'அல்ட்ராசவுண்ட் படம், புகைப்படங்கள், அழுகுரல்' - 2 குழந்தைகள் பிறந்ததாக ஏமாற்றி முன்னாள் துணையிடம் ரூ.38 லட்சம் பெற்ற பெண்

பிரிட்டனில் ஒரு பெண், தனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததாக தனது முன்னாள் துணையை நம்பவைத்து ஏமாற்றியுள்ளார். ஆனால் அந்தக் குழந்தைகள் உண்மையில் பிறந்திருக்க வாய்ப்பில்லை என என நீதிமன்றம் கருதியது. இதை, உயர் நீதிமன்ற நீதிபதி, "அசாதாரணமான", "மிகவும் விரிவான ஏமாற்று நடவடிக்கை" என்று வர்ணித்தார்.
படக்குறிப்பு, கோப்புப்படம்
    • எழுதியவர், ஹெலினா வில்கின்சன் மற்றும் ஹென்றி மூர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பிரிட்டனில் ஒரு பெண், தனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததாக தனது முன்னாள் துணையை நம்பவைத்து ஏமாற்றியுள்ளார். ஆனால் அந்தக் குழந்தைகள் உண்மையில் பிறந்திருக்க வாய்ப்பில்லை என நீதிமன்றம் கருதியது. இதை, உயர் நீதிமன்ற நீதிபதி, "அசாதாரணமான", "மிகவும் விரிவான ஏமாற்று நடவடிக்கை" என்று வர்ணித்தார்.

பெயர் குறிப்பிடப்படாத அந்த ஆண், நீதிமன்றத் தீர்ப்பில் 'ஜான்' என்று குறிப்பிடப்பட்டுள்ளார். அந்தப் பெண் தங்களது இரண்டு குழந்தைகளையும் சேர்த்து 500 பவுண்டுகளுக்கு விற்றுவிட்டதாக அவரிடம் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவர் குடும்ப நீதிமன்றத்தை அணுகினார்.

இரண்டு ஆண்டுகளில், அந்தப் பெண் குழந்தைகளின் புகைப்படங்களையும் குறுஞ்செய்திகளையும் அவருக்கு அனுப்பியதாகவும், அவரிடம் இருந்து சுமார் 30,000 பவுண்டுகளை (ரூ. 38 லட்சம்) பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரியில் நடந்த விசாரணையின்போது, 'ஜேன்' என்று குறிப்பிடப்பட்ட அந்தப் பெண், பழிவாங்கும் நோக்கில் கர்ப்பமாக இருப்பதாகப் பொய் கூறியதாக நீதிபதியிடம் தெரிவித்தார். அந்த ஆண் தன்னைத் துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

2022-ஆம் ஆண்டின் இறுதியில், அந்தப் பெண் தான் கர்ப்பமாக இருப்பதாகத் தனது துணையிடம் கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அல்ட்ராசவுண்ட் படத்தையும் அவருக்கு அனுப்பியிருந்தார். நாட்கள் செல்லச் செல்ல அவர் உண்மையில் கர்ப்பமாக இருப்பது போல ''வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியதால்'', அந்த ஆண் தான் குழந்தையின் தந்தை என்று நம்பினார்.

முதல் குழந்தை பிறக்கவிருந்த 2023 மே மாதத்தில், அந்தப் பெண் அந்த ஆண் தன்னைத் தாக்கியதாகக் காவல்துறையில் புகார் அளித்தார்.

அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பல மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தீர்ப்பில் நீதிபதி ஜட் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு, அந்தப் பெண் குழந்தை பிறந்துவிட்டதாக அந்த ஆணின் மாற்றாந்தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பியதுடன், குழந்தையின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

லண்டனிலுள்ள ராயல் கோர்ட்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ் கட்டடம்
படக்குறிப்பு, லண்டனிலுள்ள ராயல் கோர்ட்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ் கட்டடம்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஒரு கட்டத்தில், நள்ளிரவில் அந்த ஆணின் தாயாருக்கு குரல் பதிவுகளை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பதிவுகளின் பின்னணியில் குழந்தை அழும் சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், அந்தப் பெண் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தை 2024 ஆகஸ்ட் மாதம் பிறக்கும் என்றும் அந்த ஆணிடம் கூறியுள்ளார்.

ஆனால், குழந்தை பிறக்கவிருந்த தேதிக்கு முன்பே இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பிறகு அவர்கள் மீண்டும் சேரவில்லை.

பின்னர் அந்தப் பெண், குழந்தை பிறந்துவிட்டதாக அந்த ஆணின் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

தாங்கள் ஒன்றாக இருந்தபோதும், அதன்பிறகும் தான் கர்ப்பமாக இருப்பதாக அந்த ஆணிடம் கூறியதை அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஆனால், தான் தொடர்ச்சியாக பல விரிவான பொய்களைக் கூறியதாகவும், உண்மையில் குழந்தைகள் இல்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

அப்போது தான் மாதவிடாய் நிற்கும் நிலையில் இருந்ததாகவும், அதனால் கர்ப்பமாகியிருக்க முடியாது என்றும் அந்தப் பெண் வாதிட்டதாக நீதிபதி ஜட் தெரிவித்தார். அவர் குழந்தையைப் பெற்றெடுத்ததாகக் கூறிய அதே நாளில் அழகு நிலையத்துக்குச் சென்றிருப்பதை வங்கிக் கணக்கு அறிக்கைகள் காட்டியதாகவும் நீதிபதி கூறினார்.

தனது தீர்ப்பில், அந்தக் குழந்தைகள் உண்மையில் இருந்ததாகக் கருதுவதற்கு எதிரான காரணிகள் மிகவும் வலுவாக இருப்பதாகவும், அவர்கள் இருந்திருக்கலாம் என்பதைக் காட்டும் காரணிகளைவிட அவை வலுவானவை என்றும் நீதிபதி முடிவு செய்தார்.

அந்த ஆண், அவரது தாயார் மற்றும் நெருங்கிய நண்பர் ஆகியோரையும் பாதித்த "தொடர்ச்சியான, விரிவான ஏமாற்று நடவடிக்கைக்கு" அவர் பலியாகியுள்ளதாக நீதிபதி கூறினார்.

"இந்த நடத்தை மிகவும் கொடூரமானதாகவும் இருந்தது. ஒரு ஆணும் அவரது தாயாரும் முறையே தங்களுக்கு குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் இருப்பதாக நம்பவைக்கப்பட்டனர்" என்று நீதிபதி கூறினார்.

அந்தப் பெண் இவ்வாறு நடந்துகொண்டதற்கான காரணத்தை தன்னால் உறுதியாகக் கண்டறிய முடியவில்லை என்று நீதிபதி கூறினார். எனினும், நிதி மோசடி ஒரு சாத்தியமாக இருக்கலாம் என்றும், அந்தப் பெண்ணுக்கு இருந்த "சிக்கலான மனநலப் பிரச்னைகளும்" இதில் ஒரு பங்கு வகித்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு