செய்யும் வேலைகளை குறைந்த எண்ணிக்கையிலான நாம் செய்து விடலாம் என்று ஆணவத்தில் கருதுகிறோம். இன்னும் பத்து மடங்கு அதிகமான எண்ணிக்கையில் நாம் இருந்தாலும் நிலைமை மேலும் மேலும் மோசம் அடையத்தான் செய்யும்'' என்றார் தாமஸ் மன்றோ.

கீழ்நிலைப் பணிகளில் உள்நாட்டினர் ஐரோப்பியர்களுக்கு சமமான திறமை கொண்டுள்ளனர் என்பதை மன்றோ வலியுறுத்திக் கூறினார்.

இக்கூட்டு முயற்சியின் மூலம் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதாக, மனிதாபிமானம் கலந்த குடிமக்கள் நலனுக்கான ஆட்சியாக காலனிய ஆட்சியை நம்ப வைக்கும் தந்திரம் இது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதன் அடிப்படையில் மன்றோவின் அனைத்துத் திட்டங்களும் நடவடிக்கைகளும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியை பலப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன.

மன்றோவின் இளமைப்பருவம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 1761-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்த தாமஸ் மன்றோவின் தந்தை ஒரு வணிகர். பிரிட்டனின் காலனியாக இருந்த விர்ஜீனியாவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்தவர். தாயார் பிரபல உடற்கூறு நிபுணர் டாக்டர் ஸ்டார்க் என்பவரின் சகோதரி.

கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் படித்த மன்றோ கணிதத்திலும் வேதியலிலும் தேர்ந்தவராகத் திகழ்ந்திருந்தாலும் வரலாற்றையும் ஆங்கிலேய இலக்கியத்தையும் படிப்பதில் மிக்க ஆர்வம் கொண்டவர். நீண்ட உயரமான, திடமான தேகம் கொண்டிருந்த ஒரு சிறந்த விளையாட்டு வீரர்.

அமெரிக்க சுதந்திரப் போரின் போது அரசு விசுவாசிகளின் கப்பல்களில் ஏற்றி வரும் சரக்குகளை பறிமுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட புரட்சி அரசாங்கத்தின் உத்தரவினால் மன்றோவின் தந்தை பெரும் இழப்பிற்கு உள்ளானார். அமைதியானதொரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த மன்றோவின் குடும்பம் வறுமையில் சிக்கியதால் மன்றோ கிழக்கிந்திய கம்பெனிப் பணியில் சேர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

பயணத்திற்குக் கூட பணமில்லாத நிலையில் இந்தியாவிற்கு புறப்பட்ட கப்பல் ஒன்றில் கப்பல் பணியாளராக பயணம் செய்ய அனுமதி பெற்று மன்றோ 1780-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் நாள் சென்னை வந்தடைந்தார். புனித ஜார்ஜ் கோட்டையில் ஒரு காவற்படை வீரராக பணியில் அமர்ந்தார். மாத சம்பளம் எட்டு பகோடா (தோராயமாக எட்டு ஷில்லிங்- ரூபாய் 46).

மைசூர் சுல்தான்களுடனான போர் தொடங்கியதிலிருந்து இராணுவத்தில் 12 ஆண்டுகள் (1780-1792) மன்றோ பணியாற்றினார். ஹைதர், திப்புவுடனான போர்களில் அவர் முக்கிய பங்காற்றினார். 1792-ஆம் ஆண்டிலிருந்து அவர் சிவில் நிர்வாகத்தில் பணி புரிந்தார். 1792 முதல் 1799 வரை 7 ஆண்டுகள் பாராமஹாலிலும் (சேலம் மாவட்டம்), பின் ஓராண்டு கனராவிலும், ஆங்கிலேயருக்கு நிசாம் கொடையாகக் கொடுத்த மாவட்டங்களின் (நவீன ராயலசீமா) தலைமை ஆட்சியராகவும் 1800 முதல் 1807 வரை செயல்பட்டார்.

அடுத்த ஆறு ஆண்டுகள் ஐரோப்பாவில் சிவில் இராணுவ பணிகளில் இருந்துவிட்டு 1814-இல் மெட்ராஸ் மாகாண நிர்வாகத் தலைமை ஆணையராக மன்றோ பணியாற்றினார். 1818-ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் மராத்தியர்களுடனான போரில் படை நடத்துநராக ஜான் மால்கமுடன் இணைந்து மராத்தியர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு 1819-ஆம் ஆண்டு சில மாதங்கள் பிரிட்டனில் தங்கி 1820 ஜூன் மாதம் 8-ஆம் நாள் மெட்ராஸ் மாகாண ஆளுநராக பொறுப்பேற்றார். 1827 ஜூலை 26 அன்று மரணம் அடையும் வரை அவர் ஆளுநராக பதவி வகித்தார்.

சர் தாமஸ் மன்றோ, வரலாறு, பிரிட்டிஷ் ஆட்சி

பட மூலாதாரம், Getty Images

பணியில் மன்றோ காட்டிய ஆர்வம் அவரது சுக வாழ்வுக்கோ, கேளிக்கைக்கோ நேரமில்லாதவாறு செய்தது. மன்றோவும் அவரது சகோதரர் அலெக்ஸாண்டரும் தங்கள் ஆண்டு வருமானத்தில் 100 ஸ்டெர்லிங் பணத்தை தங்களது தந்தைக்கு அனுப்பி வந்துள்ளனர். இந்த ஆண்டுகளில் மன்றோ வாழ்ந்த வாழ்க்கையை அவரது சகோதரிக்கு (1789) இவ்வாறு எழுதுகிறார்.

"...கீழை நாடுகளின் ஆடம்பரம் பற்றிய உனது கனவுகளிலிருந்து மீண்டு, பரிதாபத்திற்குரிய திருமணமாகாத ஓர் இந்திய அதிகாரியின் நிலையை அறிய அழைக்கிறேன்... நீ நாடகங்களில் வரும் சிற்றரசர்கள் போல் நான் பட்டாடை அணிந்து, சாய்வு நாற்காலியில் அமர்ந்து மெல்லிசையை ரசித்துக் கேட்டுக்கொண்டு எனது பணியாளர்கள் எனக்கு விசிறிக் கொண்டிருக்க கனவுலகில் வாழ்வதாக நினைத்திருக்கலாம்....

எனது தங்கும் இடம் ஒரு சிறிய பொது அறை மற்றும் ஒரு படுக்கை அறை.... படுத்துத் தூங்குவதற்கு ஒரு பாய். ஒரு கிழிந்த சட்டை, பழைய கோட் போட்டு உச்சி வெயிலில் நடந்து கொண்டிருக்கின்றேன்... நீ நம்ப மாட்டாய், நான் இந்தியா வருமுன் பசி, தாகம், சோர்வு அறியாதவன். ஆனால் இம்மூன்றையும் இங்கு நான் அனுபவித்து வருகின்றேன்… இங்கு வரும் வரை நடப்பது எப்படி என எனக்குத் தெரியாது. நான் [இப்போது] பெரும்பாலும் சூரியன் உதயமாவதிலிருந்து மறையும் வரை நடக்கிறேன். மாகாணத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் (மதுரை-விசாகப்பட்டினம் இடையில்) நடந்தே சென்றிருக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

ஹைதர் அலியுடனான போர்

ஹைதர், திப்பு சுல்தான்களுக்கு எதிரான ஆங்கிலேயரின் போர்களில் பங்கேற்ற மன்றோ, ஹைதர் அலி வேலூர் கோட்டையைக் கைப்பற்ற நடத்திய தாக்குதல் பற்றி தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதுகிறார்.

''ஹைதர் ஆற்காட்டில் இருக்க, மைசூர் படைக்குத் தலைமை தாங்கியது முகமது அலி. கோட்டையைக் காக்க கர்னல் லாங் 250 ஐரோப்பியர், 500 இந்திய வீரர்கள் மற்றும் நவாப், பாளையக்காரர்களின் 1200 படை வீரர்கள் அடங்கிய மாபெரும் இராணுவ படையை திரட்டியிருந்தார்.

பெரும் உயிர் சேதத்துடன் தான் மைசூர் படை தாக்குதலைத் தடுத்து நிறுத்த முடிந்தது. ஹைதர் வந்தவாசியில் மூன்று நாட்கள் தங்கியிராமல் தொடர்ந்து தாக்கியிருந்தால் கோட்டையைக் கைப்பற்றி இருக்கக்கூடும். ஆனால் அவ்வாறு செய்யாததற்குக் காரணம், அயர் கூட்டின் திறமையை அறிந்திருந்ததால், தான் வெற்றிபெறுவது சாத்தியமில்லை என கருதியிருக்கலாம்'' என குறிப்பிட்டுள்ளார்.

மராத்தியர்கள் தாக்குதலுக்கு எதிராக திப்புவுடன் நட்புறவுடன் இருக்கவே ஆங்கிலேயர் விரும்பியதாகவும் அதற்கான காரணங்களை தன் தந்தைக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் விளக்குகிறார்.

"திப்புவைப் போன்று 1,10,000 வீரர்கள் கொண்ட ஒரு மாபெரும் படையை மராத்தியர்கள் வைத்திருக்கவில்லை. திப்புவின் படையில் பெரும்பகுதியினர் துருக்கிய மெய்க்காப்பாளர் படை போன்று நன்கு பயிற்சி பெற்றவர்கள்.

மதக் கோட்பாட்டின் அடிப்படையில் மற்றொரு மதத்தைப் பின்பற்றுபவர்களை எதிரிகளாகக் கருதி ஒழிப்பதைக் கொள்கையாகக் கொள்ளாதவர்கள். மராத்தியர் படைக் கட்டுப்பாடு ஏதும் பின்பற்றாதவர்கள். மாறாக திப்புவின் படைவீரர்கள் சுல்தான் எழுதிய ஐரோப்பிய ராணுவ உத்திகள் அடங்கிய புத்தகத்தை படித்து வருபவர்கள்.'' என்கிறார்

திப்பு ஆங்கிலேயரின் விரிவாக்கக் கொள்கையை நன்கு புரிந்திருந்தவர் என்பதால் தனது நாட்டின் இறையாண்மையையும், பொருளாதார நலன்களையும் பாதுகாக்க ஆங்கிலேயரை எதிர்க்கத் துணிந்தார். இதர பிராந்திய அரசுகள் அவருக்கு துணையாக வராததால் பிரெஞ்சுக்காரர்களுடன் கூட்டு சேர்ந்து போர் புரிய முடிவெடுத்தார்.

சர் தாமஸ் மன்றோ, வரலாறு, பிரிட்டிஷ் ஆட்சி
படக்குறிப்பு, சென்னையில் அமைந்துள்ள சர் தாமஸ் மன்றோ சிலை

ஆனால் பிரெஞ்சுப் புரட்சியின் நிச்சயமற்ற போக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து எதிர்பார்த்த உதவியை இயலாததாக்கிற்று. இருப்பினும் ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கைக்குப்பின் ஆங்கிலேயரை நாட்டை விட்டு விரட்ட கடும் முயற்சியை மேற்கொண்டார்.

கான்ஸ்டான்டிநோபிளுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி ஆப்கானிய ஆட்சியாளர் சாமன் ஷாவை இந்தியாவின் மீது படையெடுக்க வேண்டினார். இம்முயற்சியின் ஒரு நடவடிக்கையாக மராத்தியர்களுடனும் பிரஞ்சுக்காரர்களுடனும் சமாதானம் செய்து கொண்டார்.

ஆனால் மராத்தியர்களுடனும் நிஜாமுடனும் சமாதானம் செய்துகொண்டு திப்புவை தனிமைப்படுத்துவது என புதிதாக கவர்னர் ஜெனரலாக பதவியில் அமர்ந்த மார்னிங்டன் முடிவெடுத்தார். மராத்தியர்களும் திப்புவுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி ஆங்கிலேயருடன் சமாதானம் செய்து கொண்டனர்.

இதற்கிடையில் மொரிசியசிலிருந்து பிரெஞ்சுக்காரர்களை மைசூர் சுல்தான் படையில் சேர அறைகூவல் விடப்பட்டதாக செய்தி வந்ததாகக்கூறி திப்புவை தாக்க தயாரிப்பு வேலைகள் நடந்தன.

1799 ஜனவரியில் 20,000 வீரர்கள் வேலூரில் திரட்டப் பட்டனர். நிஜாமும் மராத்தியர்களைப்போல் திப்புவுக்கு துரோகம் செய்தார். 13,000 வீரர்களை ஆங்கிலேயருக்கு உதவ நிஜாம் அனுப்பினார். முதலில் ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையிலும், பின்னர் ஹாரிஸ் தலைமையிலும் ஸ்ரீரங்கப் பட்டனத்தின் மீது தாக்குதல் நடந்தது, மே 4-ஆம் நாள் திப்பு சரணடைய மறுத்ததால் டேவிட் பெய்ர்ட் தலைமையிலான ஆங்கிலேயர் படையால் கொல்லப்பட்டார்.

சர் தாமஸ் மன்றோ, வரலாறு, பிரிட்டிஷ் ஆட்சி

பட மூலாதாரம், Getty Images

1792-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கைப்படி மலபார், மாவட்டம், திண்டுக்கல், பாராமகால் (சேலம் மாவட்டம்) ஆகிய திப்புவின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள் ஆங்கிலேயருக்கு வழங்கப்பட்டன. பாராமகால் சிவில் நிர்வாகத்திற்கு கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ் கேப்டன் ரீட் ஐ நியமித்து அவருக்கு உதவ லெப்டினண்ட் மன்றோவையும் மற்றும் இரு ராணுவ அதிகாரிகளையும் பணியில் அமர்த்தினார்.

மன்றோவின் நிலவரி சீர்திருத்தம்

பாராமகாலில் நிலவரி நிர்வாகத்தை சீரமைப்பதையே முதன்மைப் பணியாக மன்றோ கருதினார். விவசாயிகளிடமிருந்து நேரடியாக வசூலிக்கும் முறையை ரீட் ஒத்துழைப்போடு அமல்படுத்தினார். இம்முறையின் கீழ் விவசாயிகள் நிலத்தின் மீது விதிக்கப்படுகின்ற வரி/வாடகையை நேரடியாக அரசுக்கு செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நிலம் அளக்கப்பட்டு வரி நிர்ணயிக்கப்படும்.

விவசாயிக்கு விளையும் நிலத்தின் பரப்பளவை குறைக்கவோ, அல்லது கூட்டவோ உரிமை வழங்கப்பட்டது. நிலத்தை குத்தகைக்கு விடவோ, விற்கவோ, அடமானம் வைக்கவோ, பரிசாக வழங்கவோ அவருக்கு உரிமை தரப்பட்டது. ரயத்துவாரி முறை என அழைக்கப்பட்ட இத்திட்டம் நல்ல பலனைக்கொடுத்தது.

வருவாய் துறையில் நடந்த முறைகேடுகள்

மன்றோ பாராமகால் வருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் மாவட்ட ஆட்சியர் சம்பளத்தை உயர்த்த வருவாய் துறையின் பரிந்துரையை அரசு நிராகரித்திருந்தது. இது குறித்து அவர் தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் வருவாய்துறையில் நடக்கும் ஊழல்களை விரிவாக சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியர் சம்பளத்தை உயர்த்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

'''நடைமுறையில் இருக்கும் சம்பளத்தை வைத்து மாவட்ட ஆட்சியர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது... மாறாக கண்டுபிடிக்க முடியாத முறையில் மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களிடமிருந்து கபளீகரம் செய்து ---ஒவ்வொரு நாளும் தங்களது ஊதியத்திற்கு மேலான வாழ்க்கை வாழ்வதையும் சில வருடங்களில் பெருமளவில் செல்வம் சேர்ப்பதையும் பார்க்கிறோம்'' என குறிப்பிட்டுள்ளார்

இது எப்படி சாத்தியமாகிறது என்பதையும் மன்றோ விளக்குகிறார்.

''வரி/வாடகை பணமாக செலுத்தும்போது உண்மையாக செலுத்தவேண்டிய தொகையைக் குறைத்தும், பொருளாக வழங்குவதானால் நிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் அளவு, விற்ற விலை ஆகியவற்றைக் குறைத்தும் வசூலிக்கப்படுகிறது. படித்த, நற்குணம் பொருந்தியவர்கள் இவ்வாறு செயல்படுவார்களா என்று சொல்வதெல்லாம் பயனற்றது. உண்மை இத்தகைய எண்ணத்திற்கு மாறாக உள்ளது.

அதே போன்றுதான் இது அவர்களால் செய்யப்படுகிறதோ அல்லது அவர்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் செய்கிறார்களா என்பதும். அவர்களுக்கு வரும் இத்தகைய பொருளீட்டு அவர்கள் முகவர்கள் மூலம் தான் நடக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அவர்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் போது அவர்கள் நிர்ணயிக்கும் விலையிலேயே மக்கள் பொருள்களை வாங்குவதால் அரசுக்கும், மக்களுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது என்பதைக் கண்கூடாகக் காண முடியும்.''

''மேலும் சில பகுதிகளில் எவ்வளவு பயிர் விளைவிக்கப் படுகிறதோ, ஒவ்வொரு வகைக்கும் வெவ்வேறு விதமான விலையோ அல்லது பொருளோ நிர்ணயிக்கப்படுகிறது. அப்போது நிலம் அளக்கப்படுகிறது. நில அளவையர் அறிக்கை தயாரிக்கும்போது அவர்கள் வாங்கக்கூடிய லஞ்சத்திற்கு ஏற்றவாறு வரியை நிர்ணயிக்கின்றனர்.

விவசாயிகள் மீதும் அரசின் மீது இம்மாதிரியான ஆயிரக்கணக்கான பித்தலாட்டங்கள் செய்கின்றனர். இத்தகைய நிர்வாகம் விரைவில் இந்நாட்டை அழித்துவிடும்; மக்கள் இத்தகைய கொடுமைகளுக்கு மத்தியில் கிராமத்தை விட்டு வெளியேறாமல் அடுத்து வரும் ஆண்டுகளிலும் வரக்கூடிய, தொடர இருக்கும் இன்னல்களைப் பொருட்படுத்தாது விவசாயம் செய்து வருகின்றனர்'' என்கிறார் அவர்.

சர் தாமஸ் மன்றோ, வரலாறு, பிரிட்டிஷ் ஆட்சி
படக்குறிப்பு, சென்னையில் அமைந்துள்ள சர் தாமஸ் மன்றோ சிலை

நிலப்பிரபுத்துவ சமூகத்திற்கு மாற்றாக உழவர் உடமை சமூகம்

காரன்வாலிஸ் திட்டமிட்ட நிலப்பிரபுத்துவ சமூகத்திற்கு மாற்றாக உழவர் உடமை சமூகத்தை குடிமக்கள் நலன் கொண்ட அரசு அமைப்பின் அங்கமாக மன்றோ பரிந்துரைத்த ரயத்வாரி முறை உள்நாட்டில் பின்பற்றப்பட்ட நடைமுறை அடிப்படையிலேயே என்பதை பேடன் பவல் (The Land Systems of British India), நில்மணி முகர்ஜி (Ryotwari System in the Madras Presidency) ஆகியோரின் ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

காலனி ஆட்சியாளர் நலன் கண்ணோட்டத்திலும் இத்திட்டம் பலனுள்ளதாகக் கருத்தப்பட்டது. ஏனெனில் மன்றோ விளக்கிக்கூறியது போல வரி/வாடகை நியாயமானதாக இருந்தால் விவசாயிகள் அரிசி மற்றும் உணவு தானியங்களுக்குப் பதிலாக [பிரிட்டன் நாட்டிற்கு தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்ய] தென்னை, கரும்பு, பருத்தி, இண்டிகோ போன்றவற்றைப் பயிரிடுவார்கள். அதன் விளைவாக அவர்களுக்கு கிடைக்கும் இலாபத்திலிருந்து ஆங்கிலேயர் உற்பத்திப் பொருட்களையும் பெருமளவில் வாங்குவார்கள்.

முதன்மை ஆட்சியர்

1799ஆம் ஆண்டு பாராமஹாலில் பணியாற்றிய பிறகு, ஓராண்டு கனரா மாவட்டத்திலும், அதன்பின் நிஜாமால் வழங்கப்பட்ட மாவட்டங்களின் (தற்போதைய ராயலசீமா) முதன்மை ஆட்சியராக ஏழு ஆண்டுகளும் பணியாற்றிய காலமே தன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் என்று மன்றோ எழுதுகிறார்.

அதற்கு முன் இரு நூற்றாண்டு காலமாக அந்த ஆட்சிப்பகுதிகளைக் கைப்பற்றுவதில் ஏற்பட்ட சண்டைகள், நிலவிய அரசியல் கொந்தளிப்பு, குழப்பம், நடந்த கொள்ளை, கொலைகள் போன்றவற்றால் மக்கள் பசியும் பட்டினியுமாக வாழ்ந்து வந்திருந்தனர்.

மன்றோ பாளையக்காரர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு பேராசை கொண்ட கிராம முன்சிப், கர்ணம் ஆகியோரின் கொடுமைகளுக்கும் முடிவு கட்டி அங்கு அமைதியையும் பாதுகாப்பான சூழலையும் உருவாக்கினார்.

பின் அங்கும் பாராமகாலில் அறிமுகப்படுத்திய ரயத்துவாரி நில வரித்திட்டத்தை அமல்படுத்தி மக்கள் மனதை வென்றார். மக்கள் "மாண்டவ்ய முனி" என்று அவரை அழைத்து அரை தெய்வ நிலையில் வைத்தனர். அந்நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு "மன்ரோலப்பா" என்று பெயரிட்டனர். திருப்பதி கோவிலில் பெருமாளுக்கு "மன்றோ தளிகை" படைத்தனர்.

சர் தாமஸ் மன்றோ, வரலாறு, பிரிட்டிஷ் ஆட்சி

பட மூலாதாரம், Getty Images

சொந்த நாட்டில் மன்றோ

1807ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மன்றோ தனது மாவட்ட ஆட்சியர் பதவியைத் துறந்து தாயகம் செல்ல விரும்பினார். அவர் பிரிந்து செல்வதைக் கேள்வியுற்று மக்கள் வருத்தமடைந்த நிலையில், 1808 ஏப்ரல் மாதம் மன்றோ பிரிட்டன் சென்றடைந்தார். அங்குச் சில மாதங்களுக்கு முன்பே அவரது தாய் இறந்திருந்தார்; தந்தை உடல் மற்றும் மன ரீதியாகத் தளர்ச்சியுற்றிருந்தார்.

மன்றோவுக்குக் காதும் சரியாகக் கேட்காததால், தனது பழைய உறவினர்களுடன் சரிவரக் கலந்துரையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சில மாதங்கள் மட்டுமே எடின்பரோவில் தங்கியிருந்துவிட்டு அவர் லண்டன் சென்றார். அங்கு, கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர் குழு பல்வேறு விவகாரங்கள் குறித்து அவருடன் ஆலோசனை நடத்தியது.

கம்பெனி இயக்குனர் குழுமத்துடன் சந்திப்பு

இந்தியாவின் உள்நாட்டுக் கொள்கை சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்னைகளான நிலவுடைமை, காவல், நீதி நிர்வாக முறை பற்றிய மன்றோவின் கருத்துக்களை இயக்குனர் குழு கேட்டறிந்தது. தடையற்ற வர்த்தகக் கொள்கை ஆதரவாளரான மன்றோ இந்திய வணிகத்தை பிரிட்டிஷ் பேரரசின் இதர துறைமுகங்களுக்கும் திறந்துவிடுமாறு வேண்டினார்.

இந்தியாவிலிருத்து ஏற்றுமதி செய்யப்படும், இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருள்களை பட்டியலிட்ட மன்றோ, பிரிட்டன் நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் உற்பத்திப் பொருள்களின் அளவை அதிகரிக்குமாறு பரிந்துரைத்தார்.

இந்தியாவில் பருத்தி உற்பத்தியை மேம்படுத்துவதன் அவசியத்தையும் அமெரிக்கா அல்லது இதர அந்நிய நாடுகளின் பருத்தி ரகத்தை அறிமுகப்படுத்த ஆவண செய்யுமாறு வேண்டினார்.

மீண்டும் சென்னையில் மன்றோ

ஆறாண்டுகள் தாய் நாட்டில் தங்கியிருந்த மன்றோ 1814-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெட்ராஸ் மாகாண காவல், நீதி நிர்வாக சீர்திருத்தங்களை பரிந்துரைக்கும் குழுவிற்கு ஆணையராக பொறுப்பேற்க கப்பல் பயணம் மேற்கொண்டார். இந்த முறை அவருடன் அவரது மனைவி ஜெயின் கேம்பல் சென்றார். இரு மாதங்களுக்கு முன் தான் இருவருக்கும் திருமணம் நடந்திருந்தது.

சர் தாமஸ் மன்றோ, வரலாறு, பிரிட்டிஷ் ஆட்சி
படக்குறிப்பு, சென்னையில் அமைந்துள்ள சர் தாமஸ் மன்றோ சிலை

மீண்டும் உள்ளாட்சி நிர்வாகம்

காரன்வாலிசின் சட்ட தொகுப்பு (1793) மாவட்ட ஆட்சியரிடமிருந்த நிலவரி வசூலிக்கும் அதிகாரத்தை ஒரு சிறப்பு மாவட்ட நீதிபதிக்கு வழங்கியிருந்தது. கிராம தலைவர் மற்றும் அவரது இதர துணை அதிகாரிகளின் அதிகாரம் பலவீனப்படுத்தப்பட்டிருந்தது. மன்றோ பஞ்சாயத்து முறையை மீட்க வேண்டினார்.

காவல்துறை கண்காணிப்பு அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு மாற்றவும், அதுபோல் மாஜிஸ்டிரேட் பணிகள் ஆட்சியருக்கு திருப்பி வழங்கப்படவும் வலியுறுத்தினார். சென்னை மாகாணத்திற்கான ஆணையராக நியமிக்கப் பட்ட போது (1814), ஆளுனர் ஹுக் எலியட் ஒத்துழைப்புடன் மன்றோ தனது ஆலோசனைகளை இயக்குனரகம் ஏற்க செய்தார்.

பல எதிர்ப்புகளையும் மீறி சென்னையில் மன்றோ எடுத்த முயற்சியின் விளைவாக, பரம்பரையாக வந்த கிராம நிர்வாக அலுவலர்கள் காவல் பணிக்கும், கிராமத்தலைவர்கள் சிறிய வழக்குகளை விசாரித்து நியாயம் வழங்கவும் கிராம, மாவட்ட பஞ்சாயத்துகள் அதிகாரம் பெற்றன.

இதன் விளைவாக ஐரோப்பியர் ஒருவர் காவல் கண்காணிப்பாளராகவும், இந்திய குடிமகன்கள் காவல் ஆய்வாளர் களாகவும் நியமிக்கப்பட்டனர். ஐரோப்பிய கண்காணிப்பாளர் காவல் மட்டுமின்றி ராணுவப் பணிகளையும் சேர்த்து பார்த்துக்கொள்ளுமாறு ஆணையிடப்பட்டது.

ஆளுநராக மன்றோ

பிரிட்டன் நாட்டின் தலைசிறந்த அரசியல்வாதி ஜார்ஜ் கானிங் (நாட்டின் பிரதம மந்திரியாக சிறிது காலம் (1827) செயல்பட்டவர்.) கிழக்கிந்திய கம்பெனி கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் என்ற முறையில் மன்றோவை மெட்ராஸ் மாகாண ஆளுநராக பரிந்துரைத்தார். அதன்படி மன்றோ 1820-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆளுநராக பொறுப்பேற்றார்.

அவர் கானிங் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில் இந்தியர்கள் பற்றிய புரிதலையும் கோடிட்டுக் காட்டுகின்றார்.

''இந்துக்களையோ அல்லது வேறு எந்த பிரிவு மக்களையோ வேகமாக முன்னேற்றுவதற்கான முயற்சியில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்ததிலிருந்து அவர்கள் குணங்கள் அப்படியே தான் இருக்கிறது. இன்னும் ஒரு நூற்றாண்டிற்கு எத்தகைய முன்னேற்றமும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை'' என்று தன்னுடைய எண்ணத்தை பதிவு செய்கிறார்.

உள்நாட்டு மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு

1822-ஆம் ஆண்டு மாகாணத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை, கல்வி நிலை பற்றி தகவல் சேகரிக்க வருவாய்துறைக்கு மன்றோ உத்தரவிட்டார். அவ்வறிக்கை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காததற்குக் காரணம், மக்களின் ஏழ்மை. அதனால் கல்விக்கான கோரிக்கை இல்லாத நிலை என சுட்டிக்காட்டியது. இதை சரி செய்ய நன்கு படித்தவர்களுக்கு அரசு அலுவலகங்களில் பணி வழங்குவது, பள்ளிப்பாடக் குழு ஆசிரியர்களுக்குத் தேவையான கல்வி போதிப்பது போன்ற பரிந்துரைகளையும் வழங்கியிருந்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்துக்களுக்கு ஒன்று, இஸ்லாமியர்களுக்கு ஒன்று என இரு பள்ளிகளையும், அது போன்ற ஒன்று தாலுகா அலுவலகத்திலும் அமைத்திட மன்றோ உத்தரவிட்டார்.

ஆசிரியர்கள் சம்பளம் ரூபாய் 15, ரூபாய் 9 எனவும் அதை விட அதிக தொகையை அவர்களுடைய மாணவர்களிடமிருந்து பெறலாம் என ஆணையிட்டார்.

வலங்கை இடங்கை சச்சரவுகளில் அரசின் நிலைப்பாடு

அடிக்கடி வெடித்த வலங்கை இடங்கை சாதிய மோதல்களால் ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனை பற்றி குறிப்பிட்ட மன்றோ 'இது மாதிரி தருணங்களில் அரசு அதிகாரிகள் பொது அமைதியைக்காப்பதில் கவனம் செலுத்தவேண்டுமே தவிர சர்ச்சைக்குரிய திருவிழாக்களின் போது பயன் படுத்தும் பல்லக்கு, கொடி உரிமை, கோரிக்கைகளை ஆதரித்தோ, எதிர்த்தோ செயல்படக்கூடாது என கட்டளையிட்டார்.

மன்றோவின் இறுதி நாட்கள்

சர் தாமஸ் மன்றோ, வரலாறு, பிரிட்டிஷ் ஆட்சி
படக்குறிப்பு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் சர் தாமஸ் முன்றோவின் கல்லறையும் நினைவிடமும் அமைந்திருக்கிறது.

1826-ஆம் ஆண்டு மன்றோ தன்னை ஆளுநர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு இயக்குநகரகத்திற்கு கடிதம் எழுதினார்.

மன்றோவின் இரண்டாவது மகன் உடல் நிலை பாதித்த நிலையில் அவரது மனைவி உடனே பிரிட்டன் செல்ல வேண்டியிருந்தது.

அவர் மார்ச் மாதம் சென்றபின் மன்றோ அவருக்குப்பின் ஆளுநர் பதவிக்கு வர வேண்டிய ஸ்டீபன் ரம்போல்ட் லஷிங்டனால் உடனடியாக பிரிட்டனில் இருந்து வரமுடியவில்லை.

இந்தநிலையில் தன்னை வெகுவாக நேசித்த மக்களிடம் விடை பெறுவதற்காக அனந்தப்பூர் சென்று அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு ஜூலை மாதம் 4 ஆம் நாள் கூட்டி நகர் சென்றிருக்கிறார் மன்றோ.

அங்கு அவரது சிப்பாய்களில் சிலர் காலரா நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கின்றனர். அடுத்த நாள் மன்றோ புறப்பட்டு கர்னூல் மாவட்டத்தில் உள்ள பட்டி கொண்டா சென்றவுடன் அவரும் காலரா நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அன்று (ஜூலை 6ஆம் நாள்) மாலை நோயின் வீரியம் அதிகரித்து இரவு அவர் இறந்தார்.

உடனடியாக அவரது உடல் கூட்டியில் புதைக்கப்பட்டிருந்தாலும் 1831-ஆம் ஆண்டு மீண்டும் அங்கிருந்து புனித ஜார்ஜ் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டு புனித மேரி தேவாலயத்திற்கு முன் வைக்கப்பட்டது. அதன் மேல் அவரது மார்பளவு சிலை அவரது மனைவியால் எழுப்பப்பட்டது.

1839-ஆம் ஆண்டு மன்றோவின் குதிரையேற்ற சிலை சென்னை அண்ணா சாலையில் தீவுத்திடலில் நிறுவப்பட்டது.

மன்றோவின் மங்காத புகழ்

சர் தாமஸ் மன்றோ, வரலாறு, பிரிட்டிஷ் ஆட்சி
படக்குறிப்பு, புனித மேரி தேவாலயத்தில் சர் தாமஸ் மன்றோவுக்கு நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உள்ள மாவட்ட ஆவணங்கள், மன்றோவின் கடிதங்கள் தினக்குறிப்புகளிலிருந்து அவர் மேற்கொண்ட பயணங்கள், மக்களின் குறைகளை நேரில் கேட்டுத் தெரிந்து, ஊழல் புரிந்த நில அளவையர்கள், கர்ணம், அமில்தார், கள்ளக்கணக்கு எழுதி அரசு பணத்தை கையாடியவர்கள் மீது எடுக்கப்பட்ட தண்டனை நடவடிக்கைகள் அனைத்தையும் அறிய முடிகிறது.

மன்றோவின் நிர்வாகத்திறமை, அவரது சாதனைகள், மனித நேய நற்பண்புகள் எந்த அளவிற்கு ஒரு நூற்றாண்டுக்கு பிறகும் அடுத்த சந்ததியினர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை மெட்ராஸ் மாகாணத்திற்கு 1945ஆம் ஆண்டு ஆளுநராக அனுப்பி வைக்கப்பட்ட சர் ஆர்ச்சிபால்ட் நை தான் பதவியேற்குமுன் மன்றோவின் வாழ்க்கை வரலாற்றை படிக்குமாறு பிரதமர் அட்லீ தன்னைக் கேட்டுக்கொண்டதாகவும் சைமன் குழுவின் உறுப்பினராக அவர் இந்தியாவிற்கு செல்லுமுன் அவ்வாறு செய்ததாகவும் அவரிடம் கூறியதாக எழுதியிருக்கிறார்.

கட்டுரையாளர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ஆவார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு