முஸ்லிம் உலகில் என்ன நடக்கிறது? அடுத்தடுத்த 2 பாதுகாப்பு ஒப்பந்தங்களால் எழும் கேள்விகள்
பாகிஸ்தான், துருக்கி, கத்தார், இந்தோனீசியா ஆகிய நான்கு நாடுகள் கடந்த புதன்கிழமை கத்தார் தலைநகர் தோஹாவில் பலதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தம் பத்ர் புரிந்துணர்வு ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது. ராணுவ வலிமை, பொருளாதாரத் திறன், புவிசார் அரசியல் முன்னுரிமை ஆகியவற்றில் பெரிதும் மாறுபட்ட நான்கு நாடுகள் இந்த ஒப்பந்தத்துக்காக இணைந்தது ஏன்? பாகிஸ்தான், துருக்கி, செளதி இடையே மெக்கா ஒப்பந்தம் உள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் எந்த வகையில் வேறுபடுகிறது? இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு கூட்டாளியான இந்தோனீசியா இந்த ஒப்பந்தத்தில் இணைந்திருப்பது, இந்தியாவின் நலன்களை பாதிக்குமா? இந்த காணொளியில் சுருக்கமாக பார்க்கலாம்.
கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, வியூக ரீதியான கூட்டணியையும் கூட்டு ஒத்துழைப்பையும் அதிகரிப்பதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், பாதுகாப்பு உற்பத்தித் துறையில் ஒத்துழைப்பை வளர்ப்பது, நான்கு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவது, தொழில்நுட்ப பாதுகாப்புப் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் கூட்டுச் செயல்பாட்டை ஊக்குவிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சரி, இந்த 4 நாடுகளின் ராணுவ வலிமை எவ்வளவு என பார்ப்போம்
குளோபல் ஃபயர்பவர் இண்டக்ஸ்-ன் படி, இந்த நான்கு நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களை கொண்ட நாடு பாகிஸ்தான். அங்கு சுமார் 6.6 லட்சம் வீரர்கள் பணியில் உள்ளனர்.
அடுத்ததாக, துருக்கியில் 4.81 லட்சம் வீரர்களும், இந்தோனீசியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமான வீரர்களும் உள்ளனர். மற்ற மூன்று நாடுகளுடன் ஒப்பிடுகையில் கத்தாரில் மிக குறைவாக, 26,550 ராணுவ வீரர்கள் உள்ளனர்.
இந்தக் குழுவில் உள்ள துருக்கி குறித்து ஒரு கவனிக்கத்தக்க விஷயம் உள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின்படி,கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது பாதுகாப்பு ஏற்றுமதியை 122 சதவீதம் அதிகரித்துள்ள துருக்கி, உலகின் 11ஆவது பெரிய ஆயுத விநியோக நாடாக உருவெடுத்துள்ளது. இதனால், இந்த குழுவின் முக்கிய தொழில்நுட்ப சக்தியாக துருக்கி உள்ளது.
சரி, இந்த ஒப்பந்தத்துக்கும் மெக்கா ஒப்பந்தத்துக்கும் என்ன வித்தியாசம் என பார்ப்போம்.
பாதுகாப்புத் துறை நிபுணர்களின் கருத்துப்படி, மெக்கா ஒப்பந்தம் ஒரு முறையான பாதுகாப்பு உடன்படிக்கை. அதில், ஓர் உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்ற கோட்பாடு இடம்பெற்றுள்ளது. ஆனால், பத்ர் புரிந்துணர்வு ஒப்பந்தம் ராணுவக் கூட்டணியோ போர் ஒப்பந்தமோ அல்ல. இது பாதுகாப்புத் தொழில்துறை, ஆயுதங்களின் கூட்டு உற்பத்தி, தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், அமெரிக்க சிந்தனைக் குழுவான அட்லாண்டிக் கவுன்சிலின் ஆய்வாளர் ஓமர் சமத், மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்ட சில வாரங்களிலேயே இந்த ஒப்பந்தம் உருவாகியிருப்பது, முஸ்லிம் உலகில் புதிய போக்கு ஒன்று உருவாகி வருவதற்கான அறிகுறி என்கிறார்.
இந்த நடவடிக்கைகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பதற்றமும் நிச்சயமற்ற தன்மையும் நிலவும் இந்தக் காலகட்டத்தில், பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான புதிய வழிகளை தேடுவதாகத் தெரிகிறது என்கிறார் ஓமர் சமத். அதே நேரம், இதை முஸ்லிம் நேட்டோ உருவாக்குவதற்கான முயற்சியாக அவர் கருதவில்லை.
சரி, இந்த ஒப்பந்தம் இந்தியா மீது ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
இந்தியாவின் பார்வையில் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம் இந்தோனீசியா இதில் இணைந்திருப்பது.
இந்தியா மற்றும் இந்தோனீசியா இடையே ஆழமான வியூக ரீதியான உறவுகள் உள்ளன. அண்மையில், இரு நாடுகளுக்கும் இடையே 630 மில்லியன் டாலர் மதிப்பிலான இரண்டு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் கீழ், இந்தியா பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளையும், அஸ்திரா ஏவுகணைகளையும் இந்தோனீசியாவுக்கு வழங்கும். இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் இணைந்து பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்பந்தத்தில் இந்தோனீசியா பங்கேற்பதும், பாகிஸ்தானின் ஜேஎஃப்-17 (JF-17) போர் விமானங்களில் ஆர்வம் காட்டுவதும், இந்தியாவின் முக்கியமான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களின் ரகசியத்தன்மை பாதிக்கப்படுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. எனினும், இந்திய பாதுகாப்புத் துறை நிபுணர்கள் இதை உடனடி அச்சுறுத்தலாக கருதவில்லை.
செண்டர் ஆஃப் ஏரோஸ்பேஸ் பவர் அண்ட் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ்-ஐ சேர்ந்த ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் அஜய் அஹ்லாவத் கூறும் போது, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ராணுவ கூட்டணியாகக் கருத முடியாது. இது முக்கியமாகப் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் பணிகளைப் பகிர்ந்துகொள்வதற்கான முயற்சி. கத்தார் மற்றும் இந்தோனீசியா ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியாவுக்கு மிக வலுவான உறவுகள் உள்ளன" என்றார்.
பிரமோஸ் ஏரோஸ்பேஸின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சுதீர் குமார் மிஸ்ரா கூறும் போது, இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி ஒப்பந்தங்களில் அறிவுசார் சொத்துரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பாக மிகக் கடுமையான நிபந்தனைகள் உள்ளன. அவற்றின் கீழ், தொழில்நுட்பம் எந்தவொரு மூன்றாவது நாட்டுக்கும் செல்வதற்கான வாய்ப்பு இல்லை என்றார்.
தொடர்ந்து விளக்கிய அவர், அதேநேரம் ராஜீய ரீதியில் பார்த்தால், சீனாவுடன் ஏற்கனவே இருக்கும் உறவுடன் கூடுதலாக இந்த ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தானுக்கு துருக்கியின் தொழில்நுட்பம் மற்றும் கத்தாரின் முதலீடுகள் கிடைக்கிறது. இது இந்தியாவின் நீண்டகால பாதுகாப்பு வியூகத்தில் தொடர்ந்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



