சென்னையில் இன்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் செல்போன் வாயிலாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் அடுத்தடுத்த நாட்களிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபர் 17) முதல் பெய்த கனமழையால், நகரின் ஆறு இடங்களில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக பாரிமுனையில் 36 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், கத்திவாக்கம், மீனம்பாக்கம், சென்னை சென்ட்ரல், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளிலும் அதி கனமழை பெய்துள்ளது.
இன்று (18.10.2026)சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருசசி, பெரம்பலூர், திருவண்ணாமலை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகத்தின் அநேக இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



