174 பேரின் உயிரை காத்த இந்திய விமானி எப்படி இருக்கிறார்? அந்த 17 நிமிடங்களில் என்ன நடந்தது?

புதன்கிழமையன்று, துபையிலிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபை விமானம் நடுவழியில் செளதி அரேபியாவிற்குத் திசைதிருப்பப்பட்டுத் தரையிறக்கப்பட்டது.
படக்குறிப்பு, புதன்கிழமை, துபையிலிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபை விமானம் நடுவழியில் செளதி அரேபியாவிற்குத் திசைதிருப்பப்பட்டுத் தரையிறக்கப்பட்டது.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

துபை-டெல் அவிவ் இடையிலான ஃப்ளைதுபை விமானத்தில் துணை விமானியால் தாக்கப்பட்டதில் காயமடைந்த இந்திய விமானி ஸ்மித் மச்சரின் உடல்நிலை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் அந்த அறிக்கையில். "ஃப்ளைதுபை விமானம் FZ-1073-ன் துணிச்சலான விமானியும், இந்தியக் குடிமகனுமான கேப்டன் ஸ்மித் மச்சரின் உடல்நிலையை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். சௌதி அரேபியாவின் தபூக் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்ற பிறகு, அவர் மேல் சிகிச்சைக்காக தற்போது அபுதாபிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான எங்கள் தூதர், மருத்துவமனையில் கேப்டன் மச்சரை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். முன்னதாக, அவர் கேப்டனின் குடும்பத்தினரையும் சந்தித்து, கேப்டனின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். அபுதாபியில் உள்ள எங்கள் தூதரகமும், துபையில் உள்ள எங்கள் துணைத் தூதரகமும் இந்த விஷயத்தில் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளன. கேப்டன் ஸ்மித் மச்சரின் வீரத்தையும், துணிச்சலையும் நாங்கள் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறோம். அவரது இந்த வீரச்செயலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கிடைத்து வரும் ஆதரவுக்கும், பாராட்டுக்கும் எங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்பதை தெரிந்துகொள்வோம்.

துபை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒரு விமானம் புறப்பட்டது. அது டெல் அவிவ் நகரை நோக்கிச் சென்றது.

அப்போது திடீரென, அந்த விமானம் தான் பறந்துகொண்டிருந்த உயரத்திலிருந்து சில வினாடிகளில் கிட்டத்தட்ட பாதியாகக் கீழ்நோக்கி இறங்கியது.

இது எப்படி நிகழ்ந்தது? இதை உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறோம்.

FZ1073 விமானத்தில் இருந்த ஒரு விமானி, மற்றொரு விமானி மீது திடீரெனத் தாக்குதல் நடத்தினார். அவ்வாறு தாக்கப்பட்டவர் இந்தியக் குடிமகன் ஸ்மித் மச்சார் (Smit Machhar) ஆவார்.

தான் காயமடைந்த போதிலும், காக்பிட் கதவை ஸ்மித் திறந்தார். மேலும் சக பயணிகள் மற்றும் பொசிஷனிங் விமானி (Positioning pilot) உதவியுடன் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அல்லது துல்லியமாகக் கூறுவதானால், இந்தச் செயல்தான் 174 பேரின் உயிரைக் காப்பாற்றியது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் கேப்டன் ஸ்மித்தைப் பாராட்டினர்.

ஆனால், இந்தச் சம்பவம் முழுவதிலும், முக்கியமான நிகழ்வுகள் அரங்கேறிய அந்த 17 நிமிடங்களைக் குறிப்பிடுவது அவசியமானது.

விமானத்தில் என்ன நடந்தது?

விமானம் பறந்து கொண்டிருந்தபோது, காக்பிட்டுக்குள் ஒரு விமானி மற்றொருவர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது.
படக்குறிப்பு, விமானம் பறந்து கொண்டிருந்தபோது, காக்பிட்டுக்குள் ஒரு விமானி மற்றொருவர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது.

காலை 8:30 மணி (IST): துபையிலிருந்து டெல் அவிவ் நோக்கி FZ1073 விமானம் புறப்பட்டது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு விமானம் வழக்கம்போலவே இயங்கியதாக ஃபிளைட்ரேடார் (Flightradar) தரவுகள் காட்டுகின்றன.

காலை 10:51 மணி: விமானம் திடீரென மிக வேகமாக தாழ்வாக இறங்கத் தொடங்கியது. வெறும் 90 விநாடிகளுக்குள், அதுவரை பறந்து கொண்டிருந்த உயரத்தின் பாதியாக விமானம் கீழே இறங்கியது.

காலை 11:00 மணி (சுமார் 9 நிமிடங்களுக்குப் பிறகு): விமானத்திலிருந்து 7700 என்ற அவசரகால எச்சரிக்கை குறியீடு (Code alert) அனுப்பப்பட்டது. விமானத்தில் ஏதோ அவசரநிலை ஏற்பட்டுள்ளதை இது உணர்த்துகிறது.

இந்திய பைலட் கேப்டன் ஸ்மித் மச்சார் (கோப்புப் படம்)
படக்குறிப்பு, இந்திய பைலட் கேப்டன் ஸ்மித் மச்சார் (கோப்புப் படம்)

காலை 11:07 மணி (சுமார் 7 நிமிடங்களுக்குப் பிறகு): விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தளமான 'ஃபிளைட் ரேடார் 24' மற்றொரு புதிய குறியீட்டைப் பெற்றது. அந்தப் புதிய குறியீடு 7500 ஆகும். இது விமானத்தில் ஏதோ சட்டவிரோதத் தலையீடு (Illegal interference) நடந்துள்ளதைக் குறிக்கிறது. வழக்கமாக இது விமானக் கடத்தலைக் குறிப்பதாகக் கருதப்படும்.

இந்த 7500 குறியீடு காரணமாகவே, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் ஆரம்பத்தில் இந்திய ஊடகங்களில் வெளியாயின.

7500 மற்றும் 7700 ஆகிய குறியீடுகளின் கலவையும், விமானம் திடீரெனக் கீழே இறங்கியதும் விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் முயற்சி நடந்திருப்பதைக் குறிக்கிறது என்று பிபிசி வெரிஃபை (BBC Verify) நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் காலை 10:51 மணிக்கும் 11:07 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்தான் அரங்கேறின. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் விமானத்திற்குள் நடந்தது என்ன என்பது குறித்து நேரில் கண்டவர்கள் தெரிவித்த விவரங்கள் பின்வருமாறு:

  • ஒரு விமானி மற்றொருவர் மீது தாக்குதல் நடத்தினார்.
  • காயமடைந்த விமானியான ஸ்மித் மச்சார் (Smit Machhar) மயக்கமடைவதற்கு முன்பு காக்பிட் கதவைத் திறந்தார்.
  • உடனடியாகப் பயணிகள் உதவிக்கு வந்தனர்; விமானத்தை இயக்கும் பணியில் இருந்த 'பொசிஷனிங்' (Positioning) விமானி விமானத்தைக் கட்டுப்படுத்த முயன்றார். (பொசிஷனிங் விமானிகள் என்பவர்கள், மற்றொரு விமான நிலையத்தில் விமானத்தை இயக்குவதற்காகப் பயணம் செய்யும் விமானிகள் ஆவர்).
  • இது விமானத்திற்குள் நிகழ்ந்த ஒரு உள்நபர் அச்சுறுத்தல் சம்பவமாகும்.

ரேடார் காட்டியது என்ன?

விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அது முழுமையாக ஒரு யூ-டர்ன் செய்து, பின்னர் தபூக் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
படக்குறிப்பு, விமானம் பறந்து கொண்டிருந்த போது, அது முழுமையாக ஒரு யூ-டர்ன் செய்து, பின்னர் தபூக் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதற்குப் பிறகு வெளியில் என்ன நடந்தது, அதாவது ரேடார் மூலம் என்ன கண்டறியப்பட்டது என்பதுதான் தற்போதைய கேள்வி.

ஃபிளைட்ரேடார் (Flightradar) தரவுகளின்படி, விமானம் முழுமையாக ஒரு யூ-டர்ன் (U-turn) செய்து வந்த திசையை நோக்கித் திரும்பியுள்ளது. பின்னர் அந்த விமானம் செளதி அரேபியாவில் உள்ள தபூக் (Tabuk) விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதனைத் தொடர்ந்து, ஃபிளைட்ரேடார்24 தளத்தில் விமானத்தின் தடமறியும் தரவுகள் வருவது நின்றுபோனது.

இந்திய நேரப்படி பிற்பகல் 12:30 மணி அளவில், தபூக் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்குச் சற்று முன்பு வரை ஃபிளைட்ரேடார் இந்தத் தரவுகளைக் காட்டியிருந்தது.

அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக ஃப்ளைதுபை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், விமானிகளுக்கு இடையே என்ன நடந்தது என்பது குறித்த உறுதியான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், விமானத்தில் பறக்கும்போது விமானி கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

பிபிசி வெரிஃபை பகுப்பாய்வு செய்த காட்சிகளில், இரத்தக் கறை படிந்த நிலையில், தரையில் காணப்பட்ட நபர் விமானி சீருடை அணிந்திருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது இரண்டு விமானிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும், கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சல் தான் எங்கு பார்த்தாலும் பேசப்பட்டு வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு