மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - தவெக அரசின் முதல் அக்னிப்பரீட்சை

பட மூலாதாரம், MKStalin/Getty/Edappadi Palanisamy
தமிழ்நாட்டில் பெரும் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்குமான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இது தவெக அரசின் சுமார் 4 மாத கால ஆட்சிக்கான முக்கிய மதிப்பீடாகப் பார்க்கப்படுகிறது.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், இதுவரை எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் தாராபுரம், மதுராந்தகம் என இரு தொகுதிகளிலுமே தவெக வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள்
இன்று காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மதுராந்தகம் தொகுதி: செங்கல்பட்டுக்கு அடுத்ததாக ஆத்தூர் ஒருங்கிணைந்த சமூக முன்னேற்ற பயிற்சி மையத்தில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இங்கு தபால் வாக்குகளுக்கு 2 மேஜைகளும், இயந்திர வாக்குகளுக்கு 14 மேஜைகளும் அமைக்கப்பட்டு, மொத்தம் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
தாராபுரம் தொகுதி: திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இங்கு 14 மேஜைகளில் மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இரு மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதுடன், சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை அறைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மதியத்திற்குள் முன்னிலை நிலவரங்கள் மற்றும் இறுதி முடிவுகள் அதிகாரபூர்வமாகத் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஏன் இந்த இடைத்தேர்தல்?
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலுவும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் வெற்றி பெற்றிருந்தனர்.
இருப்பினும், அவர்கள் இருவரும் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, இவ்விரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
பதிவான வாக்குகள் எவ்வளவு?
கடந்த பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலுமே வாக்குப்பதிவு சதவிகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் 86.26% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த பொதுத் தேர்தலின்போது பதிவான 93.22 சதவிகிதத்தைவிட 7.23% குறைவு.
தாராபுரம் தொகுதியில் 80.31% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த பொதுத் தேர்தலில் இங்கு 89.9% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது 9.58% வாக்குப் பதிவு சரிந்துள்ளது.

களம் காணும் முக்கிய வேட்பாளர்கள் யார்?
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இடதுசாரிகள் என முக்கிய அரசியல் கட்சிகள் நேரடியாக மோதும் 5 முனைப் போட்டி நிலவுகிறது.
ஆளும் தவெக கூட்டணி சார்பில், ஏற்கெனவே இத்தொகுதியில் வெற்றி பெற்று தவெக-வில் இணைந்த மரகதம் குமரவேல் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் இ. பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி ஆகியோர் களம் காண்கின்றனர்.
மறுபுறம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் பலப்பரீட்சை தீவிரமாக உள்ளது. தவெக சார்பில் இத்தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான சத்தியபாமா வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார். இவருக்குப் போட்டியாக திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் க. பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் லட்சுமணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இரு தொகுதிகளிலுமே தவெக மற்றும் திமுக-அதிமுக இடையே மிகக் கடுமையான வாக்குச் சேகரிப்பும் அரசியல் மோதலும் அரங்கேறியுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































