உலகில் முதன்முறை; கட்டுப்பாட்டை மீறி ஆஸ்திரேலிய அரசு இணையதளத்தை 'ஊடுருவிய' ஓபன்ஏஐ ஏஜென்ட் - எச்சரிக்கும் நிபுணர்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஹாரி செகுலிச் மற்றும் லானா லாம்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஒரு ஓபன்ஏஐ ஏஜென்ட் ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலிய அரசின் இணையதளத்தை ஹேக் செய்து, தனிப்பட்ட தரவுகளை அணுகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவம் உலகில் பதிவான முதல் சம்பவமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான மெடிகேர் தொடர்பான "முக்கியத்துவம் குறைந்த" தரவுகள் இடம்பெற்றிருந்த புள்ளிவிவர இணையதளத்தில் அந்த ஏஜென்ட் "ஊடுருவியதாக" ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி நியூயார்க்கில் தெரிவித்தார்.
இந்தத் தரவு கசிவு குறித்து தகவல் தெரிவிக்க "அதிக காலம் எடுத்துக்கொண்டதற்காக" ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனுடன் தான் "மிகவும் வெளிப்படையான பேச்சுவார்த்தை" நடத்தியதாகவும், இதற்கு "சட்டரீதியான விளைவுகள்" இருக்கும் என்றும் அவர் கூறினார்.
"கட்டுப்பாடுகளை மீறிய மாதிரி செயல்பாடு" குறித்து ஆய்வு செய்தபோது, ஆகஸ்ட் மாதத்தில்தான் இந்தத் தரவு கசிவு குறித்து தெரிந்துகொண்டதாக ஓபன்ஏஐ தெரிவித்துள்ளது. செப்டம்பர் 10-ம் தேதி ஆஸ்திரேலிய அரசு நிறுவனத்தின் பொதுவான மின்னஞ்சல் முகவரிக்கு அது மின்னஞ்சல் அனுப்பியது.
ஐந்து நாட்களுக்குப் பிறகு, சர்வீசஸ் ஆஸ்திரேலியா எனப்படும் அந்த அரசு நிறுவனம், அந்த மின்னஞ்சலை ஆஸ்திரேலியாவின் சைபர் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பியது. அதன்பிறகு, அரசு அமைச்சர் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பிரதமருக்கும் இதுகுறித்து எச்சரிக்கப்பட்டது.
ஆல்ட்மேனுடன் பேசியதாகத் தெரிவித்த அல்பனீஸ், "இந்தச் சம்பவம் குறித்து ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான கவலை" மற்றும் இந்தத் தரவு கசிவு குறித்து நிறுவனம் பல மாதங்கள் கழித்தே தகவல் வெளியிட்டது குறித்து தனது "ஏமாற்றத்தையும்" தெரிவித்ததாகக் கூறினார். மேலும், அது வெளியிட்ட தகவலின் "தன்மை குறித்தும்" அவர் அதிருப்தி தெரிவித்தார்.
ஓபன்ஏஐ-யில் "நெறிமுறைகள் தொடர்பாக சில பிரச்னைகள்" இருந்ததை ஆல்ட்மேன் ஒப்புக்கொண்டதாக ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார்.
என்னென்ன தரவுகள் இருந்தன?
இந்தத் தரவு கசிவு தொடர்பாக, நாட்டின் சைபர் பாதுகாப்பு அமைப்பு தலைமையில் "தடயவியல் விசாரணை" நடத்தப்படும் என்றும், அரசின் பிற அமைப்புகள் பாதிக்கப்பட்டனவா என்பதை கண்டறிவதே அதன் நோக்கம் என்றும் அல்பனீஸ் கூறினார்.
அந்த விவகாரம் காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமா என்பதையும் இந்த விசாரணை ஆய்வு செய்யும் என்றும், "இதற்கு நிச்சயமாக சட்டரீதியான விளைவுகள் இருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தரவு கசிவு குறித்து விளக்கிய அல்பனீஸ், " வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத கோப்புகள்" இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறினார். "முக்கியத்துவம் குறைந்த" தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்கள் இடம்பெறும் மெடிகேர் புள்ளிவிவர அறிக்கையிடல் சேவை இணையதளத்தில் இந்தக் கோப்புகள் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும் மூன்று அரசு அமைப்புகளும் "பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை ஆஸ்திரேலிய சுகாதார மற்றும் நலவாழ்வு நிறுவனம் மற்றும் இரண்டு மாநில அமைப்புகளான நியூ சவுத் வேல்ஸ் குற்றப் புள்ளிவிவர மற்றும் ஆராய்ச்சிப் பணியகம் மற்றும் விக்டோரியன் சுகாதாரத் துறை ஆகியவை ஆகும்.
"இந்த நிலையில் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் அணுகப்பட்டதாக நம்பப்படவில்லை. ஆனால், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்று அல்பனீஸ் கூறினார்.
"இருப்பினும், இந்த நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது என்பது தெளிவாகிறது" என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், EPA/Shutterstock
ஓபன்ஏஐ வெளியிட்ட அறிக்கையில், "ஆஸ்திரேலியா தொடர்பான கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் கிடைக்கக்கூடிய புள்ளிவிவரங்களைத் தேடுவதற்காக எங்கள் மாதிரிகள் முயற்சித்தபோது, பல ஆஸ்திரேலிய அரசு இணையதளங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான செயல்பாடுகளை நாங்கள் கண்டறிந்தோம். இது ஒரு உள்நாட்டு மதிப்பீட்டின்போது நடைபெற்றது" என்று தெரிவித்துள்ளது.
"அந்தச் செயல்பாட்டின்போது, எங்கள் மாதிரிகள் நாங்கள் எதிர்பார்க்காத சில நடவடிக்கைகளை மேற்கொண்டன" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மே மாதத்தில் நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் உள்ள டிஜிட்டல் நூலகத்தையும் ஓபன்ஏஐ -யின் அமைப்புகள் ஹேக் செய்ய முயற்சித்து, அதில் தோல்வியடைந்ததாக டிரான்ஸ்லூஸ் என்ற லாப நோக்கமற்ற ஏஐ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே மாதத்தில், அரசு வெளியிடும் பொதுத் தரவுகளின் களஞ்சியமான டேட்டா யுஎஸ்ஏவையும் அந்த அமைப்புகள் ஹேக் செய்ய முயற்சித்ததாக அது கூறியுள்ளது. இந்த முயற்சியும் தோல்வியடைந்தது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்துக்காக உலகத் தலைவர்கள் கூடியுள்ள நியூயார்க்கில் செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்தபோது, இந்த விவகாரம் குறித்து அவரிடம் பேசியிருந்தாரா என்ற கேள்விக்கு அல்பனீஸ் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
ஏஐ மேம்பாட்டுக்கு உலகளாவிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அழைப்பு விடுக்கும் கூட்டு அறிக்கையில் இந்த வார தொடக்கத்தில் கையெழுத்திட்ட 22 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று.

பட மூலாதாரம், Getty Images
"எச்சரிக்கை மணி"
ஏஐ ஏஜென்ட்கள் தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு அதிகளவில் கிடைக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் கட்டுப்பாட்டாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணி என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஹம்மண்ட் பியர்ஸ், ஏஐ ஏஜென்ட்கள் தங்களது சொந்த முடிவின் அடிப்படையில் அரசு அமைப்பை ஊடுருவ முயன்றதாக அறியப்படும் முதல் சம்பவம் இதுவாக இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறும் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
"இந்த வகையான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று கூறிய அவர், அவை "தீவிரத்திலும் எண்ணிக்கையிலும் அதிகரிக்கக்கூடும்" என்றும் தெரிவித்தார்.
"உலகம் முழுவதும் உள்ள அரசுகளுக்கு இந்தச் சம்பவம் எச்சரிக்கை மணியை ஒலிக்கத் தொடங்கும் என்று நான் நம்புகிறேன்" என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹக்கிங் ஃபேஸ் என்ற மற்றொரு தொழில்நுட்ப நிறுவனத்தை ஹேக் செய்வதற்காக, தான் சோதனை செய்துகொண்டிருந்த ஏஐ ஏஜென்ட்களின் குழு தனது கட்டுப்பாடுகளில் இருந்து தப்பித்து, ரகசியமாக ஒன்றிணைந்து செயல்பட்டதாக ஓபன்ஏஐ தெரிவித்திருந்தது.
இந்த ஆண்டு கட்டுப்பாடுகளை மீறிய ஏஐ தொடர்பான மேலும் பல சம்பவங்களும் பொதுவெளிக்கு வந்துள்ளன. அவற்றில், எந்தவித அறிவுறுத்தலும் இல்லாமல், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவரை பிலேட்ஸ் வகுப்பில் சேர்ப்பதற்காக, ஒரு டிஜிட்டல் உதவியாளர் ஒருவரை அந்த வகுப்பின் காத்திருப்புப் பட்டியலில் இருந்து நீக்கிய சம்பவமும் அடங்கும்.
ஆல்ட்மேன், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் டாரியோ அமோடெய் மற்றும் ஈலோன் மஸ்க் உள்ளிட்ட பல ஏஐ நிறுவனங்களின் தலைவர்களே, ஏஐ உருவாகி வரும் வேகம் மனிதகுலத்துக்கு ஆபத்தானது என்றும், அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஏஐ துறையில் ஆதிக்கம் செலுத்த போட்டியிடும் அமெரிக்காவும் சீனாவும் இதற்குத் தடையாக உள்ளன. இரு நாடுகளும் அதிகளவிலான கட்டுப்பாடுகளுக்கு எதிராக உள்ளன.
ஏஐ மூலம் கிடைக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப பலன்களைப் பெற விரும்புவதுடன், பாதுகாப்பு குறித்த கவலைகளையும் அவை குறைத்து மதிப்பிட்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































