நேபாள பெருவெள்ளம்: "சீன எல்லைக்குள் பாதுகாப்பாக இருக்கலாம்" - ஒரு மாதமாக நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பங்கள்

நேபாள பெருவெள்ளம்
படக்குறிப்பு, நேபாள பெரு வெள்ளத்தில் காணாமல் போனவர்களில் ஒருவரான மாரியாள் ராமசாமி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல் போன தனது தந்தை, தாய், மாமனார் மற்றும் அவரது ஆறு நெருக்கமான நண்பர்களும் உறவினர்களும் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் ஒரு மாத காலமாக காத்திருக்கிறார் கவின்ராஜ்.

பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கவின் ராஜின் தந்தை நடராஜன் (66), தாய் கிருஷ்ணவேனி (55), மாமனார் அசோகன் ராமசாமி (68), மற்றும் பழனிவேல், மாரியாள் ராமசாமி உட்பட அசோகன் ராமசாமிக்கு நெருக்கமான ஆறு பேர் கடந்த மாதம் கைலாஷ் யாத்திரைக்கு சென்றிருந்தனர். சென்னை குரோம்பேட்டையில் இருந்து மகாதேவ் கைலாஷ் யாத்ரா எனும் ஏஜென்சி மூலம் புறப்பட்ட அவர்கள் ஆகஸ்ட் 25ம் தேதி சீன எல்லைக்குள் இருக்கும் கைலாஷில் தரிசனம் செய்திருந்தனர், மறு நாள் காலை அங்கிருந்துப் புறப்பட்டு சீன-நேபாள எல்லையை கடந்து வந்து காத்மாண்டுவிலிருந்து விமானம் மூலம் இந்தியா வருவதே அவர்களின் திட்டம்.

ஆகஸ்ட் 26ம் தேதி வெள்ளம் ஏற்படுவதற்கு சுமார் இரண்டரை மணி நேரம் முன்பாக காலை 6.15 மணிக்கு கவின் ராஜின் தந்தை அவரை அழைத்துப் பேசியுள்ளார். "அவர்களின் பயணத் திட்டப்படி முந்தைய நாள் சாமி தரிசனம் செய்திருந்தனர். 26ம் தேதி அவர் என்னை அழைத்த போது அவர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து கெய்ரோங்-ல் உள்ள குடிவரவு அலுவலகத்துக்கு புறப்படுவதாக கூறினார்". அதுவே கவின் ராஜ் தனது தந்தையிடம் பேசிய கடைசி உரையாடலாகும்.

"அவர்கள் கைலாஷ் செல்லும் வழியில் எடுத்த புகைப்படங்களில் பின்னால் பில்கிரிம் இன் என்ற பெயர் கொண்ட கட்டடம் காணப்பட்டது. அதுவே அவர்கள் தங்கியிருந்த விடுதியாக இருக்கும் என நினைக்கிறேன். அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் குடிவவு அலுவலகம் இருந்ததாக பயணத்தை ஏற்பாடு செய்த முகவர் கூறினார்" என்கிறார் கவின் ராஜ்.

நேபாள பெருவெள்ளம்
படக்குறிப்பு, வெள்ளப் பேரிடரில் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப் படுவதற்கு முந்தைய நேபாளம் - சீனா எல்லைப் பகுதியின் தோற்றத்தைக் காட்டும் ஒரு செயற்கைக்கோள் படம்

"3 நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை"

வெள்ளத்துக்கு பிறகு, தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கியிருந்த இடம், அவர்கள் கடைசியாக செல்போனில் அழைத்த இடம், அவர்கள் குடிவரவு அலுவலகத்துக்கு அருகிலேயே சிக்கிக் கொண்டனரா என்பவை குறித்து அறிய கவின்ராஜ், தமிழ் முருகன் உட்பட நான்கு பேர் காத்மாண்டுவுக்கு சென்றுள்ளனர். "ஒன்பது பேரை பற்றியும் இதுவரை எந்த தகவலும் இல்லை" என்கிறார் கவின் ராஜ்.

"மூன்று நாட்கள் காத்மாண்டுவில் அலைந்து திரிந்து விட்டு, பயனுள்ள எந்த தகவலும் கிடைக்காமல் நான்கு பேரும் திரும்பி விட்டனர்" என்கிறார் காணாமல் போன ஒன்பது பேரில் ஒருவரான மாரியாளின் (56) கணவர் ராமசாமி.

"சாலைகள் சேதமடைந்திருந்தன. எனவே நேபாள-சீனா எல்லை வரை சென்று பார்க்க முடியவில்லை. தனியார் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து பயண முகவர்கள் சிலர் பார்வையிட்டனர். அப்போதும் எந்த துப்பும் கிடைக்கவில்லை" என்கிறார் கவின் ராஜ்.

ஆனால், கவின் ராஜ் நம்பிக்கை இழக்காமல் இருக்க, ஒரு காரணம் இருக்கிறது. "அவர்கள் சீன எல்லைக்குள் இருந்திருக்க வேண்டும். அந்தப் பகுதியில் ஒப்பீட்டளவில் பாதிப்பு குறைவாக இருந்துள்ளது என கூறப்படுகிறது. எனவே அவர்கள் மீட்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம்" என்கிறார் அவர்.

நேபாள பெருவெள்ளம்
படக்குறிப்பு, மாரியாள் ராமசாமி

அசோகன் ராமசாமியின் நிறுவனத்தில் பணிபுரியும் ராமசாமி லாரி ஓட்டுநர் ஆவார். "எனது மனைவிக்கு இறை பக்தியில் ஆர்வம் அதிகம், அவர் கேதர்நாத், அமர்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு சென்று வந்துள்ளார். இந்த பயணத்துக்கு மொத்தம் ரூ.3 லட்சம் செலவாகும் என்று கூறிய போது, அசோகன் ராமசாமியே எனக்கு உதவினார்" என்கிறார் ராமசாமி.

"நாங்கள் காத்மாண்டுவில் இந்திய தூதரகத்தை அணுகிய போது அங்கிருந்த அதிகாரிகள், சீனாவில் 2 கி.மீ முதல் அதிகபட்சமாக 5 கி.மீ வரையிலேயே பாதிப்பு இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

6 மாதங்களுக்கு மேலாக திட்டமிடப்பட்ட பயணம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த பயணத்துக்காக ஆறு மாதங்களுக்கும் மேலாக திட்டமிட்டிருந்தனர் என்றும் நேபாள பகுதியில் நிலச்சரிவுகள், மண் சரிவுகள் ஏற்படும் என்பது அறிந்ததே என்றும் கூறுகிறார் கவின் ராஜ். "இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களுக்கு ஒரு முறை அவர்கள் என்னை அழைப்பார்கள், அல்லது நான் அவர்களை அழைத்து பேசிவிடுவேன். வெள்ளம் ஏற்பட்ட நாளில் காலை 6:15 மணிக்கு பிறகு அவர்களிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. நான் 8:43 மணிக்கு அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, முடியவில்லை. பிறகு தான் செய்திகளின் மூலம் வெள்ளம் பற்றி தெரிந்துகொண்டேன்" என்று அந்த நாளின் விவரங்களை நினைவுகூர்கிறார் கவின் ராஜ்.

சீன எல்லக்குள் 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியிருக்கிறார்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகஸ்ட் 28ம் தேதி (வெள்ளம் ஏற்பட்டு இரண்டு நாட்களில்) தெரிவித்திருந்தது.

தனது பெற்றோர் மற்றும் அவர்களுடன் சென்றவர்களும் சீன எல்லைக்குள்ளேயே இருந்திருப்பார்கள் என்று கருதும் கவின் ராஜ், சீனாவில் சிக்கிக் கொண்டவர்கள் குறித்து போதிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரவில்லை என்கிறார். "நாங்கள் காத்மாண்டுவில் தூதரக அதிகாரிகளை சந்தித்தபோது, குடிவரவு அலுவலக கட்டடம் முழுவதுமாக சேதமடையவில்லை, பகுதி மட்டுமே சேதமடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் வெள்ளம் ஏற்பட்டு பத்து நாட்கள் கழித்து செய்தியாளர்கள் அங்கு சென்றபோது, அந்த கட்டடம் தரைமட்டமாக இருந்தது" என்கிறார் கவின் ராஜ். (இந்த தகவல்களை பிபிசி சுயாதீனமாக சரி பார்க்க இயலவில்லை).

நேபாள பெருவெள்ளம்

சீனாவில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளனவா, அப்படி இருந்தால் அங்கு யார் யார் உள்ளனர் என்பது போன்ற விவரங்களை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே தெரியவில்லை என்கிறார் கவின் ராஜ்.

தமிழ்நாடு அரசு தகவல்களின்படி 85 பேரை காணவில்லை. அவர்களின் நெருங்கிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து அவற்றை நேபாள அரசிடம் சமர்ப்பிக்கும் பணியை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. சென்னை, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மூன்று ஊர்களில் உள்ள பரிசோதனை மையங்களில் இந்த மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

ராமசாமி-மாரியாள் தம்பதியினரின் 23 வயது மகன் சாலை விபத்தில் இறந்துவிட்டார். மாரியாளுக்கு உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் கிடையாது. "நெருங்கிய உறவினர்கள் இல்லாததால் எனது மனைவியின் பெரியப்பா பேரனை அழைத்து வந்து டிஎன்ஏ மாதிரி கொடுத்துள்ளோம்" என்றார்.

இதே குழுவை சேர்ந்த பழனிவேலின் மகனை தொடர்பு கொண்ட போது அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாகவும், அதிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை என்றும் அவரது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு