ஷேக் ஹசீனா விவகாரம்: இந்தியாவின் 'நிபந்தனைகளுக்கு' வங்கதேசம் அளித்த பதில் என்ன?

பட மூலாதாரம், Salahuddin AHMED / AFP via Getty Images
ஷேக் ஹசீனா தொடர்பாக இந்தியா மற்றும் வங்கதேச அரசுகளுக்கு இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று வங்கதேச வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷமா ஒபைத் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஷேக் ஹசீனா தொடர்பாக இந்தியா இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறியதாக அண்மையில் பிபிசி வங்க சேவை செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியைச் சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அவர், "அரசு தரப்பிலிருந்து இதுபோன்ற எந்தத் தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சகம் அல்லது இந்திய அரசு அதிகாரபூர்வமாக ஏதேனும் தெரிவித்தால் மட்டுமே நாங்கள் அதற்குப் பதிலளிப்போம்" என்றார்.
மேலும், செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான உறவு ஷேக் ஹசீனாவை விடப் பெரியது. இரு நாடுகளுக்கும் இடையே சில பிரச்னைகள் உள்ளன. அவற்றை ராஜ்ஜிய ரீதியாகத் தீர்த்துக்கொள்வோம். இந்தியாவில் இருந்துகொண்டே வங்கதேசத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்க அவர் முயற்சி செய்து வருகிறார்" என்றும் தெரிவித்தார்.
இந்தியா - வங்கதேசம் இடையிலான தூதரகப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "இந்தக் கூட்டம் ரத்து செய்யப்படவில்லை. ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்றார். இந்தப் பேச்சுவார்த்தை நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
2024 ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து அவர் வங்கதேசத்திலிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்தார். அன்றிலிருந்து அவர் இந்தியாவில் வசித்து வருகிறார்.
"நாடுகடத்தல் ஒப்பந்தத்தின்படி அவர் வங்கதேசத்துக்கு வந்து தனது தண்டனையை அனுபவிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று ஷமா ஒபைத் அவர் கூறினார்.
ஷேக் ஹசீனாவைத் தண்டிப்பதே வங்கதேச அரசின் நோக்கம் என்றால், அவருக்கு ஏன் பயண அனுமதி வழங்கி நாட்டுக்குள் வர அனுமதிக்கக் கூடாது என்றும், குடியேற்றப் பிரிவில் அவரைக் கைது செய்யலாமே என்றும் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அவர், "இந்தியா ஏன் நாடுகடத்தல் ஒப்பந்தத்தைப் பயன்படுத்தக் கூடாது? இந்தியா இதற்குப் பதிலளித்தால், வங்கதேச மக்களுக்கும் அரசுக்கும் அது விஷயங்களை எளிதாக்கும்" என்றார்.
டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரகத்தில் ஷேக் ஹசீனா கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தது குறித்த கேள்விக்கும் ஷமா ஒபைத் பதிலளித்தார்.
"ஒரு சட்ட நிறுவனம் இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளது. தூதரகம் அதைப் பெற்றுக்கொண்டுள்ளது. அரசு தற்போது அதைப் பரிசீலித்து வருகிறது. சட்டப்படி, குடியுரிமை இருப்பது மட்டுமே கடவுச்சீட்டு பெறுவதற்கான உத்தரவாதம் அல்ல. ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால், அவருக்குக் கடவுச்சீட்டு வழங்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இல்லை" என்றார்.

பட மூலாதாரம், Chowdhury Hasan Mahmud
கோபால்கஞ்சில் வன்முறை
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டங்கள், வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, கோபால்கஞ்ச் மாவட்டத்தின் துணை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் அந்தக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தைக் கைப்பற்றி, அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தினர். மேலும், நகரின் லாஞ்ச்காட் பகுதியில் அமைந்துள்ள 'ஜூலை நினைவுச் சின்னத்திற்கும்' தீ வைத்தனர். காவல் துறை வாகனம் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
நகரின் மற்ற பகுதிகளிலும் சேதப்படுத்தும் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது. காவல் துறை வாகனம் ஒன்றில் 'ஜெய் பங்களா' என்று எழுதப்பட்டிருந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் டயர்களை எரித்து உள்ளூர் சாலைகள் சிலவற்றில் போக்குவரத்தை முடக்கினர்.
இந்தப் போராட்டங்களின்போது, கோபால்கஞ்ச் அரசு கல்லூரியின் பெயர்ப் பலகை அகற்றப்பட்டு, கல்லூரியின் முந்தைய பெயரான 'அரசு பங்கபந்து கல்லூரி' என்ற பெயர் கொண்ட பதாகை வைக்கப்பட்டது.
2024 ஆகஸ்ட் மாதம் அவாமி லீக் அரசாங்கம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் கல்லூரியின் பெயர் கோபால்கஞ்ச் அரசு கல்லூரி என மாற்றப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை முழுவதும் நடைபெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து, கோபால்கஞ்ச் மாவட்ட துணை ஆணையர் முகமது ஆரிஃப்-உஸ்-ஜமான் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முகமது ஹபிபுல்லா ஆகியோரைப் பதவிகளில் இருந்து நீக்கி வங்கதேச அரசு உத்தரவிட்டது.

பட மூலாதாரம், AFP via Getty Images
இந்தியாவில் இருந்து ஷேக் ஹசீனா மீண்டும் வங்கதேசத்துக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
2025 நவம்பரில், வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், ஷேக் ஹசீனா விசாரணைக்கு இல்லாத நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்தது. போராட்டக்காரர்களுக்கு எதிராக அவரது அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று தீர்ப்பாயம் தெரிவித்தது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளையும் ஒட்டுமொத்த சட்ட நடவடிக்கைகளையும் ஷேக் ஹசீனா நிராகரித்துள்ளார்.
79 வயதான ஷேக் ஹசீனா, வரும் டிசம்பரில் வங்கதேசத்துக்குத் திரும்ப விரும்புவதாக ஜூலை மாதம் முதல் பலமுறை தெரிவித்துள்ளார்.
தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இடைக்கால அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ஞாயிற்றுக்கிழமை கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அக்கட்சியின் தலைவர்களும் ஆதரவாளர்களும் திரண்டதாகத் தெரிகிறது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் வங்கதேசத்துக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி, நவம்பர் 19-ஆம் தேதி அவாமி லீக் கட்சி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாகவே தொண்டர்கள் திரண்டுள்ளனர்.

பட மூலாதாரம், Chowdhury Hasan Mahmud
வங்கதேசத்தில் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருகிறார்.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படுவதையும், வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவுக்கு வருகை தருவதையும் அந்நாட்டு அரசு தொடர்புபடுத்தியுள்ளது. ஹசீனா மற்றும் வங்கதேசத்தால் தேடப்படும் பிற தப்பியோடிய நபர்களை வங்கதேசத்துக்குத் திருப்பி அனுப்புவது, இந்தப் பயணத்துக்குச் சாதகமான சூழலை உருவாக்க உதவும் என்று வங்கதேசம் கூறுகிறது.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி வங்கதேசம் அனுப்பிய கோரிக்கை கிடைத்துள்ளதாக இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், இதுகுறித்து எந்த முடிவையும் இதுவரை அறிவிக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































