பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்பந்தம் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்பந்தம் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
    • எழுதியவர், அபிஷேக் பிரதாப் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த புதன்கிழமை, ராணுவ வலிமை, பொருளாதாரத் திறன், புவிசார் அரசியல் முன்னுரிமைகள் ஆகியவற்றில் ஒன்றுக்கொன்று பெரிதும் மாறுபட்ட நான்கு நாடுகளின் பாதுகாப்புத் துறைப் பிரதிநிதிகள் ஒரே மேசையில் சந்தித்தனர்.

அந்த நான்கு நாடுகள் பாகிஸ்தான், துருக்கி, கத்தார், இந்தோனேசியா. பாதுகாப்புத் துறை உற்பத்தி, ஆராய்ச்சி, பாதுகாப்புத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பதற்காக இந்த நாடுகள் பலதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதற்கு 'பத்ர் புரிந்துணர்வு ஒப்பந்தம்' அல்லது 'பத்ர் எம்ஓயு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்புதான் பாகிஸ்தான், துருக்கி, செளதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையே 'மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்' ஏற்பட்டிருந்தது என்பதால் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் மற்றும் மாறிவரும் உலகளாவிய அரசியல் சூழலுக்கு மத்தியில், சில வார இடைவெளியில் ஏற்பட்டுள்ள இந்த இரண்டு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களும் சர்வதேச ராஜதந்திரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

பாகிஸ்தானில், இது அந்நாட்டின் பாதுகாப்புத் தொழில்துறைக்கு ஒரு பெரிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இந்தியாவிலும் இந்தப் புதிய கூட்டமைப்பின் மூலோபாயத் தாக்கங்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

முக்கியமான கேள்வி இதுதான்: வளைகுடா நாடுகள் முதல் தென்கிழக்கு ஆசியா வரை புதிய ராணுவக் கூட்டமைப்பு ஒன்று உருவாகிறதா?

செளதி அரேபியா தலைமையிலான 'மெக்கா ஒப்பந்தத்திலிருந்து' 'பத்ர் எம்ஓயு' எந்த வகையில் வேறுபடுகிறது? இந்தியாவின் முக்கிய பாதுகாப்புக் கூட்டாளியான இந்தோனேசியா இந்த ஒப்பந்தத்தில் இணைந்திருப்பது, இந்தியாவின் நலன்களை எவ்வாறு பாதிக்கும்?

தோஹாவில் கையெழுத்தான 'பத்ர் எம்ஓயு' என்றால் என்ன?

பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்பந்தம் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
படக்குறிப்பு, தோஹாவில் பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நான்கு நாடுகள் பத்ர் எம்ஓயுவில் கையெழுத்திட்டன
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், மூலோபாயக் கூட்டாண்மையையும் கூட்டு ஒத்துழைப்பையும் அதிகரிப்பதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, தோஹாவில் 'பத்ர்' புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கத்தார் துணைப் பிரதமரும் பாதுகாப்புத் துறை இணையமைச்சருமான ஷேக் சவுத் பின் அப்துல் ரஹ்மான் பின் ஹசன் அல் தானி, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப், துருக்கி பாதுகாப்பு அமைச்சர் யாசர் குலர், இந்தோனேசியாவின் துணைப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் நேரடியான நோக்கம், நான்கு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறை உற்பத்தியை ஊக்குவிப்பது, தொழில்நுட்பப் பரிமாற்றத்தை மேற்கொள்வது, நவீன பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்துறையை உருவாக்குவது ஆகியவையாகும்.

இந்த ஒப்பந்தம் நிதி அடிப்படையிலும் முக்கியமானது என்று கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. நான்கு நாடுகளின் வெவ்வேறு திறன்களை ஒன்றிணைப்பதன் மூலம், நட்பு நாடுகளின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்திசெய்ய இது உதவும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தனத எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டங்களின் வரம்புக்குள் தன்னிறைவு, கூட்டு உற்பத்தி, தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதாக பிபிசி உருது கூறுகிறது.

நான்கு நாடுகளின் ராணுவ வலிமை எவ்வளவு?

பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்பந்தம் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
படக்குறிப்பு, துருக்கியில் தயாரிக்கப்பட்ட டிரோன்

இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள நான்கு நாடுகளின் மூலோபாயத் திறனைப் புரிந்துகொள்ள, சர்வதேச ஆய்வு நிறுவனங்களின் தரவுகளைப் பார்ப்பது அவசியம்.

குளோபல் ஃபயர்பவர் குறியீட்டின்படி, இந்த நான்கு நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான முழுநேரப் பணியில் உள்ள ராணுவ வீரர்களைக் கொண்ட நாடு பாகிஸ்தான். அங்கு சுமார் 6.60 லட்சம் வீரர்கள் உள்ளனர்.

அடுத்ததாக, துருக்கியில் 4.81 லட்சம் வீரர்களும், இந்தோனேசியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமான வீரர்களும் உள்ளனர்.

கத்தாரில், மற்ற மூன்று நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக, 26,550 முழுநேர ராணுவ வீரர்கள் உள்ளனர்.

ராணுவச் செலவினம் மற்றும் ஆயுத ஏற்றுமதி தொடர்பான விவரங்களைப் பார்க்கும்போது, ஸ்வீடனைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் வேறுபட்ட கோணத்தை அளிக்கின்றன.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின்படி, 2025ஆம் ஆண்டில் துருக்கியின் பாதுகாப்புச் செலவினம் 30 பில்லியன் டாலராக இருந்தது. உலகின் அதிக பாதுகாப்புச் செலவினம் கொண்ட நாடுகளில் துருக்கி 18ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது பாதுகாப்பு ஏற்றுமதியை 122 சதவீதம் அதிகரித்துள்ள துருக்கி, உலகின் 11ஆவது பெரிய ஆயுத விநியோக நாடாக உருவெடுத்துள்ளது. இதனால், இந்தக் குழுவின் முக்கியத் தொழில்நுட்ப சக்தியாக துருக்கி விளங்குகிறது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பாதுகாப்புச் செலவினம் 11.9 பில்லியன் டாலராக இருந்தது. உலக அளவில் அது 31ஆவது இடத்தில் உள்ளது.

அதே ஆண்டில் இந்தோனேசியா தனது பாதுகாப்புத் துறைக்காக 15 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவிட்டது. இது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 26 சதவீதம் அதிகமாகும்.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தில் கிடைக்கும் 2022ஆம் ஆண்டுக்கான இறுதித் தரவுகளின்படி, கத்தாரின் பாதுகாப்புச் செலவினம் 15.4 பில்லியன் டாலராக இருந்தது. இது பாகிஸ்தானின் மொத்த பாதுகாப்புச் செலவினத்தைவிட அதிகமாகும்.

பாகிஸ்தானுக்கு என்ன பலன்?

பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்பந்தம் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

தோஹாவில் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் முற்றிலும் புதிதாகத் தொடங்கப்படவில்லை. இந்த நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே பல இருதரப்பு ராணுவத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

துருக்கியின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான அனடோலு ஏஜென்சியின்படி, பாகிஸ்தான் மற்றும் துருக்கி இணைந்து பாகிஸ்தான் கடற்படைக்காக 'மில்ஜெம் பாபர் வகையை' சேர்ந்த 4 போர்க்கப்பல்களை உருவாக்கி வருகின்றன.

இவற்றில் முதல் இரண்டு கப்பல்கள் இஸ்தான்புல்லிலும், மற்ற இரண்டு கப்பல்கள் கராச்சி கப்பல் கட்டும் தளத்திலும் கட்டப்படுகின்றன. இதன் மூலம் கராச்சி கப்பல் கட்டும் தளம் நவீனமயமாக்கப்பட்டது; கப்பல் கட்டுமானப் பொறியியல் தொழில்நுட்பமும் பாகிஸ்தானுக்குக் கிடைத்தது.

இதேபோல், துருக்கியின் எஃப்என்எஸ்எஸ் நிறுவனமும் இந்தோனேசியாவின் பிடி பிண்டாட் நிறுவனமும் இணைந்து 'கப்லான் எம்டி' பீரங்கி டாங்கியை உருவாக்கியுள்ளன. துருக்கி ஏற்கெனவே கத்தாருக்கு ஆளில்லா விமானங்கள், கவச வாகனங்கள், விரைவுத் தாக்குதல் படகுகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

முன்னதாக இந்த ஆண்டில் பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து உருவாக்கிய 'ஜேஎஃப்-17 தண்டர்' போர் விமானத்தை வாங்குவதில் இந்தோனேசியா ஆர்வம் காட்டியதாகச் செய்திகள் வெளியாகின.

ஜனவரி மாதம் பாகிஸ்தானின் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர் ரஸா ஹயாத் ஹராஜ், ஜேஎஃப்-17 விமானத்தை விற்பனை செய்வது தொடர்பாகப் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பிபிசி உருதுவிடம் கூறினார்.

மத்திய கிழக்கு விவகார நிபுணர் ஆர்ஸூ காஸ்மியின் கருத்துப்படி, "பத்ர் எம்ஓயு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானின் நிலையை ஓரளவுக்கு வலுப்படுத்தக்கூடும். ஆனால், இது அந்நாட்டின் மூலோபாய நிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டதாகக் கூறுவது இப்போதைக்குச் சற்று முன்கூட்டிய முடிவாக இருக்கும்".

பிபிசி நியூஸ் ஹிந்தி சேவையிடம் அவர் கூறுகையில், "பாதுகாப்புத் தொழில்நுட்பக் கூட்டமைப்பை அணுகும் வாய்ப்புதான் பாகிஸ்தானுக்கு இங்கு கிடைக்கும் மிகப்பெரிய நன்மை. வெளிநாட்டு உற்பத்தித் தொழில்நுட்பத்தை அணுகுவதற்கான முக்கிய வாய்ப்புகளும், வெளிநாட்டுக் கூட்டாளிகள் மூலம் உற்பத்தி ஒப்பந்தங்களும் கிடைக்கின்றன. பல்வேறு பொருளாதாரத் தடைகளில் சிக்கியுள்ளதுடன், அதன் அந்நியச் செலாவணி கையிருப்பும் தொடர்ந்து குறைந்துவரும் நிலையில் இது முக்கியமானது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்தச் சூழலில், ராணுவத் தொழில்துறை வளாகத்தை அணுகும் வாய்ப்பும் வெளிநாட்டுக் கூட்டாண்மைகளும் பாகிஸ்தானுக்குக் கிடைக்கின்றன. இதன் மூலம் தனது வழக்கமான ஆயுதக் கையிருப்பை நவீனப்படுத்துவது குறித்து அது சிந்திக்க முடியும். இந்த வகையில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு நிச்சயமாகப் பயனளிக்கக்கூடியது" என்றார்.

"சீனாவை மட்டுமே சார்ந்திருப்பதற்குப் பதிலாக, துருக்கி, கத்தார், இந்தோனேசியா ஆகிய நாடுகளுடனும் பாதுகாப்புத் தொழில்துறை வலையமைப்பை உருவாக்க பாகிஸ்தானுக்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருப்பதால் இந்த ஒப்பந்தம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது" என்றும் அவர் கூறினார்.

அவரது கருத்துப்படி, சீனா, துருக்கி, வளைகுடா கூட்டாளிகள், இந்தோனேசியா போன்ற சக்திகளுடன் இணையும் இந்த விரிவடைந்துவரும் பாதுகாப்பு வலையமைப்பு, பாகிஸ்தானின் மூலோபாயப் பேரம் பேசும் திறனையும் ராஜதந்திரத் தெரிவுகளையும் அதிகரிக்கக்கூடும்.

பத்ர் எம்ஓயுவுக்கும் மெக்கா ஒப்பந்தத்துக்கும் என்ன வித்தியாசம்?

பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்பந்தம் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
படக்குறிப்பு, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவான் (இடது), செளதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (நடுவில்), பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (வலது). இவர்கள் 2026 ஆகஸ்ட் 7ஆம் தேதி செளதி அரேபியாவின் மெக்காவில் முத்தரப்பு கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பாகிஸ்தான், துருக்கி, செளதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பத்ர் எம்ஓயு உருவானதால், இரண்டுக்கும் இடையே பல அடிப்படை வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்புத் துறை நிபுணர்களின் கருத்துப்படி, "மெக்கா ஒப்பந்தம் ஒரு முறையான பாதுகாப்பு உடன்படிக்கையாகும். அதில், ஓர் உறுப்பு நாட்டின் மீது வெளிநாட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்ற கோட்பாடு இடம்பெற்றுள்ளது. இதற்கு மாறாக, பத்ர் எம்ஓயு ராணுவக் கூட்டணியோ போர் ஒப்பந்தமோ அல்ல. இது பாதுகாப்புத் தொழில்துறை, ஆயுதங்களின் கூட்டு உற்பத்தி, தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது."

அங்காராவைச் சேர்ந்த சுயாதீன பாதுகாப்புத் துறைச் செய்தியாளர் லெவன்ட் கமால், பிபிசி உருதுவிடம் பேசுகையில், பத்ர் புரிந்துணர்வு ஒப்பந்தம் மெக்கா ஒப்பந்தத்துடன் எந்த வகையிலும் ஒத்ததல்ல என்று கூறினார்.

வளைகுடா பிராந்தியத்துக்கென தனித்துவமான அரசியல் இயக்கவியலும் முன்னுரிமைகளும் உள்ளன என்று அவர் தெரிவித்தார். அந்த அரசியல் வரைபடத்தில் பல எல்லைகளும் பிரிவுகளும் இருப்பதால், ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டணிகள் மூலம் வெளிப்புறத் தரப்பினர் அவற்றில் செல்வாக்கு செலுத்துவது எளிதல்ல என்றும் அவர் கூறினார்.

புவிசார் அரசியலில் என்ன தாக்கம் ஏற்படும்?

பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்பந்தம் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
படக்குறிப்பு, சமீபத்திய நாட்களில் ஹூத்தி தாக்குதல்களை செளதி அரேபியா எதிர்கொண்டுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, 2025ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் செளதி அரேபியாவில் 30,000 முதல் 40,000 வீரர்களை நிறுத்தியுள்ளது.

அமெரிக்க சிந்தனைக் குழுவான அட்லாண்டிக் கவுன்சிலின் ஆய்வாளர் உமர் சமத் தனது ஆய்வில், "மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்ட சில வாரங்களிலேயே இந்த ஒப்பந்தம் உருவாகியிருப்பது, முஸ்லிம் உலகில் புதிய போக்கு ஒன்று உருவாகி வருவதற்கான அறிகுறியாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"இந்த நடவடிக்கைகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பதற்றமும் நிச்சயமற்ற தன்மையும் நிலவும் இந்தக் காலகட்டத்தில், பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான புதிய வழிகளைத் தேடுவதாகத் தெரிகிறது" என்று உமர் சமத் எழுதியுள்ளார்.

எனினும், இதை 'முஸ்லிம் நேட்டோ' அமைப்பதற்கான முயற்சியாக அவர் கருதவில்லை.

"இது தீவிரமான புவிசார் அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சி அல்ல. மாறாக, உள்ளூர் திறன்களை மேம்படுத்துவது, ஒரே மாதிரியான கருத்துகளைக் கொண்ட கூட்டாளிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, வெளிநாட்டு வல்லரசுகளை அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருப்பதைக் குறைப்பது ஆகியவற்றுக்கான நடைமுறை முயற்சியாகும்" என்று அவர் எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய ஆய்வு நிறுவனங்களான வெளிநாட்டு உறவுகள் கவுன்சில், மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் ஆகியவற்றின் ஆய்வுகளின்படி, மத்திய கிழக்கில் நிலவும் நிலையற்ற சூழலுக்கு மத்தியில், வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதத்தை மட்டுமே நம்பியிருக்க விரும்பவில்லை.

அல் ஜசீராவிடம் பேசிய பாதுகாப்புத் துறை நிபுணர் அர்தா மெவ்லுதோக்லு, "உலகம் இப்போது ஒரே ராணுவக் கூட்டணியின் எழுச்சியைக் காணவில்லை. மாறாக, வளைகுடா முதல் தென்கிழக்கு ஆசியா வரை பரவியுள்ள, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பாதுகாப்பு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் வலையமைப்பு உருவாகிவருவதைக் காண்கிறது" என்றார்.

இந்தியா மீது இதன் தாக்கம் என்ன?

பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்பந்தம் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
படக்குறிப்பு, கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி

இந்தியாவின் பார்வையில், இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம் இந்தோனேசியாவின் பங்கேற்பாகும்.

இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே ஆழமான மூலோபாய உறவுகள் உள்ளன. அண்மையில், இரு நாடுகளுக்கும் இடையே 630 மில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.5,953 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தோனேசியாவுக்கு பிரமோஸ் அதிவேக குரூயிஸ் ஏவுகணைகளையும், அஸ்திரா ஏவுகணைகளையும் இந்தியா வழங்கும்.

இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் இணைந்து பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்பந்தத்தில் இந்தோனேசியா பங்கேற்பதும், பாகிஸ்தானின் ஜேஎஃப்-17 போர் விமானங்களில் ஆர்வம் காட்டுவதும், இந்தியாவின் முக்கியமான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களின் ரகசியத்தன்மை பாதிக்கப்படுமா என்ற கேள்வியை இந்தியாவில் எழுப்புகிறது.

எனினும், இந்தியப் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் இதை உடனடி அச்சுறுத்தலாகக் கருதவில்லை.

இந்திய ஆய்வு நிறுவனமான வான்வெளி சக்தி மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளரும் ஓய்வுபெற்ற குரூப் கேப்டனுமான அஜய் அஹ்லாவத் கூறுகையில், "ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ராணுவக் கூட்டணியாகக் கருத முடியாது. இது முக்கியமாகப் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் பணிகளைப் பகிர்ந்துகொள்வதற்கான முயற்சியாகும். கத்தார் மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியாவுக்கு மிகவும் வலுவான உறவுகள் உள்ளன" என்றார்.

பிரமோஸ் ஏரோஸ்பேஸின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சுதீர் குமார் மிஸ்ரா, இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி ஒப்பந்தங்களில் அறிவுசார் சொத்துரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பாக மிகக் கடுமையான நிபந்தனைகள் உள்ளதாகக் கூறியுள்ளார். அவற்றின் கீழ், தொழில்நுட்பம் மூன்றாவது நாட்டுக்குச் சென்றடைவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"இருப்பினும், ராஜதந்திர ரீதியில் இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு சீனாவைத் தவிர துருக்கியின் தொழில்நுட்பத்தையும் கத்தாரின் முதலீட்டையும் அணுகும் வாய்ப்பை வழங்குகிறது. நீண்டகால அடிப்படையில், இது இந்தியாவின் பாதுகாப்பு உத்திக்குத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய முக்கிய அம்சமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு