மத்திய பிரதேசத்தில் மசூதியின் ஒரு பகுதியை இடிக்கும் சர்ச்சை - '600 ஆண்டுகள்' பழைய ஷாஹி மசூதியின் வரலாறு என்ன?

ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்றும் நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
படக்குறிப்பு, ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்றும் நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
    • எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி மற்றும் சமீர் கான்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில், 2028 சிம்ஹஸ்த் கும்பமேளாவிற்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகளின் போது, ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை செப்டம்பர் 28 அன்று பதற்றத்தையும் வன்முறை மோதல்களையும் ஏற்படுத்தியது.

சத்ரி செளக் பகுதியில் அமைந்துள்ள மசூதியைச் சுற்றி ஏராளமான மக்கள் திரண்டனர். காவல்துறையினருக்கும் கூட்டத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியது. இதையடுத்து, அப்பகுதியில் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

எனினும், இந்தச் சர்ச்சை முழு மசூதியையும் அகற்றுவது தொடர்பானது அல்ல. சாலை 15 மீட்டர் அகலப்படுத்தும் திட்டத்தின் வரம்புக்குள் வந்திருந்த மசூதியின் ஒரு பகுதியை மட்டுமே அகற்ற வேண்டியிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், அரசு நிர்வாகத்துக்கும் மசூதி நிர்வாகக் குழுவிற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாதிக்கப்படும் பகுதியை மசூதி தரப்பே அகற்றிக் கொள்வது என உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் திங்கள்கிழமை காலை, மசூதியைச் சுற்றி ஏராளமானோர் திரண்டதால் காவல்துறையுடன் மோதல் ஏற்பட்டது.

சாலை விரிவாக்கத் திட்டத்தின் காரணமாக ஒரு பகுதி பாதிக்கப்பட்டதால் தற்போது பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள ஷாஹி மசூதியின் வரலாறு என்ன? இந்த மசூதி எப்போது கட்டப்பட்டது? இதை யார் கட்டினர்? இதுகுறித்து பழைய ஆவணங்கள் என்ன கூறுகின்றன?

ஷாஹி மசூதி 1390-ஆம் ஆண்டில் கட்டப்பட்டதா?

இந்தூரைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும் பாரம்பரியக் கட்டடப் பாதுகாப்பு நிபுணருமான ஜாஃபர் அன்சாரி, ஷாஹி மசூதி முகலாயர் காலத்துக்கு முந்தையது என்கிறார்
படக்குறிப்பு, இந்தூரைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும் பாரம்பரியக் கட்டடப் பாதுகாப்பு நிபுணருமான ஜாஃபர் அன்சாரி, ஷாஹி மசூதி முகலாயர் காலத்துக்கு முந்தையது என்கிறார்

மசூதியின் வரலாற்றுடன் தொடர்புடைய வக்ஃப் வாரிய ஆவணமொன்றில், அதன் கட்டுமான ஆண்டு 1390 என்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆவணத்தை பிபிசி பார்வையிட்டுள்ளது.

அந்த ஆவணத்தில், மசூதி "ஷாஹி மசூதி" என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், "முஸ்லிம் சமூக மக்களின் ஒத்துழைப்பு மற்றும் நன்கொடைகள்" மூலம் இது கட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் பதிவின் அடிப்படையில், மசூதியின் வரலாறு சுமார் 636 ஆண்டுகள் பழமையானதாகும்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மசூதி நிர்வாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 1925-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஓர் ஆவணமும் இணைக்கப்பட்டிருந்தது. அதிலும் அக்காலத்திலேயே மசூதி இருந்ததற்கான பதிவு இடம்பெற்றுள்ளது.

இந்தூரைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும் பாரம்பரியக் கட்டடப் பாதுகாப்பு நிபுணருமான ஜஃபர் அன்சாரி, இந்த மசூதியை முகலாயர் காலத்திற்கு முந்தைய மால்வா சுல்தானிய ஆட்சிக் காலத்துடன் தொடர்புபடுத்துகிறார்.

அவர் கூறுகையில், "உஜ்ஜைன் மற்றும் மத்திய இந்தியாவின் பழைய வரலாற்றுப் பதிவுகளையும், இங்கு கட்டப்பட்டுள்ள பிற கட்டடங்களின் கட்டடக்கலை பாணியையும் பார்த்துவிட்டு, மசூதியின் கட்டமைப்பைப் பார்த்தால், இது முகலாயர் காலத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த கட்டடம் என்பது தெளிவாகிறது. வெவ்வேறு இடங்களிலும் ஆவணங்களிலும் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன" என்றார்.

அன்சாரியின் கூற்றுப்படி, மசூதியின் கட்டடக்கலை, அதன் மினார்களும் கட்டுமானப் பாணியும் அந்தக் காலகட்டத்தில் மால்வா பகுதியில் இருந்த சுல்தானிய காலக் கட்டடங்களுடன் ஒத்திருக்கின்றன.

மாண்டு மற்றும் சந்தேரி பகுதிகளிலும் இதேபோன்ற கட்டட வடிவமைப்புகள் காணப்படுகின்றன என்று அவர் கூறுகிறார்.

1925-ஆம் ஆண்டிலேயே சாலைக்காக மசூதியின் ஒரு பகுதியை வழங்குவது குறித்து பேசப்பட்டது

ஷாஹி மசூதி தொடர்பான 1925-ஆம் ஆண்டின் முக்கியமான ஓர் ஆவணத்தின்படி, அப்போதைய குவாலியர் சமஸ்தானத்தின் டவுன் இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்ட் தலைவரால் வெளியிடப்பட்ட கடிதத்தில், மசூதி "மோச்சியான் கி மசூதி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே கடிதத்தில், சந்தையையும் சாலையையும் சீரமைப்பதற்காக மசூதியுடன் தொடர்புடைய சில நிலங்களை எடுத்துக்கொள்வது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், "முக்கிய மசூதியைத் தவிர்த்து" அதனுடன் தொடர்புடைய சில நிலப்பகுதிகள் எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், அக்காலத்தில் மசூதியின் நிலை பற்றிய விவரமும் இடம்பெற்றுள்ளது. அப்போது மசூதியில் மினார்கள் இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நுழைவாயிலும் வளாகச் சுவரும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் மினார்கள் கட்டப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

1946 வரைபடத்திலும் மசூதி இடம்பெற்றுள்ளது

மசூதி நிர்வாகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், 1946 மே 4-ஆம் தேதியிட்ட வரைபடம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

அந்த வரைபடத்தில், அந்நாள் குவாலியர் மாநிலத்தின் உஜ்ஜைன் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியின் முத்திரையும் கையொப்பமும் இருப்பதாக கூறப்படுகிறது.

மசூதி நிர்வாகத் தரப்பினரின் கூற்றுப்படி, இந்த வரைபடத்தில் ஷாஹி மசூதி அமைந்திருந்த இடம் காட்டப்பட்டுள்ளது.

மசூதியுடன் தொடர்புடைய பதிவுகளில், அதன் தெற்குப் பகுதியில் உள்ள இரண்டு மஜார்கள், முக்கிய தொழுகை நடைபெறும் இடம் மற்றும் பிற பகுதிகள் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

வக்ஃப் பதிவுகளில் இடம்பெற்ற மசூதி

மசூதியின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, மசூதியின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ளது.

ஷாஹி மசூதி, "வக்ஃப் மசூதி பஞ்ச் மோச்சியான் (ஷாஹி மசூதி)" என்ற பெயரில் வக்ஃப் பதிவுகளில் இடம்பெற்றுள்ளது.

மசூதியுடன் தொடர்புடைய ஆவணங்களின்படி, இது 1954 வக்ஃப் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. பின்னர் 1985 செப்டம்பர் 13 அன்று மத்தியப் பிரதேச அரசிதழில் வக்ஃப் சொத்தாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் பதிவுகளில், அந்நாள் உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியரின் ஆய்வு மற்றும் சான்றிதழ் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் இது 1995 வக்ஃப் சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டது.

வக்ஃப் தொடர்பான ஆவணங்களின்படி, மசூதிச் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை வக்ஃப் வாரியத்திற்கும் நிர்வாகக் குழுவிற்கும் உட்பட்டது.

மேலும், வக்ஃப் சொத்துகளை மாற்றும் அதிகாரம் நிர்வாகியிடம் இல்லை என்றும், அத்தகைய சொத்துகள் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் வக்ஃப் வாரியத்தைச் சேர்க்க வேண்டும் அல்லது அதற்கு தகவல் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மசூதி தொடர்பான ஒரு சொத்து ஆவணத்தில், அதன் மொத்தப் பரப்பளவு சுமார் 4,600 சதுர அடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் 19 கடைகளும் இரண்டு வீடுகளும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய சாலை விரிவாக்கத் திட்டத்தில், இந்த வளாகத்தின் ஒரு பகுதி பாதிக்கப்படுகிறது.

மசூதி தரப்பு, நிர்வாகத்துக்கு அளித்த எதிர்ப்புக் கடிதத்தில் மாற்று வழியும் பரிந்துரைத்திருந்தது.

அதில், மசூதியின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு வணிகக் கட்டடத் திசையில் சாலையை விரிவாக்கலாம் என்றும், கிழக்குப் பகுதியில் உள்ள நடைபாதையையும் சாலையில் இணைக்கலாம் என்றும் கூறப்பட்டது.

மசூதியின் ஒரு பகுதியை அகற்றும் நடவடிக்கை செப்டம்பர் 28ஆம் தேதி பதற்றத்தையும் வன்முறை மோதலையும் ஏற்படுத்தியது
படக்குறிப்பு, மசூதியின் ஒரு பகுதியை அகற்றும் நடவடிக்கை செப்டம்பர் 28ஆம் தேதி பதற்றத்தையும் வன்முறை மோதலையும் ஏற்படுத்தியது

மசூதி தரப்பு, இந்திய அரசியலமைப்பின் 14, 25, 26 மற்றும் 300A ஆகிய பிரிவுகளை மேற்கோள் காட்டி இந்த நடவடிக்கையை எதிர்த்தது.

ஆனால், செப்டம்பர் 9 அன்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்து, நகர வளர்ச்சி மாஸ்டர் திட்டத்தைப் பின்பற்றுவது அவசியம் என்று தெரிவித்தது.

நிர்வாகம் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளையும் பின்பற்றியதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

நீதிமன்றப் பதிவுகளின்படி, சாலையை 15 மீட்டர் அகலப்படுத்த மசூதியின் ஒரு சிறிய பகுதியை அகற்றுவது அவசியம் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்தச் சாலையின் முக்கியத்துவத்தை நிர்வாகம் சுட்டிக்காட்டியிருந்தது. இந்த பாதை கோபால் கோவிலில் இருந்து மகாகால் கோவில் வழியாக க்ஷிப்ரா (ஷிப்ரா) நதிவரை செல்கிறது. ஷாஹி சவாரி, பெஷ்வாய் மற்றும் சிம்ஹஸ்த் விழாக்களின் போது இங்கு பெருமளவில் மக்கள் வருகை தருவதால் இந்தச் சாலை முக்கியத்துவம் வாய்ந்தது என்று நிர்வாகம் வாதிட்டது.

இதையடுத்து, மசூதி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. ஆனால் தீர்ப்பு வெளியாகும் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே, மசூதி தரப்புக்கும் நிர்வாகத்திற்கும் இடையே மசூதியின் 3 அடி வரையிலான பகுதியை அகற்றுவது குறித்து உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து, மசூதி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்தது. ஆனால் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, மசூதி தரப்பும் நிர்வாகமும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதால், 3 அடி வரை உள்ள ஒரு பகுதியை இடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சிம்ஹஸ்த் 2028-உடன் என்ன தொடர்பு?

உஜ்ஜைனில் நடைபெறும் சாலை விரிவாக்கத் திட்டத்தின் காரணமாக முதலமைச்சர் மோகன் யாதவின் பூர்வீக வீடும் பாதிக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, உஜ்ஜைனில் நடைபெறும் சாலை விரிவாக்கத் திட்டத்தின் காரணமாக முதலமைச்சர் மோகன் யாதவின் பூர்வீக வீடும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த முழு விவகாரமும் 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சிம்ஹஸ்த் கும்பமேளா தயாரிப்புகளுடன் நேரடியாக தொடர்புடையது.

சிங்ஹஸ்த் 2028-க்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக உஜ்ஜைனில் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவின் பூர்வீக வீடும் பாதிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27ஆம் தேதி, உஜ்ஜைனின் அப்தால்புரா பகுதியில் உள்ள தனது பூர்வீக வீட்டின், முன்மொழியப்பட்ட சாலையின் வரம்புக்குள் வரும் பகுதியைத் தானே மண்வெட்டியால் இடித்து, அகற்றும் பணியை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

அவரது வீட்டில் சுமார் 2.90 மீட்டர் பகுதி சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட வேண்டியுள்ளது. அவரது சகோதரி கலாவதி யாதவின் வீடும் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஷாஹி மசூதி தொடர்பான விவகாரமும் இதே சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் ரோஷன் சிங், "சிம்ஹஸ்த் 2028-க்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக மாஸ்டர் திட்டத்தின்படி சாலை விரிவாக்கம் மற்றும் பிற கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து மதங்களையும் சமூகங்களையும் சேர்ந்த மக்களும் தன்னார்வத்துடன் ஒத்துழைத்து வருகின்றனர். சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் வீடுகள் மற்றும் வழிபாட்டு தலங்களின் பகுதிகளை பலர் தாமாகவே அகற்றி வருகின்றனர். சத்திரி சவுக் பகுதியில், சாலைக்கான திட்டத்தின் வரம்புக்குள் வரும் ஷாஹி மசூதியின் ஒரு பகுதியையும் முஸ்லிம் சமூகத்தினர் தாங்களே அகற்றி வருகின்றனர்," என கூறினார்.

"யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். அமைதியையும் சட்ட ஒழுங்கையும் பேணுவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்," என அவர் கேட்டுக்கொண்டார்.

உஜ்ஜைனின் வரலாற்றை ஆய்வு செய்து வரும் பேராசிரியர் சங்கர்லால் வரே, பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவரது மத நிகழ்வுகளில் மற்றொருவர் பங்கேற்று வந்ததாக கூறுகிறார்.
படக்குறிப்பு, உஜ்ஜைனின் வரலாற்றை ஆய்வு செய்து வரும் பேராசிரியர் சங்கர்லால் வரே, பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவரது மத நிகழ்வுகளில் மற்றொருவர் பங்கேற்று வந்ததாக கூறுகிறார்.

உஜ்ஜைன் நகரின் வரலாற்றை ஆய்வு செய்து வரும் பேராசிரியர் சங்கர்லால் வரே கூறுகையில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக இந்நகரில் ஒன்றாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், ஒருவரது மத விழாக்கள் மற்றும் மரபுகளில் மற்றவர்கள் பங்கேற்கும் பல எடுத்துக்காட்டுகள் இங்கு உள்ளன என்றும் அவர் கூறினார்.

வரலாற்றாசிரியர் ஜஃபர் அன்சாரியும் உஜ்ஜைனின் இந்த சமூக மற்றும் கலாசார ஒற்றுமையை சுட்டிக்காட்டுகிறார்.

அவரது கருத்துப்படி, மகாகால் கோவில் மற்றும் ஷாஹி மசூதியைச் சுற்றியுள்ள பகுதி, நகரின் நீண்டகால சமூக மற்றும் கலாசார ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

சுமார் 70 ஆண்டுகளாக ஷாஹி மசூதியில் தொழுகை செய்து வரும் இம்ரான் கூறுகையில், சாலை விரிவாக்கம் அவசியமானது என்றும், சாலையின் வரம்புக்குள் மசூதியின் ஒரு பகுதி வந்தால் அதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும், சாலை விரிவாக்க நடவடிக்கை மசூதியை மட்டும் அல்லாமல், பிற மதக் கட்டடங்களின் பகுதிகளையும் பாதித்து வருவதாகவும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு