'என் தந்தை பாகிஸ்தானியர் என்பதால் என்னை அவமதித்தனர்': இராக் - குவைத் ஆட்டத்தில் என்ன நடந்தது?

இந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையில் ஸிதான் இக்பால் இரானைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
படக்குறிப்பு, இந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையில் ஸிதான் இக்பால் இரானைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
    • எழுதியவர், பிபிசி உருது
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"என் தந்தை பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதற்காகவும், நான் இராக் அணிக்காக விளையாடுவதற்காகவும், குவைத் வீரர்களும் அவர்களது ரசிகர்களும் என்னையும் என் குடும்பத்தினரையும் அவமதித்து கேலி செய்தனர்."

தற்போது சௌதி அரேபியாவில் நடைபெற்று வரும் 27-வது வளைகுடா கோப்பை கால்பந்து தொடரில், குவைத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய இராக் கால்பந்து வீரர் ஸிதான் இக்பால் இதனைத் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இராக் அணி 3-2 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்தியது. எனினும், போட்டியின் முடிவில், ஸிதான் இக்பாலுக்கும் குவைத் அணியின் கேப்டனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் ரசிகர்களுடனான மோதலும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

போட்டி முடிந்த பிறகு இராக் மற்றும் குவைத் வீரர்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொள்ளும் காட்சிகள் அடங்கிய பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

அதே நேரத்தில், ரசிகர்கள் மைதானத்துக்குள் தண்ணீர் பாட்டில்களை வீசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெட்டாவில் இராக் மற்றும் குவைத் அணிகள் மோதிய இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், 52-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து இராக் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் ஸிதான் இக்பால்.

வழக்கமான 90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரத்தில் இராக் மூன்றாவது கோலை அடித்து வெற்றி பெற்றது.

'போட்டிக்கு முன்பே குவைத் ரசிகர்கள் என்னை கேலி செய்தனர்'

இராக் மற்றும் குவைத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, ​​குவைத் ரசிகர்களின் கூச்சல்களையும் ஏளனத்தையும் இக்பால் எதிர்கொண்டார்.
படக்குறிப்பு, இராக் மற்றும் குவைத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, ​​குவைத் ரசிகர்களின் கூச்சல்களையும் ஏளனத்தையும் இக்பால் எதிர்கொண்டார்.

போட்டிக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய இக்பால், குவைத் அணியின் வீரர்கள் தன்னை அவமதித்ததாகவும், இதுகுறித்து குவைத் கேப்டன் யூசுப் நாசரிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"நான் குவைத் கேப்டனிடம் பேசினேன். உங்கள் வீரர்களுடன் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், வீரர்கள் என் தந்தை பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று கூறினார்கள். அது உண்மைதான்." என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.

மேலும் ஸிதான் இக்பால் கூறுகையில், "கடவுளுக்கு நன்றி, நான் ஒரு முஸ்லிம். நாம் அனைவரும் ஒரே உம்மத் (அனைவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்). எனவே, நீங்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தாலும், இராக்கைச் சேர்ந்தவராக இருந்தாலும் அல்லது வேறு எங்கிருந்தாலும் அது முக்கியமல்ல. நாம் அனைவரும் இஸ்லாத்தை நம்புகிறோம்." என தெரிவித்தார்.

ஸிதான் முதல் கோலை அடித்த பிறகு கொண்டாடிய விதத்திலிருந்தே இந்தச் சர்ச்சை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. குவைத் ரசிகர்களை நோக்கி அவர் தகாத முறையில் கொண்டாடியதாக, சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன. இதற்காக அவர் விமர்சிக்கப்பட்டும் வருகிறார்.

சில சமூக வலைதளப் பயனர்கள், கோல் அடித்த பிறகு அதைக் கொண்டாடுவது வீரரின் உரிமை என்றும், அது விளையாட்டின் ஒரு பகுதி என்றும் கூறுகின்றனர். அதே நேரத்தில், எதிரணி ரசிகர்களைத் தூண்டும் வகையில் கொண்டாடுவது தவறு என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஸிதான் இக்பால் கூறுகையில், "போட்டிக்கு முன்பே குவைத் ரசிகர்கள் என்னைக் கேலி செய்து கொண்டிருந்ததை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். 'பரவாயில்லை, நான் ஒரு கோல் அடிப்பேன்; அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்று நினைத்தேன்." என்றார்.

"நான் அவர்களைப் பார்த்துக் கொண்டாடியபோது, அவர்கள் எதுவும் சொல்லவில்லை. என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நான், 'சரி, அருமை. இப்போது குவைத் அணிக்கு எதிராக கோல் அடித்த பாகிஸ்தானை சேர்ந்தவரை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்வார்கள்' என்று நினைத்தேன்."

மேலும் ஸிதான் இக்பால் கூறுகையில், "என் தந்தை பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று கூறி, என் தாயைப் பற்றி மிகவும் மோசமான விஷயங்களைச் சொன்னால், முதலில் நீங்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஏனென்றால் நான் வெற்றி பெற்றால், நான் கொண்டாடுவேன்." என்றார்.

"அவர்கள் என்னிடம் அப்படிப் பேசினால், நான் மைதானத்தில் அதற்குப் பதிலளித்தால், 'ஸிதான்தான் பிரச்னையை ஏற்படுத்துகிறார்' என்று மக்கள் கூறுவார்கள். ஆனால், உலகக் கோப்பையில் நான் எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தவில்லை. மற்ற அணிகளுக்கு எதிராக விளையாடும் போதும் நான் அப்படிச் செய்வதில்லை." என தெரிவித்தார்.

ஸிதான் மேலும் கூறுகையில், "கால்பந்து என்பது மரியாதைக்குரிய விளையாட்டு. அதில் நான் 100 சதவிகிதம் உடன்படுகிறேன். ஆனால், நீங்கள் என் குடும்பத்தை அவமதித்து, இழிவுபடுத்தினால், பரவாயில்லை. முதலில் நீங்கள் வெற்றி பெறுவதை உறுதிசெய்துகொள்ளுங்கள். ஏனென்றால் போட்டி முடிந்ததும் எல்லாம் முடிந்துவிடும்." என்றார்.

சமூக வலைதளப் பயனர்கள் பலர், நடந்த சம்பவங்கள் "போட்டியின் ஒரு பகுதி" என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மைதானத்துக்கு வெளியிலும் தொடரக்கூடும் என்றும் கருத்து தெரிவித்தனர். எனினும், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அவமதிப்பதையும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விளையாட்டுக்குள் கொண்டுவருவதையும் அவர்கள் எதிர்த்தனர்.

குவைத் கேப்டனுடன் சமரசம்

குவைத் நாட்டு ரசிகர்களின் கூச்சல்களாலும் ஏளனத்தாலும் தான் எரிச்சலடைந்ததாக ஸிதான் இக்பால் கூறினார்.
படக்குறிப்பு, குவைத் நாட்டு ரசிகர்களின் கூச்சல்களாலும் ஏளனத்தாலும் தான் எரிச்சலடைந்ததாக ஸிதான் இக்பால் கூறினார்.

ஸிதான் இக்பாலுக்கும் குவைத் கேப்டன் யூசுப் நாசருக்கும் இடையிலான பிரச்னையைத் தீர்க்க இராக் கேப்டன் அய்மன் ஹுசைன் முயற்சி மேற்கொண்டார். அவர் யூசுப் நாசரை இராக் அணியின் உடைமாற்றும் அறைக்கு அழைத்துச் சென்று இருவரையும் சமரசம் செய்ய முயன்றார்.

சமரசத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவில், குவைத் ரசிகர்கள் தன்னை கேலி செய்ததால் தான் வருத்தமடைந்ததாக இக்பால் விளக்கினார். பின்னர் இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி சமரசம் செய்துகொண்டனர்.

மைதானத்தில் ரசிகர்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான, வசதியான சூழலை உறுதி செய்ய, இதுபோன்ற சம்பவங்களுக்கு கடுமையான மற்றும் தெளிவான தண்டனை வழங்க வேண்டும் என்று பலர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தினர்.

தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது, வீரர்கள் அல்லது ரசிகர்கள் இடையே மோதல்கள் ஏற்படுவது போன்ற சம்பவங்கள் குடும்பங்களை மைதானங்களுக்கு வருவதை தடுக்கக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

போட்டிக்கு முன்னரும் போட்டியின்போதும் ரசிகர்களின் வன்முறையான தூண்டுதல்களே வீரர்களுக்கு இடையிலான மோதலுக்கு காரணமாக அமைந்ததாக சில ரசிகர்கள் கருதினர். இதுபோன்ற சம்பவங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

மசூத் யாசின் என்ற பயனர் எக்ஸ் தளத்தில், வளைகுடா மற்றும் பிற அரபு நாடுகளைச் சேர்ந்த சிலர் இவ்வாறு சிந்திப்பதாகக் கூறினார். பழங்குடி சார்ந்த பாரபட்சத்தின் அடிப்படையில், இக்பாலின் தந்தை பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரை கேலி செய்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் அவர், "அவரது தந்தை பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதில் என்ன தவறு? பாகிஸ்தான் இறையாண்மை கொண்ட இஸ்லாமிய நாடும் அணு ஆயுதம் கொண்ட நாடும் அல்லவா? குறிப்பாக இரானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களுக்கு எதிரான பாதுகாப்புக்காக சில நாடுகளுக்கு பாகிஸ்தானின் இந்தத் திறன்கள் தேவைப்படுகின்றன." என குறிப்பிட்டுள்ளார்.

"அப்படியானால், வம்சாவளியை அடிப்படையாகக் கொண்டு ஏன் இந்த இனவெறியும் அவமதிப்பும்? ஒருவரின் தந்தையின் மூதாதையர்களின் பின்னணியை வைத்து அவரை அவமதிக்க நீங்கள் யார்?" என அவர் கேள்வியெழுப்பினார்.

மேலும் அவர், "பஸ்ராவில் நடைபெற்ற வளைகுடா கோப்பையின்போது, பாகிஸ்தானில் பிறந்தவர் என்பதற்காக இக்பால் தேவையில்லாமல் குவைத் அணியின் மாற்று வீரர்களுடன் பிரச்னையை ஏற்படுத்தினார். ஏன்? தனது தாழ்வு உணர்வைப் போக்கிக்கொண்டு, இராக் மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காகவா? (அதற்கான வீடியோ உள்ளது.)" என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.

"எனவே, உண்மையான பிரச்னை என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அதைப் பற்றி பேச வேண்டாம்."

பாகிஸ்தான் மற்றும் குவைத் இடையே சமீபத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டிய குர்ரம் என்ற மற்றொரு பயனர், குவைத் மக்கள் பாகிஸ்தானை மதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஸிதான் இக்பால் யார்?

ஸிதான் இக்பால் பூர்வீகமாகப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்; அவர் இங்கிலாந்தில் வளர்ந்தவர்.
படக்குறிப்பு, ஸிதான் இக்பால் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். அவர் இங்கிலாந்தில் வளர்ந்தவர்.

ஸிதான் இக்பால் சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரிலும் இராக் அணிக்காக விளையாடினார்.

ஜூன் மாதம் பிபிசி ஸ்போர்ட்-க்கு அளித்த பேட்டியில் ஸிதான் கூறுகையில், "என் தந்தை பாகிஸ்தானைச் சேர்ந்தவர். என் வாழ்க்கையில் நான் மிகவும் மதிக்கும் நபர் என் தந்தை. எனது கால்பந்து வாழ்க்கையில் அவர் எனக்கு மிகுந்த உதவி செய்துள்ளார்."

"நான் இராக் அணிக்காக விளையாடுகிறேன்; இங்கிலாந்தில் வளர்ந்தேன். ஆனால், என் தந்தை பாகிஸ்தானில் பிறந்தவர். என் தாத்தாவும் அங்கிருந்துதான் வந்தவர். எனவே, எனது குடும்பத்தின் இரு தரப்பினரையும் நான் மிகவும் மதிக்கிறேன்."

மான்செஸ்டரில் பிறந்து வளர்ந்த 23 வயதான ஸிதான் இக்பாலின் தந்தை பாகிஸ்தானியர்; தாய் இராக்கை சேர்ந்தவர்.

தனது அடையாளத்தை ஷூ-க்களில் ஏன் வெளிப்படுத்துகிறார் என்று கேட்கப்பட்டபோது, தனது குடும்பத்தின் இரு தரப்பினருக்கும் தான் அளிக்கும் மரியாதையை ஸிதான் மீண்டும் வலியுறுத்தினார்.

"எனது இடது ஷூவில் இராக் கொடியையும், வலது ஷூவில் பாகிஸ்தான் கொடியையும் அச்சிட்டுள்ளேன்."

"இரு தரப்பினரையும் நான் மதிக்கிறேன் என்பதுதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு