நேஹா போராவை விடுவித்த போலீஸ், 'காவலில் எடுக்கப்பட்ட அபிஜித் திப்கே கைது' - டெல்லியில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், ANI
அகில இந்திய மாணவர்கள் சங்கத்தின் (AISA) தேசிய தலைவர் நேஹா போரா சனிக்கிழமை காலை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
வெள்ளிக்கிழமை மாலை 'லஹரா தோ திரங்கா' பேரணியின்போது நேஹா போராவை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது.
நேஹா எங்கே இருக்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் நள்ளிரவு வரை டெல்லி காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவுக்குப் பிறகு, நேஹா ஆர்.கே.புரம் காவல் நிலையத்தில் இருப்பது தெரிய வந்தது. நேஹா ஆர்.கே.புரம் காவல் நிலையத்தில் ஐந்து மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரது சமூக ஊடக பக்கங்களின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
காவலில் இருந்து நேஹா வெளியே வரும் காணொளியை 'ஏஎன்ஐ' செய்தி முகமை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அந்தக் காணொளியில் அவருடன் நான்கு அல்லது ஐந்து பேர் உடன் செல்வது காட்டப்பட்டுள்ளது. அப்போது செய்தியாளரிடம், "நான் என்ன சொல்வது?" என்று கூறி விட்டு நகர்ந்து சென்றார் நேஹா.

பட மூலாதாரம், ANI
நேஹா போராவும், காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கேவும் அக்டோபர் 16ஆம் தேதி மாலை தடுத்து வைக்கப்பட்டனர்.
காவலில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பு, நேஹாவின் வழக்கறிஞர் சுபாந்த் சின்ஹா கூறுகையில், "நேஹா ஆர்.கே.புரம் காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் தனது வழக்கறிஞரிடம் பேசக்கூட அனுமதிக்கப்படவில்லை" என்றார்.
ஏஎன்ஐ செய்தி முகமையின் கூற்றுப்படி, டெல்லி காவல்துறை சட்டம் பிரிவு 65இன் கீழ் முறையான நடைமுறைகள் முடிக்கப்பட்ட பிறகு நேஹா போரா விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், பிஎன்எஸ்எஸ் பிரிவுகள் 126/170 இன் கீழ் அபிஜித் திப்கே மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அவர் எஸ்.இ.எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
காக்ரோச் ஜனதா கட்சியின் சட்டப் பிரிவு தலைவர் ரத்னா சிங், அபிஜித் திப்கே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் எஸ்.இ.எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அபிஜித் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது தனக்கு இன்னும் தெரியவில்லை என்றும், வழக்கறிஞர்கள் கூட அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் ரத்னா சிங் கூறுகிறார்.
முன்னதாக, ரத்னா சிங் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "நிகழ்வுகளின் வரிசையைப் புரிந்து கொள்ளுங்கள். டெல்லி காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது. அனைவரும் கண்காணிக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். டெல்லி காவல்துறை உடனடியாக அபிஜித் மற்றும் நேஹா இருவரின் தற்போதைய இருப்பிடங்களை வெளியிட வேண்டும்." என்று தெரிவித்திருந்தார்.
மேலும், அந்தப் பதிவில், "அவர்களின் குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர்களின் இருப்பிடம் மற்றும் சட்டப்பூர்வ நிலை குறித்து தெரிவிக்காமல் யாரும் மணிக்கணக்கில் தடுத்து வைக்கப்படக்கூடாது. நேஹாவும் அபிஜித்தும் எங்கே? டெல்லி காவல்துறை இதற்கு பதிலளிக்க வேண்டும்." என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அபிஜித் திப்கேவுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ்
இதற்கு முன்பு, டெல்லி காவல்துறை அதிகாரிகள் அபிஜித் திப்கேவின் வீட்டிற்குச் சென்று அவரை காவலில் எடுத்தனர். அவர் "அறியப்படாத" இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக காக்ரோச் ஜனதா கட்சி கூறியது. தடுத்து வைக்கப்படுவதற்கு முன்பு, அபிஜித் திப்கேவுக்கு, பேரணியில் பங்கேற்க வேண்டாம் எனக் கூறி டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நோட்டீஸில் பிஎன்எஸ்எஸ் பிரிவு 163இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு குறிப்பிடப்பட்டிருந்தது. அபிஜித் திப்கே மாலையில் பேரணி நடைபெறும் இடத்திற்குப் புறப்பட்டார், ஆனால் சிறிது நேரத்திலேயே காவல்துறை அவரைத் தடுத்து நிறுத்தியது. இருப்பினும், அவர் தடுத்து வைக்கப்படுவதற்கு முந்தைய காணொளியில், தான் என்ன சட்டத்தை மீறினேன் என்று அவர் காவல்துறையினரிடம் கேட்பது பதிவாகியுள்ளது.
"நான் எப்படி இதை மீறினேன்? நான் தனியாகத்தானே இருக்கிறேன்" என்று அவர் கூறினார். தான் எந்த உத்தரவை மீறினேன் என்றும் அவர் காவல்துறையிடம் கேட்டார். அங்குள்ள மற்றவர்கள் ஊடகவியலாளர்கள் என்றும் அவர் கூறினார்.
அந்த நோட்டீஸில், "கன்னாட் பிளேஸ் ஆர்ப்பாட்டங்களுக்கான அறிவிக்கப்பட்ட இடம் அல்ல. தேவையான அனுமதியைப் பெற்ற பின்னரும், அனுமதி கிடைத்த பின்னரும் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இதனுடன், டெல்லியில் உள்ள ஜன்பத் சாலை, கன்னாட் பிளேஸ் மற்றும் மண்டி ஹவுஸ் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள குறைந்தது 150 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி
முன்னதாக, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள், அபிஜித் திப்கே மற்றும் நேஹா போரா எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை டெல்லி காவல்துறை வெளியிட வேண்டும் என்று கோரினர்.
சில எதிர்க்கட்சித் தலைவர்கள் இதை அறிவிக்கப்படாத அவசரநிலை என்றும் வர்ணித்தனர்.
நேஹா தடுத்து வைக்கப்பட்டது குறித்த பிபிசி நியூஸ் ஹிந்தியின் செய்தியைப் பகிர்ந்து அகிலேஷ் யாதவ் எக்ஸ் பக்கத்தில், "இது மிகவும் தீவிரமான விஷயம். தடுத்து வைக்கப்பட்டுள்ள நேஹா போரா எங்கிருக்கிறார் என்பது பற்றி எங்குமே தகவல் இல்லை. ஒரு பெண்ணை இரவோடு இரவாக காவலில் எடுத்த பிறகு எங்கு அழைத்துச் சென்றார்கள் என்பதை காவல்துறை வெளிப்படுத்த வேண்டும். தேசிய மகளிர் ஆணையம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். நேஹா போரா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், ANI
மமதா பானர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "தேசியக் கொடியைப் பிடித்ததற்காக அபிஜித் திப்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதைக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சுதந்திர இந்தியாவில், நமது இளைஞர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்தியதற்காக காவலில் வைக்கப்படுகிறார்கள்."
"இது அறிவிக்கப்படாத அவசரநிலை. எதிர்ப்புக் குரல்களைப் பயப்படும் ஒரு அரசு இப்போது ஒட்டுமொத்த தலைமுறையையும் அச்சுறுத்தவும் மௌனமாக்கவும் முயற்சிக்கிறது. இது ஒரு பாசிச ஆட்சியின் போக்கு. தன்னால் கட்டுப்படுத்த முடியாத குரலை இந்த அரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை" என்றார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், "இது வெளிப்படையான சர்வாதிகாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை. மூவர்ணக் கொடியை ஏற்றுவது குற்றமா? மோடிஜி அவருக்கு எவ்வளவு பயப்படுகிறார் என்பதை அபிஜித்தின் கைது காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அபிஜித் திப்கேவும் நேஹா போராவும் எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பியிருந்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அவர்கள் இருக்கும் இடம் குறித்துத் தெரிவிக்காமல் தடுத்து வைப்பது அப்பட்டமான சட்டவிரோதமானது மற்றும் மிகவும் மனிதாபிமானமற்ற செயலாகும். மத்திய அரசு அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் மற்றும் அமைதியான போராட்டங்களை அடக்குவதை நிறுத்த வேண்டும். இயக்கத்தை நசுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அதனை மேலும் வலுப்படுத்துமே தவிர வேறு வழியில்லை" என்று கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி முகமையின் கூற்றுப்படி, மண்டி ஹவுஸ் அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது நேஹா போரா தடுத்து வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் அவர் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று கேள்வி எழுப்பினர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தலைவர் ஐஷி கோஷ் கூறுகையில், "இதுகுறித்து எங்களிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முதலில் நாங்கள் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்குச் சென்றோம், இப்போது மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு வந்துள்ளோம். நேஹா ஆர்.கே.புரத்தில் இருக்கிறார் என்று நாங்கள் இப்போதுதான் அறிந்தோம், அதனால்தான் நாங்கள் ஒரு காணாமல் போனோர் புகாரை மட்டுமே பதிவு செய்ய வேண்டியிருந்தது, எங்கள் பிரதிநிதிகள் குழுவும் அங்கு சென்றுள்ளது."
"நான் சொல்வது சரியென்றால், வழக்கறிஞர்கள் இப்போதுதான் நேஹாவைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அபிஜித் எங்கு இருக்கிறார் என்பதை எங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் எங்கு சென்றாலும், அவர்கள் வேறு ஒரு காவல் நிலையத்தின் பெயரைக் கூறுகிறார்கள். இது மிகவும் தவறானது. மேலும் ஒரு விஷயம், நீங்கள் பெண்களைக் காவலில் வைக்கிறீர்கள். மாலை 7 மணிக்குப் பிறகு அவர்களைக் காவலில் வைப்பது சட்டவிரோதமானது" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































