காணொளி: தாத்தா கொலையில் ஆண் நண்பருடன் 13 வயது சிறுமி கைது
கேரளம் மாநிலம் ஆலப்புழாவில் உள்ள கருவாட்டாவில் வசித்து வந்தவர் சிவன்குட்டி. சிவன்குட்டியின் உடல் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் சிவன்குட்டியின் 13 வயது பேத்தியை கைது செய்தனர்.
போலீசார் தெரிவித்த தகவலின்படி, சிறுமி அதிகம் மொபைல் பயன்படுத்துவதையும் ஆண் நண்பர்களுடன் பழகுவதையும் சிவன்குட்டி கண்டித்து வந்துள்ளார். இதனால் சிறுமி சிவன்குட்டி மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
மேலும், வீட்டில் இருந்த நகையை திருடி தனக்கு ஐபோனும் தனது ஆண் நண்பருக்கு பைக்கும் வாங்க அவர் திட்டமிட்டார். சிறுமியின் தாய் பிரசவத்திற்காக ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடன் பாட்டியும் சென்றிருந்ததால், சிவன்குட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வீட்டில் இருந்து நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தனது 16 வயது ஆண் நண்பருடன் சிறுமி திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த சனிக்கிழமையன்று 16 வயது சிறுவனும் அவரது நண்பர்களும்பரவூரிலிருந்து மாவேலி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஹரிப்பட்டு வந்தனர்.
இரவு 10.45 மணியளவில் அவர்கள் எக்ஸாஸ்ட் ஃபேன் துவாரம் வழியாக சிவன்குட்டியின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். சத்தம் கேட்டு சிவன்குட்டி தடுக்க முயன்றபோது அவரை தாக்கி கீழே தள்ளி, வாயில் துணியைத் திணித்து, கை கால்களைக் கட்டி கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கொலையை சிறுமி வீடியோ காலில் பார்த்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.
பின்னர் பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு, அதிகாலை ரயிலில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த வழக்கில் 13 வயது சிறுமி, அவரது காதலன் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சிறார்களுக்கு எப்படி இத்தகைய கொடூர குற்றங்களை செய்வதற்கான எண்ணம் வருகிறது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



