தாராபுரம், மதுராந்தகம் வெற்றி தவெக எதிர்பார்த்த ஒன்றா? திமுக, அதிமுக-வின் வாக்குகள் உணர்த்துவது என்ன?

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழக வெற்றிக் கழகம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த வெற்றி, தமிழக வெற்றிக் கழகம் எதிர்பார்த்த அளவுக்கான வெற்றியா என்ற கேள்வி எழுகிறது.

மதுராந்தகம் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெறும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார். முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் பல தரப்பு மக்களிடம் பல்வேறு பாணிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

தவெகவின் வேட்பாளர் மதுராந்தகத்தில் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தாராபுரத்தில் முதல் சில சுற்றுகளில் அதிமுக முன்னிலையில் இருந்தாலும், இறுதியாக 9471 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றுள்ளது. தவெக-வுக்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகத்தில் இரண்டாம் இடமும், தாராபுரத்தில் மூன்றாம் இடமும் பிடித்திருந்தது.

இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "ஆட்சி அதிகாரம், பண பலம் மற்றும் அரசின் இயந்திரங்கள் அனைத்தையும் பயன்படுத்தி தவெக இந்த வெற்றியைப் பெற்றுள்ளது" என்று குற்றம் சாட்டினார். விஜயின் பிரசாரம் அதிக ஊடக கவனத்தைப் பெற்றிருந்தாலும், அது இயல்பான அரசியல் அலை அல்ல என்றும் அவர் கூறினார்.

மறுபுறம், விஜய் இந்த முடிவை "பெண்களுக்கு எதிரான அவதூறுகளுக்கும், தனிநபர் தாக்குதல்களுக்கும், அரசியல் துரோகத்துக்கும் எதிராக மக்கள் அளித்த பதில்" என்று குறிப்பிட்டார். "இது என் வெற்றி அல்ல; மக்களின் வெற்றி" என்றும் அவர் கூறினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "பொதுத் தேர்தலின்போது இருந்த கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஒரு சிலர் இந்த இடைத்தேர்தலில் உடன் இல்லை. ஆனால், ஆளும் கட்சியோ பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டது. இந்த இடைத்தேர்தலில் ஆளும் தவெக தனது பண பலம், அதிகார பலம், ஆள் பலத்துடன் அனைத்து அமைச்சர்களையும் களமிறக்கியது. அதோடு, கழகத்திற்கு துரோகம் இழைத்தவர்களும், முதுகில் குத்தியவர்களும் நம்மை எதிர்த்து நின்றார்கள்" என்று அறிக்கை விடுத்தார்.

மதுராந்தகம்

சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளராக களமிறங்கிய மரகதம் குமரவேல் 69,284 (34.95%) வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். இரண்டாவது இடம் பிடித்த தமிழக வெற்றிக் கழகம் 62,090 (31.32%) வாக்குகள் பெற்றிருந்தது. அந்தத் தொகுதியில் 7194 வாக்குகள் வித்தியாசத்தில், அதாவது பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளில் 3.62% வித்தியாசத்தில், தவெக வேட்பாளர் எழில் காத்தரின் எழில்மலை வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டார்.

மதுராந்தகத்தில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட திமுக 59,838 (30.18%) வாக்குகள் பெற்றது. அந்தத் தேர்தலில் மதுராந்தகத்தில் 93.36% வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தது, 196,289 வாக்குகள் பதிவாயின.

இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் 74,048 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக இரண்டாம் இடத்தில் 54,008 வாக்குகள் பெற்றுள்ளது. மூன்றாம் இடம் பிடித்த அதிமுக 47,450 வாக்குகள் பெற்றுள்ளது.

தாராபுரம்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தாராபுரத்தில் அதிமுக வேட்பாளராகக் களமிறங்கிய சத்யபாமா 81,100 (40.56%) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடம் பிடித்த திமுக 64,373 (32.2%) வாக்குகளைப் பெற்றிருந்தது. அந்தத் தொகுதியில் 16,727 வாக்குகள் வித்தியாசத்தில், அதாவது பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளில் 8.36% வித்தியாசத்தில், திமுக வேட்பாளர் டி.இந்திராணி வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டார்.

தாராபுரத்தில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட தவெக 46,438 (23.23%) வாக்குகள் பெற்றிருந்தது. அந்தத் தேர்தலில் தாராபுரத்தில் 93.76% வாக்குகள் பதிவு நடந்தது, அதாவது 199,874 வாக்குகள் பதிவாகியிருந்தன.

இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் 66841 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக இரண்டாம் இடத்தில் 57,370 வாக்குகள் பெற்றுள்ளன. மூன்றாம் இடம் பிடித்த அதிமுக 45280 வாக்குகள் பெற்றுள்ளது.

கூட்டணி பலத்தில் வெற்றி பெற்றதா தவெக?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சட்டப்பேரவைத் தேர்தலை தவெக தனித்து நின்று களம் கண்டது. அப்போது தனித் தொகுதிகளான மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் தோல்வியை தழுவியது.

தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவு அளித்தன. இடதுசாரி கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தன.

தவெக ஆட்சி அமைந்த பிறகு, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆறு பேர் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தனர். அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறியது.

பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன், "தவெக வெற்றி பெற்றுள்ளது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் வாக்கு வித்தியாசத்தை கவனிப்பதைத் தாண்டி, இந்த வெற்றியின் பின்னால் உள்ள காரணிகளை உற்று நோக்க வேண்டும்" என்றார்.

அவரது கூற்றுப்படி, "தவெக கூட்டணியில் விசிக இருப்பதால் தலித் மக்களின் வாக்குகள் தவெக வசம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வன்னியர்களிடம் கணிசமான வாக்குகளைப் பெறும் பாமக பின்வாங்கியதால் அதிமுக தனது வாக்குகளைக் கணிசமாக இழந்தது. இந்த இரு காரணிகளும் இருந்ததால்தான் மதுராந்தகத்தில் வாக்கு வித்தியாசம் அதிகமாக உள்ளது."

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன்

இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் இடம் பெற்ற திமுக

திராவிட முன்னேற்ற கழகம் இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் இடம் பெற்று, அதிமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளியுள்ளது. சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட இடைத்தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் குறைவாகவே உள்ளன.

மதுராந்தகத்தில் பொதுத் தேர்தலில் 59,838 வாக்குகள் பெற்றது, இடைத்தேர்தலில் 54,008 வாக்குகள் பெற்றுள்ளது. தாராபுரத்தில் பொதுத் தேர்தலில் 64,373 வாக்குகளும் இடைத்தேர்தலில் 57,370 வாக்குகளும் பெற்றுள்ளது.

"அதிமுகவுடன் ஒப்பிடும்போது திமுகவின் வாக்கு வங்கி தக்க வைக்கப்பட்டு இருப்பதாகவே பார்க்கிறேன். திமுக இந்த முறை கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் களம் கண்டுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் தனித்துப் போட்டியிடுவது நம்மைப் போன்ற முதலில் வருபவரே வெற்றி பெறுபவர் என்ற தேர்தல் முறைக்கு எப்படி கை கொடுக்கும் என்று தெரியவில்லை. வெற்றியாளருக்கும் தங்களுக்கும் இடையில் உள்ள வாக்கு வித்தியாசத்தை கூட்டணிக் கட்சிகளின் பலத்தை கொண்டே சமன் செய்ய முடியும்" என்றார் இளங்கோவன் ராஜசேகரன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு